‘கவனமாக இரு’! – பேரா.விஜய் பிரசாத்

ராணா அயூப் போன்ற பத்திரிக்கையாளர்கள், டீஸ்டா போன்ற செயல்பாட்டாளர்கள் மற்றும் சஞ்சீவ் பட், ஆர்.பி.ஸ்ரீகுமார் போன்ற முன்னாள் அரசு அதிகாரிகள் என நீதிக்காக குரல் கொடுக்கும் ஒவ்வொருவரையும் காவிப் படைகள் பின் தொடர்ந்தார்கள்.

‘கவனமாக இரு!’

– பேரா.விஜய் பிரசாத்

1993 ஆம் ஆண்டில், மிதமான குளிர் காலத்தில் ஒரு நாள், எனது பெரிய மாமா பிரேமும், பெரிய அத்தை இந்திரா பஸ்ரிச்சாவும் வாழ்ந்துவந்த வீட்டுக்குச் சென்றிருந்தேன்.

புதுதில்லியின், கனாட் பிளேஸ் அருகே இருக்கும் அவர்களுடைய அடுக்குமாடிக்குச் செல்வது எப்போதுமே எனக்கு உற்சாகம் தருவதாகும். ஏனென்றால், அவர்கள் தயாரிக்கும் பரோட்டாக்கள் ருசியாக இருக்கும், அவர்கள் வீட்டு மாடியில் நீண்டவால் குரங்குகளை பார்க்கமுடியும். இருப்பினும், நான் அங்கு சென்று திரும்புவதில் ஏதோ ஒன்று சரியில்லை.

இடதுசாரி இயக்கத்தில் ஈடுபடத் தொடங்கியிருந்தேன், அப்போது அயோத்தியில் உள்ள பாபர் மசூதியை இடித்து அந்த இடத்தில் ராமருக்கு கோயில் எழுப்ப வேண்டும் என்று பாஜகவும் அதன் துணை அமைப்புகளும் முன்னெடுத்து வந்த ராம ஜென்ம பூமி பிரச்சாரத்திற்கு எதிராக வெளிப்படையாக பேசி வந்தேன்.

பிரேம் மாமாவும், இந்திரா அத்தையும் எப்போதும் போலவே என்னை நேசித்தாலும், எனக்கு நேர்மாறான கருத்து கொண்டிருந்தார்கள். ‘ஹம் மந்திர் வஹி பன யெங்கே’ (அங்கே கோயில் கட்டுவோம்) என்று மாமா தன்னுடைய சோபாவில் அமர்ந்தபடி முழக்கமிடுவார், அவரின் மடியில் தேனீர் கோப்பை நடனமிடும். அவரோடு நான் விவாதம் செய்வேன், இருந்தாலும் அதனால் பலனில்லை. அவர் என்னை விடவும் பெரியவர், அனுபவசாலி.

அவருடைய முகத்தில் அருவெறுப்பான விதத்தில் மதவெறி தெறிப்பதை பார்ப்பேன். இருந்தாலும், ஸ்டேட்ஸ்மேன் இதழில் வெளியாகும் குறுக்கெழுத்துப் புதிரை என்னால் தீர்க்க முடியும் என்பதற்காக அவர் என்மீது கொண்டிருந்த மதிப்பு, எங்களிடையிலான மாற்றுக் கருத்துக்களை மங்கச் செய்வதாக இருந்தது.

1992-93 ஆம் ஆண்டுகளின் குளிர் காலம், மிகவும் சிக்கலான ஒன்றாக இருந்தது. 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், மதவெறிச்சக்திகள் பாபர் மசூதியை இடித்துவிட்டார்கள்.

அதனைத் தொடர்ந்து தில்லியிலும், மும்பையிலும் மோசமான வன்முறை வெடித்தது. தில்லி பல்கலைக் கழகத்தின் இளம் ஆய்வு மாணவராகவும், நாளேடு ஒன்றின் நிருபர் என்ற முறையிலும் நான் தில்லியில் சீலம்பூர் என்ற பகுதிக்கு சென்று வன்முறை குறித்தான செய்திகளை சேகரித்தேன். மிருகத்தனமான எதார்த்தத்தை அங்கே பார்க்க முடிந்தது (தொழிலாளி வர்க்கத்தைச் சேர்ந்த தலித்துகளும், முஸ்லிம்களும் ஒருவருக்கு எதிராக ஒருவர் போரிடுவதைக் கண்டு வேதனையடைந்தேன்).

படிக்க

அதிவேகமாக முன்னெடுக்கப்பட்ட இந்த வன்முறைக்கு எதிராக, சம்ப்ரதாயதக் விரோதி அந்தோலன், எய்ட்ஸ் பேத்பவ் எதிர்ப்பு அந்தோலன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தில்லி மாநிலக்குழு ஆகியவை வெளியிட்ட துணிச்சலான பிரசுரங்களை விநியோகித்தேன்.

ஆய்வு மாணவர் என்ற முறையில், இந்த பிரசுரங்கள் பலவற்றை எழுதுவதிலும் பங்களிப்பு மேற்கொண்டேன். இந்த பிரசுரங்கள் வெளிப்படுத்திய திடுக்கிடச் செய்யும் உண்மைகள் எதுவும் இந்திராவிடமோ, பிரேமிடமோ எந்த தாக்கத்தையும் உருவாக்கவில்லை. புன்னகையுடன் அவர்கள் முகத்தை திருப்பிக் கொண்டார்கள்.

பிரிவினையின் அதிர்வுகள்

பிரேமும், இந்திரா பாஸ்ரிச்சாவும் அப்போது பாகிஸ்தானாக மாறவிருந்த பகுதியில் இருந்து தில்லிக்கு பயணம் செய்து வந்தவர்கள் என்பதுடன் அவர்கள் காலனிய தாராளவாதத்துடனும் பயணித்தவர்கள் – லாகூரின் கின்னார்ட் கல்லூரியில் இந்திராவும், அதே நகரின் அரசுக் கல்லூரியில் பிரேமும் தங்கள் சிந்தனையை வடித்துக் கொண்ட அவர்களுக்கு – காவிப்படையின் கோரைப்பற்கள் உருவாகியிருந்தன. தேசப்பிரிவினை அவர்களை இன்னமும் கடுமையாக்கியது, அதன் பின்னர் (1984 ஆம் ஆண்டில் தில்லியில் நடை பெற்ற சீக்கியர் படுகொலைகளைத் தொடர்ந்து) காங்கிரஸ் கட்சியின் மீதான வெறுப்பு தீவிரமானது.

(தனது தேனீர் மேசையின் மீது அந்த படுகொலைச் சம்பவங்களைச் செய்த ‘குற்றவாளிகள் யார்?’ என்ற நூலை பிரேம் வைத்திருந்தார். ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் சங்கமும், குடிமை உரிமைகளுக்கான மக்கள் சங்கமும் அந்த அறிக்கையை தயாரித்திருந்தார்கள்).

அதனைத் தொடர்ந்து, தனிப்பட்ட அந்த அனுபவங்களெல்லாம் முஸ்லிம்கள் மீது பிரதிபலிக்கத் தொடங்கியதால், அவர்களிடம் மதவெறி வடிவமெடுத்தது – வங்க தேசத்தில் இருந்து குடியேறியவர்களைப் பற்றி அவர்கள் நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருப்பார்கள்.

இந்திரா அத்தை, ராஷ்ட்ர சேவிகா சமிதி அமைப்பினை உருவாக்கியவர்களில் ஒருவர். பிரேம் மாமா, சங் பரிவார மாணவர் அமைப்பான, அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத் -தின் ஆலோசகராக இருந்தார். காவி நோக்கங்களிடம் தங்களுக்கு இருந்த ஈடுபாடு காரணமாகவும், பாஜக சார்பு அமைப்புகளுடனான நெருங்கிய தொடர்பின் காரணமாகவும், அந்த வலைப்பின்னலின் மூத்த உறுப்பினர்கள், இவர்களுடைய வீட்டுக்கு விருந்துக்கு வந்து சென்றார்கள்.

தில்லி பல்கலைக்கழகத்தின் ஏ.பி.வி.பி அமைப்பின் மூத்த தலைவராக இருந்த அருண் ஜெட்லி, 1993 ஆம் ஆண்டு குளிர் காலத்தில் விருந்துக்கு வந்தார். பத்து ஆண்டுகளுக்குப் பின், பாஜக ஆட்சியின் சட்டத்துறை அமைச்சராக பதவியேற்றபோது ‘மிதவாதி’ என்று அவர் புகழப்பட்டார். தில்லி பல்கலைக்கழகத்தில் அவருடைய செயல்பாடுகளை கண்ணுற்ற யாரும் அவரை அப்படி அழைக்கமாட்டார்கள்.

படிக்க

அந்த விருந்தின்போது, மாலை சாயும் தருணத்தில் என்னை வீட்டின் மேல் மாடத்திற்கு அருண் ஜெட்லி அழைத்தார். அவரோடு சேர்ந்து தில்லியின் ஜன்பத் சாலையை வேடிக்கை பார்த்தேன். சாலையின் இரைச்சலும், குரங்குகளின் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது. அப்போது அவர் என்னுடைய எழுத்துக்களைப் பற்றியும், பிரேம் மாமா அவரிடம் என்னைப் பற்றி சொல்லியிருந்ததையும் குறிப்பிட்டார்

“நீ ஒரு அறிவாளி பையன். எங்களை நீ விமர்சனம் செய்வது நல்லதே” என்றார். மேலும், “விமர்சனங்களை நாங்கள் கண்டுகொள்ளமாட்டோம்” என்று சொல்லிவிட்டு என்னைக் கடுமையுடன் நோக்கிய அவர் “எங்களை கேலி செய்ய நினைத்தால், கவனமாக இரு” என்று சொன்னார்.

‘கவனமாக இரு!’

குஜராத் மாநிலத்தில் 2002 ஆம் ஆண்டு நடை பெற்ற முஸ்லிம் இனப் படுகொலைகளில் பாதிக்கப் பட்டோருக்காகவும், தப்பிப் பிழைத்தவர்களுக்காகவும் போராடிவருகின்ற டீஸ்டா செதல்வாத்தின் நட வடிக்கைகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ள செய்தியை நான் கேள்விப்பட்டபோது, அருண் ஜெட்லியின் அந்த வார்த்தைகளையே
நினைத்துக்கொண் டேன்:

‘கவனமாக இரு’.

டீஸ்டாவை எனக்கு 30 ஆண்டுகளாகத் தெரியும். அவரும் அவருடைய கணவர் ஜாவேத் ஆனந்தும் ‘வகுப்புவாத எதிர்ப்பு’ என்ற ஒரு முக்கியமான இதழினைத் தொடங்கினார்கள். அதில் அவ்வப்போது எழுதி வந்தேன். அந்த இதழுக்கு நண்பர்களை சந்தா சேர்த்திருக்கிறேன்.

இப்போது நம் தேசத்தின் ஆன்மாவில், வகுப்புவாத வெறுப்புணர்வு அழுத்தமாக பற்றிக் கொண்டிருக்கிறது.

குஜராத்தில் நடந்த படுகொலைகளுக்கு பின் டீஸ்டாவும் மற்றும் பலரும் சேர்ந்து
‘அமைதிக்கும், நீதிக்குமான குடிமக்கள்’ என்றொரு மேடையை உருவாக்கினார்கள்.

Secretary of The Citizens for Justice and Peace (CJP) Teesta Setalvad addresses media representatives during a press conference in Ahmedabad on August 14, 2010, held under the auspices of The Citizens for Justice and Peace (CJP) organisation. Sandhi spoke of the Gujarat riots in 2002 in the western Indian city which were sparked off by an incident on a train in the town of Godhra. AFP PHOTO/Sam PANTHAKY (Photo credit should read SAM PANTHAKY/AFP via Getty Images)

இந்தியாவில் பாஜகவை ஆட்சியில் அமர்த்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட அந்த கொடூரச் சம்பவத்தில் காயமுற்றவர்களுக்காகவும், பலியானவர்களின் குடும்பங்களுக்காகவும் வாதம் செய்திடும் போராட்டத்தை இந்த மேடை பல்வேறு நெருக்கடிகளுக்கும் இடையில் முன்னெடுத்தது.

இந்த நடவடிக்கைகளால் தாக்கமுற்றவர்களுக்கு அது எரிச்சலைத் தந்தது. அன்றைக்கு வலிமையோடு இருந்தவர்கள், இப்போது மேலும் வலிமையடைந்துவிட்டார்கள்.

மேற்குறிப்பிட்ட படுகொலைச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடைய வேதனைகளையும், வரலாற்றின் மெல்லிய குரல்களையும் சிந்தனையில் இருந்தே அழித்துவிடுவது அவர்களுக்கு எளிதான காரியம் தான். “கவனமாக இரு” என்ற அந்த சொற்கள், சக்தி மிக்கவர்களுடைய விருப்பங்களுக்கு மாறாகச் செயல்படும் அனைவரையுமே நோக்கி வருகிறது.

2002 குஜராத் வன்முறைகளில் தாங்கள் வகித்த முன்னணிப் பாத்திரத்தை வரலாற்றின் பக்கங்களில் இருந்து அகற்றுவதற்கு காவி மதவெறி சக்திகள் விரும்புகிறார்கள் என்பது பத்தாண்டுகளுக்கு முன்பே தெளிவாகிவிட்டது.

அப்போது குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி, அந்த வன்முறைகளுக்காகத் தான் சர்வதேச அரங்கில் புறக்கணிப்பை எதிர்கொண்டார். அவர் மீதான தடையின் காரணமாக, பத்தாண்டுகளுக்கும் மேலாக அவரால் அமெரிக்க விசாவைப் பெற முடியவில்லை.

அந்த படுகொலை குறித்தான விக்கிபீடியா பக்கத்தில் எழுதப் பட்ட 600 வார்த்தைகளோடு, அந்த குற்றத்தின் கறை மோடியை விட்டு நீங்கிடவில்லை.

படிக்க

எனவே, ராணா அயூப் போன்ற பத்திரிக்கையாளர்கள், டீஸ்டா போன்ற செயல்பாட்டாளர்கள் மற்றும் சஞ்சீவ் பட், ஆர்.பி.ஸ்ரீகுமார் போன்ற முன்னாள் அரசு அதிகாரிகள் என நீதிக்காக குரல் கொடுக்கும் ஒவ்வொருவரையும் காவிப் படைகள் பின் தொடர்ந்தார்கள்.

வரலாற்றை ‘தூய்மைப்படுத்தும்’ செயலின் ஒரு பகுதியாக இதைச் செய்தார்கள். மேலே குறிப்பிட்டுள்ள நால்வரில் மூவர் இப்போது சிறையில் இருக்கிறார்கள்.

அவதூறுகள்

டீஸ்டா, பாதிக்கப்பட்டவர்களின் உடன் நின்று வாதம் செய்யத் தொடங்கிய உடனேயே, அவரை அவமதிக்கும் முயற்சிகளும் தொடங்கிவிட்டன. 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், பெஸ்ட் பேக்கரி வழக்கு தொடர்பாக சில விசயங்களைச் சொல்லும்படி டீஸ்டா தன்னை வற்புறுத்துவதாக குற்றச்சாட்டை முன்வைத்தார் ஜாகீரா சேக். அந்தக் குற்றச்சாட்டு,பணம் கொடுத்து பெறப்பட்டது என்பதை 2005 ஆம் ஆண்டில் தெகல்கா இதழ் அம்பலப்படுத்தியது.

சேக் முன்வைத்த கருத்துக்களை பொய் என்று அறிந்த உச்ச நீதிமன்றம் அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கியது. ஆனால் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்தார் என்ற அவதூறு இப்போது மீண்டும் டீஸ்டா மீது அவதூறு கிளப்பப்படுகிறது.

2009 ஆம் ஆண்டில், டைம்ஸ் ஆப் இந்தியா இதழ் ஒரு செய்தியை வெளியிட்டது. உச்ச நீதிமன்றத்தில், சிறப்பு புலனாய்வுக் குழு சமர்ப்பித்த ஆவணங்களில் குஜராத் படுகொலை நிகழ்வுகளை டீஸ்டா ஊதிப் பெரிதாக்கியதற்கு ஆதாரங்கள் இருப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. அறிக்கையைக் கசியவிட்ட செயலை உச்ச நீதிமன்றம் கண்டித்தது. எனினும் அதன் உள்ளடக்கம் பற்றி எதுவும் சொல்லவில்லை.

பிறகு 2013 ஆம் ஆண்டில், பாதிக்கப்பட்டவர்களுக்காக பெறப்பட்ட நன்கொடை நிதியை டீஸ்டா தவறாக கையாண்டார் என குற்றச்சாட்டு எழுந்தது. அந்த புகாரும் வதந்திகள் மற்றும் பொய்களை அடிப்படையாகக் கொண்டே முன்வைக்கப்பட்டது.

உள்ளூக்கம்

அடுக்கடுக்கான வழக்குகள் புனையப்பட்டன. ஒவ்வொரு முறையும் டீஸ்டா தன்னுடைய நேர்மையை நிரூபிப்பதற்காக தன்னுடைய ஆற்றல் முழுவதையுமே நீதிமன்றத்திலும், வழக்கறிஞர்களோடும் செலவிட நிர்ப்பந்திக்கப்பட்டார். இதுபோல தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் நபர்கள், இனி நீதியை நிலைநாட்ட வழியே இல்லை என்ற மனநிலைக்கு வந்து, போராட்டத்தினைக் கைவிட்டு சரணடைந்திடக் கூடும். ஆனால் டீஸ்டா விடாப்பிடியாகப் போராடினார்.

இந்த காலகட்டத்தில் நானும், லெப்ட் வேர்டு பதிப்பகத்தின் சுதன்வா தேஷ்பாண்டேவும், மும்பையில் உள்ள வீட்டில் டீஸ்டாவை சந்திக்கச் சென்றோம். முக்கிய ஊடகங்களின் பொய்களுக்கும், அவமதிப்புகளுக்கும் பதிலடியாக அவருடைய நினைவுக்குறிப்பினை எழுதும்படி கேட்டுக்கொண்டோம். ஓராண்டுக்கு நாங்கள் அந்த புத்தகத்திற்கான பணிகளில் ஈடுபட்டோம்.

2017 ஆம் ஆண்டில் அது வெளியானது. டீஸ்டா, இந்திய அரசமைப்பின் மீதும் சட்டத்தின் மீதும் தான் கொண்டுள்ள உறுதிப்பாட்டினை, தன்னுடைய கொள்ளுத் தாத்தாவிடம் இருந்தும், தாத்தாவிடம் இருந்தும் வரித்துக் கொண்டதாக அதில் குறிப்பிட்டுள் ளார். (டீஸ்டாவின் கொள்ளுத்தாத்தா 1919 ஆம் ஆண்டில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைகளை விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட ஹண்டர் ஆணையத்தின் உறுப்பினராக இருந்துள்ளார்: தாத்தா எம்சி செதல்வாத் இந்தியாவின் முதல் தலைமை வழக்கறிஞர்).

டீஸ்டாவை பொருத்தவரை, அவருக்கு நீதித்துறையின் மீது முழுமையான நம்பிக்கை இருந்தது; குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் என்பதும், அரசமைப்பின் அடிப்படையில் தீர்ப்பளிக்கப்பட வேண்டும் என்பதுமே அவருடைய வாழ்க்கையின் கோட்பாடாக இருந்தது. அந்த நூலுக்கு ’அரசமைப்பின் சிப்பாய்’ என்ற தலைப்பிட்டதற்கான காரணம் அதுதான்.

தனது நூலின் இறுதியில் அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “நான் அதிலேயே உறுதியாக இருப்பதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. என்னுடைய பழைய குடும்ப நண்பரும், நெருங்கிய தோழருமான இந்திரா ஜெய்சிங் கூறும்போது, எல்லைகளைக் கடந்து பாயும் வங்கத்து நதியின் பெயரை என் பெற்றோர் எனக்கு வைத்தார்கள் என்பார்.”

அந்த வார்த்தைகளில் அவரின் உள்ளூக்கம் தெளிவாகிறது.

1992-93 காலகட்டத்தில் பம்பாயில் நடந்த கலவரங்களுக்குள் அவருடைய நினைவுகள் பயணிக்கின்றன. அராஜகம் (culture of impunity) முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்கிறார் அவர்:

“அராஜகத்தை எதிர்த்து வீழ்த்துவதே என் முன் உள்ள சவால். அதுதான் எனக்கு தூண்டுதலாக இருக்கிறது”.

அராஜகம்

ஆசிப் சுல்தானா (காஷ்மீர் நரேட்டர்), பகத் ஷா (காஷ்மீர் வாலா), கவுரவ் பன்சால் (பஞ்சாப் கேசரி), மனன் தர் (பசிபிக் பிரஸ்), மீனா கோட்வால் (மூக்நாயக்), சஜ்ஜத் கல் (காஷ்மீர் வாலா), சித்திக் காப்பான் (அழி முகம்); இவையெல்லாம், அரசாங்கத்திற்கு விருப்பமில்லாத செய்திகளை எழுதத் துணிந்ததன் காரணமாக இப்போதும் சிறையில் அல்லது நீதிமன்றத்தில் போராடிவரும் பத்திரிகையாளர்களின் பெயர்கள்.

‘எல்லைகளற்ற நிருபர்கள்’ என்ற அமைப்பு வெளியிடும் பத்திரிக்கை சுதந்திரத்திற்கான உலக தரவரிசையில் 180இல் இந்தியா 150வது இடத்தில் இருப்பது வியப்புக்குரியதல்ல. (2021 ஆம் ஆண்டு இந்தியா 142 வது இடத்தில் இருந்தது) காரவன் மற்றும் நியூஸ் கிளிக் ஆகிய செய்தி நிறுவனங்கள் மீது கடும் தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன.

(அமலாக்கத்துறை இயக்குனரகம், வருமான வரித்துறை, காவல்துறை என) அரசு நிர்வாகத்தின் முழு அழுத்தமும், பத்திரிக்கைகளை மிரட்டும் விதத்தில் செலுத்தப்படுகிறது.

அரசாங்கத்தை விமர்சிக்கும் சிலரது வீட்டு வாசலுக்கு குண்டர்கள் அனுப்பப் படுகிறார்கள். வேறு சிலரின் வீடுகள் புல்டோசர்களைக் கொண்டு இடிக்கப்படுகின்றன.

மராட்டியத்தில், 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்திற்காக, கைது செய்யப்பட்ட 16 பேருக்கும் நடைபெற்ற கலவரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை (கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான ஆனந்த் டெல்டும்ப்டே, வன்முறைக்கு எதிராக எழுதியவரும் ஆவார்).

இவ்வகையில் பீமா கோரேகான் வழக்கும் மிகவும் விநோதமானதாக இருக்கிறது. பெகாசஸ் உளவு நடவடிக்கை பற்றி இதுவரையில் கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில், எந்த வன்முறைச் செயல்களிலும் ஈடுபட்டிருக்காத செயல்பாட்டாளர்கள் மற்றும் எழுத்தாளர்களின் அலைபேசிகள் உளவு பார்க்கப்பட்டுள்ளன.

(இவ்வாறு உளவு பார்க்கப்பட்டவர்கள் ஜோதி ஜகதாப், ரமேஷ் கைசோர் மற்றும் சாகர் கோர்கே ஆகிய பண்பாட்டுச் செயல்பாட்டாளர்கள், சுதிர் தவாலே, மகேஷ் ராதே உள்ளிட்ட சமூகநீதிச் செயல்பாட்டாளர்கள், அருண் பெராரியா, சுரேந்திர காட்லிங் மற்றும் சுதா பரத்வாஜ் ஆகிய வழக்கறிஞர்கள், கவுதம் நவ்லகா, ரோனா வில்சன், வரவரராவ், வெர்னன் கோன்சல்வெஸ் ஆகிய எழுத்தாளர்கள்; ஹானி பாபு, சோமா சென் மற்றும் டெல்டும்டே ஆகிய பேராசிரியர்கள் ஆவர்)

அராஜகத்தின் வரலாறு, இந்திய அரசமைப்புக்கும் (1950) முன்பு 1870 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட, இந்திய தண்டனைச்சட்டப் பிரிவு 124ஏ வரை நீள்கிறது. இளம் மாணவராக இருந்தபோது, இந்த பிரிவைப் பற்றி வாசித்த நினைவுகள் வருகின்றன. அப்போது, ஜேம்ஸ் ஸ்டூவர்ட் மில் என்பவர் முன்வைத்த “உணர்ச்சியின் தாராளவாதம்” என்ற கருத்தை தாக்கி எழுதிய ஜேம்ஸ் பிட்ஸ்ஜம்ஸ் ஸ்டீபன்ஸ் என்ற எதேச்சதிகார எழுத்தாளரின் வெறுக்கத்தக்க கருத்துக்களை நீண்ட நேரம் அசைபோட்டிருக்கிறேன்

1857ஆம் ஆண்டு, முதல் சுதந்திரப் போருக்கு பின் எழுதப்பட்ட மேற்சொன்ன சட்டப்பிரிவு அரசின் மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்துவதே சட்ட விரோதம் என்றாக்கியது.

மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி, இந்த சட்டப் பிரிவினையைக் குறிப்பிட்டு “குடிமக்களின் சுதந்திரத்தை நசுக்குவதற்காக வடிவமைக்கப்பட்டது” என்றார்.

அரசாங்கத்தின் கொள்கைகள் அல்லது அரசாங்கத்தை நடத்தும் அரசியல் சக்திகளின் நடத்தையைப் பற்றிய மாறுபட்ட கருத்துக்களை முன்வைக்கும் குடிமக்களுக்கு எதிராகவே இது பயன்படுத்தப்படுகிறது. இந்த மாதிரி கட்டுப்பாடற்ற போலீஸ் நடவடிக்கை அராஜகத்தை வளரச் செய்கிறது.

“எங்களை கேலி செய்யாதீர்கள். நீங்கள் அதைச் செய்தால் கவனமாக இருங்கள்” என்பது, கடந்த காலத்தில் விடுக்கப்பட்ட மிரட்டல் அல்ல; மூடுபனியைப் போல அது நிகழ்காலத்திலும் நம்மைப் பின்தொடர்கிறது.

அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்பியதற்காக இன்னும் அதிகமான குடிமக்கள், சட்டத்தை மீறியதாக அதிகார வர்க்கத்தின் குற்றச்சாட்டினை எதிர்கொள்கிறார்கள். கோரைப்பற்களைக் கொண்ட காவிப்படைகள், இந்திய வரலாற்றில் தாங்கள் ஏற்படுத்திய கறைகளை மறைப்பதற்கு முயற்சிக்கிறார்கள்.

தங்களுடைய காக்கி உடைகளையும், காவித் துண்டுகளையும் துவைப்பதற்காக, விஷம் மிகுந்த சோப்புப்பொடிகளை பயன்படுத்துகிறார்கள்.

முக்கியமாக, 2002 ஆம் ஆண்டின் கறை அவர்களை தொந்தரவு செய்கிறது. அதைக் கழுவுவதற்காக எந்த வழிமுறையையும் பயன்படுத்துவார்கள். அதற்காக அரசமைப்பின் உயிர்ப்பையே சிதைக்கவும் தயாராக இருக்கிறார்கள்.

எதிர்காலத்தில், ஏதாவது ஒரு இடத்தில் இந்திய அரசமைப்பிற்காக கோயில்கள் கட்டப்படக் கூடும். அதனை தரிசனம் செய்வதற்காக மக்கள் வரிசையாக வருவார்கள்.

ஆயுதம் ஏந்தியபடி அதனைக் காக்கும் காவலர்களை சிரம் தாழ்த்தியபடி அவர்கள் கடந்து செல்வார்கள். பூசாரிகள் அந்த புத்தகத்தில் சில பகுதிகளை வாசிக்கவும் கூடும்.

ஆனால், பரந்த வெகுமக்களுக்கு அதன் உள்ளடக்கமும், விளக்கங்களும் அறியாமலே போகவும் கூடும்.

****

கட்டுரையாளர் : லெப்ட் வேர்டு பதிப்பகத்தின் ஆசிரியர்,
டிரை காண்டினெண்டல் சமூக ஆய்வுக் கழகத்தின் இயக்குனர், எழுத்தாளர்.

தமிழில் : இரா.சிந்தன் / தீக்கதிர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here