ன்றாடம் செய்தித்தாள்களிலும், மைய ஊடகங்களிலும், கோடி மீடியாக்களிலும் நக்சல் வேட்டை என்ற செய்தியும், மாவோயிஸ்டுகளுடனான மோதலில் மாவோயிஸ்டுகள் சுட்டுப் படுகொலை செய்யப்படுகிறார்கள் என்ற செய்தியும் வந்துக் கொண்டுள்ளது.

இஸ்ரேலின் மீது திடீரென தாக்குதல் நடத்திய ஹமாஸ் இயக்கத்தை பூண்டோடு ஒழிப்பதாக கங்கணம் கட்டிக்கொண்டு காசா மீது தாக்குதல் நடத்தி பல்லாயிரம் மக்களை கொன்று குவித்த யூத-ஜியோனிச மதவெறி பிடித்த இஸ்ரேல் அரசாங்கம் மற்றும் பாசிச நெதன்யாகுவின் பாசிச பயங்கரவாத நடவடிக்கைகளை போன்ற நடவடிக்கைகளையே மாவோயிச அமைப்புகளின் மீது பார்ப்பன (இந்து) மதவெறி பிடித்த பயங்கரவாத கும்பல் நடத்தி வருகிறது.

அன்றாடம் தலைப்புச் செய்தியாக இதனை மாற்றுவதன் மூலம் மாவோயிச அமைப்பு மட்டுமல்ல, தேர்தல் அரசியலில் ஈடுபடாத மார்க்சிய லெனினிய அமைப்புகள் மற்றும் ஈடுபடுகின்ற அமைப்புகள், கம்யூனிச அமைப்புகள் அனைத்தையும் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் முத்திரைக் குத்தி மக்களிடமிருந்து தனிமைப்படுத்த எத்தனிக்கிறார்கள்.

இதனையே அடிப்படையாகக் கொண்டு கம்யூனிசத்தையும் பொதுவுடமை இயக்கத்தையும்ஒழிக்கும் நீண்டகால திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள், இந்த திட்டத்தின் முதல் படியாக கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகவும், பார்ப்பன மேலாதிக்கத்திற்கு எதிராகவும் போராடுகின்ற புரட்சிகர அமைப்புகளை “மாவோயிஸ்டுகள்”, “நக்சலைட்டுகள்”, “நகர்ப்புற நக்சல்கள்” என்று பல்வேறு பெயர்களை சூட்டி கைது செய்து நீண்ட காலச் சிறையில் அடைப்பதும், ஆயுதமேந்தி போராடுகின்ற மாவோயிச அமைப்புகளை சேர்ந்தவர்களை எவ்வித விசாரணையுமின்றி சுட்டுப் படுகொலை செய்வதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளது ஆர்எஸ்எஸ் – பாஜக பயங்கரவாத கும்பல்.

நக்சல்பாரி அரசியலும், தீவிரவாதமும்.

இந்தியாவில் பாராளுமன்ற ஜனநாயக அமைப்பு முறைக்கு வெளியில் மாற்று அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை முன்வைத்து போராடுகின்ற நக்சல்பாரி அமைப்புகளை பற்றி மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படாமலேயே அதிகாரத்தை செலுத்தும் போலீசு, இராணுவம், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளடக்கிய அதிகார வர்க்கம், நீதித்துறை உள்ளிட்ட அரசு எந்திரமும், அவ்வப்போது மக்களால் தேர்வு செய்யப்படுகின்ற அரசாங்கங்களும் பல்வேறு அவதூறுகளை அள்ளித் தெளித்து வருகிறது.

நக்சல்பாரிகள் என்றாலே தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், தேசவிரோதிகள் என்று பிரச்சாரம் செய்வதும், அவர்கள் ரயில் கவிழ்ப்பு, பாலங்களை உடைப்பது, முக்கிய அரசியல் பிரமுகர்களை கடத்துவது, போலீஸ் ஏஜெண்டுகளாக சீரழிந்த துரோகிகளையும், ஆள்காட்டி களையும் கொலை செய்வது என்று கொடூரமான செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று அவர்களின் மீது முத்திரை குத்தப்படுகிறது.

70-களில் சிபிஐஎம் கட்சியிலிருந்து விலகி இந்த நாட்டின் அரசியல், பொருளாதாரம், பண்பாட்டு நிகழ்ச்சி போக்குகளையும், நாட்டின் நிலவுகின்ற உற்பத்தி முறை பற்றிய ஆய்வையும் முன்வைத்து இந்தியா ஒரு அரைக்காலனிய, அரை நிலப்பிரபுத்துவ நாடு என்பதை தனது கட்சி திட்டத்தில் அறிவித்துள்ளது நக்சல்பாரி இயக்கம். இந்தக் கட்சி திட்டத்தை அமல்படுத்துவதற்கு மாவோயிச கம்யூனிச மையம் மற்றும் பல்வேறு புரட்சிகர அமைப்புகள் வெவ்வேறு வழிகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

பாராளுமன்ற பாதைக்கு மாற்றை முன் வைக்கும் நக்சல்பாரி அமைப்புகள்!

நக்சல்பாரி அமைப்புகளைப் பற்றி தொடர்ச்சியாக அவதூறு செய்வது மட்டுமின்றி 2026 மார்ச் மாதத்திற்குள் நக்சல்பாரி அரசியலை முழுமையாக ஒழித்து விடுவேன் என்று இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர் திருவாளர் அமித்ஷா தொடர்ந்து கொக்கரித்து வருகிறார்.

தேசத்தின் சொத்துக்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு விற்பனை செய்யலாம்; பழங்குடிகளையும், நிலமற்ற கூலி விவசாயிகளையும் அவர்களது இடங்களில் இருந்து அப்புறப்படுத்திவிட்டு அதனை கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளிக் கொடுக்கலாம்.

முப்போகம் விளையும் வயல்களையும், அதற்கு அடியில் புதைந்து கிடக்கும் கனிம வளங்களை சூறையாடுவதற்கும், உணவு உற்பத்தியை அழித்து, உணவு உற்பத்தியில் தன்னி றைவை ஒழித்துக்கட்டி உணவு தேவைக்காக அன்னிய ஏகபோகங்களிடமும் உணவு கார்ப்பரேட்டுகளிடமும் கையேந்த வைக்கலாம்.

நாட்டில் நீண்ட காலமாக நிலவுகின்ற சாதிய அமைப்பு முறையை பாதுகாத்து அதுதான் அறிவியல் பூர்வமானது என்று வாதாடலாம்; குறிப்பிட்ட சாதி அதாவது பார்ப்பன சாதியினர் அனைத்திற்கும் மேலான அறிவு படைத்தவர்கள்; திறன் படைத்தவர்கள்; தகுதி படைத்தவர்கள் என்று அவர்களுக்கே அரசு பதவிகளையும் அதிகார பொறுப்புகளையும் நீதித்துறை பதவிகளையும் அள்ளிக் கொடுக்கலாம்.

நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு எதிராக இந்தகைய செயல்களை செய்துக் கொண்டு அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தான் செயல்படுகிறோம் என்றும், ஜனநாயக வழி முறையில் நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்றும் கூறிக் கொண்டு விட்டால் போதும் இவை அனைத்தையும் செய்வதற்கு எந்த விதமான தடையும் இல்லை.

பாசிச பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கிரிமினல் குற்ற செயல்களையே சட்டபூர்வமாக்கி உள்ளது மட்டுமின்றி, லஞ்சம் மற்றும் ஊழலை நிதி கொள்கையாக மாற்றி உள்ளது. கார்ப்பரேட் நலனுக்காக லஞ்சம் கொடுப்பதை தவறு அல்ல என்றும், தேசத்தின் வளர்ச்சிக்காக இது போன்ற ‘சில்லறை செலவுகளை செய்ய வேண்டும் என்றும் வாதாடுகிறது பாசிச பாஜக.

நாட்டின் செல்வ வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு வாரி கொடுப்பதை சட்டபூர்வமாக்கி இதுதான் தேசத்தின் வளர்ச்சி என்று கூறிக்கொண்டு இயற்கை வளங்களையும், கனிம வளங்களையும், காட்டு வளங்களையும், கடல் வளத்தையும் முற்றாக சுரண்டி கொள்ளையடிப்பதற்கு தாராள அனுமதி கொடுத்துவிட்டு ஜனநாயகப் பாதையில் செயல்படுகிறோம் என்று கூறிவிட்டால் அவர்களை ஒன்றும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது.

ஆனால் ஊரின் எல்லையில் உள்ள காவல் தெய்வங்களைப் போல நாட்டின் குறுக்கு நெடுக்காக ஓடுகின்ற மலைத்தொடர்கள், காடுகள் மற்றும் பூமிக்கடியில் புதைந்து கிடக்கின்ற கனிம வளங்களை பாதுகாக்கின்ற அரசியலை முன்வைத்து பழங்குடிகள் மத்தியிலும், விவசாயிகள் மத்தியிலும் பிரச்சாரம் செய்து அவர்களை அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடுவதற்கு அறைகூவல் விடுக்கின்ற மாவோயிச அமைப்புகளை கொன்று குவிப்பதற்கு அவர்கள் சொல்லிக் கொள்ளப்படும் ‘ஜனநாயகத்தின்’ மீது நம்பிக்கை கொள்ளவில்லை என்ற ஒரே காரணம் மட்டும் போதும்.


படிக்க: 

🔰காடு : குறுக்குவழியில் பறிக்கப்படும் காடுகள்!

🔰இந்திய ஒன்றியத்துடன் பேச்சுவார்தைக்கு தயாரான நிலையில் மாவோயிஸ்ட் செயலாளர் படுகொலை!


நக்சல்பாரி அரசியலை கொண்டுச் செல்கின்ற பல்வேறு அமைப்புகளில் ஆயுதப் போராட்டம் என்பதை கொச்சையாக புரிந்துக் கொண்டு துவக்கம் முதலே படையைக் கட்டி அரசுக்கு எதிராக போர் புரிகின்ற மாவோயிச அமைப்புகளின் அரசியல் திசைவழி மீது புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளுக்கு விமர்சனம் உள்ளது என்ற போதிலும், அவர்களின் மீது நடத்தப்படுகின்ற கேட்பாரற்ற ஒடுக்குமுறைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

நக்சல் ஒழிப்பு என்ற பெயரில் பழங்குடிகள் அழிப்புக் கொள்கை!

கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பாசிச பாஜகவின் ஆட்சியின் கீழ் தீவிர நக்சல் ஒழிப்பு என்ற பெயரில் ஆபரேஷன் சமஹான் என்ற திட்டமும், அதன் பிறகு ஆபரேஷன் ககர் என்ற திட்டத்தின் கீழ் காடுகளில் தேடுதல் வேட்டை நடத்துவதற்கு இந்திய ஒன்றியத்தின் ராணுவம் இறக்கி விடப்பட்டுள்ளது.

காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் இந்த ராணுவம் செய்த அனைத்து விதமான இழி செயல்களையும் குறிப்பாக பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை ஏவுவது; பழங்குடிகள் மற்றும் விவசாயிகளின் வளர்ப்பு பிராணிகளை திருடி தின்பது முதல் அவர்களிடம் உள்ள குறைந்தபட்ச சேமிப்பையும் கொள்ளையடிப்பது வரை அனைத்து விதமான இழிவான செயல்களையும் ராணுவம் செய்து வருகிறது என்பது தற்போது மேலும் அம்பலமாகியுள்ளது.

ஆங்கில பத்திரிகையான ஃப்ரண்ட் லைன் இதழுக்கு நக்சல்பாரி அரசியலில் செயல்பட்டு கடும் ஒடுக்குமுறைக்கும், சிறைக்கொடுமைகளுக்கும் ஆளான போராளி சோனி சோரி கொடுத்துள்ள பேட்டி ராணுவத்தின் உண்மை முகத்தை திரைகிழித்துக் காட்டியுள்ளது.

இதற்கு முன்பு சல்வா ஜூடும் இருந்தது. யார் சல்வா ஜூடுமால் மிகவும் பாதிக்கப்பட்டனர்? பழங்குடியினர் தான். பஸ்தர் பட்டாலியன், தண்டேஷ்வரி படை, கமாண்டோ பட்டாலியன், கோப்ரா பட்டாலியன் என அரசுப் படைகள் பல இருந்தன. பல போலீசு முகாம்கள் அமைக்கப்பட்டன. அனைத்து வகையான படைகளும் பழங்குடியினரை ஒழிக்கவே கொண்டு வரப்பட்டன.

போலி என்கவுன்டர்கள் நடக்கும் இடங்களுக்குச் சென்று கேள்விகள் கேட்க எங்களுக்கு அனுமதி இல்லை. ஊடகங்களிடம் பேசவும், குரல் எழுப்பவும் முயன்றால் நாங்கள் அமைதியாக்கப்படுகிறோம். இந்திய அரசு ஒட்டு மொத்த உலகத்துடனும் பேசி வருகிறது. ஆனால் பஸ்தர் மக்களின் குரல்களும், சமூக செயற்பாட்டாளர்களின் குரல்களும் இங்கு நசுக்கப்படுகின்றன.

மாவோயிஸ்டுகள் 2026-ம் ஆண்டுக்குள் ஒழிக்கப்படுவார்கள் என்று அமித்ஷா கூறுகிறார். இதன் பின்னணியில் உள்ள உண்மையான யுக்தி என்ன? மாவோயிஸ்ட் என்ற பெயரில் யாராவது கொல்லப்பட்டால், அந்த நபரின் தலைக்கு பரிசுத்தொகையாக ரூ.2 இலட்சம், ரூ.3 இலட்சம், ரூ.4 இலட்சம் என பணம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த முறையில் கொல்லப்படுவது பழங்குடி விவசாயிகள்தான். ஆனால் அவர்கள் மாவோயிஸ்டுகள் என்று அழைக்கப்படுகிறார்கள். கொல்லப்பட்ட மக்களின் தலைக்கு ரூ.60 இலட்சம் முதல் ரூ.1.5 கோடி வரை பரிசுத் தொகை வழங்கப்படுவதாகக் கூட நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். மேலும் இந்திய அரசுப்படையினரே அந்த நபரைக் கொன்றுவிட்டு பின்னர் வெகுமதியை வழங்குகிறது.

ஆனால் சட்டத்தின்படி, என்ன நடக்க வேண்டும்? முதலில் ஒரு பிரேத பரிசோதனை நடக்க வேண்டும். கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் என கிராம பஞ்சாயத்துக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்; அவரின் குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்; கிராம மக்களுக்கு குறிப்பாக படித்தவர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.

இதில் எதையுமே அவர்கள் செய்வதில்லை. பிரேத பரிசோதனை செய்வதில்லை. செய்தித்தாள்களில் தகவல்களை அச்சிடுவதில்லை. ஒருவர் கொல்லப்பட்ட பிறகு அவரின் தலைக்கான பரிசுத் தொகை அறிவிக்கப்படுகிறது. இதனால்தான் இங்கு தினமும் இவ்வளவு இரத்தக்களரி நடக்கிறது. ஒருவரைக் கொன்று பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். சரணடைந்து பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு எனது கேள்வி என்னவென்றால், உங்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது? இதற்கு உங்களிடம் கணக்குகள் உள்ளதா?

இந்த இராணுவமயமாக்கலில் தோட்டாக்கள் பாய்ந்து கொண்டே இருக்கின்றன. அமித்ஷாவும் ஒன்றிய அரசும் மாவோயிஸ்டுகளின் விசயத்தை தீர்க்க முனைந்தால், அப்பாவி பழங்குடியினரைக் கொல்லாமல், காடுகளையும் மலைகளையும் அழிக்காமல், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் இதைச் செய்ய வேண்டும். மலைகள் எரிகின்றன, ஆறுகள் அழிக்கப்படுகின்றன, பழங்குடியினரின் குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள். அவர்கள் மாவோயிஸ்டுகளை ஒழிப்பதாகக் கூறுகிறார்கள், ஆனால் இது மாவோயிஸ்டுகளின் அழிவு அல்ல பழங்குடி மக்களின் அழிவு இவர்கள் அளிக்கும் வெகுமதித் தொகை மக்களின் பணமல்லவா? இதற்கான கணக்குகள் எங்கே? யார் அதை ஒதுக்குகிறார்கள், யார் அதை தணிக்கை செய்கிறார்கள், எங்கே செய்யப்படுகிறது? இந்த தகவலை வெளிக்கொணர நான் தயாராக இருக்கிறேன். இந்தக் கேள்விகளுக்கான பதில்களைப் பெற விண்ணப்பங்களை தாக்கல் செய்ய முயற்சித்தால், என்னை நக்சலைட் என்று முத்திரை குத்தி கொலை செய்வார்கள் அல்லது சிறையில் அடைப்பார்கள். ஆனால் நாங்கள் கொல்லப்படுவோம் என்றோ அல்லது சிறையில் அடைக்கப்படுவோம் என்றோ அஞ்சுவதில்லை. ஏனென்றால் எங்களது போராட்டம் எங்கள் காடுகளுக்காகவும் மனிதகுலத்திற்குமானது” என்கிறார் போராளியான சோனி சோரி.

பழங்குடிகள் மத்தியில் செயல்பட்டு வரும் மாவோயிஸ்டுகளை ஒழித்துக் கட்டுவதற்கு பழங்குடிகளையும் சேர்த்து படுகொலை செய்வது; அதன் மூலம் மாவோயிஸ்டுகளுக்கு அவர்கள் கொடுக்கக்கூடிய ஆதரவை தடுப்பது; பழங்குடிகள் மற்றும் மாவோயிஸ்டுகளை பற்றி பல்வேறு அவதூறுகளை பிரச்சாரம் செய்வது; தேர்தலை தடுக்கிறார்கள் அரசு ஊழியர்களை பணியாற்ற விடாமல் தடுக்கிறார்கள்; வளர்ச்சித் திட்டங்களுக்கு தடை போடுகிறார்கள்; சாலை வசதிகள், கல்வி வசதி மற்றும் சுகாதார வசதி அனைத்தையும் தடுத்து நிற்கிறார்கள் என்று மனம் போன போக்கில் பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர்களின் மீது சுமத்துவதன் மூலம் இப்படிப்பட்ட கொடூர எண்ணம் கொண்டவரை சுட்டுத்தள்ளுவது சரிதான் என்ற பொதுக்கருத்தை உருவாக்கி வருகிறது ஆளும்வர்க்கமும் அதன் ஊடகங்களும். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடிகள் மற்றும் மாவோயிச அமைப்பைச் சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.


படிக்க: 

🔰 நக்சல்பாரி இயக்கமும் மே மாதமும்

🔰 மே-25: நக்சல்பாரி எழுச்சியின் 57 –ம் ஆண்டு! மறையாது மடியாது நக்சல்பரி!


சட்டத்தின் ஆட்சி என்பது என்ன? எப்படிப்பட்ட குற்றங்களை புரிந்தவர்களானாலும் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தின் கீழ் ஒப்படைப்பது; அவர்களின் மீது விசாரணை நடத்துவது விசாரணை நடத்தி அவர்களின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நிரூபிப்பது; அதன் பிறகு தண்டனை கொடுப்பது என்பதுதான் இந்திய குற்றவியல் சட்டம் முன்வைக்கும் நடைமுறை. ஆனால் மாவோயிஸ்டுகளைப் பொறுத்தவரை இப்படிப்பட்ட நடைமுறைகள் எதுவும் கடைபிடிக்கப்படுவதில்லை.

தண்டக்காரண்யா, பஸ்தார் மற்றும் தண்டோவாடா பகுதியில் சந்தேகத்திற்கு உரிய யாரையும் மாவோயிஸ்டுகள் என்று முத்திரைக் குத்தி படுகொலை செய்வதற்கு அனுமதி கொடுத்திருக்கின்ற ஆபரேஷன் நடவடிக்கைக்கு பெயர் தான் ஆபரேஷன் ககர்.

தொடர்ச்சியாக நக்சல்பாரி அமைப்பின் மீது அவதூறு பொழிந்து வருகின்ற இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மோடி கும்பல் நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு எதிராகவும் நாட்டின் இயற்கை வளங்கள், கனிமவளங்கள், அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மற்றும் அனைத்து விதமான செல்வங்களையும் கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளிக் கொடுத்து வருகிறது.

அதனை தட்டிக் கேட்கின்ற ஜனநாயக உணர்வு கொண்ட, புரட்சிகர உணர்வு சொண்டவர்களை மாவோயிஸ்டுகள், நகர்புற நக்சல்கள் என்னும் முத்திரை குத்தி படுகொலை செய்வது மிகவும் அருவருக்கத்தக்கது மட்டுமின்றி கொடூரமான நடைமுறை கொண்டது. வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.

நீதிக்காக போராடினால் தீவிரவாதி! காட்டிக் கொடுப்பவன் தேசபக்தனா?

உலகில் மக்களை சார்ந்த நின்று போராடுகின்ற எந்த இயக்கத்தையும் அவ்வளவு சீக்கிரமாக அழித்து ஒழித்து விட முடியாது. 1947க்கு முன்பாக பிரிட்டன் காலனியாதிக்கத்தை விரட்டியடிக்க போராடிய பகத்சிங்கை தீவிரவாதி என்று முத்திரை குத்தியது பிரிட்டன் அரசாங்கம். ஆனால் காலனியாதிக்கத்தை தூக்கி எறிந்து விடுதலை பெற்றதாக அறிவித்த பிறகு அதே பகத்சிங் தியாகியாகவும், அனைவரும் பின்பற்றத்தக்க முன்னுதாரணமான மனிதனாகவும் போற்றப்படுகின்றார்.

இன்னும் இது போல வரலாற்றில் எண்ணற்ற உதாரணங்களை நாம் முன் வைக்க முடியும். இன்று இந்திய ஒன்றிய ஆர்எஸ்எஸ் – பாஜக அரசாங்கத்தின் கனிம வள கொள்ளைக்கு எதிராகவும்; காடுகள் அழிப்புக்கு எதிராகவும்; விவசாயத்தை ஒழிப்பதற்கு எதிராகவும்; சுரங்கங்களின் மூலம் காடுகளின் வளங்களை அழிப்பதற்கு எதிராகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற அனைவரையும், ஆர்எஸ்எஸ் – பாஜகவிற்கு எதிராக போராடுகின்ற நாட்டுப்பற்றாளர்கள் அனைவரையும் ‘இடதுசாரி தீவிரவாதிகள்’ என்றும், ‘கம்யூனிச பயங்கரவாதிகள்’ என்றும் முத்திரை குத்தி ஒடுக்குவதன் மூலம் இவர்கள்தான் உண்மையான நாட்டுப்பற்றாளர்கள் என்பதை மறைமுகமாக உணர்த்தி வருகிறார்கள்.

கார்ப்பரேட்டுகளின் வரம்பற்ற கொள்ளைக்காக இந்த நாட்டு மக்களை தயார்படுத்துவதற்கு, தேச பக்தி என்ற பெயரில் அடங்கிப்போவதற்கு அவர்களின் மத்தியில் புரையோடிப்போயுள்ள சாதிய, மத உணர்வுகளை குறிப்பாக பார்ப்பன மத உணர்வை தூண்டிவிட்டு குளிர்காய்கின்ற பாசிச பயங்கரவாதிகளான ஆர்எஸ்எஸ் – பாஜகவை முற்றாக இந்திய மண்ணில் இருந்து துடைத்தெரியும் வரை நக்சல்பாரி கம்யூனிச இயக்கங்களின் கொள்கை ஒருபோதும் பின்னடைவை சந்திக்காது.

அதன் கொள்கையை பிரச்சாரம் செய்து மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு அந்த இயக்கங்கள் தொடர்ச்சியாக முயற்சி செய்கின்றன. நக்சல்பாரி அமைப்புகளுக்கு எதிராக பரப்பப்படுகின்ற அனைத்துவிதமான அவதூறுகளையும் முறியடிப்பதற்கு தொடர்ந்து போராடுவோம்.

மனித உரிமைகளையும் சட்டத்தையும், காலில் போட்டு மிதித்துக்கொண்டு, மாவோயிஸ்டுகள் உள்ளிட்டு கம்யூனிச அமைப்புகளின் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வருவோம்.

ஆப்ரேஷன் காகரை உடனடியாக நிறுத்து! பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு உரிய நிவாரணமும் பாதுகாப்பான வாழ்க்கையும் ஏற்பாடு செய்துக் கொடு! கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்காக போடப்பட்டுள்ள அனைத்து விதமான ஒப்பந்தங்களையும் ரத்து செய்! மாவோயிச அமைப்பிடம் தொடர்புடையவர்கள் என்ற பெயரில் கடுமையாக ஒடுக்கு முறைக்கு உள்ளாகியுள்ள ஜனநாயக சக்திகள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் அனைவரையும் நிபந்தனையின்றி சிறையிலிருந்து விடுதலை செய்! சட்ட விரோத தடா, பொடா, ஊபா போன்ற சட்டங்களையும் நீக்கு என்றும், பாசிச கொலைகாரப் படையான என்ஐஏ-வை கலைத்திடு! என்றும் முழக்கங்களை முன்வைத்துப் போராடுவோம்.

நன்னிலம் சுப்பராயன்

புதிய ஜனநாயகம் 2025 ஏப்ரல் இதழ்

1 COMMENT

  1. பழங்குடிகளின் வாழ்க்கை போராட்டம் எவ்வளவு கொடுமையானது என்பதும், அதை விட கொடியது அரச பயங்கர வாதம் என்பது புரியவைத்ததிற்கு நன்றி !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here