பார்ப்பன மேலாதிக்கமே
காவி பாசிசம்!
சிதம்பரம் நடராசர் கோவிலில் சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் பாடி சிவபெருமானை வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தில்லைக் கோவில் தமிழகத்தை ஆண்ட சோழர்கள், பாண்டிய மன்னர்கள், விஜயநகர பேரரசின் கிருஷ்ண தேவராயர் மற்றும் நாயக்க மன்னர்களால் கட்டப்பெற்றது. 12 ஆம் நூற்றாண்டில் முழுமையாக கட்டப்பட்ட ஆலயத்தில் தமிழ் பக்தி இலக்கியங்களான தேவாரம், திருவாசகம் சமயக் குரவர்கள் நால்வரால் பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றாகும்.
இந்த பெருமை பெற்ற ஆலயத்தில் தமிழ் தீண்டத்தகாத மொழியாக தீட்சிதர் பார்ப்பனர்களால் தடுக்கப்பட்டு வந்தது. ஏன் பாட அனுமதி இல்லை என்று கேட்டால் அதுதான் நாங்களே பாடுகிறோமே என்று ஏய்க்கிறார்கள். சிற்றம்பல மேடையில் பாடினால் தான் நடராஜன் காதில் விழுமா? கீழே நின்று பாடக்கூடாதா என்று எகத்தளமாக பேசுகின்றனர். இங்குதான் பார்ப்பனியம் உள்ளே புகுகிறது. கடவுள் படைப்பில் அனைவரும் சமம் என்றால் நீ ஏன் தடுக்கிறாய் என்ற கேள்வியை பார்ப்பனக் கும்பலைப் பார்த்து இந்து மதத்தினர் எழுப்புவதில்லை.

பார்ப்பனியம் இந்தியாவில் ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சொந்த நாட்டின் உழைக்கும் மக்கள் மீது வர்ணாசிரம கொடுமைகளையும், நான்கு வர்ணங்களின் அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தியும் அடக்கி ஒடுக்குகிறது. உழைக்கும் மக்களை பல சாதிகளாகப் பிரித்து அவர்களை உழைப்பில் ஈடுபடுத்தி சுரண்டுவதையும், அடிமைத்தனத்தையும் தவிர வேறு ஒன்றையும் அவர்களுக்கு பார்ப்பன (இந்து) மதம் அனுமதித்ததே இல்லை.
இன்னும் சொல்லப்போனால் பார்ப்பன மதம் என்பது மக்களை சாதி ரீதியாகவும், தனித்தனி அடுக்குகளாகவும் பிரித்து ஆதிக்கம் செலுத்துகின்ற, படிநிலை சாதி அமைப்பு முறையைக் கொண்ட, சமத்துவத்தை அங்கீகரிக்காத ஏற்றத் தாழ்வையும், சாதி ஆதிக்கத்தையும் பெருமையாக கருதுகின்ற இழிவான மதமாகும்.
உழைப்பில் ஈடுபடுகின்ற மக்களை சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்று சித்தரித்து அவர்களை என்றும் தலை நிமிர விடாமல் வழிபாடுகள், சடங்குகள், ஆச்சாரங்கள் போன்றவற்றின் மூலம் இழிவு படுத்துகின்ற வகையில், தானே அடிமைத்தனத்தை ஏற்கச் செய்யும் வேலையை பார்ப்பன கும்பல் பல நூற்றாண்டுகளாக செய்து வருகிறது.
இந்த சமூக அமைப்பைப் பற்றி, “பிரிட்டன் காலனி ஆதிக்கத்திற்கு முன்பு இந்தியாவில் நிலவிய கொடூரமான உற்பத்திமுறை சாதியத்தை பாதுகாக்கின்ற ஆசிய பாணி உற்பத்தி” என்று வரையறுத்துக் கூறினார் காரல் மார்க்ஸ்.
இந்து மதத்தின் புனித நூலாக கருதப்படுகின்ற பகவத் கீதை, மனிதர்களை நான்கு வர்ணங்களாக பிரித்து, “சதுர்வர்ணம் மயா சிருஷ்டம்” என்று உலகை உருவாக்கிய கடவுளே சாதி முறையை உருவாக்கியதாக பெருமைப்படுகிறது.
எல்லா மதங்களிலும் அம்மதத்தின் குருமார்கள் தங்களைக் கடவுளின் ஊழியர்கள், சேவகர்கள் என்று தான் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் இந்து மதத்தில் மட்டும் தான் மதகுருமார்களான பார்ப்பனர்கள், கடவுளுக்கே எஜமானர்களாக இருக்கிறார்கள். கீழ்வரும் ஒரு சுலோகத்தில் இவ்வாறுள்ளது:
“தெய்வா தீனம் ஜெகத்சர்வம்
மந்த்ரா தீனந்து தைவதம்
தன் மந்த்ரம் பிராஹ்மணாதீனம்
ப்ராமணா மமதைவம்”
உலகம் தெய்வத்துக்குள் அடக்கம்; தெய்வம் மந்திரத்துக்குள் அடக்கம்; மந்திரம் பிராமணனுக்குள் அடக்கம்; ஆதலால், பிராமணரே நம் தெய்வம் என்பது இதன் பொருள். எனவேதான், இதனை பிராமண மதம் என்று சொல்கிறோம்.
“தெய்வாதீனம் ஜகத் சர்வம்” என்ற வேத பாடல் உணர்த்தும் உண்மை என்ன? பிறப்பால் பார்ப்பனர்கள் அனைவரும் பூவுலகத்தின் தேவர்கள், அதாவது பூசுரர்கள்! இதையெல்லாம் இந்த நூற்றாண்டிலும் அமுல்படுத்துவதற்கு தினவெடுத்து ஆதிக்க வெறியுடன் திரிகிறது பார்ப்பனக் கும்பல்.
சட்டத்தை அமல்படுத்தும் உறுப்புகளான நீதிமன்றம், ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரவர்க்கம், பாராளுமன்றம், சட்டமன்றம் உள்ளிட்ட மக்கள் பிரதிநித்துவ உறுப்புகள் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளிலும் தகுதி என்ற பெயரில் பார்ப்பனக் கும்பல் ஆக்கிரமித்துக் கொண்டு, இந்து மதத்தின் வர்ண சாதி பிளவு மற்றும் அடக்குமுறைகளை கட்டிக் காத்துக் கொண்டு வருகின்றனர் இதற்கு பழக்கவழக்கம் என்ற பெயரிலும் பாரம்பரியம் என்ற பெயரிலும் சட்டப்படி அங்கீகாரத்தை பெறுகின்றனர்.

எந்த ஒரு நாட்டிலும் ஒரு சில ஆண்டுகள் ஆட்சி செய்தாலும் பல நூற்றாண்டுகள் ஆட்சி செய்தாலும் அவை மக்களால் தூக்கி எறியப்பட்ட பிறகு புதிதாக ஒரு அரசியல் சட்டத்தை எழுதிவிட்டால் பழைய பழக்க வழக்கங்கள் அனைத்தும் காலாவதி ஆகி விடுகிறது. ஆனால் இந்தியாவில் மட்டும் பல ஆயிரம் ஆண்டுகளாக நிலவி வந்த பிற்போக்கான, அறிவியலற்ற மூட நம்பிக்கை கொண்ட பழக்கவழக்கங்கள், அரசியல் சட்டம் எழுதப்பட்ட பிறகும் அப்படியே தொடர்கிறது.
அரசியல் சாசனத்தில் உள்ள 25 மற்றும் 26 ஆவது பிரிவை கேடாக பயன்படுத்திக்கொண்டு பார்ப்பனர்கள் தனக்கு தனி உரிமை இருப்பதாக நீதிமன்றங்களில் இன்றளவும் வாதாடி திரிகின்றனர். இதனை ’நீதிமான்கள்’ என்று கூறப்படும் உச்சநீதிமன்ற குடுமிப் பார்ப்பனர்கள் அங்கீகரிக்கின்றனர்.
பார்ப்பனியம் வெறும் கருத்தியல் ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் மட்டும் மக்களை ஏறி மிதிப்பதில்லை. சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தீட்சிதர் பார்ப்பனர்கள் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொள்வதற்கு ஒரு பொருளியல் அடிப்படையும் உள்ளது. கோவிலுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களையும், நடராஜருக்கு சொந்தமான தங்க, வெள்ளி நகைகளையும், கோவிலுக்கு வருவாயை ஈட்டித்தரும் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தையும் தமது சொந்த சொத்து போல அனுபவித்துக் கொண்டு வருகின்றனர்.
கோவிலுக்கு வருகின்ற சைவ பக்தர்கள் அனைவரும் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை கோவிலுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த வருவாயை எந்த விதமான கணக்கும் காட்டாமல் கொள்ளை அடித்துக் கொண்டு வருகின்றனர், ’சிவன் சொத்து குல நாசம் என்பார்கள்’, ஆனால் இங்கோ கருவறைக்குள் ஏ.சி வசதி முதல் தீட்சிதர் ஆத்து மாமிகளின் கழுத்தில், காதில் தொங்கும் வைர, வைடூரிய நகைகள் வரை அனைத்தும் சுருட்டப் படுகிறது. ஆகமம், சாத்திரம் அனைத்தும் ஏமாந்த பக்தர்களுக்கு தான். இவர்களோ ஹைடெக் பார்ப்பனர்களாக கோவிலின் முழு உரிமையாளர்கள் போல கும்மாளம் போடுகின்றனர். பிரிட்டன் காலனி அரசாங்கமானாலும் சரி, இந்திய ஒன்றிய, தமிழக அரசாக இருந்தாலும் சரி! அரசாங்கத் திற்கே கட்டுப்படாத பார்ப்பன பயங்கரவாதிகள் கோவிலுக்குள் சட்டவிரோதமான செயல்களை செய்யவும் தயங்குவதில்லை. தனது ஆதிக்கத்தை எதிர்த்து கேள்வி கேட்கின்ற யாரையும் போட்டுத் தள்ளுவதற்கும் தயங்குவதில்லை.
இந்த பொருளாதார ஆதாயத்தின் மீது நின்று கொண்டுதான் தனது சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டுவதும், இந்துக்கள் என்று சொல்லப்படுகின்ற பார்ப்பனரல்லாத பக்தர்களை இழிவுபடுத்துவதும், போக்கிரித்தனமாக தாக்குவதும், தங்களுக்குள் இரு பிரிவுகளாக பிரிந்து அடித்துக் கொள்வதும் நடக்கிறது.
இந்த கேடுகெட்ட செயலை நம் தலையில் சுமத்துவதற்கும், பார்ப்பன மேலாதிக்கத்தின் கீழ் நம்மை கொண்டு வருவதற்கும், சமத்துவத்தை கிஞ்சித்தும் விரும்பாத பார்ப்பனப் பேரரசின் கீழ் சூத்திர, பஞ்சமர்களாக, நிரந்தர அடிமைகளாக வைத்துக் கொள்ள செயல்படுவதே பார்ப்பன பாசிசம்! அதுவே காவி பாசிசம்!
இரா.கபிலன்.