டலூரில் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவி தனது திரு அருட்பாக்களில், ஆறாம் திருமுறை மூலம் ’பொறித்த மதம், சமயம் எல்லாம் பொய் பொய்யே அவற்றில் புகுத்தாதீர்’ என்றும், ’மதம் என்னும் பேய் பிடித்தாடுகின்றார் எல்லாம்’ என்றும் பார்ப்பன சனாதன இந்து மதத்தை புறக்கணித்த வள்ளலார் பிறந்த அக்டோபர்- 5 தேதியை ’தனிப் பெருங்கருணை நாள்’ என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது வரவேற்கதக்க அரிய பணியாகும். ஆனால் வள்ளலாரின் வழிபாட்டு முறையை பார்ப்பன (இந்து) மத சிறைக்குள் அடைத்து நிற்கும் அனைத்து விதமான சதிகளையும் முறியடிக்க வேண்டும். அப்போதுதான் ’வள்ளலாரின் வழி’ முழுமை பெறும்.

இந்திய நாட்டின் மிகப் பெரும் சாபக்கேடான, இந்து மதத்தின் இழிவான சாதியமைப்பை மறுத்தும், பகவத் கீதை முன் வைக்கும் நால் வருண சமூக அமைப்பையும், வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் பரப்பும் ஆசாரம், குலம், கோத்திரம், சாதிய அடக்குமுறை, பெண்ணடிமைத்தனம் உள்ளிட்ட இந்துமத சமூக வாழ்வியல் நெறிகளையும், பிற்போக்கு பழக்க வழக்கங்களையும் மறுத்து 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த இணையற்ற சீர்திருத்தவாதியான வடலூர் வள்ளலாரின் பார்ப்பன எதிர்ப்பு மரபை நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டும்.

வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கைகளை அவர் உயிருடன் இருக்கும் போதே ஆடூர் சபாபதி குருக்களின் மூலம் உடன் புகுந்த பார்ப்பனக் கும்பல் சதி செய்து அவரை இருட்டுக்குள் தள்ளி ஒழிக்க முயன்றது. ஆனால் அந்த சதித் திட்டங்களை எல்லாம் முறியடித்து தனது வேத மறுப்புக் கொள்கைகளால் வெளிச்சம் (ஒளி)காட்டிய அவரை பின்பற்ற இன்று பார்ப்பன மதத்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் இலட்சக்கணக்கில் திரண்டு வருகின்றனர்.

வேத, சாதி மறுப்பே வள்ளலாரின் வழி!அதை செரிக்கப் பார்க்கும் பார்ப்பன (இந்து)  மதத்தை ஒழி!

நிலப்பிரபுத்துவ கொடுங்கோண்மையும், பார்ப்பன சாதி ஆதிக்கமும் கோலோச்சிய காலத்தில், கி.பி 1823 முதல் 1874 வரை வாழ்ந்த வள்ளலார் 1874 -ல் மறைந்தார். அவர் மறைவையொட்டி அப்போதைய பிரிட்டிஷ் ஆட்சியின், தென் ஆற்காடு மாவட்ட ஆட்சியர் A.H. ஹார்கின்ஸ், ICS என்பவரால் வெளியிடப்பட்ட அரசாணையிலும், 1878 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தென் ஆற்காடு மாவட்ட அரசு இதழிலும் (கேசட்), அதன் பிறகு 1906 தென்னார்க்காடு மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த பிரான்சிஸ் என்பவரால் இரண்டாம் பதிப்பாக மீண்டும் வெளியிடப்பட்ட அரசாணையின் பக்கம் 316, 317 ஆகிய இரண்டிலும், வள்ளலாரின் வழிபாட்டு முறை என்பது பார்ப்பன இந்து மதத்திற்கு சற்றும் தொடர்பில்லாத ஒரு தனி வழிபாட்டு முறை என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

அதாவது “இது ஒரு சாதாரண கோவில் அல்ல! ஏனெனில் அதன் வழிபாட்டு முறைகள் வழக்கமான வழிபாட்டு முறைக்கு அப்பாற்பட்டது” என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல வள்ளலார் அருளிய ஆறாம் திருமுறை உரைநடை பகுதியில் “ஜீவ ஒழுக்கமாவது ஆண்மக்கள், பெண்மக்கள் முதலியவர்கள் இடத்திலும் சாதி, சமயம், மதம், ஆசிரமம், சூத்திரம், கோத்திரம், குலம், சாஸ்திர சம்பந்தம், தேச மார்க்கம், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்னும் பேதம் நீக்கி எல்லாரும் நம்மவர்களாக சமத்தில் கொள்ளுவது” என்பது வள்ளலாரின் நெறியாக வகுத்து தரப்பட்டுள்ளது.

“வேதநெறி ஆகமத்தின் நெறிபவு ராணங்கள்
விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுவதும்
ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி
உள்ளதனை உள்ளபடி உணர உணர்த்தினையே” (திருவருட்பா – 3767)
“வேதாகமங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர்
வேதாகமத்தின் விளைவறியீர் – சூதாகச்
சொன்னஅலால் உண்மை வெளி உரைத்திலை
என்ன பயனோ இவை

(திருவருட்பா – 5516)

என்று வேதங்களின் சூதுபற்றியும், அதன் பித்தலாட்டங்களையும் திருவருட்பா மூலம் மக்களுக்கு தோலுரிக்கிறார்.

“நாம் முன் பார்த்தும் கேட்டும் லட்சியம் வைத்துக் கொண்
டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய
கலைகள் எதனினும் லட்சியம் வைக்க வேண்டாம். ஏனென்
றால் அவைகளில் ஒன்றிலாவது குழுஉக்குறி யன்றித்
தெய்வத்தை இன்னது என்றும் தெய்வத்தினுடைய
உண்மை இன்னதென்றும் கொஞ்சமேனும் புறங்கவியச்
சொல்லாமல் மண்ணை போட்டு மறைத்துவிட்டார்கள்”

என்று தனது பேருபதேசத்தில் வேதம், ஆகமம், புராணப்புரட்டுகளை நேரடிப் பொருளில் அம்பலப்படுத்தி தெளிந்த நோக்குடன் புறந்தள்ளும்படி எடுத்துரைக்கின்றார்.

“சாதியிலே மதங்களிலே சமயநெறிகளிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரசண் டையிலே
ஆதியிலே அபிமானத்து அலைகின்ற உலகீர்” (திருவருட்பா – 5566)
“சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்
சாத்திரக் குப்பையும் தணர்ந்தேன்” (திருவருட்பா – 4025)

சென்ற நூற்றாண்டின் இறுதியில் பார்ப்பன மதத்தின் கொடுங்கோன்மையான சாதி, வருண பாகுபாடுகளை எதிர்த்து ஆறாம் திருமுறையில் கலகம் புரிகிறார். இவைதாம் நாம் பின்பற்ற வேண்டிய பார்ப்பன மத எதிர்ப்பு மரபாகும். இந்திய பொருள்முதல்வாத வரிசையில் வரும் வள்ளலாரின் பார்ப்பன எதிர்ப்பு மரபுகளை நாம் கைக்கொள்ள தவறியதால், இன்று பாசிச பாஜக, இந்து முன்னணி போன்ற ஆர்.எஸ்.எஸ் கும்பல் வள்ளலாரை இந்துமத ஆன்மீக வாதியாக சித்தரிக்கிறது.

இந்து என்று சொல்லாதே!பார்ப்பான் பின்னே செல்லாதே!!

பிரிட்டனின் காலனியாதிக்கம் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு ஆறு மதங்களாக பிரிந்து கிடந்த பார்ப்பன (இந்து) மதம் இன்று அனைவரும் நினைப்பதைப் போல ஒரே மதமாக இல்லை. செத்துப்போன சங்கராச்சாரி தனது தெய்வத்தின் குரல் என்ற ’உபதேசத்தில்’ கூறியுள்ளபடி “நல்லவேளையாக பிரிட்டிஷ்காரர்கள் வந்ததால் நமது இந்து மதம் ஒருங்கிணைக்கப்பட்டது” என்று கூறியுள்ளதே உண்மையாகும்.

1938-ல் பிரிட்டன் அரசாங்கத்தில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரியாக செயலாற்றிய திரு.பாலகிருஷ்ண பிள்ளை, வள்ளலார் முன்வைத்த சுத்த சன்மார்க்க நெறிகளை, பார்ப்பன மறுப்பு கொள்கையை புறந்தள்ளிவிட்டு, வடலூர் சத்திய ஞான சபையை, இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தது ஒரு வரலாற்று கேடான செயலாகும். அதுமட்டுமல்ல! வரலாறு நெடுக தனக்கு எதிராக போராடிய சீர்திருத்தவாத, முற்போக்கு கருத்துக்களை எல்லாம் அழித்து, ஒழித்த பார்ப்பன (இந்து) மதம், சமய சாஸ்திரங்கள், நால்வர்ண பாகுபாடு இவற்றை மறுத்து வாழ்ந்த வள்ளலாரை தின்று செரிப்பதற்கு ஒரு நூற்றாண்டு காலமாக முயற்சி செய்து கொண்டுள்ளது.

ஆனால் இந்த சூழ்ச்சிகளுக்கு இடம் தராமல், வடலூர் சத்திய ஞான சபையை பார்ப்பன இந்து மதம் விழுங்கியதை எதிர்த்து ஒரு நூற்றாண்டு காலமாக பலரும் போராடி வருகின்றனர். குறிப்பாக, ’சத்திய ஞான சபையை இதன் பூசாரியாக இருக்கும் சபாநாத ஒளி (பார்ப்பனர்) சீரழித்து வருகிறார். வள்ளலார் வகுத்த நெறிகளுக்கு எதிராக சமய வழிபாடு நடத்தி அதன் தனித் தன்மையை கெடுக்கிறார். இதனை ஒழுங்கு படுத்துங்கள்’ என்று இராமநாதபுரம் மாவட்டம் புதுக்குடியை சேர்ந்த வள்ளலாரின் தொண்டர், தொண்டர்குல வெ.பெருமாள் மற்றும் குறிஞ்சிப்பாடி ஜி. சுப்பிரமணியன் ஆகிய இருவரும் மதுரை மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.

இந்த வழக்கை ஆய்வு செய்த ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு வாதப் பிரதிவாதங்களை ஆய்வு செய்து தீர்ப்பளித்தார். அதன் அடிப்படையில் 2007 ஆம் ஆண்டு புதிய அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி வழிபாட்டு முறைகள் மாற்றப்பட்டுள்ளது. ஆனால் வள்ளலாரின் விருப்பபடி தனி வழிபாட்டு முறை என்பதனை அமுல்படுத்தாமல் சத்திய ஞான சபையும், சித்தி வளாகமும் இன்னமும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

பார்ப்பன இந்து மதத்தை ஏற்றுக் கொண்ட பக்தர்களின் நிலைமை தான் என்ன? தமிழகத்தில் ஆகம விதிகளின்படி செயல்படும் 44,218 கோயில்களில், பிறப்பால் பார்ப்பனர்கள் மட்டுமே பூசை செய்யவும், அர்ச்சனை செய்யவும், பிறப்பை மட்டுமே தகுதியாக கொண்டு கருவறைக்குள் செல்லும் உரிமையும் வழங்கப்பட்டு வந்தது. வரலாற்று ரீதியான இந்த இழிவை திமுக அரசு மாற்றியுள்ளது.

அர்ச்சகர் பயிற்சி முடித்த, வேத, ஆகமங்களை அவர்கள் சொல்லும் நீதிப்படியே முழுமையாக கற்றுக் கொண்ட பிற சாதியைச் சார்ந்த தகுதி படைத்த அர்ச்சகர்களை கூட கருவறைக்குள் அனுமதிப்பதை இந்து அறநிலையத்துறை திட்டமிட்டே தவிர்த்து வந்த நிலையை மாற்றி பிறப்பால் ’தாழ்த்தப்பட்ட மக்கள்’ 5 பேர் உள்ளிட்ட அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் படித்த மாணவர்கள் 24 பேர் உள்ளடக்கி 58 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கியுள்ளது திமுக அரசு. அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டம் தற்போது அமுலாக துவங்கியுள்ளது. ஆனால் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி இழுத்து மூடப்பட்டு கிடக்கிறது. காஞ்சி சங்கரமடம் பார்ப்பனர்களுக்கு மட்டும் வருடந்தோறும் வேத பாடசாலை மூலம் பயிற்சியளிக்கிறது.

இந்த சூழலில் வள்ளலாரின் சத்திய ஞான சபையை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் விட்டு வைத்திருப்பது அவரது சாதி, சமய மறுப்பு கொள்கைக்கு எதிரானது மட்டுமல்ல! அறம் கொன்ற செயலாகும்.

தமிழகத்தில் வள்ளுவர் முதல் வள்ளலார், அய்யா வைகுந்தர் வரை பார்ப்பன மயமாக்குவது, தனது பார்ப்பன மதத்திற்குள் இழுப்பது, பணியாவிட்டால் வீழ்த்துவது, கேரளாவில் நாராயண குருவை போற்றுவது அதன் மூலம் தனக்குள் விழுங்குவது போன்ற நடவடிக்கைகள் மூலம் பார்ப்பனியத்தையும், சாதியையும் எதிர்த்து நின்ற முன்னோடிகள் அனைவரையும் தின்று செரிப்பதன் மூலம் பார்ப்பன எதிர்ப்பு மரபுகளை விழுங்கி விட எத்தணிக்கிறது பார்ப்பன கும்பல். அதுமட்டுமின்றி ஜக்கி, ஸ்ரீஸ்ரீ, பாபா ராம்தேவ் போன்ற கார்ப்பரேட் சாமியார்களின் மூலம் “இந்துக் கோவில்களை” கைப்பற்றவும், பார்ப்பன எதிர்ப்பு பண்பாடுகளை செரிக்கவும் கிளம்பியுள்ளனர். இதையெல்லாம் ஒரு போதும் அனுமதிக்கவே கூடாது.

வள்ளலாரின் கொள்கைகளை மக்களுக்கு பரவ விடாமல் தடுத்து அவரது சுத்த சன்மார்க்க கருத்துகளை பார்ப்பன (இந்து) மதத்திற்குள் அடக்கி வைத்துள்ள பார்ப்பன ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். வடலூரில் உள்ள சமரச சுத்த சன்மார்க்க சங்கம், சத்திய தரும சாலை (அணையா அடுப்பு இயங்கும் அன்னதான கூடம்), சத்திய ஞான சபை, மேட்டுக் குப்பத்தில் உள்ள சித்தி வளாகம் அனைத்தையும் மீட்போம்.

இன்று அவர் பிறந்த தினம் தனிப் பெருங்கருணை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நாம் திருப்தி அடைந்து விட முடியாது. வள்ளலாரின் வழிப்படி தனி வழிபாட்டு முறையை அமுலாக்கும் வரை போராடுவோம். பார்ப்பன (இந்து) மதம் விதிக்கும் நால்வருண பாகுபாடு, சாதி, சமயம் அனைத்தையும் ஒழித்து, புதிய ஜனநாயக வாழ்வியல் முறையை உருவாக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்.

இளஞ்செழியன்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here