மாநில அமைப்பு கமிட்டியின் முன்னாள் செயலர் தோழர்.கணேசன் மறைந்தார்! மறைந்த தோழர் கணேசனுக்கு எமது அஞ்சலி!

எளிய வாழ்க்கை, கடினமான போராட்டம் என்ற தோழர்.மாசேதுங் முன்வைத்த பண்பாட்டு நெறிமுறைகளை தன்னுடைய சொந்த வாழ்க்கையில் முன்னுதாரணமாக கடைபிடித்த முன்னுதாரணமிக்க தோழர் அவர்.

0

 

அஞ்சலி குறிப்பு – 29-06-2022

மாநில அமைப்பு கமிட்டியின் முன்னாள் செயலர் தோழர்.கணேசன் மறைந்தார்!
மறைந்த தோழர் கணேசனுக்கு எமது அஞ்சலி!

இந்திய புரட்சிகர வானில் வலது சந்தர்ப்பவாதத்தை முறியடித்து வசந்தத்தின் இடிமுழக்கமாக உதித்தெழுந்தது நக்சல்பாரி இயக்கம்.

இந்திய கம்யூனிச இயக்கம் 1925 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட போதிலும் கட்சிக்கு என்று திட்டத்தை வகுக்காமல் அரசியல் தீர்மானங்களின் அடிப்படையில் வழிநடத்தப்பட்டு வந்தது. ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு பிறகுதான் இந்திய  பொதுவுடமைக்கட்சி (CPI) கட்சித்திட்டம் ஒன்றை வகுத்து செயல்படத் துவங்கியது. அதிலிருந்து பிரிந்த இந்திய பொதுவுடமைக்கட்சி CPI (M) 1964 ஆம் ஆண்டு முன்வைத்த கட்சிதிட்டம் இந்திய சமூக அமைப்பை பற்றி பருண்மையான ஆய்வுகள் இன்றி வகுக்கப்பட்டதாகும். இவை இரண்டும் நாடாளுமன்ற வழிமுறையின் மூலமாகவே மக்களை புரட்சிக்கு அணிதிரட்டிவிட முடியும் என்று செயல்பட்டு வந்தனர்.

மார்க்சிச லெனினிய அரசியலுக்கு எதிரான இந்த வலது சந்தர்ப்பவாத அமைப்புகளுக்கு மாற்றாக நாடாளுமன்றத்திற்கு வெளியில் மக்களைத் திரட்டி ஆயுதந்தாங்கிய போராட்டத்தின் மூலமே புரட்சியை நடத்தமுடியும் என்று வசந்தத்தின் இடிமுழக்கமாக தனது கட்சி திட்டத்தை வகுத்து செயல்படத் துவங்கியது இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) CPI (ML).

இத்தகைய புரட்சிகர அமைப்புடன் தன்னை இணைத்துக்கொண்டு எழுபதுகளில் கட்சியில் செயல்படத்துவங்கிய தோழர்கணேசன் வேறுசில புரட்சிகர தோழர்களுடன் இணைந்து இந்திய சமூக அமைப்பிற்கு பொருத்தமான மக்கள்திரள்வழி ஒன்றை உருவாக்கி செயல்படவேண்டும் என்று முன்வைத்தார்.

இதனடிப்படையில் இந்திய சமுதாய அமைப்பை மார்க்சிய லெனினிய அறிவியலைக்கொண்டு ஆய்வுசெய்து புரட்சிகரமான முன்னுதாரணமிக்க அரசியல் கோட்பாட்டு முடிவுகளை வகுத்தவர்களுடன் முன்னணி தோழராக செயல்பட்டார்.

அந்த அரசியல் கோட்பாட்டு முடிவுகளுடைய சாராம்சத்தின் அடிப்படையில் கட்சிதிட்டத்தை அறிவியல்பூர்வமாக செழுமைப்படுத்தி முன்னணித் தோழர்களுடன் இணைந்து  செயல்படத் தொடங்கினார்.

நக்சல்பரி என்றால் கடும் அடக்குமுறைகளும், போலீசின் தேடுதல் வேட்டைகளும், ஆளும்வர்க்கத்தின் அவதூறுகளும் நிரம்பி வழிந்த காலத்தில் கையடக்கமேயான சில தோழர்கள் கடும் உழைப்பிலும் தியாகத்திலும் மக்கள்திரள்வழி என்ற அரசியலை கொண்டு சென்றனர். அந்தத் தோழர்களுடன் தோளோடுதோள் நின்று முன்னணி செயல்வீரராகவும் பிறகு அமைக்கப்பட்ட மாநில அமைப்புக் கமிட்டி, இந்திய பொதுவுடமைக்கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியின் செயலாளராகவும் நீண்டகாலம் செயல்பட்டு வந்தார் தோழர் கணேசன்.

எளிய வாழ்க்கை, கடினமான போராட்டம் என்ற தோழர்.மாசேதுங் முன்வைத்த பண்பாட்டு நெறிமுறைகளை தன்னுடைய சொந்த வாழ்க்கையில் முன்னுதாரணமாக கடைபிடித்த முன்னுதாரணமிக்க தோழர் அவர். புரட்சிகர அரசியலுக்கு குடும்பம் என்ற நிறுவனம் எந்த அளவிற்கு ஒத்துழைப்புடன் இருந்தாலும்கூட அதற்கு உரிய சில மணித்துளிகள் அல்லது சில நாட்கள் ஒதுக்குவதுகூட நமது புரட்சிகர வேலைத்திட்டத்திற்கு இயலாதது என்ற புரிதலின் அடிப்படையில் வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்துகொள்ளாமல் புரட்சிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட சிறந்த பண்புகளுடைய தோழர்கணேசன் 28-6-2022 அன்று இயற்கை எய்தினார்.

தூக்கமின்மை, இருதயகோளாறு போன்ற கடுமையான நோய்களுக்கு மத்தியில் சிறிதும் தளராமல் தனது நோயை எப்போதும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இளைஞர்களுக்கு நிகராக தனது 75 வயது வரை மக்களுக்காக உழைத்த தோழரின் அரிய பண்புகளை நாம் கற்றுக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

2010 வரை எளிய மக்களுடன் வாழ்ந்து வந்த தோழர், அமைப்பு வேலைகளின் காரணமாக நகர்ப்புறங்களிலும் குட்டிமுதலாளித்துவ வாழ்க்கைமுறை கொண்ட தோழர்களின் குடும்பங்களிலும் தங்கி வேலை செய்யத் துவங்கியதன் விளைவாக சிந்தனைமுறையிலும் அவரிடம் பாட்டாளி வர்க்க விரோத பண்புகள் குடிகொள்ளத் துவங்கியது.

பிறரிடம் சரியான கம்யூனிச வாழ்க்கைக்காக கறாராக போராடிய தோழர் தன்னையும் தனக்கு நெருக்கமான சில தோழர்களையும் தாராளமாக பரிசீலிப்பது என்ற இரட்டை அணுகுமுறையை கையாண்டு இறுதிகாலத்தில் அணிகளிடம் தனிமைப்பட்டு கடும்விமர்சனத்திற்கும், கட்சியை பிளவுபடுத்திய பழிக்கும் ஆளாகி இருந்தார் என்பது எதிர்மறை அனுபவமாக பரிசீலிக்கப்பட வேண்டும்.

சரியான மக்கள்திரள் அரசியல் பாதையை உருவாக்கி அந்த அரசியல் திசைவழியில் நூற்றுக்கணக்கான போராட்டங்களையும் அந்தப் போராட்டங்களின் மூலம் கிடைத்த ஆயிரக்கணக்கான தோழர்களையும் கம்யூனிஸ்டுகளாக உருவாக்கி தலைமைதாங்கி வழிநடத்தி சென்ற சிறந்த தோழர்.கணேசன்.

தனது இறுதிகாலத்தில் பாட்டாளி வர்க்க விரோதப் பண்புகளுக்கு ஆளானது மட்டுமின்றி அதிகாரத்துவ நபராகவும், ஜனநாயக மறுப்பு, சீர்குலைவு போன்ற மார்க்சிய-லெனினிய விரோத பண்புகளுக்கு ஆளானார்.  இது போன்ற பாரிய தவறுகள் தன் வாழ்நாள் முழுவதும் இறுதிவரை கம்யூனிஸ்டாகவே வாழ்ந்து மறைந்தார் என்று மதிப்பீடு செய்வதற்கு தடையாக உள்ளது. எனினும், ஒரு மனிதரை பரிசீலிக்கின்றபோது கடந்த காலத்தில் அவர் செய்த வேலைகள், அர்ப்பணிப்பு, தியாகம் ஆகியவற்றையும் நடைமுறையில் தற்போது அவர்கள் செய்து கொண்டிருக்கும் சரிதவறுகளையும் பரிசீலித்து எதிர்காலத்தில் அவர் எப்படிப்பட்டவராக இருப்பார் என்று அணுகும் இயங்கியல் அணுகுமுறைதான் ஆசான்கள் நமக்கு கற்றுக்கொடுத்தது என்ற வகையில் தோழர்.கணேசனிடம் நாம் கற்றுக்கொண்ட சிறந்த பண்புகளை எடுத்துக்கொள்வோம்.

இந்தியாவில் செயல்படும் மார்க்சிய-லெனினிய குழுக்களில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக பிளவுபடாத தலைமையை கட்டிக்காத்து புரட்சிகர அரசியலை பல லட்சக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கையூட்டும் அரசியல்தலைமையாக மாற்றி செயல்பட்டு வந்த தோழர்.கணேசன் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவோம்!

அவரிடம் இருந்த சரியான அம்சங்களை கற்றுக்கொள்வதும், அவரிடம் வெளிப்பட்ட தவறான பண்புகள் மற்றும் மார்க்சிய லெனினிய அமைப்புக்கு விரோதமான அம்சங்கள் மீண்டும் தனிப்பட்ட தோழர்களிடமும், புரட்சிகர அமைப்பிற்கு உள்ளேயும் வராத அளவிற்கு படிப்பினையாக எடுத்துக்கொண்டு எச்சரிக்கையுடன் செயல்படுவோம்!

தோழர்.கணேசனின் வாழ்நாள் கனவான போல்ஷ்விக்மயமான, எஃகுறுதிகொண்ட நக்சல்பரி பாரம்பரியத்தில் புடம்போடப்பட்ட கட்சி அமைப்பை கட்டியமைப்போம் என உறுதி ஏற்போம்!

மாநில அமைப்புக் கமிட்டி,
இந்திய பொதுவுடமைக் கட்சி (மா-லெ),
தமிழ்நாடு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here