வேலை சற்று அதிகம். வழக்கம்போல ரிலீஸ் ஆன உடனே ஆர்.ஆர்.ஆர் பார்க்க இயலவில்லை. இன்றுதான் பார்க்க முடிந்தது. பார்க்கும்போது சந்தேகம்.
படத்தலைப்பு ஆர்.ஆர்.ஆரா? ஆர்.எஸ்.எஸா?

படம் முழுக்க காவிக் கொடிகள் பட்டொளி வீசிப் பறக்கின்றன. ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் போன்ற ஸ்டார்ஸோடு, பாலிவுட் நடிகர்களான ஆலியா பட், அஜய் தேவ்கன் மட்டுமில்லை. ஹாலிவுட் நட்சத்திரங்கள் ஒலிவியா மோரிஸ், ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

இருந்தும், பான் இந்தியா மூவி என்பதால், ராஜ்மௌலிக்கு ஒரு தேசிய நாயகன் தேவைப்படுகிறார். கொஞ்சம் பட்ஜெட் பெரியது என நினைத்தாரோ, என்னவோ இரண்டு தேசிய நாயகன்கள் இருக்கட்டுமே! என எண்ணியிருக்கக் கூடும்.
ஆகவே ராமாயணத்திலிருந்து ‘ராம்’. மகாபாரதத்திலிருந்து ‘பீம்’.

வெள்ளைக்காரன் காலத்துக் கதை. பீரியர்ட் ஃபிலிம். வெள்ளைக்காரன் கதையென்றால் காலம் 18, 19 ஆம் நூற்றாண்டாக இருக்க வேண்டும். சரித்திரப் புத்தகத்தில் வெள்ளைக்காரன் ஆட்சியை எதிர்த்து காந்தி, நேரு, பகத்சிங், சுபாஷ் சந்திர போஸ் , வ.உ.சி, ஜான்ஸிராணி போன்றோர் போராடினார்கள் என்றுதான் படித்திருப்போம்.

ஆனால் ஆர்.ஆர்.ஆர் படத்தில் வெள்ளைக்காரனை எதிர்த்து திரேதாயுக ராமன், பீமன், சீத்தா போராடியதாக ரீல்விடுகிறார் ராஜ்மௌலி. ஆதிவாசிப் பெண் பிள்ளையை ஒரு வெள்ளைக்கார துரை அழைத்து வந்துவிடுகிறான். அக்குழந்தையைக் காப்பாற்ற வருகிறான் பீம். வெள்ளைக்காரர்களிடம் நல்ல பேர் வாங்குவதற்காக பீமை பிடித்து அவர்களிடம் தருகிறான் ராம்.

ஆதிவாசிகளின் நிலங்களை அபகரித்தவன் ராமன் குரு விசுவாமித்தரன். அவனுக்காக ஆதிவாசிப் பழங்குடிகளோடு சண்டை போட்டவன் ராமன். போலவே , வெள்ளைக்காரர்களை அனுசரித்து பதவியும் பவிசும் அனுபவித்தவர்களே ஆர்.எஸ்.எஸ்.காரர்கள். ஆனாலும், ராம் ஏன் பீமை காட்டிக் கொடுத்தான்? என்பதற்கான விளக்கம்தான் இந்த நவீன சம்பூர்ண ராமாயணம்!

ரத்தம், ரணம், ரௌத்ரம் என்பதுதான் ஆர்.ஆர்.ஆர் தருகிற விளக்கம். ராமன் பெயரில்தான் இந்தியா இசுலாமியரின் ரத்தம் குடித்தது. இந்த பேன் இந்திய படமும் மற்றமைகளை அழித்து இந்தி, இந்து, இந்தியாவையே நிறுவ விரும்புகிறது. ஒரு இடத்தில் அலியாபட் வந்தே மாதரம்! என்கிறார். அந்த உச்சரிப்பு பாரத் மாத்தா கி ஜே! என்பது போலவே இருக்கிறது.

பாபர் மசூதி போன்ற tomb ஒன்று. அதை வெடி வைத்து தகர்த்து, அங்கிருந்து எதிரிகளின் ஆயுதங்களை ராமும் பீமும் கைப்பற்றுவதாகக் காட்டுகிறார்கள். பிரிட்டிஷ்காரன் பீரங்கியால் சுடுகிறான். ராமோ அவர்கள் மீது அக்னி பாணத்தை வீசுகிறார். காமெடி இல்லாத குறையை இவ்வாறு நிவர்த்தி செய்கிறார்கள். காஷ்மீர் ஃபைல்ஸுக்கு வரிவிலக்கு கொடுத்த பிஜேபி ஆர்.ஆர்.ஆர் படத்துக்கும் தரலாம்.

தெலுங்கு நிலத்தையும் சேர்த்துதான் நம்மவர்கள் திராவிடம் பேசுகிறார்கள் . ஆனாலும் அக்கடபூமி ஆரிய மாயையிலிருந்து விடுபடுவதாய்த் தெரியவில்லை. சம்பூர்ண ராமாயணம் என்றேன். +2 படிக்கும்போது ஹாஸ்டலில் சுவரேறிக்குதித்து அகரம் சீகூருக்கு படம் பார்க்கப் போனோம். நாங்கள் எதிர்பார்த்துப்போன படமில்லை. சம்பூர்ண ராமாயணம்தான் ஓடியது. சினிமா வெறி. அதையும் பார்த்தோம். என்டிஆர்தான் ராமர். படம் முடிந்தபோது விடிந்துவிட்டது. இதுவும் அப்படிதான். 6 PM காட்சி . முடிந்து வெளியே வந்தால் கடைவீதியில் ஒரு ஹோட்டல்கூட இல்லை.

அந்த ச.ராமாயணத்துக்கும் இந்த ஆர்ஆர்ஆர்க்கும் சில வித்தியாசங்கள். இதில் ராவணன் வெள்ளைக்காரன். சீதைக்குப் பதிலாக ஒரு சின்ன பிள்ளையைத் தூக்கி வந்துவிடுகிறான். சம்பூர்ண ராமாயணத்தில் நாட்டு நாட்டு பாட்டும், அலியாபட்டும் இல்லை என நினைக்கிறேன்!

வெளியே வந்தால் மூக்கில் ரத்தம் வழிந்தது. ராம்சரணின் 3Dஅம்பு
பாய்ந்திருக்க வேண்டும்! ஆரிய அம்பு தீர்வதாயில்லை. திராவிடர் ரத்தம்
சிந்துவதோ, நிற்பதாய் இல்லை!

கரிகாலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here