பாகம் – 4

னாதன தர்மம் என்கின்ற சாதி தீண்டாமை, பெண்ணடிமைத்தனம், தேசிய இனங்களின் உரிமையை நசுக்குகின்ற ஒற்றை சர்வாதிகாரம், அனைத்து வகை மொழிகளையும்  ஒழித்துக் கட்டி சமஸ்கிருத மயமாக்கப்பட்ட இந்தியை ஆட்சி மொழியாக்குவது போன்றவற்றை உள்ளடக்கிய பார்ப்பனக் கொடுங்கோன்மையை நாட்டு மக்களின் மீது பாசிச வழிமுறையின் மூலம் திணிக்க எத்தனிக்கின்றது ஆர்எஸ்எஸ் பாஜக.

சனாதன ஒழிப்பு மாநாட்டில் கொசு, மலேரியா, டெங்கு காய்ச்சலைப் போல சனாதனத்தை ஒழிப்போம் என்று தமிழகத்தின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது இந்தியா முழுவதும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலமாக தமிழகத்தில் சனாதனம், வர்ணாசிரமம், ஆரிய பார்ப்பன சாம்ராஜ்யம், பார்ப்பன ஆதிக்கம் போன்ற அனைத்தையும் எதிர்த்து திராவிட இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இப்போதுதான் முதல்முறையாக சனாதனத்தை எதிர்த்து பேசியதைப் போல ஆர் எஸ் எஸ் பாஜக இதனை நாடு தழுவிய  விவாதப் பொருளாக மாற்றியதற்கு வேறு காரணங்களும் உள்ளன.

ஆர்எஸ்எஸ் பாஜக உருவாக்க துடிக்கின்ற ஆரிய பார்ப்பன சாம்ராஜ்ஜியத்தை எதிர்த்துப் போராடுகின்ற திராவிட இயக்கங்களில் எஞ்சியுள்ள  திமுக என்ற தேர்தல் கட்சியை முற்றாக ஒழித்துக் கட்டுவது என்ற வெறியுடன் அலைந்து கொண்டிருக்கிறது பாஜக. இதற்கு ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. அதில் ஒரு பகுதிதான் சனாதனத்தை  முன்னுறுத்தி விவாதங்களை எழுப்புவது, மோடி அமித்ஷா முதல் ஆர்எஸ்எஸ் ஆதரவு ஊடகங்கள் வரை ஒரே குரலில் ஒலிப்பது போன்றவை அனைத்தும்.

இந்த சிக்கல் திமுகவிற்கும் ஆர்எஸ்எஸ் பாஜக விற்கும் இடையில் உள்ள பிரச்சனை என்பது போல புரிந்து கொள்வது அரசியல் ரீதியிலான தவறாகும். தமிழகத்தில் பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக போராடிய மரபு உள்ளது என்பதில் தந்தை பெரியார் காலத்திற்குப் பிறகு வெவ்வேறு அளவுகளில் அதனை எதிர்த்துப் போராடிய திராவிட இயக்கங்களின் பங்களிப்பு முக்கியமானது என்பதை புறக்கணிக்க முடியாது. வரலாற்று ரீதியாகவும் தவிர்க்க முடியாது.

“சனாதனத்தை ஒழித்துக் கட்டு” என்ற முழக்கத்தை நாடு தழுவிய முழக்கமாக கொண்டு செல்வோம். சனாதனம் என்கின்ற வர்ணாசிரமத்தை உள்ளடக்கிய ஆரிய பார்ப்பன சாம்ராஜ்யத்தை நிறுவுவது குறித்து ஆர்எஸ்எஸ் இன் பிதாமகர்களின் ஒருவரான கோல்வால்கர் முன்வைத்த கொள்கை இதுதான்.

“ இந்தியா என்பது ஆரியர்களுக்கான நாடு.

  • இந்தியாவின் தேசிய மொழி சமஸ்கிருதம் மட்டுமே.
  • ஜாதி அமைப்பு முறையாலோ வர்ணாஸ்ரம அமைப்பு முறையிலோ எந்தப் பாதிப்பும் இல்லை. அது நம்மைக் காப்பாற்றி வருகிறது.
  • பெண்களுக்கு ஓட்டுரிமையே வழங்கக் கூடாது.
  • மொழி வழி மாநிலங்களாக இந்தியா பிரிக்கப் பட்டதே தவறு.

இராமனையும் கிருஷ்ணனையும் கடவுளர்களாக ஏற்றுக் கொண்டால் இஸ்லாமியர்கள் இங்கே வாழலாம்.

  • ஆப்கானிஸ்தான், பர்மா, இலங்கை, நேபாளம், பூடான் உள்ளிட்ட அனைத்து நாடுகளும் இந்துக்களுக்கான தேசம்.
  • ‘பிராமணன்’, ‘சூத்திரன்’ பாகுபாடுகளை மனுஸ்மிருதி வழியாக உருவாக்கி, கடமைகளையும், தண்டனைகளையும் வலியுறுத்திய ‘மனு’தான் உலகின் முதலாவது சட்டமேதை; உலகில் உள்ள அனைத்து மக்களும் ‘இந்துஸ்தான்’ சென்று, ‘பிராமணன்’ காலில் விழ வேண்டும். -Bunch of thoughts- கோல்வால்கர்.

இதைத்தான் அவர்கள் அரசியலமைப்பு சட்டமாக மாற்றுவதற்கு துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய பார்ப்பன பயங்கரவாதிகளை முற்றாக வீழ்த்துவது என்பது தேர்தல் அரசியலில் மட்டுமின்றி அதற்கு வெளியில் நேருக்கு நேர் வீதிகளில் நின்று வீழ்த்துவது, மக்கள்திரள் எழுச்சியை உருவாக்குவது என்பதையும் உள்ளடக்கிய வழியே ஆகும்.

தொடர்புடையவை:

♦ சனாதன தர்மத்தை ஒழித்துக் கட்டு!  தொடர் கட்டுரை
 சனாதன தர்மத்தை ஒழித்துக் கட்டு  பாகம் 2
  சனாதன தர்மத்தை ஒழித்துக் கட்டு! | பாகம் 3

ஆர்எஸ்எஸ் பாஜக தனது திட்டத்தை சனாதனம், இந்துத்துவா, இராமராஜ்ஜியம், இந்துஸ்தானம், பாரதம் என்று பல்வேறு பெயர்களில் அழைத்துக் கொண்டாலும், முன் வைத்தாலும் அவை அனைத்தும் நாம் வரையறுத்து முன் வைத்துள்ள காவி பாசிசம் என்கின்ற பார்ப்பன இந்து மதவெறி பாசிசமே ஆகும்.

பல நூற்றாண்டுகளாக இந்திய மக்களுக்கு எதிராக ஆதிக்கத்தை செலுத்தி வரும் பார்ப்பன மேலாதிக்கத்தை வீழ்த்துவதற்கு, வரலாற்றுப் பொருள்முதல்வாத மரபில்  நம்மிடமும் சித்தர்கள் துவங்கி வள்ளலார், ஐயா வைகுண்டர், குருநானக், நாராயண குரு, பசவன்னர், ஜோதிபாய் புலே, டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் என நீண்ட பாரம்பரியம் உள்ளது. இந்த பாரம்பரியத்தின் வழியில் ஒன்று திரண்டு சனாதனத்தை போற்றுகின்ற ஆரிய பார்ப்பன சாம்ராஜ்யத்திற்கு சாவு மணி அடிப்போம்.

முற்றும்.

  • சண்.வீரபாண்டியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here