சாதிய பாகுபாடு ஊறிப் போன இந்திய மக்களின் மனங்களில் இருந்து சாதி தீண்டாமை கருத்துக்களை– பழக்க வழக்கங்களை ஒழித்து வருவதில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு.

ஆனால் அத்தகைய கல்வி நிறுவனங்களில் சாதி வெறி பிடித்த வர்கள் ஆசிரியர்களாக, மாணவர்களாக நுழையும் பொழுது என்ன நடக்கிறது? ஜனநாயகத்தை, சமத்துவத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய கல்விக்கூடங்கள் சாதி வெறி பரப்பும் இடங்களாக மாறிவிடுகின்றன.

நெஞ்சு பொறுக்குதில்லையே– இந்த சாதி வெறியர்களை நினைத்தால்…

பெங்களூருவில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஜெயின் பல்கலைக்கழகத்தில் இம்மாதத்தின் துவக்கத்தில் ஒரு வாரகால இளைஞர் திருவிழா நடைபெற்றது. அந்த விழாவில் பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி அன்று அம்பேத்கரையும், தலித்துகளையும், இட ஒதுக்கீட்டையும் இழிவுபடுத்தும் வகையில் ஒரு நாடகம் நடத்தப்பட்டது.

B.R. அம்பேத்கர் என்பதை பீர் அம்பேத்கர் (Beer அம்பேத்கர்) என்று இழிவாக பேசினர். தலித் என்ற வார்த்தையை பிரித்து இழிவான அர்த்தம் தொணிக்கும் வகையில் உச்சரித்தனர். மேலும் இட ஒதுக்கீட்டில் தலித் மக்கள் மட்டும்தான் பயன் அடைவது போல சித்தரித்தனர்.

நகைச்சுவை நாடகம் என்ற போர்வையில் இப்படிப்பட்ட சாதி வெறி நச்சுக் கருத்துக்கள் பேசப்பட்டதை அங்கிருந்த மாணவர்களில் ஒரு பகுதியினர் கைதட்டி ஆரவாரத்துடன் ரசித்து கொண்டு இருந்தனர்.

சாதி வக்கிரத்துடன் வெளிவந்த வசனங்களைக் கண்டு ஆத்திரம் அடைந்த மற்ற மாணவர்களும் பார்வையாளர்களும் நாடகம் தொடர்ந்து நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நாடகம் நிறுத்தப்பட்டது.

சாதி வெறியர்களை ஆதரித்த பல்கலைக்கழக நிர்வாகம்  

நாடக அரங்கிலேயே மாணவர்களும் பார்வையாளர்களும் இந்த நாடகத்தில் நடித்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் எழுப்பியதுடன் இந்த நாடகத்திற்கு அனுமதி அளித்த ஜெயின் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராகவும் குரல் எழுப்பினர். இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பரவி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

மாணவர்கள், பார்வையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் இந்த நாடகம் நடத்திய மாணவர்கள், அதற்குப் பொறுப்பான ஆசிரியர் மீது பல்கலைக்கழக நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கொதித்தெழுந்த மக்கள்

சாதிவெறியை கக்கும் வகையில் நாடகம் நடத்திய மாணவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படாதது கண்டு கொதித்து எழுந்த மாணவர்களும் பொது மக்களும் சாதி வெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கையெழுத்து இயக்கம் நடத்தினர். இத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் அவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்களில் பலர் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இந்த நாடகம் தொடர்பாக பெங்களூரு மற்றும் மும்பை நகர காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன.

மன்னிப்பு கேட்ட பல்கலைக்கழக நிர்வாகம்

பிரச்சனை பெரிதாவதை தடுக்க நினைத்த பல்கலைக்கழக நிர்வாகம் வேறு வழியே இல்லாத நிலையில் பொதுமக்களிடம் நிபந்தனையற்ற முறையில் மன்னிப்பு கேட்பதாக அறிவித்தது. மேலும் நாடகம் போட்ட ஆறு மாணவர்களையும் இடை நீக்கம் செய்தது.

மாணவர்களுடன் பல்கலை கழக முதல்வரும் கைது

இந்தப் பிரச்சனை தொடர்பாக குடகு மாவட்டத்தின் சித்தபுரா காவல்நிலையத்தில் பட்டியல் இன மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பல்கலைக்கழகத்தின் முதல்வர் , விழா ஏற்பாட்டாளர் மற்றும் நாடக நடத்திய ஏழு மாணவர்கள் என ஒன்பது பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்: கல்வித்துறையை மொத்தமாக விழுங்கத் துடிக்கும் காவி கும்பல்!

சாதி வெறியர்களை குறைந்தபட்சம் கைது செய்து விசாரிப்பதற்குக் கூட மக்களின் போராட்டம் தேவைப்படுகிறது.

இந்த நிலையில் தான் “இந்தியா , ஜனநாயகம் செழித்தோங்கி வளர்ந்திருக்கும் நாடு” என்றும் “எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்றும் பலர் கோஷ்டி கானம் பாடி கொண்டிருக்கின்றனர்.

நமக்கு எழும் கேள்விகள்

1. ​​​சாதி வெறி கருத்துக்களை நாடகமாக நடத்துவதற்கு மாணவர்களுக்கு துணிவு வந்தது எப்படி?

​​​​நாடகத்தில் இப்படிப்பட்ட கருத்துக்கள் பேசப்படுவதை நிர்வாகம் ஏன் கண்டு கொள்ளாமல் இருந்தது?

2. ​​​பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஆதரவு மாணவர்களுக்கு இல்லை என்று கூற முடியுமா?

3. ​​​பிற மாணவர்களும் பார்வையாளர்களும் போராடி நாடகத்தை நிறுத்திய பொழுதும்

நாடகம் போட்டவர்கள் மீது பல்கலைக்கழக நிர்வாகம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

சாதி வெறியில் ஊறிப்போன பல்கலைக்கழக நிர்வாகம் சாதி வெறியுடன் பல்கலைக்கழகத்திற்குள்  நுழையும் மாணவர்களை அரவணைக்கிறது. அந்த தைரியத்தில் தான் சாதி வன்மத்தைக் கக்கும் நாடகங்களை மாணவர்கள் தயாரித்து நடத்துகிறார்கள்.

இந்த அயோக்கியர்களுக்கு கடுமையான தண்டனை அளிப்பதன் மூலம் தான் இத்தகைய போக்குகளை ஒழிக்க முடியும் . பல்கலைக்கழகங்கள் சாதி வெறி பரப்பும் இடங்களாக மாறுவதை தடுக்க முடியும்.

அதற்கு மக்கள் போராட்டம் தான் ஒரே வழி.

  • பாலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here