“ஒரு கோடியில் இருந்து 4 கோடி ரூபாய் வரை கையில் பணம் வைத்துள்ள யாரும் படம் எடுக்க வராதீர்கள். அதில் உங்களுக்கு சல்லி காசு கூட கிடைக்காது. இது தான் நிலைமை. இன்னும் இரண்டு ஆண்டுகள், சினிமா தயாரிக்க வராதீர்கள். இந்த பணத்தை வைத்து நிலம் வாங்கி போடுங்கள். 120 படங்கள் இன்னும் வெளியிட முடியாமல் காத்துக்கொண்டு இருக்கின்றன” என்று மார்க் ஆண்டனி திரைப்பட விழாவில் நடிகர் விஷால் பேசினார். சினிமா என்பது கல்லாகட்டும் கருவியே தவிர சமூக கருத்துகளை எடுத்துச் செல்லும் சாதனம் இல்லை என்பதை வெளிப்படையாக போட்டு உடைத்துள்ளார் நடிகர் விஷால்.

இந்த சூழலை பாசிசத்துடன் ஒப்பிட்டு தமிழ் திரைப்பட உலகில் சிறிய தயாரிப்பாளர்களை ஓரங்கட்டி விட்டு பல கோடி மூலதனத்தில் மசாலா படங்களை எடுத்து கல்லா கட்டுகின்ற தயாரிப்பாளர்களின் முகத்திரையை கிழித்தெறிந்துள்ளார் இயக்குனரும் நடிகருமான போஸ் வெங்கட்.

“எங்கும் நசுக்கப்படுவது தான் ஏழ்மை” இங்கு 100 கோடிக்கு மேல் பணம் இரைத்து தவறான படங்களை ஏன் எடுக்கிறீர்கள் என்று கேட்க ஆள் இல்லை… மக்களுக்கு பிரயோஜனமான தேவையான அவசியமான திரைப்படங்களை தராமல் தன் கஜானாக்களை மட்டும் நிரப்பும் திரைப்படங்களை எடுக்கும் கார்ப்பரேட்டுகளை கேள்வி கேட்காமல்,பணத்தைக் கருத்தில் கொள்ளாமல் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு வரும் தயாரிப்பாளர்களை தடுத்து நிறுத்துவது, இங்கு இருக்கக்கூடிய ஏற்றத்தாழ்வு, சாதியக் கொடுமை, மன ரீதியான பிரச்சனைகள் ஆகியவற்றை சினிமாக்களாக அறிவுரைகளாக அக்கறையுடன் சொல்லும் அருமையான சிறு திரைப்படங்களை தடுப்பது என்பது ஒரு விதமான பாசிச மனப்பான்மை… தமிழகத்தில் தடுக்கப்பட வேண்டிய சினிமா என்பது, எடுக்க கூடாத சினிமா என்பது, யாருக்கும் உபயோகமில்லாமல்,எந்தவித பயனையும் எந்த மக்களுக்கும் அளிக்காமல், வெறும் பாக்கெட்டை நிரப்பும் சினிமாக்கள், மொத்தம் 4 பேர் பணத்தை எடுத்துக் கொண்டு பிரித்துச் செல்லும் அந்த புத்திசாலிகள்,,,,. அவர்களைத் தான் தடுத்து நிறுத்த வேண்டும் மாறாக சிறிய பட்ஜெட் என்று வெறுமனே வார்த்தைகளை பயன்படுத்தி நல்ல திரைப்படங்களை தடுப்பது என்பது நம் தமிழ் சினிமாவிற்கு நாமே தன் தலையில் மண்ணள்ளி கொட்டுவதற்கு சமம்… இந்த பாசிச எண்ணம் யாரிடம் இருந்தாலும் அது தவறு.”.. போஸ் வெங்கட் (நடிகர்-இயக்குனர்.

நடிகர் மற்றும் இயக்குனரான போஸ் வெங்கட்

ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் பான் இந்தியா திரைப்படமான ஜவான் 1104 கோடி ரூபாய் வசூலை அள்ளியுள்ளது

தமிழகத்தில் சமீபத்தில் வெளியான கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பான ஜெயிலர் திரைப்படம் 600 கோடிக்கு மேல் வருமானத்தை ஈட்டியுள்ளது என்று கணக்கு தெரிவிக்கின்றனர். 75 வயதான ரஜினி என்ற முதியவருக்கு அடுத்த படம் ஒப்பந்தம் செய்யும்போது நூறு கோடி ரூபாயை கையில் கொடுத்து படத்திற்கு ஒப்பந்தம் போடுகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களை மட்டுமின்றி ஈழத் தமிழர்கள் மற்றும் உலகம் முழுவதும் பரவி வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களை மொட்டை அடிப்பதற்கு திரைப்படத்துறையில் பல்லாயிரம் கோடிகளை மூலதனம் போட்டு மிகப்பெரும் கேளிக்கை சந்தையை உருவாக்கி கல்லா கட்டி வருகின்றனர் தமிழ் நாட்டை சேர்ந்த சினிமா கார்ப்பரேட்டுகள்.

இந்த கார்ப்பரேட்டுகளில் கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ், சுபாஷ் கரனின் லைக்கா பிக்சர்ஸ் மற்றும் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன், கல்பாத்தி சகோதரர்களின் ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட்ஸ், கமலஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் போன்றவை வரிசை கட்டி நிற்கின்றன. பழம் பெருச்சாளிகளாக மெய்யப்ப செட்டியாரின் ஏவிஎம் நிறுவனம், பாலச்சந்தரின் கவிதாலயா, வேணு ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ், மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், இயக்குனர் லிங்குசாமி மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் இருவரின் திருப்பதி பிக்சர்ஸ், முதல் தற்போது  நடிகர் தனுஷின் வுண்டர் பார் வரை கோடிக்கணக்கான ரூபாய் முதலீட்டில் திரைப்படங்களை தயாரித்து கொள்ளையடித்து வருகின்றனர்.

அன்றாட வாழ்க்கையில் குடும்பத் தேவைகளுக்காக வருவாய் ஈட்டுவதற்கு கடுமையான வேலைகளை, பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையில் ஏற்றுக்கொண்டு செய்ய வேண்டிய சூழலே நாடு முழுவதும் நிலவி வருகிறது.

பிரிட்டன் காலனி ஆதிக்கத்தில் கீழ் இருந்த போது கூட தொழிலாளர்களும், விவசாயிகளும் இந்த அளவிற்கு ஒட்ட சுரண்டப்படவில்லை. மாறாக மறுகாலனியாக்க காலகட்டத்தில் தொழிலாளர்களின் ரத்த வியர்வை உறிஞ்சப்படுகிறது. எட்டு மணி நேர வேலை என்பது முற்றிலுமாக ஒழித்து கட்டப்பட்டு 12 முதல் 15 வரை கட்டாய உழைப்பு அவர்களிடமிருந்து உறிஞ்சப்படுகிறது.

கையில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது, பழைய வாழ்க்கையிலிருந்து சற்று மேம்பட்ட வாழ்க்கை கிடைத்துள்ளது, கம்பு, கேழ்வரகு போன்ற உணவுக்கு பதிலாக அரிசி உணவு சாப்பிட முடிகிறது என்பதை எல்லாம் ஒரு அளவுகோலாக வைத்துக் கொண்டு வாழ்க்கை முன்னேறி இருக்கிறது என்று கருத முடியாது.

குடிக்கும் தண்ணீர் முதல் படிக்கும் கல்வி வரை அனைத்தும் கட்டணம் இன்றி பெறவே முடியாது என்ற கசப்பான சூழல் உருவாகியுள்ளது இது மறுகாலனியாக்க கொடுமையில் பிரதானமானது.

இதையும் படியுங்கள்:

இத்தகைய கொடுமைகளை புரிந்து கொண்டு அதற்கு எதிராக வர்க்கமாக ஒன்று திரள விடாமல் தடுக்கின்ற பிற்போக்கு சக்திகளின் கூடாரமாக பாசிச பயங்கரவாதம் நாட்டை சூழ்ந்து கொண்டு கழுத்தை நெரித்துக் கொண்டுள்ளது.

இதனை உணர்ந்தாலும் ஏன் அதற்கு எதிராக போராட முடியாத அல்லது போராட விரும்பாத கற்பனை வாழ்க்கையை மக்கள் தலையில் கட்டுகிறது திரைப்படங்கள். திரைப்படம் எடுக்க துவங்கிய காலத்திலிருந்து காதலன், காதலி, காதல் அல்லது சோக, வீரம் போன்ற நவரசங்களையும் ஏதாவது ஒரு விகிதத்தில் கலந்து சுட சுட மசாலாவாக தலையில் கட்டுவதில் கைதேர்ந்தவர்கள்தான் சிறந்த தயாரிப்பாளர்களாக வலம் வருகிறார்கள்.

மக்களின் வாழ்க்கையில் அன்றாடம் எதிர்கொள்ளும் துன்பங்களையும், துயரங்களையும் எடுத்துச் சொல்லி அதற்கான தீர்வுகளை முன் வைக்கின்ற திரைப்படங்கள் எப்போதாவது அரிதாக வெளிவருகிறது. அவை குறைந்த பட்ஜெட்டில் சமூகப் பொறுப்புள்ள விரல் விட்டு எண்ணக்கூடிய தயாரிப்பாளர்களின் தயவில்தான் வெளிவந்து கொண்டிருக்கிறது அதற்கும் ஆப்படிக்கின்ற வகையில் விஷால் போன்ற நடிகர்கள் சிறிய தயாரிப்பாளர்கள் படம் எடுக்க வராதீர்கள் என்று மிரட்டுகின்றனர்.

இதற்கு மாறாக கார்ப்பரேட் முதலாளிகள் தமிழக திரைப்பட உலகில் மட்டுமின்றி, இந்திய திரைப்பட உலகிலும் (பாலிவுட்), சர்வதேச திரைப்பட உலகிலும் (ஹாலிவுட்) பல பில்லியன் கணக்கில் வர்த்தகத்தை நடத்திக் கொண்டுள்ளனர். இந்தியாவில் திரைப்பட தயாரிப்பு துறையில் முன்னணியில் உள்ள பல நிறுவனங்கள் மும்பையை மையமாகக் கொண்டு இயங்குகிறது. அதேபோல சர்வதேச ரீதியில் அமெரிக்காவை மையமாக வைத்து இயங்குகிறது. இவை தனியே எழுதப்பட வேண்டிய விவகாரமாகும்.

தமிழகத்தில் குறைந்த பட்ஜெட்டில் படம் எடுப்பவர்களை இழிவு படுத்துகின்ற சினிமா நடிகர்களுக்கு எதிராக குரல் கொடுப்பது மட்டுமின்றி நமது உழைப்பின் ஒரு பகுதியை உறிஞ்சிக் கொண்டிருக்கும் கற்பனை உலகைப் பற்றி அதாவது கனவு தொழிற்சாலையை பற்றி எச்சரிக்கையுடன் இருப்பதும், அதற்கு பலியாகாமல் இளைய தலைமுறையை பாதுகாக்க வேண்டியதும் நமது கடமையாகும்.

  • கணேசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here