“கான்கெர் மாவட்டத்தின் பஸ்தர் பகுதியில் சோட்டேபெத்தியா காவல் நிலைய எல்லைக்குள் இருக்கும் பினகுண்டா கிராமத்தின் வனப் பகுதியில் மாவோயிஸ்ட்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாகவும், அதில் மாவோயிஸ்ட் கமாண்டர்கள் சங்கர் ராவ், லலிதா, ராஜ்மன், வினோத் காவ்டே உட்பட பலர் பங்கேற்றுள்ளதாகவும் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டைக்காக கடந்த 2008-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மாநில போலீஸாரின் மாவட்ட ரிசர்வ் படையினர் (டிஆர்ஜி), எல்லை பாதுகாப்பு படையினர் சுமார் 200 பேர் வனப் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நேற்று (16.4.2024) மதியம் 2 மணிஅளவில் இரு தரப்பினர் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. அப்போது, பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், மாவோயிஸ்ட் கமாண்டர்கள் சங்கர் ராவ், லலிதா, வினோத் காவ்டே உட்பட 29 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர்” என்று இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது. இன்றைய அச்சு ஊடகங்களில் முதல் பக்க செய்தியாக இந்த தாக்குதல் சம்பவம் மற்றும் 29 மாவோயிஸ்டுகள் உயிரிழந்த கொடூரமான நிகழ்வு ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த 4 மாதத்தில் கான்கெர் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 72 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டு உயிரிழந்த மாவோயிஸ்ட்களின் எண்ணிக்கையைவிட மிக அதிகம்.

இந்தியாவில் இடதுசாரி தீவிரவாதம் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர்களை முற்றாக ஒழித்துக் கட்ட போவதாகவும் 2014 ஆம் ஆண்டு ஆர் எஸ் எஸ் மோடி உள்ளிட்ட பயங்கரவாத கும்பல் அறிவித்தது.

இதன் தொடர்ச்சியாக மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது நக்சல்பரி கிராமத்திற்கு சென்ற அமித்ஷா, “தேர்தலை புறக்கணிப்பவர்களாக இருந்தாலும் சரி, தேர்தலில் போட்டியிடுபவர்களாக இருந்தாலும் சரி, இடதுசாரிகளை முற்றாக ஒழிப்பதே எங்களின் திட்டம்” என்று பகிரங்கமாக பேட்டி அளித்தார்.

ஆர்எஸ்எஸ் மோடி தலைமையிலான பாசிச பயங்கரவாத கும்பல் கொண்டு வரத்துடிக்கின்ற கார்ப்பரேட் காவி பாசிசத்தை எதிர்த்து முறியடிப்பதற்கு நாடு முழுவதும் உள்ள கம்யூனிஸ்டுகள் குறிப்பாக மார்க்சிய லெனினிய புரட்சியாளர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இடதுசாரி அமைப்புகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து செயல்படுவது அவர்களின் பலவீனத்தை காட்டுகிறது என்றாலும், எவ்வளவுதான் சிறிய அமைப்பாக இருந்தாலும் அவர்கள் மட்டும்தான் பாசிசத்தை அதன் ஈரக் குலையில் தாக்குகிறார்கள்.

ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் ஆகக் கேடான வடிவமாக உருக்கொண்டுள்ள பாசிச பயங்கரவாதத்தை சரியாக வரையறுத்து அதற்கு எதிராக மக்களை திரட்டுகிறார்கள்.

கம்யூனிச சித்தாந்தம் மட்டும் தான் பாசிஸ்டுகளுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. அதனால் தான் இடதுசாரிகளை மக்களிடமிருந்து தனிமைப்படுத்துவதற்கு பல்வேறு அவதூறுகளை வாரி இறைப்பதும், இடதுசாரி தீவிரவாதம் என்ற முகாந்திரத்தில் நக்சல்பரி அமைப்பினரை நரவேட்டையாடுவதும் நடக்கிறது.

2019 பாராளுமன்றத் தேர்தலின் போது புல்வாமா தாக்குதலை நடத்தி நாட்டிற்கு வெளியில் உள்ள அபாயத்தை அதாவது பாகிஸ்தானின் அபாயத்தை தடுத்து நிறுத்துவதற்கு ஆற்றல் கொண்ட ஒரே தலைவர் மோடி என்பதை முன் வைத்ததைப் போலவே தற்போது மாவோயிஸ்டுகள் மீது நடந்துள்ள தாக்குதலையும் நாம் அவதானிக்க வேண்டியுள்ளது.

இதையும் படியுங்கள்: புல்வாமா தாக்குதலும், பாஜகவின் பிண அரசியலும்

தொடர்ந்து உள்நாட்டு பாதுகாப்பு என்ற போர்வையில் தேசிய இனப் போராளிகளையும், நக்சல்பரி அமைப்புகளையும், மனித உரிமை அமைப்புகளையும், மோடியை விமர்சிக்கின்ற ஜனநாயக சக்திகளையும், சமூக செயல்பாட்டாளர்களையும் குறி வைத்து ஒடுக்குவது நடந்து கொண்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பு என்ற போர்வையில் கருத்து சுதந்திரத்திற்கு கல்லறை கட்டப்படுகிறது. கார்ப்பரேட்டுகளுக்கு ஆர்எஸ்எஸ்-பாஜக, மோடி கும்பல் நடத்துகின்ற தடையற்ற சேவைக்கு எதிராக குரல் கொடுக்கின்ற யாராக இருந்தாலும் அவர்களை தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி ஆள் தூக்கி சட்டமான ஊபா (UAPA )சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பது ஒரு போக்காகவே மாறியுள்ளது.

தேர்தல் அரசியலுக்கு வெளியில் மக்களை திரட்டுவதற்கு போராடுகின்ற மாவோயிஸ்டுகளை குறிவைத்து கொன்றொழித்து வருகிறது பாசிச மோடி அரசு. இதன் மூலம் ஏறக்குறைய 52% இடதுசாரி தீவிரவாதத்தை கடந்த 10 ஆண்டுகளில் முடித்து விட்டதாகவும் மீதமுள்ளவற்றையும் மூன்றாவது முறை வெற்றி பெற்றால் முற்றாகத் துடைத்தெறிய போவதாகவும் கொக்கரித்துக் கொண்டுள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில் மத சிறுபான்மையினரான இஸ்லாமியர்களுக்கு எதிரான பாலியல் வன்முறை, லவ் ஜிகாத் என்ற பெயரில் கொடூரமாக தாக்குவது, மாட்டுக்கறி அரசியல் போர்வையில் படுகொலை செய்வது, அவர்களின் வீடுகளை புல்டோசர் வைத்து இடித்து தள்ளுவது, தனது துணை அமைப்புகளின் மூலம் மசூதிகள் மற்றும் இஸ்லாமியர்கள் அதிகமாக குடியிருக்கின்ற பகுதிகளில் குண்டு வெடிப்புகளை நடத்துவது, இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்வது, அவர்கள் சட்டவிரோதமாக பயங்கரவாத தன்மையில் இயங்குவதாக புனைக் கதை எழுதி தனது கொலைகார உளவு படையான NIA மூலம் கைது செய்து சிறையில் அடைப்பது அல்லது தேடுதல் வேட்டை என்ற பெயரில் ஒழித்துக் கட்டுவது ஆகியவையே தொடர்ந்து நடந்து வருகிறது.

தலித்துகளின் மீது ஆதிக்க சாதி வெறியாட்டம் கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டு அனைத்து பிரிவினர் மீதும் ஆர்எஸ்எஸ் பாஜகவின் சட்டபூர்வமான தாக்குதல்களும் சட்ட விரோதமான குண்டர் படை தாக்குதல்களும் அதிகரித்து உள்ளது. இத்தகைய பாசிச பயங்கரவாதத்தை எதிர்த்து முறியடிப்பதற்கு நாட்டில் உள்ள மக்கள் அனைவரையும் ஓரணியில் திரட்ட வேண்டியுள்ளது.

நம் அனைவருக்கும் ஒரே எதிரி தான்; அது ஆர்எஸ்எஸ் பாஜக உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் தான்; நாட்டை மறுகாலனியாக்கும் ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் தீவிர சுரண்டல் நோக்கத்திற்காக கொண்டு வரப்படும்  கார்ப்பரேட் காவி பாசிசம் தான் என்பதை தொடர்ந்து மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம்.

முதலாளித்துவ ஊடகங்களின் செய்திப்படியே தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்கு ஒன்று கூடினார்கள் என்ற ஒரே காரணத்தை முன்வைத்து காக்கைகளையும், குருவிகளையும் சுட்டுத் தள்ளுவதைப் போல மாவோயிஸ்டுகளை நர வேட்டையாடுவதை எதிர்த்து குரல் கொடுப்போம்.

  • சீராளன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here