லிபியா: அதிகரிக்கும் இயற்கை பேரழிவுகள்!
ஹவாயில் நெருப்பு; மொராக்கோவில் நிலநடுக்கம்; லிபியாவில் புயல் வெள்ளம்!


புவி வெப்பமடைவதால் எதிர் வினையாக – பருவநிலை மாற்றத்தின் பலியாடுகளாக உலக மக்கள் அழிவை சந்திப்பது தொடர் கதையாகிறது. ஒரே நாளில் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறாக நாசத்தை கொண்டு வரும் இத்தகைய பேரழிவுகளை முன்கூட்டியே கணிக்க முடியாமல் திகைத்து நிற்கின்றனர் விஞ்ஞானிகள்.

கடந்த ஜூலை மாதத்தில் கடும் வெப்ப அலையை சந்தித்து வந்த ஐரோப்பாவின் இத்தாலியில் டென்னிஸ் பால் அளவுக்கு ஆலங்கட்டிகள் விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தின. சிலர் மண்டை உடைந்து உயிரிழக்கவும் காரணமாகியது.

ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் உள்ள சுற்றுலா நகரமான மாவி பத்து நாட்கள் நின்று எரிந்த காட்டுத் தீயால் கருகியது.

அதே ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் இமயமலைத் தொடரில் மேக வெடிப்புகள் நிகழ்ந்தன. இமாச்சலப் பிரதேசமும் உத்தர்காண்டும் கடுமையான வெள்ள சேதத்தையும், நிலச்சரிவையும் சந்தித்தன.

செப்டம்பர் எட்டாம் தேதியன்று வடமேற்கு ஆப்பிரிக்காவின் மொராக்கோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கி மக்களை கொன்று குவித்தது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ள நிலையில் 1500 க்கும் மேற்பட்டோர் உயிருக்கு போராடி வருகின்றனர்.

 

வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான லிபியாவை புயல் புரட்டிப் போட்டு விட்டது. புயல், மழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6000-ஐ கடந்தது. பல ஆயிரம் பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

டேனியல் புயல் ஏற்படுத்திய பேரழிவு!

மத்திய தரைக்கடலின் ஒரு பகுதியான அயோனியன் கடல் பகுதியில் டேனியல் என்று பெயரிடப்பட்ட இந்தப் புயல் கடந்த 10-ம் தேதி லிபியாவின் பங்காசி பகுதியில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 165 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.

கனமழையால் கிழக்கு லிபியா பகுதியில் டெர்னா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்த நதியில் கட்டப்பட்டுள்ள 2 அணைகள் உடைந்தன. இதன் காரணமாக டெர்னா, பாய்தா, சூசா, ஷாஹத், மார்ஜ் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

அது ஒரு மினி சுனாமி: இஸ்லாமிக் ரிலீஃப் சலா அமைப்பின் செயற்பாட்டாளர் ஒருவர் கூறுகையில், “டெர்னாவின் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இது கிட்டத்தட்ட இருமடங்காகக் கூட அதிகரிக்கலாம். நகரத்தின் 30 சதவீதம் முழுவதுமாக மூழ்கிவிட்டது. டெர்னாவில் ஏற்பட்டுள்ளது ஒரு மினி சுனாமி எனக் கூறலாம். அந்த அளவுக்கு அத்தனையையும் வாரி சுருட்டிக் கொண்டது. வீடுகளையே தரைமட்டமாக தண்ணீர் இரையாக்கிக் கொண்டுள்ளது. இதில் குடும்பங்கள் பிழைப்பது எங்கே என செய்தி வெளியிட்டுள்ளது இந்து தமிழ் திசை.

லிபியாவில் சுனாமி போன்ற வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். 20 ஆயிரம் பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என டேர்னா நகரின் மேயர் தெரிவித்துள்ளார்.

கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடல்களை மீட்கும் முயற்சியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். கடலுக்குள் இருந்து மேன்மேலும் சடலங்கள் வெளியேறிக் கொண்டே இருக்கின்றன எனவும் தகவல் தெரிவிக்கிறது BBC.

அழிவை சந்தித்த அகதிகள்!

2011-ல் லிபியாவின் மக்கள் தலைவராக திகழ்ந்த கடாபி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து இரு நாடுகளாக சிதறுண்டு போனது. இரு போட்டி அரசாங்கங்கள் நடைபெற்று வருகின்றன.

ஏகாதிபத்தியங்கள் பிற நாடுகளின் ஆட்சி அதிகாரத்தில் தலையிட்டு மோதல்களை தூண்டி, உள்நாட்டுப் போர்களை நடத்தி, கலவரங்களால் மக்களை கொன்று குவித்து, சர்வ நாசத்தை உருவாக்கி வருகின்றன. அதில் இருந்து தப்பி பிழைக்க மக்கள் அகதிகளாக உலகம் முழுவதும் சிதறி பரவி வருகின்றனர்.

எகிப்தில் இருந்து அண்டை நாடான லிபியாவுக்குப் புலம் பெயர்வோர் தேர்வு செய்வது கிழக்குப் பகுதிதான். தற்போது வரை புயல் மற்றும் அணை உடைப்பால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு லிபியாவில் உயிர் பிழைப்பதற்காக அகதியாக வெளியேறி தஞ்சமடைந்த 78 எகிப்தியர்கள் உயிரிழந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

அணை ஏன் உடைந்தது?

லிபியாவின் மத்திய தரைக்கடல் கடற்கரை முழுவதும் வீசிய புயல் காரணமாக கனமழை பெய்தது. இது சாதாரண மழை அல்லை. செப்டம்பர் மாதம் முழுவதும் நாடு பொதுவாகப் பெறும் 1.5 மிமீ மழையுடன் ஒப்பிடுகையில், 24 மணி நேரத்திற்குள் சில பகுதிகளில் 400 மிமீ வரை மழை பெய்திருக்கிறது.

லிபியாவில் செப்டம்பர் மாதம் சராமரியாக வெறும் 1.5 மி.மீ மழைதான் பெய்யும். அதாவது 400 மடங்கு மழை அதிகமாக பெய்தது.

டேனியல் புயல் வீசியபோது பெய்த மழை வெள்ளமானது டெர்னா அணைக்குப் பின்புறத்தில் மிக அதிகமாகத் தேங்கியது. இது அணை உள்வாங்கிக் கொள்ள வழிவகுத்தது. ஏற்கனவே பலவீனமாக இருப்பதாக நிபுணர்களால் எச்சரிக்கப்பட்ட அணையானது வெள்ள அழுத்தத்தால் உடைந்தே பேரழிவை சந்தித்துள்ளது என்று வல்லுநர்கள் விளக்குகின்றனர்.

அணை உடைந்து வெள்ளம் வெளியேறும் காட்சி

மீட்பு மற்றும் நிவாரண உதவிகள்!

லிபியாவுக்கு துருக்கி, எகிப்து, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. ஐக்கிய அரபு அமீரகம் 150 டன் உணவு, நிவாரணப் பொருட்கள், மருந்துகள் கொண்ட இரண்டு விமானங்களை அனுப்பியுள்ளது. குவைத்தில் இருந்து 40 டன் நிவாரணப் பொருட்களுடன் விமானம் கிளம்பியுள்ளது. ஜோர்டான் ராணுவ விமானத்தில் உணவுப் பொட்டலங்கள், கூடாரங்கள், போர்வைகள், விரிப்புகளை அனுப்பியுள்ளது.

ஜெர்மனி, ரொமேனியா, ஃபின்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளன. ஐ.நா.வும் நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகிறது.

இதையும் படியுங்கள்: 

 டெல்லி : பனியும் குளிரும் போர்த்திய உடல்கள் !
அழிவை நோக்கி தள்ளப்படும் புவிக்கோளம்; விரைவுபடுத்தும் ஏகாதிபத்திய நிதியாதிக்க கும்பல்!

நாசத்திற்கு மூல காரணம் எது?

இயற்கை பேரழிவு நடக்கும் போதெல்லாம் முந்திக் கொண்டு பதில் தருகின்றனர் சங்கிகள். அசைவம் சாப்பிடுபவர்கள் நல்ல மனிதர்களே கிடையாது, அவர்களால்தான் இமாச்சலில் நிலச்சரிவு, மேகவெடிப்பு உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டது என அந்த மாநிலத்தில் மண்டியில் உள்ள ஐஐடி இயக்குநர் லட்சுமிதர் பெஹேரா தெரிவித்துள்ளார்.

ஏகாதிபத்தியங்கள் தமது லாப வெறியால்  சுற்றுச்சூழலை அழித்து, புவி வெப்பமயமாதலை  அதிகப்படுத்தி, பருவநிலை மாற்றத்திற்கு தள்ளிவிட்டுள்ளனர். இதன் கொடூரமான எதிர் விளைவுகளாக வெப்பமும், காட்டுத்தீயும்,  கடுமையான புயல்களும் பெரும் வெள்ள சேதங்களும் ஏற்படுகின்றன. மனித குலத்தை சுரண்டும் ஏகாதிபத்தியங்களின் கார்ப்பரேட்டுகளால் இந்த புவிக்கோளமே அழியட்டும் என நாம் வேடிக்கை பார்த்தா நிற்பது?

  • இளமாறன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here