காவி பாசிசத்திற்கு எதிராகப் போராடினால் புல்டோசர்! வழக்கு போட்டால் கைது! அமுலாகிறது சட்டப்படியான பாசிசம்!

இந்த வழக்குகளுக்கு ஆதரவாக பேசி வரும், முன்னாள் போலீசு டி.ஜி.பி. ஆர்.பி.ஸ்ரீகுமார் மற்றும், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ்பட் ஆகியோரையும் இந்த வழக்கில் சேர்த்துள்ளது.

பத்திரிக்கைச் செய்தி

காவி பாசிசத்திற்கு எதிராகப் போராடினால் புல்டோசர்!
வழக்கு போட்டால் கைது!
அமுலாகிறது சட்டப்படியான பாசிசம்!

2002 குஜராத் இனப்படுகொலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டதற்காக மனித உரிமை போராளி தீஸ்தா சேதல்வாத் துணை நின்ற முன்னாள் டி.ஜி.பி ஸ்ரீகுமார், கைது! மற்றும் சிறையில் உள்ள எஸ்.பி. சஞ்சிவிபட் மீதும் வழக்கு பதிவு!
பாசிச மோடி அரசை அகற்றாமல் இது நிற்காது!

கடந்த 2002-ஆம் ஆண்டில் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தை ஒட்டி, அடுத்தடுத்த நாட்களில் குஜராத் மாநிலத்தில் பெரும் கலவரத்தை திட்டமிட்டு நடத்தியது ஆர்.எஸ்.எஸ். பாஜக உள்ளிட்ட இந்துத்துவ பாசிச குண்டர் படை. இந்துத்துவ பாசிஸ்டுகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இந்தக் கலவரத்தில் இரண்டு நாட்களில் 2000-த்திற்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

முசுலீம்கள் மீதான இந்த இந்த இன அழிப்பு நடவடிக்கைகள் பற்றிய பல்வேறு உண்மைகளை வெளிக் கொண்டு வந்த முக்கியமானவர்களில் ஒருவர் சமூக ஆர்வலரும் மூத்த வழக்கறிஞருமான தீஸ்தா சேதல்வாத் ஆவார். குஜராத் இனப் படுகொலைகளுக்கு நீதி வேண்டும் என்று கோரி, “நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பைத்” தொடங்கி, பாதிக்கப்பட்ட சிறுபான்மையினருக்கு நீதி கிடைக்க வேண்டும் என இந்துத்துவ பயங்கரவாதிகளின் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து வழக்குகளை நடத்தி வருகிறார்.

குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. எஹ்சான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி தொடுத்த வழக்கில், தன்னையும் இணைத்துக் கொண்டு உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்கையும் நடத்தி வருகிறார்.
இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நரேந்திர மோடி உள்ளிட்ட 64 பேருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு விசாரணைக் குழு (எஸ்.ஐ.டி.) அறிக்கை அளித்தது. அந்த அறிக்கைக்கு எதிராக தற்போது உச்சநீதிமன்றத்தில் ஜாகியா ஜாஃப்ரி சார்பாக தாக்கல் செய்த மனு விசாரணைக்கு தகுதியற்றது என தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய 24 மணி நேரத்திற்குள்ளாக குஜராத் மாநிலத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவால் (ATS) தீஸ்தா கைது செய்யப்பட்டுள்ளார்

இந்த வழக்குகளுக்கு ஆதரவாக பேசி வரும், முன்னாள் போலீசு டி.ஜி.பி. ஆர்.பி.ஸ்ரீகுமார் மற்றும், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ்பட் ஆகியோரையும் இந்த வழக்கில் சேர்த்துள்ளது. இதில் ஏற்கனவே பொய் வழக்கில் சிறையில் இருக்கிறார் சஞ்சீவ்பட். தற்போது ஆர்.பி.ஸ்ரீகுமாரை கைது செய்துள்ளது அகமதாபாத் குற்றப்பிரிவு போலீசு.

இவர்கள் மீது ஏமாற்றும் நோக்கோடு போலியான தகவல்களை அளித்தல், போலி ஆவணங்களைப் பயன்படுத்துதல், மரண தண்டனை பெறும் நோக்கத்துக்கு தவறான சாட்சியங்களை வழங்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களில் 2000 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், போலியாக ஆவணங்கள் தாக்கல் செய்தார் என்ற ஒரு ‘குற்றத்தைக்’ கண்டுபிடித்து அதை திட்டமிட்டே தனது தீர்ப்பில் திணித்து, இந்துத்துவ பாசிஸ்டுகளை எதிர்ப்பவர்களைக் கைது செய்வதற்கான புதிய வழிமுறையை அறிமுகம் செய்துள்ளது நீதிமன்றம்.
ஒரு வேளை நீதிமன்றம் சொன்னது போலவே, நரேந்திர மோடி உள்ளிட்ட பாசிஸ்டுகள் கிளீன் சீட் என்றாலும், உலகமே காறித் துப்பும் வகையில் இரண்டே நாட்களில் 2000 இஸ்லாமியர்களைக் கொன்றவர்கள் யார்? என்று சொல்லாமல் மறைத்து தனது காவி பாசத்தைக் காட்டியுள்ளது நீதிமன்றம். இரண்டு நாட்களில் 2000 பேரைக் கொல்வது அந்த அரசாங்கத்தின் துணை இல்லாமல் சாத்தியமா? என்ற அடிப்படையான கேள்வியைக் கூட நீதிமன்றம் கேட்கவில்லை.

இந்தியாவின் சமகாலத்திய மிகப்பெரிய இன அழிப்பு நடந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, தெகல்கா புலனாய்வு இதழின் பத்திரிக்கையாளர் ஆஷிஷ் கேத்தான் நடத்திய ஸ்டிங் ஆப்பரேசனில், இந்துத்துவ காவி வெறியர்கள் அந்தக் கலவரம் எப்படி திட்டமிட்டு நடத்தப்பட்டது. முஸ்லிம் பெண்களை எப்படி எல்லாம் ரசித்து, ருசித்து பாலியல் வல்லுறவு செய்து கொன்றனர், எப்படி கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருந்த சிசுவை கைவிட்டு வெளியில் எடுத்து வெட்டிக் கொன்றனர். அவற்றுக்கெல்லாம், மோடியின் அரசும், காவல் துறையும் எந்த அளவிற்கு ஒத்துழைப்பும், உதவியும் வழங்கினார்கள் என்பதை குதூகலமாகவும், முஸ்லீம் வெறுப்பும், வன்மமும் ஒன்று சேர நேரடி ஒப்புதல் வாக்குமூலங்களாக 60 மணி நேர வீடியோ பதிவு வெளிவந்து இந்தியாவையே திகிலுறச் செய்தது.(இந்த ஆவணம் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் தமிழில் வெளியீடகவும் வெளியிடப்பட்டது)

ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதத்தின் உண்மையான கோர முகத்தை அன்று உலகம் கண்டது. ஆனால், அந்த வீடியோக்களை ஆதாரங்களாக தாக்கல் செய்த பிறகும், அவை அரசியல் நோக்கத்திற்காக செய்யப்பட்ட நடவடிக்கை என்ற மலிவான காரணம் கூறி அவற்றை குப்பையில் வீசி விட்டது நீதிமன்றம். ஏற்கனவே காவி பாசிசத்திற்கு எதிராக போராடியவர்கள் வீட்டை புல்டோசர் கொண்டு இடித்து போராடுபவர்களுக்கு எச்சரிக்கை விட்டது. தற்போது இந்த தீர்ப்பின் மூலம் இனி எப்படிப்பட்ட ஆதாரங்கள் இருந்தாலும், ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார் கும்பலுக்கு எதிராக பேசுகின்ற, விமர்சிக்கின்ற அனைவருக்கும் இதுதான் கதி என்று நீதிமன்றமும் இந்த கைது நடவடிக்கைகளும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

பார்ப்பன பாசிச அடக்குமுறைகளுக்கு எதிராக சிறைக் கொடுமைகளுக்கும், மரணத்திற்கும் அஞ்சாமல் எதிர்த்துப் போராடுகின்ற, சமூகத்தின் மீதும், மனித குலத்தின் மீதும் அக்கறை கொண்ட நேர்மையான செயல்பாடுகள் தான் தற்போது நாட்டிற்கு அவசியமாக உள்ளது. இந்துத்துவ பாசிஸ்டுகளைக் காக்கும் இந்த நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராகப் போராடுவதோடு, தீஸ்தா சேதல்வாத் உள்ளிட்டோர் மீதான கைது மற்றும் மிரட்டல் நடவடிக்கைகளுக்கு எதிராகவும், பார்ப்பன பாசிச பயங்கரவாதத்திற்கு எதிராகவும் போராட வேண்டியது மக்கள் ஒவ்வொருவரின் கடமையாகும்.

தோழமையுடன்
வழக்கறிஞர் சி.ராஜு
மாநில பொதுச்செயலாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here