அரசியல், சமூக பொருளாதாரத்தின் வளர்ச்சி போக்குகளைப் பற்றி ஆய்வு செய்யும் போது அல்லது அதனை புரிந்து கொள்ள முயற்சிக்கும் போது கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக அவை ஒரே மாதிரியாகவே நீடிக்கின்றது என்பதைப் போல புரிந்து கொள்ளக்கூடாது. எடுத்துக்காட்டாக நிதி மூலதனம் 19 ஆம் நூற்றாண்டில் இறுதியில் உருவான காலகட்டத்தில் அதனுடைய நீள, அகல பரிமாணங்கள் இருந்த நிலைமையும் 21 ஆம் நூற்றாண்டில் துவக்கத்தில் அது இருக்கின்ற நிலைமையும் ஒரே மாதிரியான தன்மையுடையது என்று புரிந்து கொள்வது சரியான சமூக விஞ்ஞான பார்வை கிடையாது.
அதுபோலவே இந்தியாவின் அரசியல், பொருளாதார நிலைமைகளை தொடர்ச்சியாக அவதானிக்கும் போது அவை பிரிட்டன் காலனியாதிக்கத்திற்கு பிறகு ஒரே சீராகவே இருந்து வருகின்றது என்பதை போலவும், ஏறக்குறைய 65-70 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் கட்சி செய்த அரசியல், பொருளாதார நடவடிக்கைகள்; அது பெரும்பான்மை மக்கள் மீது ஏற்படுத்திய பாதிப்புகள்; 75-77 காலகட்டத்தில் எமர்ஜென்சி என்று அழைக்கப்படுகின்ற அவசரநிலை பாசிசமாக உருவெடுத்தது ஆகியவையும், அதன் பிறகு நிதி மூலதனத்தின் வளர்ச்சி போக்கில் உருவான பன்னாட்டு நிறுவனங்கள், தேசங்கடந்த தொழிற்கழகங்கள் போன்றவையும், அதன் பிறகு கார்ப்பரேட் முதலாளித்துவ வளர்ச்சி போக்குகளும் ஒரே மாதிரியான தன்மை கொண்டவை என்று புரிந்து கொள்வது சமூக விஞ்ஞான பார்வை கிடையாது.
இந்த அடிப்படையிலிருந்து தான் அவசர நிலை பாசிசத்தை பற்றியும், தற்போதைய கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதத்தை பற்றியும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை தான் இந்த தொடரில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.
2014 பாசிச மோடி கும்பல் ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு வர்க்கத்தின் மீதும் அவர்கள் நடத்தி வரும் தாக்குதல்களை கடந்த இரண்டு தொடர்களாக நாம் பார்த்து வருகின்றோம். அதன் அடுத்த கட்டமாக மேலும் பல்வேறு வர்க்கங்களை அவர்கள் வாழ்க்கை நிலைமையிலிருந்து எவ்வாறெல்லாம் மாற்றியுள்ளது என்பதைப் பற்றியும் பார்ப்போம். ஆளும் வர்க்கங்களின் வழக்கமான அடக்குமுறை போல, ஆளும் வர்க்க கட்சிகளில் ஒரு ஆட்சியைப் போல, இந்த மோடி ஆட்சி நடைபெறவில்லை என்பதை இந்த தரவுகளின் மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றே வலியுறுத்துகிறோம்.
சில்லறை வர்த்தகமும், கார்ப்பரேட் கொள்ளைக்கு பலியிடப்படுகிறது!
நமது நாட்டில் 90-களில் அமுல்படுத்தப்பட்ட புதிய தாராளவாதக் கொள்கையின் பலனாக விவசாயமும் நசிந்து, நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் தொழில்துறை ஆட்குறைப்புகள் அதிகரித்து வேலையிலிருந்து வீசியெறியப்பட்ட தொழிலாளர்களுக்கு இறுதி வாய்ப்பாக இருந்து வருவது சிறு வணிகம்தான். பாசிச மோடி கும்பல் ஆட்சிக்கு வந்தபிறகு எந்த வேலையும் இல்லையென்றாலும் ஏதாவது கடை வைத்துப் பிழைத்துக் கொள்ளலாம் என்ற ஆசையிலும் மண் விழுந்தது.
ஏற்கனவே உப்பு, புளி, மிளகாய் விற்பதில் கூட வால் மார்ட், கே மார்ட் போன்ற பெரும் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டனர். பலவகை பிராண்ட் பொருட்களுக்கான சில்லறை வணிகத்தில் 100% அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டு 90-களில் ரிலையன்ஸ் பிரெஷ், மோர் போன்ற உள்நாட்டு தரகு முதலாளிகளின் பெரு வணிக வளாகங்கள் சில்லறை வர்த்தக சந்தையை ஆக்கிரமித்தன. அவர்களையும் பின்னுக்கு தள்ளி பாசிச மோடி ஆட்சிக்கு வந்தவுடன் அதுவரை யார் என்றே தெரியாத ராதாகிஷன் தமனி என்பவர் டீ மார்ட் மூலம் இந்திய சில்லறை வியாபாரத்தில் குதித்து நாட்டின் டாப் 10 முதலாளிகளில் ஒருவராகி விட்டார்,
மறுபுறம், ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் மூலம், சில்லறை வர்த்தகர்களின் விற்பனை சரிந்தது. சில்லறை வியாபாரிகளின் கொடூரமான நிலையை விளக்க ஒரு எடுத்துக்காட்டு, 2022 பிப்ரவரியில் உ.பி. மாநிலம் பக்பத் மாவட்டத்தில், காலணி கடை வைத்திருந்த ராஜீவ் தோமர் ஜி.எஸ்.டி.-யால் தனது வியாபாரம் படுத்துவிட்டதாகக் கூறி, பேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு மோடியின் தவறான கொள்கைகள்தான் காரணம் என்று அழுது கொண்டே பதிவிட்டுள்ளார். ஜி.எஸ்.டி. யால் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள தோமர், பாஜக-வின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது..
இதே போல் 2018-ல் ராகுல் பால்கே என்ற 32 வயது வியாபாரி பேஸ்புக்-கில் தனது தற்கொலையை வெளியிட்டதும் நடந்தது. 2020-ல் மட்டும் 11,000-த்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது 2019-ஆம் ஆண்டை விட 29% அதிகம் என்கிறது ஒரு ஆய்வு. இந்த தற்கொலைகள் அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரித்துக் கொண்டே போனது.
இதைத் தாண்டி, கொரோனா கால ஊரடங்கு, இணைய வர்த்தகத்தில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியது. அமேசான், பிளிப்கார்ட், ஸ்விக்கி, சொமேட்டோ, டன்சோ போன்ற நிறுவனங்கள் உணவு மற்றும் மளிகை வணிகத்தில், கொரோனா காலத்திற்கு முன்பு இருந்ததை விட 2020 செப்டம்பரில் 73% வளர்ச்சி அடைந்துள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
உலகெங்கிலும் 10,500 கடைகளை வைத்திருக்கும் பகாசுர நிறுவனமான வால்மார்ட்டால், மாதத்திற்கு 34,000 நுகர்வோரை ஊக்குவிக்க முடிகிறது. ஆனால், உலகெங்கிலும் ஒரு கடை கூட இல்லாமல், இணைய வர்த்தகத்தில் மட்டுமே ஈடுபட்டிருக்கும் அமேசான், ஒரு பொருளின் விலையை ஒரே நாளில் 25 லட்சம் முறை மாற்றி அமைத்து மாதம் ஒன்றுக்கு 20 கோடி பேரை ஈர்க்க முடிகிறது என்கிறது ஒரு ஆய்வு. இவை அனைத்தும் செயற்கை நுண்ணறிவு போன்ற தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் சாத்தியமாகி உள்ளது.
முந்தைய பதிவுகள்:
- ஆர்.எஸ்.எஸ்- பாஜகவின் கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதமும், காங்கிரசின் அவசரநிலை பாசிசமும்
- ஆர்.எஸ்.எஸ்- பாஜகவின் கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதமும், காங்கிரசின் அவசரநிலை பாசிசமும். பாகம்-2
- ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதமும், காங்கிரசின் அவசரநிலை பாசிசமும். பாகம் 3
- ஆர்.எஸ்.எஸ்- பாஜகவின் கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதமும், காங்கிரசின் அவசரநிலை பாசிசமும். பாகம்-4.
- ஆர்.எஸ்.எஸ்- பாஜகவின் கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதமும், காங்கிரசின் அவசரநிலை பாசிசமும். பாகம்-5.
மேலும், 2014 மோடி ஆட்சியில், வெளிநாட்டு நிறுவனங்கள், சில்லறை வணிகத்தில் 100% அந்நிய நேரடி முதலீடுகளுக்கு மத்திய மாநில அரசுகளிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்ற தடை முற்றிலுமாக நீக்கப்பட்டது. மேலும், அந்நிய நிறுவனங்கள் தங்கள் உற்பத்திக்கான மூலப்பொருட்களில் 30% உள்நாட்டில் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தையும் மோடி அரசு நீக்கிவிட்டது. இதனால், உள்நாட்டுப் பொருட்களுக்கான விற்பனை சந்தை ஒழிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பொருட்கள் ஆக்கிரமிக்கத் துவங்கியுள்ளது.
மறுபுறம், பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், அதன் விலையைத் தீர்மானிப்பது என்ற நிலை மாறி அமேசான், பிலிப்கார்ட், அலிபாபா போன்ற இணைய வர்த்தக நிறுவனங்கள் விலையைத் தீர்மானிக்கும் நிலையில், தள்ளுபடி, சலுகை என விலை குறைக்கப்படுகின்றன. இன்றைய உலகை ஆட்டிப்படைக்கும் இ காமர்ஸ் நிறுவனங்கள் அன்றாட தேவைக்கான மளிகைப் பொருட்கள் துவங்கி நுகர்பொருட்கள் வரை அனைத்துப் பொருட்களையும் விற்கும் சந்தையை கைப்பற்றி கொள்ளையடிக்கிறது.
வெளிநாட்டு பொருட்கள் வரவாலும், ஆன்லைன் சந்தை விலை குறைப்பாலும், சில்லறை மளிகை மற்றும் உணவு வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் 7 கோடி சிறுவணிகர்களும், அவர்களைச் சார்ந்த 21 கோடி பேருக்கும் மேலானோரின் வாழ்வாதாரம் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
ஆழ்கடல் கார்ப்பரேட்டுகளுக்கு!துரோகம் மீனவர்களுக்கு!!
நீரிலிருந்து முதல் உயிர் தோன்றியதாக அறிவியல் வரையறுக்கிறது. அதன் சாட்சியாக இன்றும் விளங்குவது கரையோர மீனவ பழங்குடி மக்கள்தான். உலகம் தோன்றியது முதல் காற்றோடும் கடலோடும் போரிட்டு மீன் வேட்டையாடி, நிலத்தில் வாழும் அடித்தட்டு உழைக்கும் மக்களுக்கு, எளிய மக்களுக்கு புரதம் நிறைந்த உணவை வழங்கி தன் வாழ்வை நடத்திக்கொண்டிருந்த கடல் பழங்குடிகளான மீனவர்கள் வாழ்க்கை எளிதானதல்ல, கரடு முரடானது. மொழியும் கலாச்சாரமும் அதையொட்டியே இருக்கும். வாழ்க்கை கடினமானதாக இருந்தபோதும் தன்னிடம் இருப்பதை கொண்டு மன நிறைவுடன் வாழ்ந்தவர்கள்.
பாசிச மோடி ஆட்சிக்கு பிறகு மீனவர்களுக்கு வழங்கப்பட்ட டீசல் மான்யத்தை கொண்டு சிறிய விசைப்படகு மூலம் தொழில் செய்த மீனவ சமூகத்த்தின் வாழ்க்கையை கடற்கரை மேலாண்மை சட்டம் 2019, கடல் மீன்வளர்ப்பு சட்டம் 2019, கடல்வழிப் பாதை சட்டம் 2021, கடல் மீன்வள மசோதா 2021 ஆகிய சட்டங்கள் ஒழித்துக்கட்டி கடலிலிருந்து அவர்களை வெளியேற்றுகிறது. இந்த நான்கு சட்டங்களால் அவர்களின் வாழ்வுரிமையும், வாழ்விடங்களும், வாழ்வாதாரங்களும் பறிக்கப்படுகின்றன. அவர்கள் கடலில் வீசிய வலையில் மீன் பட்டதோ இல்லையோ, கரையில் பாசிச பாஜக மோடி அரசு கார்ப்பரேட் நலனுக்கு வீசிய வலையில் சிக்கி மீனவ மக்களின் மொத்த வாழ்க்கையும் வலி மிகுந்ததாக மாறுவது உறுதியாகிவிட்டது.
பெரும்பாலான பாரம்பரிய மீனவர்கள் தன்னிடமுள்ள கட்டுமரங்கள், சாதாரண படகுகள், விசைப்படகுகள் கொண்டு 12 நாட்டிக்கல் தூரமுள்ள கடலில்தான் மீன்பிடிக்கிறார்கள். 12 நாட்டிகல் மைல் தூரமுள்ள கடல் பகுதியை நீண்டகால குத்தகைக்கு கார்ப்பரேட்டுக்குக் கொடுத்து அவர்களின் பிழைப்பில் மண் அள்ளிப்போடுகிறது.
அதுமட்டுமின்றி கடலிலிருந்து 50 மீட்டர் தொலைவில் கார்ப்பரேட் முதலாளிகள் கப்பல் மீன்பிடிப்பதுடன், அங்கேயே தனது நிறுவனங்களை வைத்துக்கொள்ள வழிவகை செய்வதுடன், பாதிப்பு உண்டாக்கும் நாசகார ஆலைகள் கடற்கரையில் அமைய சட்டப்படி அனுமதி கொடுக்கப்படுகிறது. மீனவர்கள் பிறந்து, வளர்ந்து விளையாடிய வாழ்விடப் பயன்பாட்டுப் பகுதியும் பறிக்கப்பட்டு கடற்கரைப் பகுதி, சட்டரீதியாக கார்ப்பரேட் கைகளுக்கு செல்கிறது.
பாரம்பர்ய மீனவர்கள்கூட அரசிடம் அனுமதி பெறவேண்டும். இந்த மீன்களைத்தான் பிடிக்க வேண்டும், இந்த அளவில்தான் பிடிக்க வேண்டும் எனவும், மீறினால் அபாராதம், சிறைத் தண்டனை என அறிவித்து மீனவர்களின் வாழ்வுரிமையை பறித்து குற்றச்செயல் செய்பவர்களாக ஒன்றிய பாஜக அரசு தண்டிக்கிறது.
மீனவர்கள் இயற்கைப் பேரிடர்களான, புயல், மழை, சூறாவளி போன்றவற்றை எதிர்கொண்டு வாழ்க்கை நடத்துபவர்கள். கடந்த பத்தாண்டுகளாக பாசிச பாஜக எனும் ’அரசுப் பேரிடரையும்’ எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
காடுகளில் இருந்து பழங்குடிகள் வெளியேற்றம்! இனி காடுகளும் கார்ப்பரேட்டுகளுக்கே!!
இந்தியா என்ற நாடு உருவாவதற்கு முன்பே காடுகளில் வாழும் பழங்குடி மக்கள் தானாக விழுந்த பட்டுப்போன மரம் அல்லது காய்ந்த சுள்ளிகளையே தீ மூட்டுவதற்கு பயன்படுத்தினார்கள். விலங்குகளை, பறவைகளை வேட்டையாடினாலும், இயற்கை சமநிலை பாதிக்காமல், தனது தேவைகளுக்கு மட்டும் பழங்குடி மக்கள் பயன்படுத்தி வாழ்ந்து வந்தனர். எந்தப் பழங்குடியும் காடுகளை அழித்ததாக வரலாறே கிடையாது. சில குற்றங்கள் அவர்கள் மீது இருந்தாலும் நாம் காட்டுக்குச் சென்று அவர்களை செய்ய வைத்திருப்போமே தவிர, அவர்களின் தேவைக்காக செய்ததில்லை.
ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பு, வனங்களைப் பற்றி நன்கு தெரிந்த பழங்குடிகளை பயன்படுத்தித்தான் வனங்களில் பணப்பயிர்களையும் விவசாயம் செய்வதையும் கற்றுக் கொண்ட அரசு, பழங்குடிகள் வேட்டையாடக் கூடாது. பழங்குடிகள் விவசாயம் பண்ணக் கூடாது. இறுதியில் பழங்குடிகள் வனத்தில் வசிக்கவும் உரிமை இல்லை என்று கொண்டு வந்துவிட்டார்கள். ஆங்கிலேயர் காலத்திலிருந்து வன உரிமைச் சட்டங்கள் நிறைய கொண்டு வரப்பட்டு விட்டன. அந்தச் சட்டங்கள் வனங்களை பாதுகாத்ததோ இல்லையோ, அந்த சட்டங்களின் மூலம் பழங்குடிகளின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு விட்டன. இது தற்போதும் நீடிக்கிறது.
முதலில் பழங்குடிகள் தங்கள் பழங்குடிகள்தான் என்பதை அடையாளப்படுத்தும் சான்றிதழை பெறவே சிரமப்படுகிறார்கள். பழங்குடிகள் சான்றிதழ் கட்டாயம் வேண்டும் என்று அரசு கூறுகிறது. ஆனால் அந்தச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு அம்மக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். வனத்தில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு நகரத்தில் இருப்பவர்களும் இதைத்தான் அனுபவிக்கிறார்கள். எப்படி மீனவர்களுக்கு கடற்கரையோரம் அவர்களது பகுதியோ அதேபோல் பழங்குடிகளுக்கும் வனத்தில் உரிமை உண்டு.
நாடு முழுவதும் சுமார் 5 லட்சம் ஹெக்டேர்கள் வனப்பகுதி கார்ப்பரேட்டுகள், தனியார் வனக் கொள்ளையர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு பழங்குடிகள் அவர்களின் வசிப்பிடங்களிலிருந்து விரட்டியடிக்கப்படுகின்றனர். அந்த நிலங்கள் தனியார் நிறுவனங்களுக்கும், தொழிற் சாலைகளுக்கும் தாரை வார்க்கப்பட்டன. வனப்பகுதிகள் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பதற்கு மிக வசதியான பகுதிகளாகவே பார்க்கப்பட்டு வந்தன. பெரு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வளர்ச்சித் திட்டங்கள் என அனைத்துக்கும் வனப்பகுதிகளையே காவு கொடுத்துக் கொண்டிருக்கிறது கார்ப்பரேட் நல பாஜக அரசு.
தாங்கள் அனுமதி அளிக்கும் திட்டங்கள் யாரைப் பாதிக்குமோ அவர்களிடம் ஒரு வார்த்தை கூடக் கேட்காமல், காடு மற்றும் காடு சார்ந்த பொருள்களை நம்பி வாழும் பழங்குடியின மக்களுக்கும் வனங்களுக்கும் இடையிலிருந்த பிணைப்பு அறுக்கப்பட்டு, காடுகளை விட்டுத் துரத்தியடித்துக் கொண்டிருந்தது பாசிச பாஜக அரசு. பாஜக அரசின் அனுமதியை மட்டுமே கையில் வைத்துக்கொண்டு பல நிறுவனங்கள் பழங்குடிகள் பலரையும் கட்டாயமாக வெளியேற்றிக் கொண்டிருந்தனர்.
இதில் அதிகபட்சமாக இந்தியாவின் அடர் வனப்பகுதிகளை கொண்ட மாநிலங்களான, சத்தீஸ்கரில் 4,62,403 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 3,62,024 பேரும், மகராஷ்டிராவில் 2,28,221 பேரும், தென்னிந்தியாவில் அதிகப்பட்சமாக கர்நாடக மாநிலத்திலிருந்து 1,80,956 பேரும், தமிழகத்திலிருந்து 11,742 பேரும் வெளியேற்றப்படவுள்ளனர். 40 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாக்கப்பட்ட வனங்களுக்குள் வாழ்கின்றனர். நாட்டின் 5 சதவிகித நிலப்பகுதியைக் கொண்ட அந்த நிலப்பரப்புகளில் அவர்கள் வாழ்கிறார்கள். அதில் 500 வனவிலங்கு சரணாலயங்களும், 90 தேசியப் பூங்காக்களும் அடக்கம்.
ஒரு நாட்டை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டுமெனில் அதன் ஆதி மனிதர்களையும், அவர்களது பண்பாடுகளையும், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளையும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இயற்கையுடன் தொடர்பில் இருப்பவர்களைப் பற்றிய புரிதல் சிறிதும் இல்லாமல் அவர்களுக்கு எதிரான செயல்பாடுகள் தொடர்வது ஒட்டுமொத்த மக்களுக்கும் வேதனையானது. ஆபத்தானது.
பழங்குடி மக்களின் வன உரிமைகளைப் பறிக்கும் நோக்கத்தில் பல்வேறு வழக்குகள் போடப்பட்டுள்ளன. இந்த வழக்குகளைப் பதிவு செய்தவர்கள் பழைய ஜமீன்தார்களும் ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரிகளும் சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும். காலம் காலமாகப் பழங்குடிகளின் உரிமைகளைப் பறித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்காக இருந்த வன உரிமை சட்டத்தை ‘வைல்ட் லைஃப் ஃபஸ்ட்’ என்ற வனவிலங்கு நல தன்னார்வ அமைப்பு வழக்கு தொடர்ந்தது. அதில் இந்த வனவிலங்குச் சட்டம் காடுகளை அழிப்பதற்கு வழிவகுக்கும் என்றும் இந்த சட்டம் தொடர வேண்டுமெனில் அதில் கூறியதுபோல பட்டா இல்லாத பழங்குடி மக்கள் வனங்களிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் தெரிவித்தது.
வன உரிமைச் சட்டத்தில் இரண்டு பிரிவு இருக்கிறது. ஒன்று பழங்குடியினர் (Scheduled Tribes) மற்றொன்று 3 தலைமுறைகளுக்கு மேலாக வனத்தில் வசிப்பவர்கள் (Traditional Forest Dwellers) (இவர்கள் விவசாயம் செய்வதற்காக காட்டுக்குள் சென்றவர்கள்) பழங்குடிகள் கிடையாது. இந்த இருவருக்கும் வனத்தில் உரிமை உள்ளது என்பதைத்தான் வன உரிமைச் சட்டம் கூறுகிறது.
அதாவது இந்த இரண்டு பிரிவினரும் வனத்தில் தங்கிய இடங்களை பட்டா போட்டு அளிக்க வேண்டும் என்பதுதான் இந்த சட்டம். இந்தச் சட்டம் வந்தபோது இதை எதிர்த்து நிறைய தன்னார்வ அமைப்புகள் வந்தன. பழங்குடிகள் காடுகளை அழிப்பதாகச் சொல்லிப் பழங்குடிகள் மீது வழக்கு தொடுத்துள்ளார்கள் சில ‘சூழலியல் போராளிகள்’. வனத்தை சுரங்கச் சுரண்டல்களில் இருந்து முடிந்தவரைப் பாதுகாத்துப் பராமரிப்பதே அவர்கள் வெளியேற்றத் துடிக்கும் இந்தப் பழங்குடிகள்தான்
ஐந்து வருடங்களில் மட்டும் (2014 – 2019) 698 திட்டங்களுக்கு வனத்தில் அனுமதி அளித்துள்ளது ஒன்றிய பாஜக அரசு. அதாவது காடுகளை, மலைகளை அதன் கீழ் இருக்கும் பல கோடி மதிப்புமிக்க கனிமங்களை கார்ப்பரேட்டுகள் வேட்டையாட நேரடியாக அடக்குமுறை சட்டங்கள் கொண்டு வருகிறது.
கார்ப்பரேட்டுகளால் நடத்தப்படும் தன்னார்வ அமைப்புகள், பழங்குடி மக்களின் அறியாமையையும், அப்பாவித்தனத்தையும் பயன்படுத்தி, அம் மக்களிடையே பழகி அவர்களுக்கு எதிராக செயல்படுகிறது. காடுகளையும், அதில் வாழும் பல்லுயிர்களையும் பாதுகாத்து வந்தவர்களின் வாழ்விடங்களை அடக்குமுறை சட்டங்கள் போட்டு பறித்துக் கொள்வதால் வாழ்விழந்து, வசிப்பிடமிழந்து பரிதவிக்கிறார்கள் இந்த நாட்டின் பூர்வ குடிகளான பழங்குடிகள்.
(தொடரும்…)
- நன்னிலம் சுப்புராயன்.