இந்தியாவின் ஜார்கண்ட், சத்தீஸ்கர், மாநிலங்களின் இயற்கை வளங்களையும், கனிம வளங்களையும் தேசங்கடந்த தரகு முதலாளிகளும், கார்ப்பரேட்டுகளும் கொள்ளை அடித்து செல்வதற்கு மிகப்பெரும் தடையாக இருந்து வருகின்ற மாவோயிச அமைப்புகளை ஒழித்துக் கட்டுவது என்று கால இலக்கு வைத்து ஆபரேஷன் காகர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக அறிவிக்கப்பட்ட ”பிளாக் மவுண்ட் ஆப்ரேஷன்” மூலமாக இன்று காலையில் மாவோயிச அமைப்பின் பொதுச்செயலாளர் நம்பலா கேசவராவ் மற்றும் முன்னணியாளர்கள், பழங்குடியின மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்த நடவடிக்கைகள் பற்றி மே 2025, புதிய ஜனநாயகம் இதழின் தலையங்கத்தில் கீழ்க் கண்டவாறு எழுதியிருந்தோம்.
“இன்னொரு புறம் தங்கள் இந்து ராஜ்ஜியத்தை, அதாவது பார்ப்பன சாம்ராஜ்யத்தை நிறுவுவதற்கு வெறிகொண்டு அலைந்துக் கொண்டுள்ள ஆர்எஸ்எஸ் – பாஜக பாசிசக் கும்பல் இந்த நாட்டின் பூர்வ குடிமக்களான பழங்குடிகளை காடுகளில் இருந்து வெளியேற்றுவதற்கு ஆபரேஷன் காகர் போன்ற திட்டங்களின் மூலம் கொடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
பழங்குடி மக்களுடன் இணைந்து மாவோயிச அமைப்புகளையும் முற்றாக ஒழித்துக் கட்டுவதற்கு மோடி-அமித்ஷா கும்பல் திட்டமிட்டுள்ளது. எடுத்துக்காட்டாக மாவோயிச அமைப்பின் தலைவர்கள் கொண்ட நம்பர் ஒன்றாம் படையணியை முற்றாக அழித்து ஒழிப்பதற்காக 10,000-க்கும் மேற்பட்ட இராணுவத்தினரை தேடுதல் வேட்டையில் இறக்கி, இறுதி கட்ட தாக்குதல் என்று அறிவித்து நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இந்த தேடுதல் வேட்டையால் பழங்குடி மக்களின் வாழ்க்கை நிலைகுலைந்து போயுள்ளது.” என எழுதியிருந்தோம்.
இந்த நிலையில்தான் இன்று மதியம் இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் இதுபற்றி செய்தி வெளியிட்டுள்ளார்.
நக்சலைட்டை ஒழிக்கும் போரில் ஒரு மைல்கல் சாதனை.
”இன்று சத்தீஸ்கர் நாராயண்பூரில் நடந்த ஒரு நடவடிக்கையில், நமது பாதுகாப்புப் படைகள் 27 பயங்கரமான மாவோயிஸ்டுகளை வீழ்த்தியுள்ளது. அவர்களில் சிபிஐ-மாவோயிஸ்ட்டின் பொதுச் செயலாளரும், உயர்மட்டத் தலைவரும், நக்சல் இயக்கத்தின் முதுகெலும்புமான நம்பலா கேசவ் ராவ் என்கிற பசவராஜூவும் அடங்குவார். நக்சலைட்டுக்கு எதிரான இந்தியாவின் மூன்று பத்தாண்டுகால காலப் போரில், பொதுச் செயலாளர் பதவியில் இருந்த ஒரு தலைவர் நமது படைகளால் வீழ்த்தப்படுவது இதுவே முதல் முறை. இந்த பெரிய திருப்புமுனைக்காக நமது துணிச்சலான பாதுகாப்புப் படைகள் மற்றும் நிறுவனங்களைப் பாராட்டுகிறேன்.
ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட் முடிந்த பிறகு, சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிராவில் 54 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர், 84 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளனர் என்பதையும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். மோடி அரசு மார்ச் 31, 2026 க்கு முன் நக்சலைட்டை ஒழிக்க உறுதியாக உள்ளது.”
கடந்த ஏப்ரல் முதல் பஸ்தாரின் அபுஜ்மத் மற்றும் நாராயண்பூர் பகுதிகளில் நடத்தப்பட்டு வருகின்ற தேடுதல் வேட்டை என்ற பெயரில் பழங்குடி மக்களை அப்பகுதியில் இருந்து முற்றாக அகற்றுவதற்கு மாவோயிஸ்டுகளின் ஆதரவாளர்கள், உதவியாளர்கள், மாவோயிஸ்டுகளுக்கு தகவல் கொடுப்பவர்கள், உணவு உதவி செய்பவர்கள் என்று பல்வேறு பெயர்களில் முத்திரை குத்தப்பட்டு நூற்றுக்கணக்கான பழங்குடி மக்கள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளார்கள் என்று பழங்குடி மக்களுக்காக போராடுகின்ற சோனி சோரி தெரிவிக்கின்றார்.
மாவோயிச அமைப்புகளின் தலைவர்கள் உள்ளடங்கிய ஒன்றாம் படையணியை முற்றாக ஒழித்து கட்டுவதன் மூலமாக மாவோயிஸ்டுகளை முற்றாக முடக்கி விடலாம் என்று திட்டத்துடன் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவின் பெயரில் கொடூரமான தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது..
காரேகுட்டா மலைப்பகுதியில் என்ன நடக்கின்றது என்பதை பகிரங்கமாக வெளியில் அறிவிப்பதற்கு எந்த வழியும் இல்லை. அரசாங்கம் முன்வைக்கின்ற தகவல்கள் மற்றும் இந்தியா டுடே, தி வீக் உள்ளிட்டு ஓரளவு நேர்மையான பத்திரிக்கையாளர்கள் வெளிப்படுத்துகின்ற செய்திகள் அடிப்படையிலேயே இந்த படுகொலை பற்றிய செய்திகள் நமக்கு வெளி வருகின்றன.
மாவோயிச அமைப்பின் செயல்பாடுகள் என்ற வகையில் புதிய ஜனநாயகத்திற்கு வேறுபாடுகள் இருப்பினும், இந்த நாட்டை பல்வேறு ஏகாதிபத்தியங்களில் வேட்டைக்காடாகவும், அமெரிக்க மேல்நிலை வல்லரசின் வேட்டைகாடாகவும் மாற்றி வருகின்ற கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராக போராடுகின்ற, உயிர் தியாகத்திற்கும் அஞ்சாத போராளிகள் என்றே மதிப்பீடு செய்கிறோம். ஆப்ரேஷன் காகரை நிறுத்தக் கோரியும், அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார் என மாவோயிஸ்டுகள் அறிவித்திருந்த நிலையில் கார்ப்பரேட் கொள்ளையர்களின் மனம் குளிர நடத்தப்பட்டுள்ள இந்த படுகொலையை வன்மையாக கண்டிக்கிறோம்.
இனி இவர்களைப் பற்றி செய்தி வெளிப்படுபவர்கள், பேசுபவர்கள், எழுதுபவர்கள், மனித உரிமை மீறல்கள் என்று போராடுபவர்கள் அனைவரின் மீதும் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் என்ற முத்திரை குத்தி NIA மூலம் கொடூரமான தாக்குதல் நிகழ்த்துவதற்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.
காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலை முன்வைத்து நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் பற்றி கேள்வி எழுப்புகின்ற பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்கள், ஜனநாயக சக்திகள் பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள் மீது கொடூரமான தேச துரோக வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
ஆப்ரேஷன் சிந்துரில் என்ன நடந்தது என்று கேள்வி எழுப்புகின்ற காரணத்திற்காகவே எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி மீது, ’ராகுல் கான்’ என்று முத்திரை குத்தி பாகிஸ்தான் கைக்கூலி, பாகிஸ்தான் உளவாளி என்றெல்லாம் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.
படிக்க:
♠ மாவோயிஸ்டுகள் மீதான போலி மோதல் கொலைகளை எதிர்த்துப் போராடுவோம்!
♠ உள்நாட்டு பாதுகாப்பு என்ற பெயரில் மாவோயிஸ்டுகளை கொன்று குவிக்கும் பாசிச மோடி அரசு.
பாலஸ்தீனத்தின் பகுதியான நாக்பா மற்றும் காசா இரண்டும் முற்றாக சல்லடையாக துளைக்கப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து, பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரை இழந்து வரும் நிலையில், நடைப்பிணங்களாக மக்களும், ஏறக்குறைய 20,000 சிறுவர்களும் உண்ண உணவின்றி மரணத்தின் பிடியில் இருக்கிறார்கள் என்ற செய்தி உலகை உலுக்கி கொண்டுள்ளது.
ஈழத்தில் 2009 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையில் இன அழிப்பு செய்யப்பட்ட மக்களுக்காக குரல் எழுப்புகின்ற மக்களின் போர்க் குரல் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
அரசு பயங்கரவாத ஒடுக்குமுறைகளின் மூலமாகவும், ஊபா, பொடா போன்ற கொடூரமான சட்டங்களின் மூலமாகவும், தேடுதல் வேட்டை என்ற பெயரில் படுகொலை நிகழ்த்துவதன் மூலமாகவும், சுதந்திர தாகத்தை ஒடுக்கி விட முடியும் என்று ஆளும் வர்க்கங்கள் தொடர்ந்து கனவு கண்டு கொண்டே இருக்கட்டும்.
அடக்குமுறைகளுக்கும், ஒடுக்கு முறைகளுக்கும் பலியாகின்ற மக்கள் தொடர்ந்து பணிந்து போவார்கள் என்று மட்டும் எண்ணி விடக் கூடாது. எத்தகைய அடக்குமுறைகளையும் எதிர்த்து நின்று புதிய சமூக அமைப்பை உருவாக்குவதிலும், சுதந்திரமான சுவாசக் காற்றை சுவாசிப்பதிலும் முன்னணியில் களம் காண்பார்கள்.
◾ கணேசன்.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி