மனுசாஸ்திரத்தை எரிக்க வேண்டும். ஏன்? – பெரியார்


மிழ்நாட்டில் தற்காலம் தோன்றியிருக்கும் சுயமரியாதைக் கிளர்ச்சியின் பலனாக இந்துமத மென்பதைப் பற்றியும், அதற்காதாரமாயுள்ள வேதம், சாஸ்திரம், ஸ்மிருதி, புராணம் என்பனவற்றைப் பற்றியும், வருணம், தர்மம் என்பனவற்றைப் பற்றியும் மக்களுக்குள் பரபரப்புண்டாகி அவற்றைப் பற்றித் தீவிரமாக ஆராய்ச்சி செய்தலும், அவற்றின் புரட்டுகளை வெளியாக்கி தைரியமாய் கண்டித்தலும், அவற்றால் ஏற்பட்ட கொடுமைகளை ஒழிக்க ஆங்காங்கு தீவிரப் பிரசாரம் செய்தலும், கொடுமைக்கு ஆதரவளிக்கும் ஆதாரங்களைத் தீயிட்டுக் கொளுத்துதலுமான பிரசாரங்கள் மும்முரமாய் நடப்பதைக் கண்டு பார்ப்பனர்கள் தங்கள் வாழ்வுக்கே ஆபத்து வந்தெனக் கருதி இவைகளுக்கு விரோதமாக எதிர் பிரசாரம் செய்வதும், பார்ப்பனரல்லாதாரிலேயே சிலரை ஏவிவிட்டு இடையூறு செய்விப்பதும், வேறு மார்க்கத்தில் வாழ முடியாதவர்கள் இவ்வெதிர்ப் பிரசாரத்திற்கு ஆதரவளித்து வாழ்வதுமான காரியங்கள் நடை பெற்று வருவதும் யாவரும் அறிந்த விஷயமேயாகும்.

சிறிதுகாலமாய் ‘சுதேசமித்திரனும்’ ‘தமிழ்நாடும்’ ‘சுயராஜ்யா’வும் ‘ஹிந்து’வும் மற்றும் சில பார்ப்பன கூலிப் பத்திரிகைகளும் இவ்வேலையில் ஈடுபட்டுத் தீவிரமாய் எதிர்ப் பிரசாரம் செய்து வருவதும் யாவரும் அறிந்த விஷயமாகும். இவ்வளவும் போதாமல் சீர்திருத்தக்காரர் என்றும், தேசாபி மானிகள் என்றும் பேர்வாங்கிய சில பார்ப்பனர்களும் இதில் ஈடுபட்டு மக்களை ஏய்த்து வருகிறார்கள்.


இதையும் படியுங்கள்: செப் 17: பெரியார் பிறந்த நாளில் மனுதர்ம, வேத- ஆகம எரிப்புப் போராட்டம் ! திருச்சிக்கு அணிதிரண்டு வாரீர்!


சீர்திருத்தக்காரர் என்பவர்களில் ஸ்ரீமான் கே. நடராஜன் என்னும் பார்ப்பனர் இந்தியா முழுதுக்கும் சீர்திருத்தக்காரர் என்னும் பேர்வாங்கியவர். அவருடைய சூழ்ச்சியைப் பற்றி பலதடவை எழுதியிருக்கிறோம். ஸ்ரீ.ஸி. ராஜ கோபாலாச்சாரி என்கின்ற ஒரு ஐயங்கார் பார்ப்பனர் தமிழ்நாடு முழுவதிலும் பெரிய சீர்திருத்தக்காரர் என்ற பெயர் வாங்கினவர், தமிழ் மக்களையெல்லாம் அடியோடு ஏய்த்தவர். இப்பொழுதும் சமயம் பார்த்து வெளிக்கிளம்புவதற்காக பதுங்கிக் கொண்டிருப்பவர். பொது உலகத்தில் தன்னை ஒருவரும் மறந்து விடாமலிருக்கும் படிவிஷமப் பிரசாரத்தின் பேரால் அடிக்கடி தலைக்காட்டிக் கொண்டிருப்பவர். தனக்கு ஜாதி வித்தியாச மில்லை என்பதாகச் சொல்லிக் கொண்டும், தன்னிடம் பார்ப்பனத் தன்மை இல்லை யென்று சொல்லிக் கொண்டும், பார்ப்பனீயத்தை விட்டு வெகுகாலமாயிற்று என்று சொல்லிக் கொண்டும், சில பார்ப்பனரல்லாத வாலிபர்களை ஏமாற்றிக் கொண்டும், பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை ஒழித்து பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டுமென்பதில் இந்தியாவிலுள்ள பார்ப்பனர் எல்லாரையும் விட அதிகமான கவலையும் அதற்கேற்ற சூழ்ச்சியும் தந்திரமும் கொண்டவர்.

இப்படிப்பட்ட ஸ்ரீ.ஸி. ராஜகோபாலாச்சாரியார் 21.3.28 ல் இங்கிலீஷ் ‘சுயராஜ்யா’ பத்திரிகையில் மனுதர்ம சாஸ்திரத்துக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு 7 கலங்கள் எழுதியிருக்கிறார். அதில், மனுசாஸ்திரத்தை எரிக்க வேண்டுமென்பது தற்கொலைக்கு ஒப்பாகுமென்றும், அது அருமையான நீதிகளைக் கொண்டது என்றும் விசேஷமாய் புகழ்ந்துவிட்டு, பார்ப்பனருக்கு சம்பந்தப் படாததும், கவலையில்லாததுமான விஷயங்களைப் பற்றி மனுதர்ம சாஸ்திரத்திலிருந்து இரண்டொரு வாக்கியங்களை எடுத்துக் காட்டி பொது ஜனங்களை ஏமாற்றப் பார்த்திருக்கிறார்.

இதன் காரணமென்னவென்போமானால், மனுதர்ம சாஸ்திரத்தைக் கொளுத்த வேண்டுமென்பதான உணர்ச்சி இந்தியாவெங்கும் பரவி வருவதைப் பார்த்து அதை அழிப்பதற் காகவே எழுதப்பட்டதாகும். மனுதர்ம சாஸ்திரத்தில் உள்ள சில வாக்கியங்களை நாம் இதிலெடுத்து காட்டுகிறோம். அந்தந்த வாக்கியங்களின் முடிவில் அவ்வாக்கியங்கள் எத்தனையாவது அத்தியாயத்தில் உள்ளதென்பதையும், அது எத்தனையாவது சுலோக மென்பதையும், காட்டி அவ்வவ் வாக்கியங்களை கீழே குறிப்பிடுகின்றோம். அதாவது

‘பிராமண குலத்தில் பிறந்தவன் ஆசாரமில்லாதவனாயினும் அவன் நீதி செலுத்தலாம். சூத்திரன் ஒருபோதும் நீதி செலுத்தலாகாது’. (அ.8.சு.20).

‘சூத்திரர்கள் நிறைந்த தேசம் எப்பொழுதும் வறுமை யுடையதாயிருக்கும்’. (அ.8. சு.22).

‘சூத்திரனாகவும் மிலேச்சனாகவும் பன்றியாகவும் பிறப்பது தமோகுணத்தின் கதி’(918 F.22)

‘ஸ்திரீகள் புணர்ச்சி விஷயத்திலும், பிராமணரைக் காப்பாற்றும் விஷயத்திலும் பொய் சொன்னால் குற்றமில்லை’. (அ8•112).

‘நீதி ஸ்தலங்களில் பிரமாணம் செய்யவேண்டிய பிராமணனை சத்தியமாக என்று சொல்லச் சொல்ல வேண்டும். பிரமாணம் செய்யவேண்டிய சூத்திரனைப் பழுக்கக் காய்ச்சின மழுவை எடுக்கச் சொல்ல வேண்டும். அல்லது தண்ணீரில் அமிழ்த்த வேண்டும். சூத்திரனுக்குக் கை வேகாமலும் தண்ணீரில் அழுத்தியதால் உயிர்போகமலும் இருந்தால் அவன் சொன்னது சத்தியம் என உணர வேண்டும்.’ (அ.8.சு113, 114, 115)

‘சூத்திரன் பிராமணரைத் திட்டினால் அவனது நாக்கை அறுக்க வேண்டும்.(அ. 8, சு 270),


இதையும் படியுங்கள் : வேதம் ஆகமம் மனுதர்மம் இவற்றை ஏன் கொளுத்த வேண்டும்?


‘சூத்திரன் பிராமணர்களின் பெயர், ஜாதி இவற்றைச் சொல்லித்திட்டினால் 10 அங்குல நீளமுள்ள இரும்புத் தடியைக் காய்ச்சி எரிய எரிய அவன் வாயில் வைக்க வேண்டும்.’ (அ.8.சு.271)

‘பிராமணனைப் பார்த்து’ நீ இதைச் செய்ய வேண்டும் என்று சொல்லுகிற சூத்திரன் வாயிலும் காதிலும் எண்ணெயைக் காய்ச்சி ஊற்றவேண்டும்.’(அ.8.சு272).

‘சூத்திரன் பிராமணனுடன் ஒரே ஆசனத்திலுட்கார்ந்தால் அவனது இடுப்பில் சூடு போட்டாவது அல்லது ஆசனப் பக்கத்தைச் சிறிது அறுத்தாவது ஊரைவிட்டுத் துரத்த வேண்டும்.(அ.8.சு281).

‘பிராமணனைக் காப்பாற்றும் பொருட்டு பிராமண ரல்லாதாரைக் கொன்றவனுக்கு பாவமில்லை.’ (அ.8.சு143),

‘சூத்திரன் பிராமணப்பெண்ணைப் புணர்ந்தால் அவனது உயிர்போகும் வரையில் தண்டிக்க வேண்டும்’

‘பிராமணன் கொலைக்குற்றம் செய்தாலும் அவனைக் கொல்லாமல், செய்த குற்றத்துக்கு எத்தகைய தண்டனைக்கும் ஆளாக்காமலும் பொருளைக் கொடுத்து அனுப்பிவிட வேண்டும்’ (அ.8.சு380).

‘அரசன் சூத்திரனை பிராமணர் முதலிய உயர்ந்த சாதிக்கு பணிவிடை செய்யும்படி கட்டளை இடவேண்டும். சூத்திரன் மறுத்தால் அவனைத் தண்டிக்க வேண்டும்.’ (அ.8.சு410).

‘பிராமணன் கூலி கொடாமலே சூத்திரனிடம் வேலை வாங்கலாம். ஏனென்றால் பிராமணனுக்கு தொண்டு செய்யவே கடவுளால் படைக்கப் பட்டிருக்கிறான்.’ (அ.8.சு413).

‘பிராமணன் சந்தேகமின்றி சூத்திரன் தேடிய பொருளைக் கைப்பற்றலாம். ஏனென்றால் அடிமையாகிய சூத்திரன் எவ்விதப் பொருளுக்கும் உடையவனாக மாட்டான்”. (அ.8.சு417)

‘சூத்திரன் பொருள் சம்பாதித்தால் அது அவனுடைய எஜமானனாகிய பிராமணனுக்குச் சேரவேண்டுமேயன்றிச் சம்பாதித்தவனுக்குச் சேராது’ (அ9.சு416).

‘பிராமணனால் சூத்திர ஸ்திரீக்குப் பிள்ளை பிறந்தால் அப்பிள்ளைக்குத் தந்தை சொத்தில் பங்கில்லை.’ (அ.8.சு455).

‘பிராமணன் பொருளை அபகரித்த சூத்திரனை சித்திர வதை செய்து கொல்லவேண்டும். ஆனால் சூத்திரனுடைய பொருளை பிராமணன் தன் இஷ்டப்படி கொள்ளையிடலாம்.’ (அ9.சு248).


இதையும் படியுங்கள் : மனுதர்மம் வேத ஆகம குப்பைகளை கொளுத்த வேண்டும் – ஏன்? | வீடியோ


‘பிராமணன் மூடனானாலும் அவனே மேலான தெய்வம்’ (அ9சு317).

‘பிராமணர்கள் இழிதொழில்களில் ஈடுபட்டிருந்தாலும் பூஜிக்கத்தக்கவர்களாவார்கள்.’ (அ9.சு318).

‘பிராமணனிடமிருந்துக்ஷத்திரியன் உண்டானவன். அதனால் அவன் பிராமணனுக்குத் துன்பஞ்செய்தால் அவனை சூன்யம் செய்து ஒழிக்க வேண்டும்’. (அ9.சு319,320),

‘சூத்திரனுக்கு பிராமணப் பணிவிடை ஒன்றே பயன் தருவதாகும். அவன் பிராமணரில்லாதவிடத்தில் க்ஷத்திரிய னுக்கும் க்ஷத்திரியனில்லாவிட்டால் வைசியனுக்கும் தொண்டு செய்ய வேண்டும். அதிகமான பசுக்களும் செல்வமும் வைத் திருக்கிறவன் பிராமணன் கேட்டுக் கொடுக்காவிட்டால் களவு செய்தாவது பலாத்காரம் செய்தாவது அவற்றைப் பிராமணன் எடுத்துக் கொள்ளலாம்” (அ.11.சு12).

“சூத்திரன் வீட்டிலிருந்து கேளாமலும், யோசிக்காமலும் தேவையான பொருளைப் பிராமணன் பலாத்காரத்தினால் கொள்ளையிடலாம்”.(அ.11.சு13).

“யோக்கியமான அரசன் இவ்விதம் திருடிய பிராமணனைத் தண்டிக்கக் கூடாது.’ பெண்களையும் சூத்திரரையும் கொல்லுவது மிகவும் குறைந்த பாவமாகும்’.(அ.11.சு20).

‘ஒரு பிராமணன் தவளையைக் கொன்றால் செய்ய வேண்டிய பிராயச்சித்தம் ஏதோ, அதைத்தான் சூத்திரனைக் கொன்றால் செய்யவேண்டும்.’(அ.11.சு131).

‘அதுவும் முடியாவிடில் வருணமந்திரத்தை 3 நாள் ஜெபித்தால் போதுமானது.’ (அ.11.சு132).

‘க்ஷத்திரியன் இந்நூலில் சொல்லப்பட்டபடி ராஜ்ய பாரம் செய்வதே தவமாகும். சூத்திரன் பிராமணப் பணிவிடை செய்வதே தவமாகும்.’ (அ.11.சு285)

‘சூத்திரன் பிராமணனுடைய தொழிலைச் செய்தாலும் சூத்திரனேயாவான். பிராமணன் சூத்திரனுடைய தொழிலைச் செய்தாலும் பிராமணனேயாவான். ஏனெனில் கடவுள் அப்படியே நிச்சயம் செய்துவிட்டார்.’ (அ.10.சு75).

‘பிராமணரல்லாதவன் உயர்குலத்தோனுடைய தொழிலைச் செய்தால் அரசன் அவனது பொருள் முழுவதையும் பிடுங்கிக் கொண்டு அவனை நாட்டை விட்டுத் துரத்திவிட வேண்டும்” (அ10சு96)

‘சூத்திரன் இம்மைக்கும் மோக்ஷத்திற்கும் பிராமணனையே தொழவேண்டும்.’ (அ.10.சு122).


இதையும் படியுங்கள் : மனு சாஸ்திரம் எரிக்கப்பட வேண்டியது அவசியம். – பேராசிரியர். அருணன்


“பிராமணன் உண்டு மிகுந்த எச்சில் ஆகாரமும், உடுத்திக் கிழிந்த ஆடையும், கெட்டுப்போன தானியங்களும் சூத்திரனுடைய ஜீவனத்துக்குக் கொடுக்க வேண்டும்’(அ.10.சு125).

‘சூத்திரன் எவ்வளவுதிறமையுடையவனாயிருந்தாலும் கண்டிப் பாய் பொருள்சேர்க்கக்கூடாது.சூத்திரனைப்பொருள்சேர்க்க  விட்டால்அது பிராமணருக்குத் துன்பமாய் முடியும்.(அ.10.சு129)

‘மனுவால் எந்த வருணத்தாருக்கு இந்த மனுதர்ம சாஸ்திரத் தால் என்ன தர்மம் விதிக்கப்பட்டதோ அதுவே வேத சம்மத மாகும்! ஏனென்றால் அவர் வேதங்களின் கருத்துகளை நன்றாய் உணர்ந்தவர்.’ (அ.2.சு7).

‘வேதத்தைச் சுருதியென்றும் மனுதர்ம சாஸ்திரத்தை மிருதியென்றும் அறியத்தக்கது. இது இரண்டையும் தர்க்க யுக்தியைக் கொண்டு மறுப்பவன் நாத்திகனாவான். அத்தகைய நாத்திகனை ஒழித்துவிட வேண்டும்.’ (அ.2.சு10).

இம்மாதிரி ஆயிரக்கணக்கான சுலோகங்கள் மனுதர்ம சாஸ்திரத்தில் காணப்படுவதைப் பற்றி ஸ்ரீமான் சி. ராஜ கோபாலாச்சாரி என்ன சமாதானம் சொல்லுகிறார் என்று கேட்கிறோம்.

இது போலவே நாமும் நம்மையே ஒரு மனுவென்பதாகப் பெயர் சூட்டிக் கொண்டு பார்ப்பனரல்லாதாருக்கு அனுகூலமாய் ஒரு ‘தர்மநூல்’ இதுபோல் எழுதினால் ஸ்ரீமான்கள் கோபாலாச்சாரியும், நடராஜனும் மற்றும் இந்துமதப் பிரசாரம் செய்யும் வரதராஜுலு போன்றோரும் சும்மாயிருப்பார்களா என்று கேட்கிறோம்.

“இந்து மதம்”என்பதற்கு “மனுதர்ம சாஸ்திர”மென்பதும் அதற்காதாரமென்று சொல்லப்பட்ட வேதமென்பதும் இவைகளை ஆதாரமாய்க் கொண்டு எழுதி வைத்த புராணங்களென்பதும் அப்புராணங்களில் காணப்பட்ட கடவுள்கள் என்பவைகளும் தவிர வேறு ஏதாவது ஆதாரமிருக்கின்றதாக யாராவது சொல்ல முடியுமா?

அன்றியும் அவ்வாதாரங்கள் இம் மனுவாதாரங்களை மறுக்க முடியுமா? இவற்றை யோசித்தால் நாம் செய்து வரும் பிரசாரம் யோக்கியமானதா? அல்லது ஸ்ரீமான்கள் நடராஜனும் ராஜகோபாலாச்சாரியும் செய்துவரும் சீர்திருத்தப் பிரசாரமும் வரதராஜுலுவும் அவர்கள் போன்ற சில கூலிகளும் செய்து வரும் இந்துமதப் பிரசாரமும் யோக்கியமானதா? என்று முடிவு செய்யும் பொறுப்பை ஜனங்களுக்கே விட்டுவிடுகிறோம்!.

குடி அரசு கட்டுரை – 25.03.1928

நன்றி: திராவிடர் விடுதலை கழகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here