ந்தியாவில் 1925 ஆம் ஆண்டு இந்தியப் பொதுவுடமை இயக்கம் துவக்கப்பட்ட போதிலும் ஏறக்குறைய நாற்பதாண்டு காலமாக இந்தியாவின் சமுதாய, பொருளாதார நிலைமைகளுக்கு பொருத்தமான திட்டம் ஒன்றை வைத்து புரட்சியை முன்னெடுத்துச் செல்வதில் தடுமாறி வந்தனர்.

பிரிட்டன் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் மீது நம்பிக்கை கொண்டு முதலாளித்துவ கட்சிகளுடன் போட்டி போட்டு நாடாளுமன்றத்தை கைப்பற்றுவதன் மூலமே அரசியல் மாற்றத்தை கொண்டுவர முடியும் என்பதை ஆணித்தனமாக நம்பி செயல்பட்டு வந்தனர்.

இத்தகைய சூழலில் பொதுவுடமை இயக்கத்தில் நிலவிய திருத்தல்வாத போக்குகளை முறியடித்து வசந்தத்தின் இடி முழக்கமாக எழுந்து நின்றது நக்சல்பாரி எழுச்சி. இன்று அந்த எழுச்சியின் 57 ஆம் ஆண்டு தினம். (1967-2024)

விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், அறிவுத் துறையினர் அனைவரையும் ஓரணியில் திரட்டி விவசாயிகளின் விவசாய புரட்சியே நாட்டில் விடுதலைக்கான பாதை என்பதை முழங்கியது நக்சல்பாரி எழுச்சி.

பாராளுமன்றத் பாதைக்கு வெளியில், ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் மூலமே அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்பதை முன்வைத்து நாடு முழுவதும் அரசியல் எழுச்சியை உருவாக்கியது நக்சல்பாரி.

1967 மே 25ஆம் தேதி துவங்கிய இந்த ஆயுதம் தாங்கிய பேரெழுச்சி குறிப்பிட்ட சில ஆண்டுகளில் ஆளும் வர்க்கத்தினால் கடுமையாக ஒடுக்கப்பட்டது. நாடாளுமன்ற சரணடைவு  பாதைக்கு எதிராக கீழிருந்து அதிகாரத்தை கைப்பற்ற கூடிய புரட்சிகர பாதையை முன்வைத்த போதிலும், நக்சல்பாரி இயக்கம் இந்தியாவின் சமூக, பொருளாதாரத்தை ஆய்வு செய்து சரியான, பொருத்தமான அரசியல் மற்றும் ராணுவ பாதைகளை வகுத்து தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்வதில் தவறிழைத்தது.

அதுமட்டுமன்றி, பொதுவாக புதிய ஜனநாயகப் புரட்சி என்று போர்த்தந்திர அரசியலை மட்டுமே பேசுவதை காட்டிலும், குறிப்பான சூழ்நிலையில் நாட்டையும், மக்களையும் பாதிக்கின்ற அரசியல் நிகழ்ச்சி போக்குகளை சரியாக அவதானித்து, புதிய ஜனநாயகப் புரட்சிக்கு மக்களை அணி திரட்டுகின்ற செயல்தந்திர அரசியல் வழி என்பதை நிராகரித்து செயல்பட்டது.

இத்தகைய புரட்சிகர எழுச்சிக்கு பின்னால் மார்க்சிய லெனினிய இயக்கத்தை மக்கள் திரள் பாதையில் முன்னெடுத்துச் செல்வதற்கு தொடர்ந்து போராடி வருகிறது மக்கள் கலை இலக்கியக் கழகம் உள்ளிட்ட புதிய ஜனநாயகம் இதழின் பாதையில் பயணிக்கும் புரட்சிகர அமைப்புகள்.

இந்த நக்சல்பாரி எழுச்சி இரண்டு விதமான போக்குகளை உருவாக்கியது. ஒன்று ஏற்கனவே நிலவி வரும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை கடைபிடிப்பது, அதன் மூலமே புரட்சியை முன்னெடுப்பது என்பதை ஏற்றுக்கொண்டு செயல்படுகின்ற மார்க்சிய லெனினிய குழுக்கள் ஒருபுறம்; ஆயுதந்தாங்கிய எழுச்சியின் மூலம் மட்டுமே தீர்வு என்று செயல்பட்டு வருகின்ற மார்க்சிய லெனினிய குழுக்கள் மறுபுறம், என்று இரண்டு வழிகளில் மக்களை திரட்டுவதற்கு செயல்பட்டு வருகிறது.

நக்சல்பாரி இயக்கத்தின் ஆதரவாளர்களை அவர்கள் எந்த பாதையை, எந்த வழிமுறையை கடைப்பிடித்தாலும் அவர்களின் மீது கடும் அடக்கு முறையை ஏவி வருகிறது நாட்டை ஆளுகின்ற பாசிச பாஜக பயங்கரவாத கும்பல்.

நகர்ப்புற நக்சல்கள் என்ற பெயரிலும், மாவோயிச இயக்கங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற பெயரிலும் வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் போன்ற அனைவரையும் பொய் வழக்குகளை புனைந்து சிறையில் அடைத்து சித்திரவதை செய்கிறது பாசிச பாஜக. நக்சல்பாரி இயக்கத்தை அடியோடு ஒழித்து விடுவோம் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றது அமித்ஷா மற்றும் மோடி கும்பல்.

இதன் ஒரு பகுதியாக ஆபரேஷன் சமாதான், ஆபரேஷன் பிரஹார் என்ற ராணுவ அடக்குமுறையையும், அதில் 2024 ஜனவரியில் துவக்கப்பட்ட ஆபரேஷன் ககர் என்று தாக்குதல் திட்டத்தையும் முன்வைத்து தண்டக்காரண்யா, சட்டிஸ்கர், மற்றும் பீகார்  மாநிலங்களில் செயல்படுகின்ற மாவோயிஸ்டுகள் மீது கடுமையான ஒடுக்குமுறை ஏவப்படுகிறது. கடந்த சில மாதங்களாக சுமார் 200க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டு தோழர்கள் போலி மோதல் கொலைகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதற்காகவே உள்நாட்டு ராணுவத்தை பல்வேறு டிவிஷன்காக பிரித்து பல்வேறு பெயர்களில் கடும் அடக்குமுறையை ஏவி விடுவதன் மூலம் நிராயுதபாணிகளாக உள்ள பழங்குடிகள் மற்றும் அவர்கள் மத்தியில் வேலை செய்கின்ற மாவோயிஸ்டுகளையும் தேடி கண்டுபிடித்து தேடுதல் வேட்டை என்ற பெயரில் படுகொலை செய்து வருகிறது பாஜக பயங்கரவாத கும்பல்.

கார்ப்பரேட் மூலதனத்தை ஆதரிக்கின்ற, கார்ப்பரேட்  கொள்ளைக்கு துணை போகின்ற நாட்டின் கனிம வளங்களையும், இயற்கை வளங்களையும் பொதுச் சொத்துக்களையும், விவசாயத்தையும் ஒரு சில கையடக்கமேயான தேசங்கடந்த தரகு முதலாளிகள் சூறையாடுவதை அனுமதிக்கின்ற கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாத கும்பல் ஒருபுறமும், பெரும்பான்மை மக்களின் நலனிலிருந்து, நாட்டின் வளங்களையும், இறையாண்மையையும் பாதுகாப்பதற்கு போராடுகின்ற நக்சல்பாரி இயக்கங்கள் மறுபுறமும் என இரண்டு சித்தாந்தங்கள் இந்தியாவில் மோதிக் கொண்டுள்ளன.

படிக்க:

♦ மே 25 நக்சல்பாரி இயக்கத்தின் எழுச்சி நாள்.

மாற்று அரசியலை முன்வைத்து போராடுகிறார்கள் என்பதாலேயே அவர்களின் எந்த விதமான விசாரணையும் இன்றி படுகொலை செய்வதற்கு அனைத்து உரிமைகளும் இருக்கின்றது என்றும் கொக்கரிக்கிறது ஆர்எஸ்எஸ்- பாஜக. நக்சல்பாரி எழுச்சி துவங்கிய 57 ஆம் ஆண்டில் இத்தகைய கொடூரமான ஒடுக்குமுறைகளை எதிர்த்து போராட வேண்டியதன் முக்கியத்துவத்தை நாட்டு மக்களிடம் கொண்டு செல்வோம்.

இந்திய பொதுவுடமை இயக்கத்தின் முற்றாக நாடாளுமன்ற சரணடைவு என்ற வலது சந்தர்ப்பவாத, ஆயுத எழுச்சி மட்டுமே ஒரே வழி என்ற இடது சந்தர்ப்பவாத போக்குகளை முறியடித்து புதிய ஜனநாயக புரட்சி என்ற போர்த்தந்திர அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், இன்றைய காலகட்டத்தில் நாட்டு மக்களின் பிரதான அபாயமாக மாறியுள்ள கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கும் பொருத்தமான செயல்தந்திரத்தை முன் போராடுகின்றன மார்க்சிய லெனினிய அமைப்புகள்.

கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்தி ஜனநாயக கூட்டரசு ஒன்றை நிறுவுவதை இடைக்கால, குறைந்தபட்ச செயல்திட்டமாக முன்வைத்து புரட்சிகர, ஜனநாயக இயக்கங்களையும், அரசியல் கட்சிகளையும், சமூக செயல்பாட்டாளர்களையும் ஐக்கிய முன்னணிக்காக ஒன்றிணைக்கின்றது மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகள்.

அந்த ஐக்கிய முன்னணி வெற்றி பெறுவதை உறுதிப்படுத்துகின்ற வகையில் கீழிருந்து விவசாயிகளையும், தொழிலாளர்களையும் பல்வேறு தட்டு வர்க்கங்களையும் ஒன்றிணைத்து மக்கள் முன்னணியை அமைக்க போராடுகிறது மக்கள் கலை இலக்கியக் கழகம் உள்ளிட்ட அமைப்புகள்.

”கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவோம்! ஜனநாயக கூட்டரசை நிறுவுவோம்” என்ற காலத்திற்கு பொருத்தமான செயல்தந்திர அரசியலை முன்வைத்து பொது எதிரிக்கு எதிராக அனைவரையும் ஒன்றுபடுத்துகிறது நக்சல்பாரி இயக்கம்.

இந்தியாவை பாதுகாக்கின்ற, இந்திய மக்களின் உண்மையான விடுதலையை முன்வைத்து போராடுகின்ற நக்சல்பாரி அரசியலை கொண்டு சென்று போராடும் இயக்கங்களின் மீதான கார்ப்பரேட்- காவி பாசிச கும்பலின் அடக்குமுறைகளை எதிர்த்து போராட அறைகூவல் விடுப்போம். அரசு பயங்கரவாத அடக்குமுறை கருவிகளான என்ஐஏ போன்ற பயங்கரவாத அமைப்புகளை தடை செய்யக் கோரியும், ஆபரேஷன் சமாதான், ஆபரேஷன் பிரஹார், ஆப்ரேஷன் ககர் போன்ற அரசு பயங்கரவாத ஒடுக்குமுறைகளை உடனே நிறுத்து என்றும் மக்களை திரட்டி போராடுவோம்.

  • மருது பாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here