’ஈ.வெ.ரா வைக்கம் போராட்டத்தைத் தொடங்கவில்லை, நடத்தவில்லை, முடிக்கவில்லை. அதில் பங்கெடுத்தார், அவ்வளவுதான். அது காந்தியப் போராட்டம்’ – இந்தப் பல்லவியைத்தான் இப்போது ஜெயமோகன் மறுபடி மறுபடி பாடி வருகிறார். சரி, முதலில் இதை யார் மறுத்தார்கள்? யாராலும் மறுக்கப்படாத ‘உண்மைகளை’ நிரூபிக்க ஏன் ஜெயமோகன் மெனக்கெட வேண்டும்?
வைக்கம் போராட்டத்தைத் தான்தான் தொடங்கியதாக பெரியாரே சொன்னதில்லை. ஏற்கெனவே கேரளத்தில் நடந்துகொண்டிருந்த போராட்டத்தில் கலந்துகொள்ளத் தனக்கு அழைப்பு வந்ததாகத்தான் அவரே பதிவு செய்திருக்கிறார். நான் தமிழில் படித்த எந்தப் பதிவுகளிலும் வைக்கம் போராட்டத்தைப் பெரியார் தொடங்கியதாகவோ முடித்ததாகவோ குறிப்பிடப்படவில்லை.
periyar launched vaikom struggle என்று பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாக ஜெயமோகன் எழுதியிருந்தார். நான் தமிழ்வழிக்கல்வியில் படித்தவன். நான் படித்த பாடப்புத்தகங்களில் ‘வைக்கம் போராட்டத்தில் பெரியார் கலந்துகொண்டார், சிறைசென்றார்’ என்றுதான் இருந்ததே தவிர, அவர்தான் வைக்கம் போராட்டத்தையே தொடங்கினார் என்று எங்கும் இல்லை. ஜெயமோகன் குறிப்பிடும் பாடப்புத்தகம் சி.பி.எஸ்.இ பாடப்புத்தகமா, ஸ்டேட் போர்டா, மெட்ரிகுலேஷனா? அல்லது தனக்குத்தானே வாசகர் கடிதம் எழுதிக்கொள்வதைப்போல் ஜெயமோகனே கற்பனையில் உருவாக்கிய பாடப்புத்தகமா?
வைக்கம் போராட்டம் ஒரு காந்தியப் போராட்டம் என்பதையும் யாரும் மறுக்கவில்லை. ஏனெனில் போராட்டத்தைத் தொடங்கிய டி.கே.மாதவன் ஒரு காந்தியவாதி, போராட்டத்தில் கலந்துகொண்ட பெரியாரும் அன்றைய காலகட்டத்தில் காந்தியவாதி. வைக்கம் போராட்ட வெற்றிவிழாவுக்குத் தலைமை தாங்கிய பெரியாரும்
“தெருவில் நடக்க உரிமை கேட்பவர்களைச் சிறைக்கு அனுப்பிய அரசாங்கம், தெருவில் நடப்பதற்கு இப்போது நமக்கு வேண்டிய உதவி செய்ய முன் வந்திருப்பதைப் பார்த்தால் சத்தியாக்கிரகத்திற்கும், மகாத்மாவிற்கும் எவ்வளவு சக்தி இருக்கிறதென்பது விளங்கும்” என்றே பேசினார்.
காந்தியின் அனுமதியும் ஆசியும் பெற்றே வைக்கம் போராட்டம் தொடங்கப்பட்டது. போராட்டத்தின் ஒவ்வொருகட்ட நடவடிக்கைகளும் அவருக்குத் தெரிவிக்கப்பட்டன. போராட்டம் தன் இலக்கை எட்ட காந்தியின் வருகை முக்கியமான காரணம்.
அதேநேரத்தில் தொடக்கத்திலிருந்தே அர்ப்பணிப்புடன் ஈடுபட்ட மாற்று மதத்தவர்கள் போராட்டத்திலிருந்து விலக வேண்டும், பஞ்சாபிலிருந்து வந்த சீக்கியர்கள் போராளிகளுக்கு உணவு வழங்கக்கூடாது, சனாதனிகள் சத்தியாக்கிரகிகள் கண்ணில் சுண்ணாம்பைத் தடவிக் கொடுமைப்படுத்தினாலும் எதிர்வினை செய்யக்கூடாது, பட்டினிப்போராட்டம் இருக்கக்கூடாது என்பது போன்ற காந்தியின் நிலைப்பாடுகள் போராட்டத்தில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தவும் செய்தன. இதைப் போராட்டக் காலத்திலேயே ஜார்ஜ் ஜோசப் விமர்சித்திருக்கிறார். கேரளத்தலைவர்களிடம் அதிருப்தியும் விமர்சனங்களும் இருந்திருக்கின்றன.
ஒருவர் காந்தியின் நிலைப்பாடு சரி என்று வாதிடலாம். அதற்கு உரிமையுண்டு. ஆனால் காந்தி மீது விமர்சனங்களே வைக்கப்படவில்லை என்று சொல்வது வரலாற்றைச் சோற்றுக்குள் மறைப்பது.
சரி, periyar launched vaikom struggle என்று ஒரு பாடப்புத்தகத்தில் தவறாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றே வைத்துக்கொள்வோம். பாடப்புத்தகத்தின் ஒரு வரியை மறுப்பதற்காக ஏன் இவ்வளவு பொய்கள்?
’ஈ.வெ.ரா வைக்கம் போராட்டத்தை தொடங்கவில்லை, நடத்தவில்லை, முடிக்கவில்லை. அதில் பங்கெடுத்தார், அவ்வளவுதான். அது காந்தியப் போராட்டம்’ என்று மட்டும் இப்போதைப்போல் ஜெயமோகன் எழுதியிருந்தால் அதற்கு இவ்வளவு மறுப்புகளும் எதிர்வினைகளும் வந்திருக்காது. ஆனால் ஜெயமோகன் அத்துடன் நிறைய பொய்களையும் சேர்த்து எழுதினார்.
‘ஈ.வெ.ரா வைக்கம் போராட்டத்துக்குச் சென்றபோது அவருக்குத் தமிழ்நாட்டு அரசியலில் எந்த இடமும் இல்லை. பலரும் போராட்டத்தில் கலந்துகொண்டார்கள். அவரும் அதில் ஒருவர். பலரும் சிறைக்குச் சென்றார்கள். அவரும் அதில் ஒருவர். அதைத்தாண்டி அவருக்குப் போராட்டத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை. ‘வைக்கம் வீரர்’ என்று பெரியார் அழைக்கப்பட்டதை வரலாற்றாசிரியர்கள் நமட்டுச் சிரிப்புடன் பார்த்தார்கள். அவருக்கு ‘வைக்கம் வீரர்’ என்ற பிம்பத்தை உருவாக்கியது திராவிட ஆட்சியாளர்கள்தான்’
இவை ஜெயமோகன் சொன்ன பொய்கள். இவையெல்லாம் எப்படி பொய்கள் என்பதை நான் ஆதாரத்துடன் நிறுவியிருக்கிறேன்.
பெரியார் வைக்கம் போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றபோது அவர் ‘தமிழ்நாட்டு அரசியலில் எந்த இடமும் இல்லாத’ யாரோ ஒருவரில்லை; அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர். தன் பொறுப்புகளை ராஜாஜியிடம் ஒப்படைத்துவிட்டுத்தான் அவர் வைக்கம் கிளம்பிச்சென்றார். இதுகுறித்த சுதேசமித்திரன், தி இந்து பதிவுகளை நான் பதிவு செய்திருக்கிறேன்.
இதையும் படியுங்கள்:
பெரியாரின் வருகை வைக்கம் போராட்டத்தில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து திருவிதாங்கூர் கவர்னர் ஜெனரலின் ஏஜெண்டாக இருந்த சி.டபிள்யூ.இ.காட்டன் சென்னை ராஜதானி தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதம், திருவனந்தபுரம் கேரள பல்கலைக்கழக வரலாற்றாசிரியர் டாக்டர் டி.கே.ரவீந்திரன் எழுதிய ’Eight Furlongs Of Freedom’ நூலில் உள்ள பதிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதிலும் காட்டன் ‘Mr. Ramasami Naicker arrived on that day from Erode to take charge of the campaign’ என்று தெளிவாகவே அரசுக்கு அறிக்கை அனுப்பியிருக்கிறார்.
பெரியாரின் செயற்பாடுகள் அரசுக்கு அச்சுறுத்தலாக இருந்ததால்தான் அவர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பேசவே கூடாது என்று முதலில் தடை, பிறகு கோட்டயம் மாவட்டத்திலிருந்தே வெளியேற வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
தடைகளை மீறியதால்தான் பெரியார் சிறைப்படுத்தப்பட்டார். அதுவும் கேரளத்தைச் சேர்ந்த தலைவர்கள் அரசியல் கைதிகளாகச் சிறைப்படுத்தப்பட்டபோது பெரியார் மட்டும் கைகளிலும் கால்களிலும் விலங்கு பூட்டப்பட்டு கடுங்காவல் சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். தனக்கு விதிக்கப்பட்ட இத்தகைய சிறைத்தண்டனை குறித்து பின்னாளில் பெரியார் எங்கேயும் அலட்டிக்கொண்டதில்லை. ஆனால் ராஜாஜியும் திரு.வி.கவும் பதறிப்போய்க் கண்டித்து எழுதினார்கள். கேரள முன்னணித் தலைவர் கே.பி.கேசவமேனன் பெரியாரின் கடுமையான தண்டனையை நீக்கும்படி முறையிட்டும் பலனில்லை. இதை வைக்கம் போராட்டம் நிகழ்ந்துகொண்டிருந்தபோதே அவர் எழுதிய ‘பந்தளத்தில் நின்னு’ புத்தகத்தில் பதிவு செய்த ஆதாரமும் முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும் பெரியாரை முதன்முதலில் ‘வைக்கம் வீரர்’ என்றழைத்தவர் திரு.வி.க. வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்களிப்பைப் பாராட்டித் தீர்மானம் நிறைவேற்றியதும் அவருக்கு ‘வைக்கம் வீரர்’ பட்டம் அளித்ததும் 1925ல் காஞ்சிபுரத்தில் நடந்த சென்னைமாகாணக் காங்கிரஸ் மாநாடுதான். அதாவது பெரியாரை வைக்கம் வீரராகச் சிறப்பித்தது திராவிட இயக்கமல்ல, ஜெயமோகனின் மொழியில் சொல்வதாக இருந்தால் காந்திய இயக்கமே.
இவ்வளவு ஆதாரங்களும் முன்வைக்கப்பட்டுத்தான் ஜெயமோகனின் பொய்கள் முறியடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதுகுறித்து அவர் மூச்சே விடாமல் மீண்டும் மீண்டும் இரண்டுவரிகளைப் பிடித்துத் தொங்குகிறார்.
‘வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டபோது ஈ.வெ.ராவுக்குத் தமிழ்நாட்டு அரசியலில் எந்த இடமும் இல்லை என்று தவறாக எழுதிவிட்டேன். அவர் அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர். தகவல் பிழைக்கு வருந்துகிறேன்’ என்று ஒரு இடத்திலும் அவர் எழுதவில்லை. உண்மையிலேயே ஒர் ஆய்வாளரின் நேர்மை அதுதான். ஆனால் ஆய்வு நேர்மையும் அறிவு நாணயமும் இல்லாமல் ஜெயமோகன் மீண்டும் மீண்டும் வாதங்களைத் திசை திருப்புகிறார்.
காந்தியும் பெரியாரும் வாழ்நாள் முழுதும் மாற்றுத்தரப்புகளுடன் உரையாடியவர்கள். தங்கள் தவறுகளைச் சுய விமர்சனத்துடன் வெளிப்படையாக முன்வைத்தவர்கள். உண்மையில் காந்தி குறித்தோ பெரியார் குறித்தோ ஒரு வார்த்தையும் எழுதுவதற்குத் தகுதியில்லாத மனிதர் ஜெயமோகன். அறியாமையும் ஆணவமும் நிரம்பிய அற்ப எழுத்தாளர்.
இதுமட்டுமல்ல, வைக்கம் விவாதங்கள் நடந்த காலகட்டத்தில் எழுத்தாளர் ஞாநி, தன் வீட்டில் எழுத்தாளர்களை அழைத்து ‘கேணி கூட்டம்’ நடத்திக்கொண்டிருந்தார். அப்படி அழைக்கப்பட்ட ஒரு கூட்டத்தில் கலந்துகொண்ட ஜெயமோகனிடம் ‘பெரியார் வைக்கம் போராட்டத்தில் எத்தனைமுறை கலந்துகொண்டார்?’ என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. ‘ஒருமுறை’ என்றார் ஜெயமோகன். உண்மையில் பெரியார் இரண்டுமுறை சிறைப்படுத்தப்பட்டார்.
இப்படி அடிப்படைத் தகவல்களே தெரியாமல்தான் ஜெயமோகன் வைக்கம் குறித்த அவதூறுகளை அவிழ்த்துவிட்டார். இப்போது வைக்கம் போராட்டம் குறித்த வரலாற்றுச்சித்திரத்தை எழுதப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
இவர் எழுதிக்கிழிப்பது இருக்கட்டும். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நடந்த போராட்டம் குறித்து பத்து ஆண்டுகள் உழைத்து கேரள ஆவணங்களைத் திரட்டி பழ.அதியமான் ‘வைக்கம் போராட்டம்’ நூலை 646 பக்கங்களில் எழுதியுள்ளார். இது பெரியாரின் புகழ் பாடும் புத்தகமில்லை. வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்களிப்பு குறித்து ஒரே ஓர் அத்தியாயம்தான் உண்டு. அதேபோல் வைக்கம் போராட்டத்தில் காந்தியின் பங்களிப்பு குறித்தும் விரிவான அத்தியாயம் உண்டு. இதைத்தாண்டி வைக்கம் போராட்டத்தின் ஒவ்வொருநாளும் டைரிக்குறிப்புகளைப் போல் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. டி.கே.மாதவன், கே.பி.கேசவமேனன், ஜார்ஜ் ஜோசப், கேளப்பன், குரூர் நீலகண்டன் நம்பூதிரி, கோவை அய்யாமுத்து, எம்பெருமாள் நாயுடு, மன்னத்து பத்மநாபன், நாராயணகுரு, அய்யப்பன் என்ற சத்தியவிரதன், சேலம் வரதராஜுலு, சீனிவாச அய்யங்கார், பி.டபிள்யூ.செபாஸ்டின், தாணுமாலயப்பெருமாள் என்று பலரது பங்களிப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆனால் ஜெயமோகன் ‘இதை ஓர் ஆய்வுநூல் என்று ஆய்வு என்றால் என்ன என்று அறிந்த, ஆய்வில் நேர்மை என ஒன்று உண்டு என்று உணர்ந்த எவரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்’ என்று ஒற்றைவரியில் புறம்தள்ளினார். உண்மையில் ஜெயமோகன் எழுதிய அந்த வரி, அவரே அறியாமல் தன்னைப் பற்றி தானே எழுதிய வரி.
ஜெயமோகனுக்கு இருப்பது பெரியாரியக் காழ்ப்பு. காந்தியவாதி, நேருவியன், அம்பேத்கரிஸ்ட், அயோத்திதாசர் ஆய்வாளர் என்று பல அடையாளங்களில் இருக்கும் சிலரும் தங்கள் பெரியார் மீதான வன்மத்தைக் காட்ட ஜெயமோகன் பஜனையில் இணைகிறார்கள். வேடிக்கை என்னவென்றால் இவர்களில் சிலர் காந்தியைக் கடுமையாக விமர்சித்தவர்கள். இப்போது பெரியாரைக் காலி செய்ய திடீர் காந்தி பாசம் காட்டுகிறார்கள். ஆனால் இவர்கள் யாரும் பழ.அதியமான் நூல் உள்பட முன்வைக்கப்பட்ட எந்த ஆதாரத்தையும் மறுத்து எதுவும் எழுதவில்லை.
‘வைக்கம் வீரர்’ என்ற பட்டம் பெரியார் பிச்சை கேட்டுப்பெற்றதில்லை. அல்லது ‘நான்தான் தமிழின் நம்பர் 1 எழுத்தாளன்’ என்று ஜெயமோகனே சொல்லிக்கொள்வதைப்போல் பெரியார் தனக்குத்தானே சூட்டிக்கொண்ட பட்டமும் அல்ல. அது அவருக்கு வரலாறு வழங்கியது. மக்கள் பிரச்னைகளுக்காக ஒரு புல்லைக்கூட பிடுங்கிப்போடாத அற்பப்புழுக்கள் ஒத்துக்கொண்டாலும் ஒத்துக்கொள்ளாவிட்டாலும் பெரியார் வைக்கம் வீரர்தான்.
வைக்கம் – ஜெயமோகன் அவதூறு குறித்து எழுதுவது இதுதான் கடைசி. இனிமேல் இதுகுறித்து எழுதும் எண்ணமில்லை. போதுமான தரவுகள் முன்வைக்கப்பட்டுவிட்டன. வரலாற்றையும் உண்மையையும் அறிய விரும்பும் ஆர்வம் கொண்டவர்கள் தேடிப்படிக்கட்டும்.
மேலும் வைக்கம் போராட்டம் சாதியப்பாகுபாடுகளுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு இன்றளவும் உந்துதல் தரக்கூடியது. அப்படிப்பட்ட மகத்தான போராட்டத்தை நினைவுகூரும் தருணமே தவிர, ஒரு அவதூறாளனின் பொய்களை மீண்டும் மீண்டும் மறுத்து சலிக்கும் தருணமில்லை இது.
நன்றி
- Suguna Diwakar