சாதி இந்திய சமூகத்தின் இழிவு!

ஜெய்பீம் படத்தில் உரிமைகளுக்காகப் போராடிய கோவிந்தன் என்ற தோழரிடம், “நீங்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்” என்று கேட்டபோது, “நான் ஒரு கம்யூனிஸ்ட். எனக்கு சாதி கிடையாது” என்று மறுத்தார். கம்யூனிஸ்டுகளாக தன்னை வளர்த்துக் கொள்ள விரும்பும் அனைவரும் பெருமிதத்தில் மிதந்தனர்.

அவர் ஒரு கம்யூனிஸ்ட் அதனால் அப்படித்தான் இருப்பார் என்று நெஞ்சை நிமிர்த்தி கூறிக்கொள்வதில் பெருமை கொள்ள முடிகிறது. அவரைப் பொருத்தவரை அந்த வழக்கு முடிகின்ற காலம் வரை திருமணமே செய்து கொள்ளாமல் வெற்றிக்காக காத்திருந்தார் என்பதால் அவர் நேர்மையானவர் என்பதை மதிப்பீடு செய்ய முடிகிறது.

தோழர் கோவிந்தன்

அந்த பிரச்சனை தலைவிரித்து ஆடிய போது பாமக வழக்கறிஞர் ஒருவர் அவரை சந்தித்து ஜெய்பீம் படத்தின் மீது சாதி ரீதியாக ஏதாவது விமர்சனத்தை முன் வையுங்கள் என்று மிரட்டலுடன் கூடிய அன்புடன் கேட்டபோது அவர் மறுத்துவிட்டார் என்பதிலிருந்து அவர் சிறந்த கம்யூனிஸ்டாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதும் நிரூபணமாகிறது.

ஆனால் கம்யூனிஸ்ட் என்று ஒருவர் சொல்லிக் கொள்வதாலேயே அவர் சாதியிலிருந்து அல்லது சாதியின் பிடிப்பிலிருந்து அல்லது சாதிய கண்ணோட்டத்தில் இருந்து விலகி விட்டார் என்று மொட்டையாக புரிந்து கொள்ள முடியாது. ஏனென்றால் இந்திய சமூகத்தில் 2000 ஆண்டுகளுக்கு நிலவி வரும் ஏற்றத் தாழ்வை உயர்வாக போதிக்கும் சமூக அமைப்பு, சாதிய ரீதியிலான அடக்குமுறைகளையே சட்டமாக இயற்றி அதனை போதித்து, அதையே கடைபிடிக்கும் படி இன்று வரை நிர்பந்தித்து வருகிறது. அதில் வாழும் ஒருவர் அந்த பிடியிலிருந்து வெளியே வர கடுமையாக முயற்சி செய்ய வேண்டும்.

“அவருக்கு சமஸ்கிருதம் தெரியும்! அவரே பார்த்துக் கொள்வார்” (அவர் பிறப்பால் பார்ப்பனர் என்பதைக் குறிக்கும்) என்பது போன்று இருவருக்குள் நடக்கும் ‘தரமான’ உரையாடல்கள், ஒரு நபரின் சிந்தனையில் இருக்கும் சாதி புத்தியை தெளிவாக வெளிக்காட்டுகிறது. அதை மற்றொருவர் மறுக்காத போது அவரின் சாதி மறுப்பு கேள்விக்கு உள்ளாகிறது.

“நீ பிறரிடம் எதை எதிர்பார்கின்றாயோ அதே போல பிறரையும் நடத்து” என்றார் பெரியார். இதை இப்படி சிந்தித்துப் பாருங்களேன், பிறரின் சாதியைப் பற்றி விசாரிக்கத் தொடங்குகின்ற ஒருவர் அவரை அறியாமல் தன்னுடைய சாதியை அல்லது சாதிய கண்ணோட்டத்தை வெளிப்படுத்தி விடுகிறார் என்பதுதான் சாதி உருவாக்கியிருக்கும் சூக்குமம்.

கம்யூனிஸ்டுகளின் சாதி-பிறப்பு குறித்து குறுக்கு விசாரணை செய்பவர்கள், பொது வாழ்க்கைக்கு வந்து விட்டால் ஒருவரைப் பற்றி கேள்வி கேட்கும் உரிமை தனக்கு உண்டு என்று நினைத்துக் கொள்கிறார்கள். இதன் உச்சமாக ஒரு அமைப்பை பிளவுபடுத்த சாதி என்கிற ‘நாகாஸ்திரத்தை’ ஏவுகிறார்கள். புராணக் கதைகளில் அனைவரும் மயக்கமடைந்ததை போல அந்த அஸ்திரத்தில் சிலரும் மயக்கமடைந்து வீழ்ந்து விடுகிறார்கள். அஸ்திரத்தை விட்டவர்களும் தம்மை ‘கம்யூனிஸ்டு’ என்று சொல்லிக் கொண்டு விட்டால் அனைத்து உரிமையும் தானாக வந்து விடுகிறது என்று மெய் சிலிர்த்து நிற்கிறார்கள்! வேறு சிலரோ செஞ்சோற்று கடன் தீர்க்க சம்ம(ந்)திக்கிறார்கள்.

“ஆயிரம் காலம் அடிமை என்றாயே, அரிசன் பேரு வைக்க யாரடா நாயே” என்று பாடலைப் பாடியவுடன் அந்தப் பாடலில் உள்ள வலியோ அல்லது ஆத்திரமோ ஒருவரது மூளைக்குள் வேலை செய்வதில்லை! அதை விட இந்தப் பாடலைப் பாடுபவர் என்ன சாதிக்காரர்? என்று ஊடுருவிப் பார்க்கிறார்கள்.

சாதி தீண்டாமை மறுப்பு திருமணம் செய்து கொள்கிறேன் என்று முன்வைத்தால், இவர் எந்த சாதியைச் சேர்ந்தவர் என்று எழுதாத சட்டத்தின்கீழ் விசாரிக்கத் துவங்கி விடுகிறார்கள். நாம் ஒன்றும் சாதியற்ற சமூகத்தில் அல்லது அடையாளங்களை புறக்கணிக்கின்ற சமூகத்தில் வாழவில்லை என்பது உண்மைதான். ஆனால், வேலை செய்வது கம்யூனிஸ்ட் கட்சியில் அல்லவா என்ற சுய சிந்தனை கூட இல்லாமல் சாதியைப் பற்றிய விசாரிப்புகள் இங்கே முதன்மை பெறுகிறது.

இன்னும் சிலர் நைச்சியமாக, எனக்கு இந்த குறிப்பிட்ட சாதியைத் தவிர பிற எந்த சாதியில் வேண்டுமானாலும் பெண்ணைப் பாருங்கள் என்று நட்புடன் கோரிக்கை வைக்கின்றனர். சுயசாதி மறுப்புதான் அவர்களின் அதிகபட்ச சாதி மறுப்பு!

சிற்றம்பல மேடையில் தமிழில் பாடியது ஆறுமுகசாமி என்ற சிவனடியார். அவரைத் தமிழில் பாட வைத்தது அவரது பிறந்த ‘சாதி புத்தி அல்ல!’ தேவாரம், திருவாசகம் என்ற தமிழ் பக்திப்பாடல்கள் சிற்றம்பல மேடையில் ஒலிப்பதை தீட்சிதர்கள் தடுக்கிறார்கள் என்ற ஆத்திரமும் தமிழ் மொழி மீது கொண்ட பற்றும்தான் காரணம். ஆனால் அவரின் சாதிக்காரர்கள் சிலர், அவரை இந்தச் சாதியைச் சேர்ந்தவன் என்று அடையாளப்படுத்தி ‘பெருமைப்படுத்தி’ சிறுமைபடுத்தினார்கள்.

சீனிவாச ராவ் என்ற பிறப்பால் பார்ப்பனர் தனது சாதியப் பின்னணியை ஒழித்துவிட்டு அரை டவுசருடன் தஞ்சை மாவட்டத்திலுள்ள கழனிகளில் இறங்கி ஒடுக்கப்பட்ட மக்களோடு மக்களாக வாழ்ந்து, அவர்களுக்கு உரிமைகளை கற்றுக் கொடுத்து போராடினார். இன்றும் அவரை சிஎஸ்ஆர் என்றுதான் அழைக்கிறார்கள். சீனிவாசராவ் என்று முழுப்பெயரையும் கூட சொல்லி அழைப்பதில்லை என்பது அந்த மக்களின் சாதியை மறுக்கும் நேர்மையான பண்பை காட்டுகிறது.

“அது சரி தோழர், உங்கள் அமைப்பின் பார்ப்பனர்கள்தான் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்களாமே” என்று நைசாக குலம் விசாரிக்கத் துவங்கும் போது, அவர் சிந்தனைக்குள் ஊடுருவி பாய்ந்திருக்கும் சாதிய கண்ணோட்டம் வெளிப்படத் துவங்கி விடுகிறது. அவர் தன்னை தமிழ் தேசியவாதி என்று அழைத்துக் கொண்டாலும் சரி! சர்வதேசியவாதி என்று வைத்துக் கொண்டாலும் சரி.

அமைப்பின் கொள்கைகளை விமர்சனம் செய்து அம்பலப்படுத்த முடியாதவர்கள் “மகஇகவின் மறைமுக பார்ப்பனியம்” என்று புத்தகம் போட்டுப் பார்த்தனர். மார்க்சிய-லெனினிய அமைப்புகளில் இருக்கும் பார்ப்பனரல்லாதோர் சிந்தனைக்கு என்று ‘மின்சாரத்தை’ பாய்ச்சி பார்த்தனர். இது எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை எனும் போது உங்கள் தலைமையில் பார்ப்பனர்கள் இருந்து கொண்டு கட்சியை தவறாக வழி நடத்திச் சென்று விடுவார்கள் என்று எச்சரிக்கும் வகையில் நயமாக பேசினார்கள்: ஆனால் சத்தியமாக ‘நான் சாதி பார்ப்பதில்லை தோழர்’ என்று குரூர நகைச்சுவை போல கடந்து போகிறார்கள்.

ஜெய்பீம் சர்ச்சையை ஒட்டி வன்னியர்கள் மத்தியில் தோன்றிய கம்யூனிஸ்டுகள் பற்றி விவாதம் தொடங்கியது. தமிழர் விடுதலைப்படையைச் சேர்ந்த தமிழரசன், புலவர் கலியபெருமாள், லெனின், இவர்கள் அனைவரும் எங்காளுதான் என்று வெட்கமின்றி கூறுகின்றனர். வழக்கம் போல அனாமதேயங்கள் முக நூலில் தோன்றி அனைவரின் சாதிகளையும் தோண்ட ஆரம்பித்து விடுகிறார்கள்.

போகிற போக்கை பார்த்தால் அவர் நாமக்கல் கவுண்டர் கம்யூனிஸ்டு, இவர் கோவை கொங்கு கம்யூனிஸ்டு, அவர் தஞ்சையின் கள்ளர் கம்யூனிஸ்டு, இவரோ விழுப்புரத்தின் வன்னிய கம்யூனிஸ்டு என்று பார்ப்பனப் பேரரசின் நவீன அடிமைத்தனத்தில் முடிந்து விடும் போலிருக்கிறது.

ஒரு முறை ஆந்திராவில் இயங்கும் இ.பொ.க (மா-லெ), புதிய ஜனநாயகம் குழுவில் பணியாற்றிய, பிறப்பால் ஆதிக்க சாதியை சேர்ந்த ஊழியர் ஒருவர், தனது ஊரில் அவரது குடும்பத்தின் நிலத்தை மாவோயிஸ்டுகள் பறிமுதல் செய்த போது, “எனது பெற்றோருக்கு வேறு வசதியில்லை; அந்த நிலத்தை மட்டும் விட்டுக் கொடுங்கள்” என்று கோரிக்கை வைத்தாராம்.

ஆனால் மாவோயிஸ்டு தோழர்கள், “இத்தனை நாள் உங்கள் நிலத்தில் அவர்கள் கூலி வேலை செய்து வந்தனர். இனி, கொஞ்ச காலம் உங்கள் குடும்பம் அவர்களுக்கு பண்ணையடிமை வேலை செய்யட்டுமே என்றனராம். உடனே தோழர் கொதிக்கவில்லை; தான் முன் வைத்த கோரிக்கையை எண்ணி அவரே வெட்கப்பட்டிருக்கக் கூடும்.

இதுதான் ஆதிக்க சாதி பிறப்பு தரும் ‘உயர்வை’ மறுக்கும் கம்யூனிஸ்டுகளின் பண்பாடு. ஆனால், அதுதான் அவரின் சாதி மறுப்புக்கு அளவுகோலும் ஆகும். ஒருமுறை விடுதலை சிறுத்தைகளின் தோழர். சிந்தனைச் செல்வனிடம் பேசிக் கொண்டிருக்கும் போது ஆதிக்க சாதியில் பிறந்தவர்கள் சாதியை மறுத்து வாழ்கிறார்கள் என்பது சரிதான். ஆனால், அவர்களின் குடும்பம் ஒரு சாதிய யூனிட்டாக உள்ளது தெரியுமா? அதனுடன் நிபந்தனையின்றி உறவாடும் அவர் ‘சாதி மறுப்பு’ குறித்து பேசுவது அப்பழுக்கற்றதா? என்று கேள்வி எழுப்பினார். அது நேர்மையாகப் பரிசீலிக்க வேண்டிய விமர்சனம்.

வீட்டில் உள்ள பெற்றோர், அண்ணன், தங்கை, மாமன், மச்சான் உள்ளிட்ட சாதிய சமூகத்துடன் ஒரு சமரச வாழ்க்கையும், வெளியில் சாதி மறுப்பு வாழ்க்கையும் என இரட்டை வாழ்க்கை வாழும் எந்த ஒரு கம்யூனிஸ்டும் இது குறித்து தன்னை நேர்மையாக சுயபரிசீலனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

இந்தியாவில் நீண்டகாலமாக மாற்றமின்றி நிலவி வந்த ஆசிய உற்பத்தி முறையைக் கொண்ட சமூக அமைப்பு குறித்து காரல் மார்க்ஸ்: “இந்த சமூகங்கள் எதிர்க்க வகையில்லாமல் ஆக்கிரமிப்புக்கு இரையாயின. இந்தத் தேக்கம் நிறைந்த அசைவற்ற வாழ்க்கை – அகெளரவ வாழ்க்கை, சிருஷ்டிக்கும் திறனில்லாத செயலற்ற வாழ்க்கை – நேர்மாறான விளைவுகளையும் சிருஷ்டித்தது.

கட்டுக்கடங்காத நாசகார சக்திகள் – நோக்கமில்லாமல் அழிக்கும் சக்திகள் குமுறி எழுந்தன. இந்துஸ்தானத்தில் கொலையே ஒரு தெய்வ சடங்காயிற்று. இதை நாம் மறக்கக் கூடாது. இந்த சிறு சமூகங்கள் சாதி வேறுபாடுகளாலும், அடிமை முறையாலும் களங்கமடைந்திருந்தன”. என்று இடித்துரைத்தார். இந்தியாவிற்கு பல மைல் தொலைவில் வாழ்ந்த மாமேதையின் இந்த வரையறுப்பு இன்னமும் அப்படியே நீடிக்கிறது.

இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் முன்னணியாக இருந்து போராடிய பலரையும் இன்று சாதி சங்க தலைவர்களாக்கி விட்டனர். செக்கிழுத்த வ.உ.சி இன்று “பிள்ளையாகி” விட்டார். தூக்குக் கயிற்றில் தொங்கிய கட்டபொம்மன் இன்று “நாய்க்கர்” சாதிக்கு பெருமை சேர்க்கிறார். தீரன் சின்னமலை கொங்கு மண்டல “கவுண்டர்களின்” குலப் பெருமை காக்கிறார். விடுதலைப் போராட்டத்திற்கு முன்னரே சாதியில்லை என்று மண்டையிலடித்து சொன்ன அய்யா வைகுந்தர், “நாடார்களின்” தலைவராக மாற்றப்பட்டுள்ளார்.

வரலாற்றில்தான் என்றில்லை, இன்றும் போராடுபவர்கள் முதல், சாதியை மறுக்கும் கம்யூனிஸ்டுகள் வரை அனைவரையும் சாதியை வைத்து ’அடையாளம்’ பார்ப்பதும், அவரும் எங்காளுதான் என்று, அற்ப பெருமை கொண்டு அலைவதும்தான் இந்திய சமூகத்தின் இழிவான பண்பாக உள்ளது.

அழுகி நாறிக் கொண்டிருக்கும் இந்திய சமூகத்தின் இழிவான பண்பாகிய சாதியத்தை எதிர்த்து, மக்களின் சிந்தனைக்குள் ஊடுருவி பாய்ந்திருக்கும் ’சாதிப் புத்திக்கு’ எதிராக சமரசமின்றி போராட துவங்குவதற்கு முன்னர் உபதேசிகளின் உள்ளத்தில் இருந்து துவங்க வேண்டியது முன்னிபந்தனையாகி விடுகிறது. என்ன ஒரு ’வெட்கக் கேடு’!

இறுகி கெட்டி தட்டிப்போன இந்தப் பண்பை உடைக்கத் தேவை – சம்மட்டி அடி! அது அரிவாளுடன் கூடிய சம்மட்டியாக இருப்பது வரலாற்றுக்கு மிகவும் பொருந்தும்தானே?!

  • சண். வீரபாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here