லகின் பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஏகாதிபத்தியங்கள் முந்தானையால் மூக்கைச் சிந்தும் சடங்கை ஆண்டுதோறும் நடத்துகின்றன. அதில் அமெரிக்கா போன்ற சில நாட்டாமைகள் இந்த பஞ்சாயதுக்கு நான் கட்டுப்படமாட்டேன் என்று உதார் விட்டுக்கொண்டு வண்டியை பூட்டிக்கொண்டு வெளியேறுவதும் பின்னர் இணைவதும் வழக்கம்.

அந்த வரிசையில் எகிப்து ஷார்ம் எல்-ஷேக் (Sharm el-Sheikh) நகரில் நவம்பர் 6 முதல் நவம்பர் 18 வரை காப்27 காலநிலை உச்சி மாநாடு நடைபெற்றது. எகிப்து அரசு ஐக்கிய நாடுகள் அவையின் UNFCCC கூட்டமைப்பிலுள்ள உள்ள 200 நாடுகளின் தலைவர்களுக்கு மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தது. வழக்கம்போல் உலகை அழிவுக்கு தள்ளிவரும்  உலகப்பெரும் கார்ப்பரேட்டுகளும், அவர்களது அதிகாரிகளும், சட்ட வல்லுநர்களும்  நேரடியாக பங்கெடுத்தனர்.

குற்றவாளிகளே நீதி வழங்குவது!

பொதுவில் தொழிற்புரட்சிக்கு பின்னர், குறிப்பாக உலகமயமாக்கலுக்கு பின்னர் சுற்றுச்சூழல் சீர்கேட்டின் காரணமாக உலகம் முழுவதும் அசாதாரணமான வகையில் காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒவ்வொரு நிமிடமும் உலகின் ஏதோவொரு மூலையில் 23 ஹெக்டேர் நிலம் வளத்தை இழந்தும் மரங்களை இழந்தும் பாலைவனமாகிக் கொண்டிருக்கிறது .

அதுமட்டுமின்றி, பனிப்பாறைகள் உருகி உலகில் உள்ள பெரும்பாலான நகரங்கள் நீரில் முழ்கும் என்றும் ஐ.நா. எச்சரித்திருந்தது. இந்நிலையில் அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலால் அண்டார்டிக்கா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு உச்சபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

அதேபோல், இந்தியாவின் மேற்பரப்பில் பரந்துவிரிந்துகிடக்கும் பனிப்பாறைகள் நிறைந்த இமயமலையில் பருவநிலை மாற்றத்தால் பனிப்பாறைகள் உருகுகின்றன. சமீபத்தில் கூட சுற்றுச்சூழல் மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள், அதன் காரணமாக ஏற்பட்ட இழப்புகள் உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு இருக்கிறது. இதுவெல்லாம் ஊடகங்களில் தொடர்ந்து வந்தவண்ணமுள்ளன.


இதையும் படியுங்கள்: அழிவை நோக்கி தள்ளப்படும் புவிக்கோளம்; விரைவுபடுத்தும் ஏகாதிபத்திய நிதியாதிக்க கும்பல்!


இந்த அபாயத்தை உணர்ந்து எதிர்ப்பாளர்களை களமிறங்காதபடி மழுங்கடிக்க வேண்டிய தேவை ஏகாதிபத்தியங்களுக்கு உருவானது. அந்த வகையில் பெயரளவுக்காவது செயல்பட்டாக வேண்டிய நெருக்கடியில் உருவானதுதான் COP காலநிலை மாற்ற மாநாடு. காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை கட்டுப்படுத்தவும், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்கவும் ஐ.நா சார்பில் காலநிலை மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. COP என்பது கான்ஃப்ரன்ஸ் ஆஃப் த பார்ட்டீஸ் (Conference of the Parties) என்பதன் சுருக்கம்.

சுருங்கச்சொன்னால் உலகின் பருவநிலையை சீரழித்து, உலக மக்களின் வாழ்வை தலைகீழாக புரட்டிவரும்  கிரிமினல்களை கூண்டில் ஏற்றாமல் அவர்களே நீதிமான்களைப்போல் உலகை ஏமாற்ற உருவாக்கப்பட்டதுதான் இந்த COP27.

ஆணியையே புடுங்காத முந்தைய  மாநாடுகள்!

இதுவரை மொத்தம் 26 COP மாநாடுகள் நடைபெற்றுள்ளது. COP முதல் மாநாடு 1995-ம் ஆண்டு நடைபெற்றது. கடந்த மாநாடு கிளாஸ்கோவில் நடைபெற்றது.  தற்போது நடைபெற உள்ள 27-வது மாநாடு எகிப்தின் ஷார்ம் எல் ஷேக் நகரில் நடைபெற்றுள்ளது.

ஒரு திருடனை பிடிக்கக்கூட போலீசு, விசாரிக்க நீதிமன்றம், தண்டனையை நடைமுறைப்படுத்த சிறைத்துறை என்ற கட்டமைப்பு செயல்படுகிறது. உலகையே பேரழிவுக்கு தள்ளுபவர்களை – உலகையே ஆதிக்கம் செய்யும் கார்ப்பரேட்டுகளை, ஏகாதிபத்தியங்களை பிடிக்கவோ, விசாரிக்கவோ, தண்டிக்கவோ அதிகாரம் இல்லாத ஐநா நடத்தும் பம்மாத்துதான் இந்த மாநாடுகள். கூலி வேலைக்கு வந்த பெண்ணை பாலியல் வல்லுறவு செய்துவிட்டு பணத்தை விட்டெறியும் பண்ணையார்களின் கட்டப்பஞ்சாயத்துக்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை.

அமெரிக்கா உள்ளிட்ட முன்னேறிய வல்லரசு நாடுகள்தான் உடனடியாக கார்பன் உமிழ்வை குறைக்க வேண்டும்; நிலக்கரி, பெட்ரோல் – டீசல் பயன்பாட்டை கைவிட்டு மாற்று உற்பத்திமுறைக்கு மாறவேண்டும் என 2001 COP மாநாட்டில்  ஒரு பேச்சுக்கு அறிவித்தனர். நாட்டாமை சும்ம இருப்பாரா? அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷோ  ”அப்படித்தான் பேருந்தில் பிளேடு போடுவேன். உன்னால் ஆனதைப்பார்” என மிரட்டும் வகையில்  ஏறி அடித்தார்.  மாநாட்டிலிருந்தும் வெளியேறினார். தன் விருப்பப்படி கார்பன் டை ஆக்சைடை வான்மண்டலத்துக்கு அனுப்பினார்.

ஐ.நா.வால் அமெரிக்காவிடம் கெஞ்சுவதைத் தாண்டி ஒன்றையும் செய்ய முடியாமல் போனது. இப்படியெல்லாம் கம்பெனி சீக்கிரெட்டை போட்டு உடைக்கலாமா என அவர்களுக்குள்ளேயே புத்தி சொல்லியதன் மூலம் சில ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஆலமரத்தடி பஞ்சாயத்தில் (COP) இணைத்தனர்.

அதே பாணியில் இப்பொழுது பிரேசிலின் போல்சனரோ அரசானது மாதம் 1 பில்லியன் டாலர் (100 கோடி டாலர்) தந்தால் மட்டுமே உலகின் நுரையீரலான அமேசான் காட்டை அழித்துவருவதில் 30-40 % வரை குறைக்க முடியும் என நிபந்தனை விதிக்கிறது. மிரட்டும் பிரேசிலை உருப்படியாக என்ன செய்துவிட முடியும் இம்மாநாட்டால்?

பருவநிலை மாற்றத்தின் பலிகிடாவாக தெற்கு ஆசியா!

அமெரிக்காவும் சீனாவும் போட்டி போட்டுக்கொண்டு பசுமைக்குடில் வாயுக்களை வெளியேற்றி வருகின்றன. கால நிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த நிலக்கரி பயன்பாட்டை முழுவதுமாக நிறுத்தி அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும். இல்லையென்றால் அழிந்துபோக வேண்டும் என ஐ.நாவின் பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 20 வருடத்தில் தெற்கு ஆசியாவில் மட்டும் சுமார் 75 கோடி பேர் பருவநிலை மாற்றத்தால் பேரழிவுகளை சந்தித்துள்ளதாக உலகவங்கி கூறுகிறது.

2050 இல் மட்டும் இப்பகுதியில் மட்டுமே சுமார் 518 பில்லியன் டாலர்   ( 41.25 லட்சம் கோடி ரூபாய்) இழப்பு ஏற்படும் என்று கணித்துள்ளனர்.கடல்மட்டத்தில் இருந்து 3.3 அடி உயரமே உள்ள 1,200 சின்னஞ்சிறிய தீவுகளை உள்ளடக்கிய மாலத்தீவு இன்னும் 25 ஆண்டுகளில் காணாமல் கடலுக்குள் மூழ்கிப்போகும். இப்பொழுதே அலைகளின் சீற்றத்தையும் கடலரிப்பையும் தடுக்க கடற்கரை ஓரத்தில் மணல் மூட்டைகளை அடுக்கித்தான் ஓரளவு சமாளித்து வருகின்றனர்.

காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. உலக அளவில் பருவநிலை மாற்றங்களால் அதிக உயிரிழப்பு இந்தியாவில் நடந்திருப்பதாகவும், அதேபோல பருவநிலை மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் உலக அளவில் இந்தியா 5வது இடத்தில் இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. மற்றொரு செய்தியானது உலக அளவில் காலநிலை மாற்றங்களால் அதிக இழப்பைச் சந்தித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் இருப்பதாகவும் கூறுகிறது. எந்த பாசிச அரசும் உண்மையான கணக்கை கூறாதல்லவா?

கார்ப்பரேட்ட்களின் வரைமுறையற்ற சுரண்டலுக்கும், லாபவெறி பிடித்து முந்தள்ளிவருகின்ற சுற்றுச்சூழல் நாசத்திற்கும் பலியாவதோ உழைக்கும் மக்கள்தான். இந்தியாவில் நடப்பாண்டிலேயே வெப்ப அலைத்தாக்குதலால் கோதுமை உள்ளிட்ட பயிர்கள் கருகியும், வெள்ளத்தில் மூழ்கி நெற்பயிர்கள் அழுகியும் விவசாயிகளை சுருக்கு கயிறை தேட வைக்கிறது. ஆனால் மோடி அரசோ சிறப்பாக செயல்படுவதாக COP27 இல் மாற்றிப் பேசியுள்ளது.

குரைக்ககூட திராணியற்ற
ஏகாதிபத்தியங்களின் ஏவல் நாய்!

கடந்த 2021 இல் ஸ்பெயினில் கிளாஸ்கோ பருவநிலை மாற்ற மாநாடு (cop 26) நடத்தப்பட்டது. எப்பொழுதுமே வாய்கிழிய பேசி வாக்குறுதிகளை அள்ளி விடும் ஏகாதிபத்தியங்கள் பேசியபடி நடந்து கொள்வதில்லை. தமது சூறையாடலால் இழப்பை எதிர்கொள்ளும் நாடுகளுக்கு, தன் பாதையில் நிலக்கரி, கச்சா எண்ணையை பயன்படுத்தி வளர அனுமதி மறுக்கப்படும் பிந்தங்கிய நாடுகளுக்கு  ஏகாதிபத்தியங்கள் தருவதாக ஒத்துக்கொண்ட இழப்பீட்டு தொகையை சொன்னபடி தந்ததில்லை.  இதை கிளாஸ்கோ மாநாட்டில் தட்டிக்கேட்கும் திராணி ’நம் 56 இஞ்ச்’ பிரதமருக்கு இருக்கவில்லை.

அமெரிக்காவின் ஏவல் நாயாக COP 26-வது மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள ஐந்து அம்சம் கொண்ட பஞ்சாமிர்தத்தை முன்வைத்தார். அதாவது சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை என்று நாம் மாறிக்கொள்ள வேண்டுமாம். பாசிஸ்டுகளுக்கு பொய் சொல்வதும், போலி வாக்குறுதிகளை அள்ளி விடுவதும்தான் தினசரி நடவடிக்கையாயிற்றே.

அதன்படி இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை 2030-க்குள் 500 ஜிகாவாட்டாக எட்டுதல், 2030-ம் ஆண்டில் எரிசக்தி தேவைகளில் 50 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இருந்து பெறுவது, 2030-ம் ஆண்டுக்குள் மொத்த கரியமில வாயு வெளியேற்றத்தை ஒரு பில்லியன் டன்கள் குறைப்பது. 2030-க்குள், பொருளாதாரத்தின் கார்பன் தீவிரத்தை 45 சதவீதத்திற்கும் குறைவாக குறைப்பது. 2070-ம் ஆண்டுக்குள் இந்தியா நிகர பூஜ்ஜிய இலக்கை அடைவது உள்ளிட்ட அம்சங்களை முன்வைத்தார். அதாவது எஜமானர்களின் வழியிலேயே, 2070 இல் யார் வந்து கேட்கப் போகிறார்கள் என்ற திமிருடன் போலி வாக்குறுதிகளை அள்ளிவிட்டார்.

சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர்களின் தேசிய மாநாடு 2022, செப்டம்பர் 23-24 ல் குஜராத்தின் ஏக்தா நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை, பருவநிலை மாற்றத்தை முறியடித்தல்,  ஒருங்கிணைந்த பசுமை அனுமதிகளுக்கான ஒற்றைச் சாளர அமைப்பு, வேளாண் வனவியல், மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, பல்லுயிர் பெருக்கம் உள்ளிட்ட வனவிலங்கு மேலாண்மை,  சதுப்புநிலப்  பாதுகாப்பு, பிளாஸ்டிக் மற்றும் கழிவு மேலாண்மை ஆகிய தலைப்புகளில் கவனம் செலுத்தும் ஆறு கருப்பொருள் அமர்வுகள் நடைபெற்றன.

2022 இல் நடக்கும் எகிப்து மாநாட்டில் எதைப்பேசுவது என காவி பாசிஸ்ட்டுகள் விவாதித்தனர். பிரதமர்  திரு நரேந்திர மோடியால் தொடங்கி  வைக்கப்பட்ட  சுற்றுச்சூழலுக்கு ஏற்ற  வாழ்க்கை  முறை  இயக்கமான  மிஷன் லைப்  இயக்கத்தில்  அனைத்து  நாடுகளும்  இணைய  வேண்டும். வீணான நுகர்வுக்கு பதில் கவனத்துடன் வளங்களை பயன்படுத்தவேண்டும்.

சுற்றுச்சூழலுக்கு ஏற்ற,  மக்களுக்கு ஆதரவான,  பூமிக்கும் நன்மை பயக்கும்  வாழ்க்கை முறை களுக்கான  முயற்சிகளுக்கு  உலகம் மாறவேண்டும்  என்பதே  இந்த  இயக்கத்தின்  கொள்கை என்றெல்லாம் பேசப்போவதாக முடிவெடுத்தது காவிக்கூட்டம். அப்படியிருக்க அவரின் அமைச்சர் மட்டும் இப்பொழுது எகிப்தில் மாற்றியா பேசியிருப்பார்?

எகிப்தில் கெத்து காட்டிய பூபேந்தர்!

2022 நவம்பரில் எகிப்தில் நடந்த cop 27 மாநாட்டில் இந்தியா சார்பில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் கலந்து கொண்டார். பூஜ்ஜிய கார்பன் உமிழ்வுக்கு இலக்கு வைப்பதாக நம்பும்படி பிற ஏகாதிபத்தியங்கள் தவறாமல் செய்துவருவதை, மோடியின் வழியில்  வாசவடாலாக தன் பங்குக்கு கார்பன் உமிழ்வை 2070 இல் பூஜ்ஜியமாக குறைக்கப் போவதாக வாக்குறுதிகளை அள்ளி விட்டார்.

Experts count on Bhupender Yadav to tackle environmental challenges |  Latest News India - Hindustan Times

விலைவாசி உயர்வு, உணவுப் பொருட்களின் விலையுயர்வு, வளரும் நாடுகள் தங்களுக்குப் பணக்கார நாடுகள் க்ளாஸ்கோ காப் 26 மாநாட்டில் அறிவித்து பின் காற்றில் பறக்கவிட்ட நிதியுதவிக்கான வாக்குறுதிகள் போன்ற பிரச்சனைகள் பற்றி ‘தீவிரமாக’ விவாதிக்கப்பட்டன.

பசுமைக்குடில் வாயுக்களை வெள்யேற்றும் முதன்மைக்குற்றவாளி என்று ஏகதிபத்தியங்களை பூபேந்தர் அம்பலப்படுத்தி கண்டிக்கவில்லை. மாறாக பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட உலக நாடுகள் போதிய நிதி அளிக்கத் தவறி வரும் சூழலில், அதை கேட்க துப்பின்றி உயிர்களைக் காக்க இயற்கை பேரிடர்கள் தொடர்பாக முன்கூட்டியே எச்சரிக்கை தரும் அமைப்பு தேவை என்று புதிதாக ஒரு தீர்வை தெரிவித்தார்.

மேலும், உலக நாடுகள் பருவநிலை மாற்றத்தைத் தடுக்க எடுக்கும் நடவடிக்கைகளின் வேகம் போதாது என்று போகிற போக்கில் சொல்லி வைத்தார். உலகெங்கும் ஏற்படும் இயற்கை பேரிடர்கள் பெரிய ஆபத்தாக உள்ளது உண்மை தான் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் பிரச்சினைக்கும் அதைத்தீர்க்க மாற்றுத் திட்டமாக என்ன சொன்னார் என்பதுதான் முக்கியமானது.

எச்சாரித்தால் மட்டும் போதும்!

நம்மைத்தாக்கும் தீவிரப்புயல், கன மழை, கடும் வெப்ப அலைத்தாக்குதல்களை தடுப்பது குறித்து எதையும் அமைச்சர் பேசவில்லை. காவிரி டெல்டா உள்ளிட்ட ஆறு மற்றும் கடல் படுகைகளில் மீத்தேன், கச்சா எண்ணை அகழ்வு, நெய்வேலி உள்ளிட்ட நிலக்கரி சுரங்க விரிவாக்கம் போன்றவற்றை கைவிடுவது பற்றி விவாதிக்கவில்லை. கார்பன் வெளியேற்றத்தை தடுக்க கார்களின் உற்பத்தியை குறைப்பது உள்ளிட்ட எதையும் பேசவில்லை. பேருந்துகள், ரயில்கள் போன்றவற்றை தனியாருக்கு தந்துவருவதை மறைத்து பொதுப்போக்குவரத்தை அதிகரிக்கவேண்டும் என உபதேசம் செய்ய மட்டும் தவறவில்லை.

பேரழிவை தடுக்கத் தேவையில்லை, எச்சரிப்பதன் மூலம் சமாளித்தால் போதும். சமாளிப்பதை  சிறப்பாக செய்ததன் மூலம் கடந்த 15 ஆண்டுகளில் நாட்டில் சூறாவளிகளால் ஏற்படும் இறப்புகள் 90 சதவீதம் வரை குறைந்துள்ளோம். இதற்கு நாங்கள் உருவாக்கியுள்ள எச்சரிக்கை அமைப்பே காரணம் என நெஞ்சை நிமிர்த்தியுள்ளார் பூபேந்திர யாதவ். ஒக்கி புயலில் என்ன நடந்தது என்பதை, மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு மீனவர்களை காப்பாற்றிய லட்சணத்தை குமரி மக்கள் நேரில் அனுபவித்தனர்தானே. கொரோனோ காலத்தில் கங்கையில் மிதந்த, கரையில் எரிக்கப்பட்ட, புதைக்கப்பட்ட பிணக்கணக்கையே மூடி மறைத்தவர்களுக்கு இதுவெல்லாம் சாதாரணம்தான். இப்படி புவிப்பரப்பை பொசுக்கி வருபவர்களின் தலைமையில், அதன் அடிவருடிகள் கூடி கூத்தடிக்கும் மாநாட்டால் பிரச்சினை தீருமா?

கையறு நிலையில் சுற்றுச்சூழல் போராளிகள்!

சுற்றுச்சூழலை அழித்துவரும் கொலைகார கோக் (coco cola) நிதிஉதவி (ஸ்பான்சர்) செய்து நடந்துள்ள எகிப்து பருவநிலை மாநாட்டின் போது ஏகாதிபத்தியங்கள் அனுமதிக்கும் வரம்பில், சூழலியலாளர்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளனர். கார்ப்பரேட்டுகள் விதிவிலக்காக சுவீடன் நாட்டை சேர்ந்த கிரெடா துன்பெர்க் போன்றவர்களை சர்வதேச மாநாடுகளில் தம்மையே கண்டித்து பேசவும்கூட  விடுகின்றனர். அதாவது சிலரை பேசுவதற்கும் தூற்றுவதற்கும் அனுமதித்து, போலி வாக்குறுதிகளாலும் சில்லறை சலுகைகள், இழப்பீடுகளையும் தந்து திசைதிருப்ப மட்டுமே நடத்தப்படும் நாடகம்தான் இந்த மாநாடு!

நம்மீதான் சுரண்டலை நாம் சகிக்கலாம்; இயற்கை சகிக்க தயாராக இல்லை. கார்ப்பரேட்டுகள் அதை எந்த அளவுக்கு சிதைக்கிறார்களோ அதே அளவுக்கு கொடூரமாக திருப்பி அடிக்கிறது. அந்த அடியையும் உழைக்கும் மக்கள்தான் தாங்க வேண்டியுள்ளது. கார்ப்பரேட்டுகள் நிலாவுக்கும், செவ்வாய்க்கும் விண்ணில் பறந்து தப்பிச்செல்ல முடியுமா? அங்கே தண்ணீர் உள்ளதா என்றெல்லாம் விண்கலங்களை அனுப்பி  வழிபார்க்கின்றனர்.

இயற்கையை காக்கவும், இப்போதுள்ள உற்பத்திமுறையை மாற்றவும் எகிப்தில் குரலெழுப்பியதெல்லாம் போதாது. இய(செய)ற்கை சீற்றத்தால் வாழ்விழக்கும் கோடிக்கணக்கான மக்கள் விழிப்படைந்து களம்புக வேண்டும்.  உலகை சூறையாடும் கார்ப்பரேட்டுகளும், அவர்களின் சூறையாடலுக்கு சேவை செய்யும் உலகையும், சுற்றுச்சூழலையும் நாசமாக்கும் பாசிச அரசுகளும், அதன் ஆட்சியாளர்களும் வீழ்த்தப்பட வேண்டும். புவியைக்காக்க அதைத் தவிர்த்து எளிமையான மாற்று எதுவும் இல்லை.

கரிகாலன்

புதிய ஜனநாயகம் (மா.லெ)
டிசம்பர் – ஜனவரி மாத இதழ்

படியுங்கள்
பரப்புங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here