Part 1  Part 2

பாகம் 3


னாதன தர்மத்தை ஒழித்துக் கட்டு என்று இந்த தொடரை துவங்கிய போது நாம் எதிர்பார்த்ததை விட அதிகமான எதிர்வினைகள் நாடு முழுவதும் வெளியாகின. பார்ப்பன இந்து மதம் குறித்த விவாதங்கள் முன்னிலைக்கு வந்துள்ளன.

பார்ப்பன இந்து மதத்தின் உயிர்நாடி அதன் சாதிய பிரிவினையில் உள்ளது என்பதை ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் எப்போதும் வெளிப்படையாகவே பேசி வருகின்றன. 1982 ஆம் ஆண்டு விஸ்வ ஹிந்து பரிஷத் நடத்திய ஊர்வலத்தில் மனு தர்மம் அதன் முகப்பில் கொண்டு செல்லப்பட்டது. அந்த ஊர்வலத்தில் உரையாற்றிய திலிப் போஸ் என்பவர் “சர்ச் இல்லாமல் கிறிஸ்தவ மதம் இல்லை.. அது போல் சாதி அமைப்பு இல்லாமல் இந்து மதம் இல்லை.  இந்த சாதிய அமைப்பை நிலை நிறுத்தும் மனுதர்ம சாஸ்திரத்தை ஓர் உண்மையான இந்துவால் புறக்கணிக்க முடியாது” என்று உரையாற்றினார்

இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் சாதி- தீண்டாமை கொடுமைகளை நியாயப்படுத்துகிறது சனாதனம் என்ற வர்ண தர்ம கோட்பாடு. இந்த வர்ண தர்ம கோட்பாடு சொல்லிக் கொள்ளப்படும் இந்துக்களை சவர்ணர்கள், அவர்ணர்கள் என்று இரண்டு பிரிவாக பிரிக்கிறது. அதற்கு முன்பு நிலவிய ஏற்றத்தாழ்வு என்பதை மனு சதுர் வருண அமைப்பிற்குள் இருப்பவர்கள் என்றும், சதுர் வருண அமைப்பிற்கு வெளியில் இருப்பவர்கள் என்றும் பிரித்து கையாண்டது.

 

பார்ப்பன இந்து மதத்தை ஆய்வு செய்த டாக்டர் அம்பேத்கர்  மனுஸ்மிருதி என்ற நூலை எழுதியது சுமதி பார்கவா என்ற பார்ப்பனர் என்பதை கண்டறிந்தார். மனு என்ற பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் முன்வைத்த சட்ட திட்டங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து மனுஸ்ருதி என்று வெளியிட்டனர்.

“மனு என்ற பெயருக்கு இந்தியாவின் பண்டைக்கால வரலாற்றில் பெரும் மதிப்பு இருந்தது. சட்டத் தொகுப்புக்கு இந்த மதிப்பின் மூலம் பெருமை சேர்க்கும் நோக்கத்துடனே அதை மனு வெளியிட்டதாக கூறப்பட்டது. இது மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு மோசடி என்பது சந்தேகத்துக்கு இடமில்லாதது. சட்டத் தொகுப்பில் அதை இயற்றுபவரின் பெயரை குறிப்பிடும் இடத்தில் பண்டைய க்கால வழக்கப்படி பிருகு என்ற குடும்பப் பெயர் கூறப்பட்டுள்ளது. ‘மனுதர்ம சாஸ்திரம்’ என்ற தலைப்பில் பிருகு இயற்றிய நூல் என்பதே அதன் உண்மையான தலைப்பாகும். தொகுப்பின் ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் பிருகு என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே நமக்கு அதை இயற்றியவரின் குடும்பப் பெயர் தெரிகிறது. அவருடைய சொந்த பெயர் நூலில் தெரிவிக்கப்படவில்லை. நாரத ஸ்மிருதியை எழுதியவருக்கு மனு ஸ்மிருதியை இயற்றியவரின் பெயர் தெரிந்திருந்தது. அவர் அந்த ரகசியத்தை வெளியிடுகிறார். மனு சாஸ்திரத்தை இயற்றியவர் சுமதி பார்க்கவா என்பது கட்டுக்கதைகளில் வரும் பெயர் அல்ல” என்று அம்பலப்படுத்துகிறார். (இது பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு -7 புது டெல்லி. டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன் 1995 மூலம் வெளியிடப்பட்டுள்ளது.)

இன்று தமிழகத்தின் ஆளுநர் ஆர் என் ரவி முதல் பாண்டேக்கள், தினமலர் பார்ப்பான்கள், சங்கர மடத்தின் சங்கராச்சாரி பார்ப்பனர்கள், உள்ளிட்டு, இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதம அமைச்சர் நரேந்திர மோடி வரை அனைவரும் சனாதனம் பற்றி முன்வைக்கின்ற கருத்துகள் யாவும் அது பழமையானது. எனவே நீடிக்க தகுதி உள்ளது என்று வாதிடுகின்றனர்.

இந்தப் பழமை என்பதன் உண்மை முகத்தை திரை கிழித்து காட்டியவர்களில் இந்திய வரலாற்றில் டாக்டர் அம்பேத்கர் முதன்மையானவர். இதனால்தான் மகாராஷ்டிரத்தில் மகத் என்னும் நகரில் நடந்த தலித்துகள் மாநாட்டில் 1927 டிசம்பர் 25ஆம் நாள் மனுதர்மத்தை கொளுத்தினார். அவ்வாறு கொளுத்துவதற்கான நியாயத்தை பின்வருமாறு தெரிவிக்கின்றார்.” இந்து சட்டங்களின் பிதா என கருதப்படும் மனுவின் பெயரால் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பவையும் மனுஸ்மிருதியில் அடங்கியிருப்பவையும், இந்துக்களின் சட்டத் தொகுப்பான அங்கீகரிக்கப்பட்டவையுமான இந்து சட்டங்கள், கீழ் சாதியினரை அவமதிப்பவையாக இருக்கின்றன. மனித உரிமைகளை அவர்களுக்கு மறுப்பவையாக உள்ளன. அவர்களது ஆளுமையை நசுக்குபவையாக இருக்கின்றன. நாகரிக உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ள மனித உரிமைகளுடன் இவற்றை ஒப்பிடும் போது இந்து மத ஸ்மிருதி எத்தகைய நன்மதிப்பையும் பெற அருகதையற்றது. ஒரு புனிதமான நூல் என போற்றப்படுவதற்கு தகுதியற்றது என இந்த மாநாடு கருதுகிறது” என்று தீர்மானம் போடப்பட்டு மனுதர்மம் கொளுத்தப்பட்டது.

அவ்வாறு எரிக்கப்பட்ட பிறகு ஏற்றத்தாழ்வை வற்புறுத்தும் நீதிநெறி இனி பாரதத்தில் செல்லாது என உலகம் தெரிந்து கொள்ளட்டும் என்று முழங்கினார். இந்த மனுதர்ம எரிப்பு போராட்டத்தை பிரான்சில் பாஸ்டில் சிறையை தகர்த்த சம்பவத்திற்கு இணையானது என்று பெருமை பொங்க கூறினார்.

இதையும் படியுங்கள்: 

♦ பிறப்பின் அடிப்படையில் இழிவை ஒழித்துக்கட்டு மனுஸ்மிரிதி ஆகமத்தை கொளுத்து தீயிலிட்டு | மகஇக பாடல்

 மனுசாஸ்திரத்தை எரிக்க வேண்டும். ஏன்? பெரியார்

மனுதர்மத்தை ஆதரித்து நிற்கும் சனாதனம் பற்றி சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசுவது கிரிமினல் குற்ற செயலை போல பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. சனாதனத்தின் உண்மை முகம் என்ன என்பதைப் பற்றி விவாதத்திற்கு ஆர்எஸ்எஸ் பார்ப்பன கும்பல் தயாராக இல்லை. மாறாக இவற்றை எதிர்த்து கேள்வி கேட்பது தேசத் துரோகம் என்பதைப் போலவும், சனாதனம் என்று பேசினாலே இந்துக்களுக்கு எதிரானது என்பதைப் போலவும் திரித்து புரட்டுகின்றனர்.

அதுபோல் கடவுள் நம்பிக்கையையும் சாதி ரீதியாக இழிவுபடுத்தப்படுவதையும் ஒன்றாக கலந்து திரித்து புரட்டுகின்றனர். சமத்துவத்தை ஏற்றுக் கொள்ளாத சாதி தீண்டாமை கொடுமைகளை சட்டப்படியே நியாயப்படுத்துகின்ற பார்ப்பன கும்பல் சனாதனமும் சாதாரண மக்களிடம் உள்ள கடவுள் நம்பிக்கையும் ஒன்று என ஏய்க்கின்றனர்

இந்தியாவில் வெகு நீண்ட காலமாக நிலவிய நில உடமை சமுதாயத்தின் சித்தாந்தமாக மனுதர்மம் என்ற சனாதனம் சாதி தீண்டாமை கொடுமைகளை பெரும்பான்மை உழைக்கும் மக்களின் மீது கொடூரமாக திணித்தது. அவர்களை சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்று இழிவு படுத்தி அடக்கியாண்டது.

அந்த மனுதர்மம் தற்போது மீண்டும்  காவி பாசிசமாக, அதாவது பார்ப்பன இந்து மதவெறி பாசிசமாக நாடு முழுவதும் தலை விரித்து ஆடுகிறது.

(தொடரும்…)

  • சண்.வீரபாண்டியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here