மோடியை விமர்சித்தால் கைது சிறை! தலைவிரித்தாடும் பாசிசம்!


குஜராத்தில் எம்எல்ஏவாக உள்ள ஜிக்னேஷ் மேவானி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஜிக்னேஷ் மேவானி குஜராத்தில் வட்கம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம் எல் ஏ.  குறிப்பாக உனா சம்பவத்தில் செத்த மாட்டுத் தோலை உரித்தார்கள் என்ற காரணத்திற்காக நிர்வாணப்படுத்தப்பட்டு, கைகளை பின் பக்கமாக கட்டி வைத்து இரும்புத்தடிகளால் கடுமையாக தாக்கப்பட்ட “தாழ்த்தப்பட்ட மக்களின்” உரிமைகளுக்காக களத்தில் நின்று போராடிய முன்னணி செயல்வீரர்.

குஜராத்தில் மோடி அலை என்ற பெயரில் பெரும்பான்மை மக்களின் மீது அடக்குமுறை செலுத்திய பார்ப்பன-பனியா கும்பலான மார்வாரிகளின், சேட்டுகளின் ஆதிக்கத்துக்கு சவால் விட்டு தாழ்த்தப்பட்ட மக்களை ஒன்று திரட்டி போராடி வரும் வழக்கறிஞர் ஆவார்.

பாசிச மோடியை “காந்தியை கொலைசெய்த கொலைகாரன் கோட்சேவின் ஆதரவாளர்” என்று டிவிட் செய்ததன் காரணமாக நேற்று (20-04-2022) நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளார். இதுமட்டுமின்றி குஜராத்தில் இந்து-முஸ்லிம் மக்களிடையே திட்டமிட்டு நடத்தப்படுகின்ற இனக் கலவரங்களையும், தலித் மக்கள் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல்களையும் தொடர்ந்து எதிர்த்துப் போராடி வருகிறார்.

பொதுவாழ்க்கைக்கு வருபவர்களுக்கு விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதற்கு தைரியமும், நேர்மையும் வேண்டும். விமர்சிப்பவர்களை எப்படி ஒழித்துக் கட்டுவது என்று சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள் சமூக பாசிஸ்டுகளாகவும், பாசிஸ்டுகளாகவும் சீரழிந்து போகிறார்கள்.

நாடு முழுவதும் கோட்சேவின் சிலையை திறக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்கின்ற ஆர்எஸ்எஸ் கும்பலில் இருந்து உருவாகியுள்ள மோடி அதைப் பற்றி விமர்சித்தால் ஆத்திரம் அடைவது அர்த்தமற்றது.

இந்தியாவில் பெயரளவிலான கருத்து சுதந்திரம் கல்லறைக்கு அனுப்பப்படுகிறது. பாசிஸ்டுகளுக்கு எதிராக புரட்சிகர, ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரண்டு போரிடாமல் வீழ்த்தவே முடியாது.

அதே சமயம் பாசிஸ்டுகளை எதிர்த்துப் போராடுகிற சக்திகளை பிளவுபடுத்துகின்ற ஐந்தாம் படைகளையும் எதிர்த்து முறியடிக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.

  • சண்.வீரபாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here