இந்தியாவில் நிலவுகின்ற போலி ஜனநாயக அரசு கட்டமைப்பில், அமெரிக்கா, ரசியா மேல்நிலை வல்லரசுகளுக்கு யார் விசுவாசமாக சேவை செய்வது என்பதில், இரு ஆளும் வர்க்க முகாம்களுக்கு இடையில் நடந்த மோதலானது நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு எதிரான அவசர நிலை பாசிசமாக அறிவிக்கப்பட்டது.
இந்த அரசியல், பொருளாதார நெருக்கடிகள் இருந்த போதிலும் மக்களுக்கு அது வெளிப்படையாக தெரியவில்லை, 1971 ரேபரேலி தொகுதிக்கான தேர்தலில் பாசிச இந்திராவின் தோல்வி உச்ச நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டது தான் என்ற விவரம் மட்டுமே பேசப்பட்டது. இதிலிருந்து தப்பவே அவர் எமர்ஜென்சியைக் கொண்டு வந்தார் என்பதைப் போலவே ஊடகங்கள் சித்தரிக்கின்றன. அப்போது என்ன நடந்தது என்பதையும் பார்ப்போம்.
1971 நாடாளுமன்றத் தேர்தலில் ரேபரேலி தொகுதியில் இந்திராகாந்தி பெற்ற வெற்றி செல்லாது எனக்கூறி அவரிடம் தோல்வியடைந்த போலி சோசலிசவாதியான ராஜ்நாராயணன் தொடுத்த வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடந்தது.1975 மார்ச் 19-ல் அந்த வழக்கில் இந்திராகாந்தி சாட்சி கூறினார். நீதிபதி சின்ஹா இந்திராவின் வெற்றி செல்லாது என அறிவித்தார். எனினும் இந்த தீர்ப்பை எதிர்த்து மூன்று வாரங்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் எனவும் தீர்ப்பளித்தார்.
அந்த ஆண்டு ஜூன் மாதம் உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீடு வி.ஆர்.கிருஷ்ணய்யர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. போலி சோசலிசவாதியான ராஜ் நாராயணன் சார்பில் மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷணும், இந்திரா சார்பில் முத்த வழக்கறிஞர் நானி பல்கிவாலாவும் ஆஜராகினர். அப்போது கொடுக்கப்பட்ட தீர்ப்பில் “1971 தேர்தல் வெற்றி செல்லுமா, செல்லாதா என்பது குறித்த விசாரணை பின்னர் நடைபெறும். அதுவரை இந்திரா காந்தியே பிரதமராக பதவி வகிக்கலாம். ஆனால் தீர்மானங்களின் மீது வாக்களிக்கும் உரிமை மட்டும் அவருக்கு கிடையாதென தீர்ப்பளித்தார். 6 மாதங்கள் வரை அவரே பிரதமராக இருக்கலாம் என 75(5) பிரிவைத் தனது உத்தரவில் சுட்டிக்காட்டினார். ஜெயப்பிரகாஷ் நாராயணனும், மொரார்ஜி தேசாயும் இந்திராகாந்தி பிரதமர் பதவி விலக வேண்டுமென்ற போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
இந்த போராட்டத்தினால் இந்திராவுக்கு நெருக்கடி தீவிரமானதால், அப்போதைய அரசியல் சட்ட நிபுணரான சித்தார்த் சங்கர் ரே-வை அழைத்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் ”உள்நாட்டுப் பிரச்சனை ஏற்படும்போது அவசரநிலையை அறிவிக்கலாம்” எனும் அரசியலமைப்பின் 352 விதியை சுட்டிக்காட்டி சித்தார்த் சங்கர் ரே முன்வைத்தார். இந்திராவின் இளைய மகனான சஞ்சய்காந்தி, ஹரியான முதல்வர் பன்சிலால் மற்றும் ஓம் மேத்தா ஆகியோரிடம் மட்டுமே இரவில் அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. மறுநாள் காலையில்தான் சக அமைச்சர்களுக்கே அறிவித்தார் இந்திரா காந்தி.. காங்கிரசு கட்சிக்குள் எமர்ஜென்சியை எதிர்த்து யாரும் பேசவில்லை. இந்த அமைதியைப் பற்றி சில மாதங்களுக்கு பிறகு ஒரு கூட்டத்தில் இந்திரா காந்தி பேசியபோது, ‘When I implied the Emergency Not Even a Dog breached “ என்று கொக்கரித்தார்..
1975 ஆம் ஆண்டு 25 ஜூனில் அறிவிக்கப்பட்ட இந்த அவசரநிலை பாசிசமானது 1977 மார்ச் மாதம் வரை ஏறக்குறைய 19 மாதங்களுக்கு நீடித்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிகள் பாராளுமன்றம் அமைச்சரவை ஆகியவற்றிற்கு மேலாக பாராளுமன்றத்தில் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரிகளாக இருந்த சிலர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் குவிக்கப்பட்டது.
1975 அவசரநிலை அறிவிக்கப்பட்ட போது ஆர்.கே திரிவேதி பிரதமர் அலுவலகத்தில் முதன்மை செயலராக பணியாற்றி வந்தார். அவர் 1977 வரை அதே பதவியில் நீடித்தார் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு 60களில் துவங்கிய அரசியல், பொருளாதார நெருக்கடியும், உலகளாவிய ஏகாதிபத்திய பொருளாதார நெருக்கடியும் இணைந்து இந்தியாவின் மீது ஆதிக்கம் செலுத்திய போது, உள்நாட்டு அரசியலிலும் அப்போதைய பிரதமராக இருந்த இந்திராவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராடியது, அவரது தேர்தல் வெற்றி மீது உச்சநீதிமன்றம் சாதகமான தீர்ப்பை வழங்கியது போன்றவையும் இணைந்து கொள்ளவே தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக எமர்ஜென்சியை கொண்டு வந்தார் பாசிச இந்திரா.
இந்த சூழலில் 20 அம்சத் திட்டம் என்ற பெயரில் கார்ப்பரேட் ஆதரவு பொருளாதாரக் கொள்கை ஒன்றை அப்போதே முன்வைத்தார் இந்திரா காந்தி. இந்த இருபது அம்சத் திட்டம் நாடு முழுவதும் விரிவாக பிரச்சாரம் செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. ’இந்தியா என்றால் இந்திரா! இந்திரா என்றால் இந்தியா’ என்ற முழக்கம் பிரபலப்படுத்தப்பட்டது.
பேச்சுரிமை, எழுத்துரிமை, சங்கம் கட்டும் உரிமை, ஊடகங்களின் சுதந்திரம் ஆகியவை அனைத்தும் கடுமையாக நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டது எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். உள்நாட்டு நெருக்கடி என்று ஆளும் வர்க்கம் முன் வைத்தது எதிர்க்கட்சியினரின் போராட்டங்களை அல்ல. 70-களில் வெடித்து கிளம்பிய நக்சல்பரி புரட்சியின் தாக்கம் இந்திய ஆளும் வர்க்கத்தை கடுமையாக அச்சம் கொள்ளச் செய்தது.
இந்த எமர்ஜென்சியை பயன்படுத்திக் கொண்டு மார்க்சிய- லெனினிய புரட்சியாளர்கள், அவர்களின் செயல்பாடுகள் ஆகியவற்றின் மீது கடுமையாக ஒடுக்குவதற்கு பாசிச இந்திரா திட்டமிட்டது குறிப்பிடத்தக்கதாகும். பல்வேறு நக்சல்பரி அமைப்புகளின் முன்னணி தோழர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். மா.லெ தோழர்கள் மட்டுமின்றி இடதுசாரி அமைப்பினர், சோசலிசவாதிகள், ஜனநாயகத்தை நேசிக்கின்ற ஊடகவாதிகள் ஆகியவரையும் சிறையில் அடைத்தது இந்திரா அரசாங்கம்.
இந்த எமர்ஜென்சியின் போது ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவு மேல் மட்டத்திலிருந்து சர்வாதிகார ஆட்சியை நிறுவியதும், போலி ஜனநாயக அரசு கட்டமைப்பை கேள்விக்குள்ளாக்கியதும் தான் எமர்ஜென்சியின் போது நடந்த அடக்கு முறையாகும்.
அதிகார வர்க்கத்தின் துணையுடன் நிறுவப்பட்ட இந்த எமர்ஜென்சி காங்கிரஸ் கட்சியால் ஒருங்கிணைந்த முறையில் கொண்டுவரப்பட்டது அல்ல. ஏனென்றால் பாசிசம் மற்றும் பாசிச கட்சிகள் மேலிருந்து கீழ் வரை ஒரே சித்தாந்தத்தின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். காங்கிரசுக்கு அது போன்ற சித்தாந்த பின்னணி ஒன்றுமில்லை. இதைப் புரிந்துக் கொள்ள வேண்டுமென்றால் ஆர்எஸ்எஸ்-சின் பிதாமகர் கோல்வால்கரின் வார்த்தைகளில் சொன்னால் புரியும். ”ஒரே கொடி, ஒரே தலைவர் மற்றும் ஒரே சித்தாந்தத்தினால் ஈர்க்கப்பட்ட ஆர்எஸ்எஸ் இந்த மகத்தான நிலத்தின் ஒவ்வொரு மூலையிலும் இந்துத்துவாவின் சுடரை ஏற்றி வருகிறது” என்றார். இது போன்ற நிலைமை காங்கிரசில் இல்லை. எனவே, காங்கிரஸ் கொண்டு வந்த அவசரநிலை பாசிசமும், தற்போது கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதிகள் அமுல்படுத்தும் பாசிசமும் ஒன்றல்ல.
அதேபோல ஒவ்வொரு ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் தேதி எமர்ஜென்சி நினைவு என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் பாசிச கும்பல் தாங்கள் ஏதோ எமர்ஜென்சிக்கு எதிராக போராடியது போலவும், அதனால் எமர்ஜென்சியின் போது கடுமையாக அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டது போலவும் நடிக்கின்றனர். இந்த கால கட்டத்தில் ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட்டு அதன் தொண்டர்கள் கைது செய்யப்பட்டது உண்மைதான். ஆனால் ஆர்எஸ்எஸ் ஒரு போதும் எமர்ஜென்சியை எதிர்க்கவில்லை.
அப்போதைய ஆர்எஸ்எஸ் தலைவரான பாலாசாகிப் தேவரஸ் இந்திரா காந்திக்கு பலமுறை கடிதங்கள் எழுதி ஆர்எஸ்எஸ் மீதான தடையை நீக்குமாறு கூறினார் என்பது மட்டுமின்றி இந்த சூழலில் இந்தியாவை காப்பாற்றுவதற்கு இது போன்ற நடவடிக்கைகள் அவசியமானது தான் என்று இந்திராவுடன் கூடிக்குலவினார்.
இன்றோ எமர்ஜென்சியின் போது தாங்கள் ஏதோ போராடியது போலவும், இந்திய வரலாற்றில் அரசியலமைப்பின் மீது தொடுக்கப்பட்ட கடுமையான தாக்குதல் எமர்ஜென்சி என்று தாங்கள் கூறுவதன் மூலம், ஏதோ ஜனநாயகத்திற்காக பெரும் பாடுபடுபவர்கள் என்பதைப் போல காட்டிக் கொள்கிறது ஆர்எஸ்எஸ்-பாஜக. அவர்களின் உண்மை முகம் என்ன என்பதை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
(தொடரும்…)
நன்னிலம் சுப்பராயன்.
முந்தைய பதிவு: ஆர்.எஸ்.எஸ்- பாஜகவின் கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதமும், காங்கிரசின் அவசரநிலை பாசிசமும்