வெற்றி நடைபோடும் ஜெயிலரின் யோக்கியதை என்ன?

ஜெயிலர் படத்தில் தாத்தாவாக வந்துள்ள ரஜினி ஒரு தாதா போல கெத்து காட்டி நடித்துள்ளார். ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக ஓய்வு பெற்ற பின் தனது மகன் சிலை கடத்தல் கும்பலால் கடத்தப்பட்டதை அறிந்து மீண்டும் போலீஸ் வேலையை – அதாவது துப்பறிவது கிரிமின்களை என்கவுண்டர் செய்வது போன்றவற்றை செய்து முடிக்கிறார் . அதில் தனது மகனே அதாவது, அசிஸ்டன்ட் கமிஷனர் ஆக பதவியில் உள்ள தனது மகனே சிலை கடத்தல் கும்பலுடன் கள்ளக் கூட்டாளியாக மாறுவதை கிளைமாக்ஸ்சில் கண்டுபிடித்து தன் மகனையும் போட்டுத் தள்ளுகிறார்.

இந்த அரதப்பழசான நேர்மையின் திருவுருவை எம்ஜிஆர், சிவாஜி படங்களில் இருந்து பார்த்து வந்துள்ளோம். இசை, காட்சி அமைப்புகள், சண்டை காட்சிகள், குத்து பாட்டு உள்ளிட்டவற்றில் புதிய உத்தியை பயன்படுத்தி உள்ளதை தவிர வேறு எதுவும் சிறப்பாக இல்லை.

இந்த ஜெயிலர் படத்தில் உண்மையை காட்டவே இல்லையா? அப்படியும் சொல்ல முடியாது. ஊறுகாய் போல் விமர்சனத்தையும் சேர்த்தே படையல் வைக்கப்பட்டுள்ளது. போகிற போக்கில் காவல்துறை கரை படிந்திருப்பதையும், கிரிமினலுடன் கள்ளக் கூட்டு வைத்திருப்பதையும் ரஜினி பேசுவதில்லை; பிற கதாபாத்திரங்கள் சொல்லிச் செல்கின்றன. ரஜினியும் சட்டத்தையோ, காவல் துறையையோ நம்பாமல் தானே, தான் ஆட்களை வைத்து தனது மகனை தீர்த்து கட்டுகிறார்.

ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்று இருந்தாலும், படம் முழுக்க அவருக்கு உதவ மனம் திருந்திய கிரிமினல்களே அடுத்தடுத்து வருவதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நேர்மையான போலீசார் கூட ரஜினிக்கு பக்கபலமாக இல்லை என மறைமுகமாக சொல்லி உள்ளதையே நாம் காவல்துறையின் மீதான விமர்சனமாக கருதிக் கொள்ளலாம்தான்.

இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியும் தனது மகன் காணாமல் போனான், கொல்லப்பட்டிருப்பான் என்று முடிவுக்கு வந்து சட்டப்படி எல்லாம் போகவில்லை. இவரே ஒரு ஹீரோவாக களத்தில் இறங்கி வேட்டையாடுகிறார். திகார் ஜெயிலிலும் இவர் ஜெயிலராக இருந்து எந்த சட்டத்தையும் மதிக்காமல், ரவுடிகளுக்கு பாடம் கற்பித்து ஒழுங்கு படுத்தியதாகவும் காதில் முழக்கணக்கில் பூ சுற்றுகிறார்கள்.

இவர் படுகொலைகளை செய்யும் போதும் காவல்துறை அதிகாரிகள் இவரை நெருங்குவதே இல்லை என திரைக்கதை அமைத்து லாஜிக்கை மீறி உள்ளார்கள். அதாவது போலீஸ் உயரதிகாரிகள் சக அதிகாரி கொல்லப்பட்டதை எப்படி மூடி மறைக்கலாம், தனது பதவியை காப்பாற்றிக் கொள்ளலாம் என கவலையுடன் விவாதிப்பதை தான் காட்டியுள்ளார்கள்.  சூப்பர் ஸ்டார் படத்தில் லாஜிக்கை பற்றி பேசுவது அல்லது லாஜிக் இருக்கும் என எதிர்பார்ப்பது நமது தவறுதான்.

விஜயின் பட வசூலை ஜெயிலர் முறியடித்து விட்டதாக படம் ரிலீஸ் ஆன அடுத்த நாளிலேயே பரபரப்பை கூட்டுகிறார்கள். காவி பாசிஸ்டுகளின் தாக்குதல்களால் நாடு கிழக்கு மேற்கில் கலவரத் தீயில் பற்றி எரிந்து கொண்டுள்ளது. அண்ணாமலையும் ஆளுநர் ரவியும் எவ்வளவு முயன்றாலும் கோமாளிகளாகவே பார்க்கப்படுகின்ற சூழலில், மோடி தமிழகத்திற்கு வந்தாலே “கோ பேக் மோடி” எனறு ட்ரெண்டாக்கப்பட்டு வரும் சூழலில், நம் தமிழக இளைஞர்களையாவது மடை மாற்ற வேண்டாமா? அதை இந்த ஜெயிலர் படம் சிறப்பாக செய்திருக்கிறது என்று நம்பலாம்.

கிழவன் ரஜினியை ஒரு கட்டுக்கோப்பான, 100 பேர் வந்தாலும் பந்தாடக்கூடிய ஃபிட்டான மாஜி போலீஸ் அதிகாரியாக காட்ட மெனக்கெட்டு இருக்கிறார்கள். நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் இந்திய, உலக ரஜினி ரசிகர்களின் பாக்கெட்டை பதம் பார்க்க போகிறது.

ஒரு சராசரி பொழுதுபோக்கு மசாலா திரைப்படம் என்பதை தாண்டி நேர்மை, நாணயம் என்றெல்லாம் ஒரு பிம்பத்தை கட்டமைத்து படம் முடிகிறது.

காசு கொடுத்து படம் பார்ப்பவனுக்கு கிளுகிளுப்பூட்ட தமன்னாவின் கவாலா குத்து பாடல் இருக்கவே இருக்கிறது. இந்தப் படத்தில் திரைக்கதையின் படி ரஜினிக்கு டூயட் சாங் வைக்காததால் நாம் தப்பித்தோம். எங்கே தமன்னாவையும் தாண்டி படம் ஓடாமல் படுத்து விடுமோ என்று கர்நாடக சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கோலிவுட்டின் ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட முன்னணி நடிகர் பட்டாளங்களையே நடிக்க வைத்துள்ளார்கள்.

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக “எதுக்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம்னு போயிட்டு இருந்தா நாடே சுடுகாடாயிடும்னு” பேசி இழி புகழ் பெற்ற ரஜினியை தூத்துக்குடி இளைஞர்கள் ரசிக்கவும் கொண்டாடவும் முடியாது தான்.

புது வாழ்வில் அரசியல் கோமாளியாக சந்தி சிரித்து அசிங்கப்பட்டாலும், இந்த படத்தில் தனது முந்தைய படங்களின் ஸ்டைல்களை எல்லாம் கலந்து கட்டி காப்பியடித்து ஒரு மாஸ் ஹீரோவாக நடித்துள்ளார்.

உண்மையிலேயே சிலை திருட்டில், கடத்தலில் ஈடுபடும் பூணூல் போட்ட கிரிமினல்களை வில்லனாக வைக்க தமிழ் திரையுலகமோ, ரஜினியோ தயாராக இல்லை. கண் முன்னே தமிழகத்தில் நடக்கும் கொட்டடிப் படுகொலைகளையோ, போலீசின் அராஜகங்களையோ மறந்தும் கண்டிக்காத நேர்மையான மனிதர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினி.

ரஜினி இப்படி படங்களில் மட்டுமே நடித்து, சட்டபூர்வமாக – சட்ட விரோதமாக கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துக் கொண்டு, இமயமலைக்குச் சென்று மன அமைதியை பெற்றுக் கொண்டு காலத்தை கழித்தால் அது உத்தமம்.

இவருக்கு ஜப்பானில் இருந்து எல்லாம் ரசிகர்கள் வந்து படத்தைப் பார்த்து பரவசம் அடைகிறார்கள். கருப்பு பணத்தில் முத்து குளிக்கும் திரை உலகில், கருப்பு பணத்தை ஒழிப்பதாகவே சிவாஜி பாணியில் படம் எடுத்தால் அதுவும் ரசிகர்களை பரவசப்படுத்தவே செய்கிறது. தர்க்க ரீதியாக யோசிக்க விரும்பாத சராசரி ரசிகர்களால் தலைமுறைகளை தாண்டியும் ரஜினி கொண்டாடப்படுகிறார். இவரின் திரைப்படத்தை பார்க்க ஆயிரக் கணக்கில் செலவு செய்து  பரவசத்தில் கூத்தாடுவதை துபாயிலும் பார்க்க முடிகிறது. படம் வெற்றி அடைய கோடிகளை செலவிட்டுள்ள சன் குழும ப்ரடியூசர் கவலைப்படுகிறாரோ இல்லையோ ரசிகர்கள் மண்சோறு சாப்பிடுகிறார்கள்.  திரையில் வரும் பிம்பங்களை கண்டு பரவசமடையும் ரசிகர்களை, ரஜினி பக்தர்களை நாம் எதுவும் சொல்லிப் பயனில்லை.

ஒருவேளை நாட்டு நலன், உழைக்கும் மக்களின் நலன் என்ற கோணத்தில் படம் எடுத்தால் அந்தப் படம் ரிலீஸ் ஆகாது; அல்லது சென்சார் போர்டு தாண்டும் போது எதுவும் மிஞ்சாது என்று சிலர் வாதிடக்கக்கூடும். அரசின் ஒரு உறுப்பு வர்க்க சார்பற்றதாக இருக்காது என்பது தெரிந்த உண்மைதான். எனவேதான் நரகலில் நல்ல அரிசி பொறுக்குவதைப் போன்று விதிவிலக்கான சில படங்களை தேடிப்பிடித்து, பார்த்து ஆறுதல் அடைய வேண்டி உள்ளது.

சினிமாவில் அணையை கட்டிக் கொடுத்து மக்களை வாழ வைத்தது போல படத்தில் நடித்தவர் தான் ரஜினி. கர்நாடகாவில் மேக்கேதாட்டு அணையைக் கட்டி தமிழக டெல்டா விவசாயிகளின் வாழ்வை அழிக்கத் துடிக்கும் அரசியல்வாதிகளை கண்டித்து எல்லாம் ரஜினி பேசப் போவதில்லை. நாமும் அப்படியெல்லாம் எதிர்பார்க்கவும் இல்லை.

இதையும் படியுங்கள்: 

தேவையில்லாமல் அனில் அகர்வால் போன்ற கார்ப்பரேட்டுகளுக்காக வக்காலத்து வாங்கி, மண்ணைக் காக்க போராடும் மக்களை கொச்சைப்படுத்துவதையோ, காலா படத்தில் செய்தது போல் கம்யூனிஸ்ட்களை நக்கல் அடிப்பதையோ செய்யாத வரை, நாமும் ஒரு சிறந்த மசாலா பாணி நடிகர் என்ற வரம்பில் ரஜினியை பாராட்டி விட முடியும்.

தமிழகத்தை பொறுத்தவரை ரஜினியை திரையில் மட்டும் தான் கொண்டாட விரும்புகிறார்கள். ரஜினியை வைத்து காய்களை நகர்த்தி கட்சியை வளர்த்து விடலாம் என முயற்சித்துள்ள ஆர்எஸ்எஸ் சங்கிகளுக்கு இந்த உண்மை புரிகிறதோ இல்லையோ ரஜினிகாந்த்துக்கு புரிந்தால் சரி.

சூடு கண்ட பூனையாக மாறி உள்ள ரஜினி இமயமலைக்கு போகிறேன் என்று டெல்லி ஏர்போர்ட்டில் நின்று கொண்டு மணிப்பூர் ஹரியானாவை பற்றி மறந்தும் வாய் திறக்காமல் வருவார் என்று எதிர்பார்க்கலாம்.தேசத் துரோகிகளை கண்டிக்காவிட்டாலும் பரவாயில்லை போராடும் மக்களை கொச்சைப்படுத்தாமல் வந்துவிட்டால் நாமும் இவரைப் பற்றி எழுதிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. நடிகனாக மட்டுமே வாழ்க்கையை ஓட்டிச் செல்வது ரஜினிக்கும் நல்லது; நாட்டுக்கும் நல்லது.

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here