ந்தியாவில் கடந்த சில மாதங்களாக விலைவாசி தொடர்ந்து உயர்ந்துக் கொண்டே போகிறது. சமையல் எண்ணெய் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. பாஜகவின் 4 மாநில தேர்தல் வெற்றிக்கு பரிசாக கேஸ் விலை 50ரூபாய் உயர்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று வரை பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

விலை உயர்வுக்கு உக்ரைன் போரை காரணம் காட்டுகிறது ஆளும் பாசிச மோடி அரசு. நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனோ ஒருபடி மேலே போய் பொது மக்கள் வாகனங்கள் அதிகமாக பயன்படுத்துவதனால் தான் பெட்ரோல் டீசல் விலை உயர்கிறது என்கிறார். இதற்கு முன்பு உயர்த்திய போது நாட்டி வளர்ச்சிக்காக என்ற பாசிஸ்ட்டுகள் இன்று மக்களின் மீதே பழி போட துவங்கிவிட்டார்கள்.

இந்த நிலையில் தான் சுங்கக் கட்டணம் வரும் ஏப்ரல் 1 முதல் உயரப் போகிறது என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.  இது உழைக்கும் மக்களின் தலையில் பேரிடியாய் இறங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் 60கிமீட்டருக்கு 1 சுங்கச் சாவடி தான் இருக்கும் என கூறினார் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி. சொல்லி 5 நாட்களுக்குள் சுங்கக் கட்டண உயர்வை அறிவித்துள்ளார்.

நாட்டிலேயே முதல்முறையாக மகாராஷ்டிராவில் தான்1995ல் பாஜக – சிவசேனா கூட்டணி ஆட்சியில் சாலைகள் தனியார்மயமாக்கப்பட்டன. தனியார் முதலாளிகள் சாலைகள் அமைத்து பராமரித்து, செலவிட்ட தொகையை கட்டணங்கள் மூலம் வசூலித்து முடித்த பின்னர் அவற்றை நாட்டுக்கு அர்ப்பணிப்பது எனும் திட்டம்.

ஆனால் நடந்ததோ வேறு, இதை பயன்படுத்திக் கொண்டு தனியார் முதலாளிகள் பெரும் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார்கள். சுங்கச் சாவடி அமைத்து கொள்ளையிடுவதற்காகவே பல ஆயிரம் கிலோமீட்டர் சாலைகள் ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டன. பல சுங்கச் சாவடிகளில் செலவிட்டத்  தொகைக்கு மேலாகவே வசூலானாலும் அதனை அரசிடம் ஒப்படைக்காமல் தொடர் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டுவருகிறார்கள். இதனை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்துள்ளன. ஆனாலும் முறைகேடாக நடத்தும் சுங்கச் சாவடிகள் மூடப்படவில்லை.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தான் தமிழகத்தில் உள்ள 24 சுங்கச் சாவடிகளில் 5% முதல் 10% வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது. அதே மாதத்தில் தான் தமிழகத்தில் மேலும் புதிதாக 6 சுங்கச் சாவடிகள் அமைக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.

வரும் ஏப்ரல் 1 முதல் சுங்கச் சாவடிகளில் 5 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக மக்களை சுரண்டுவதில் ஒன்றிய மோடி அரசுக்கு அலாதி பிரியம்.

தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்பு தலைவர் ஏ.எம்.விக்ரம் ராஜா கூறுகையில், “சுங்கச் சாவடி கட்டண உயர்வால் ஏற்படும் கூடுதல் செலவுகள், காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் போன்ற பொருட்களின் விலை உயர்வுக்கு வழி வகுக்கும். இதனால் நுகர்வோர் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இதுவரை 1,000 ரூபாய் சுங்கக் கட்டணமாகச் செலவழித்து வந்த வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்கள், இனி 1,200-1,250 ரூபாய் வரை செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்கிறார் அவர்.

ஏற்கனவே உயர்ந்து வருகின்ற பெட்ரோல், டீசல் விலையால் அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக ஏற்றம் கண்டு வருகிறது. தற்போது சுங்க கட்டணமும் உயர்வதால் மேலும் விலைவாசி உயரும் அபாயம் ஏற்படும். அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம் ஒரு புறமும், விலைவாசி உயர்வு மறுபுறமும் சேர்ந்து உழைக்கும் மக்களின் கழுத்தை நெருக்கிறது. நாட்டை ஆளும் பாசிஸ்ட்டுகளால் இந்திய மக்கள் தினமும் வாழ்வா? சாவா? போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

பாஸ்டாக் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் நமது அனுமதியின்றியே பணம் எடுத்து வருகிறார்கள். உள்ளூர் மக்கள் சுங்கச் சாவடிகளை கடந்தாலே அவர்களது பாஸ்டேக்கில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படுகிறது.

சுங்கச் சாவடிகளை கடந்து செல்லும் அரசு வாகனங்களோ அல்லது அரசியல்வாதிகளோ சுங்கக் கட்டணம் செலுத்துவதில்லை. பொதுமக்கள் தான் கட்டணக் கொள்ளைக்கு பலியாகிறார்கள். நாம் வாகனம் வாங்கும் பொழுதே அதற்கான சாலை வரிகளை முறையாக செலுத்துகிறோம்.

அரசும் நெடுஞ்சாலைத் துறைக்காக ஒவ்வொரு வருடமும் பட்ஜெட்டில் பல ஆயிரம் கோடிகளை ஒதுக்குகிறது. அதுவும் மக்களின் வரிப்பணம்  தான். இதற்கு மேலும் சுங்கச் சாவடிகள் என்ற பெயரில் நடத்தும் கட்டணக் கொள்ளையை நாம் அனுமதிக்கலாமா?

விலைவாசி உயர்வு, வேலையின்மை என அவதிப்பட்டு வரும் மக்களுக்கு மேலும் சுமையை கூட்டும் சுங்கச் சாவடிகள் தேவையா என்பதை தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும். தமிழக வாழ்வுரிமைக் கட்சியை சேர்ந்த வேல்முருகன் சுங்கச்சாவடிகளில் நடக்கும் அடாவடி வசூலுக்கு எதிராக போர்க்குணத்துடன் போராடினார்.

பஞ்சாப் விவசாயிகள் சுங்கச் சாவடிகளுக்கு எதிராக களத்தில் இறங்குகிறார்கள். அவர்களை போல் நாமும் களம் காண்போம். சுங்கச் சாவடிகளில் கட்டணத்தை செலுத்த மறுத்து போராடுவோம்! குட்ட குட்ட குனிந்து கொண்டிருப்பவன் முட்டாள் என்பதே முதுமொழி.

நாம் முட்டாள்கள் அல்ல என்பதை பாசிச கொடூரர்களுக்கு அவர்களுக்கு புரிந்த வழியில் புரிய வைப்போம்.

 மாரிமுத்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here