அத்ரிஷ்ய ஜலகங்கள் (Adrishya jalakangal )  என்ற மலையாள மொழி திரைப்படம் டோவினோ தாமஸ் நடிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குனர் விஜயகுமார் தாமோதரன் இயக்கத்தில் வெளிவந்துள்ளது.  கேரளாவில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, கேரளாவில் மிகவும் விரும்பத்தக்க மனிதர்களின் பட்டியலில் டோவினோ தாமஸ் ஆறாம் இடத்தை பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டோவினோ தாமஸ் “2018” என்ற பெருவெள்ளத்தை அடிப்படையாகக் கொண்ட மளையாள திரைப்படத்தின் மூலம், ஆசியாவின் சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றுள்ளார்.இப்படத்தின் தோற்றத்துக்கும் நடிப்பிற்கும் தற்போது வெளிவந்துள்ள அத்ரிஷ்ய ஜலகங்கள் படத்தின் தோற்றம் மற்றும் நடிப்பிற்கும் துளி அளவு கூட தொடர்பு இல்லை.

“அத்ரிஷ்ய ஜலகங்கள்” படமானது, வழக்கமான ஹீரோயிசத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களில் இருந்து வேறுபட்டுள்ளது. படத்தின் கதாநாயகனாக கட்டமைக்கப்பட்டுள்ள ஒரு மனநல பாதிப்புக்குள்ளானவனாக சித்தரிக்கப்படும் இளைஞனின் மூலம் சில உண்மைகளை – அரசு மூடி மறைக்க விரும்பும் சில சமூக நடைமுறைகளை அழுத்தமாக பதிவு செய்துள்ளது.

தெருவில் கிடைப்பவர்களை எல்லாம் அள்ளிச் சென்று மன நோயாளியாக கணக்கு காட்டி, ஷாக் டிரீட்மெண்ட் தந்து தன்னையே நோயாளியாகவும் உணர வைத்து, பின்னர் அவர்களை  விரட்டி அடிக்கும் அரச பயங்கரவாதம் மனதை பதைபதைக்க வைக்கிறது.

நிமிஷா சஜயன், இந்திரன்ஸ், நவீன் எர்னேனி,  ரவி சங்கர், ராதிகா லவு (மொழி தெரியாததால் பெயர்கள் மாறி இருக்கலாம், அல்லது விடுபட்டிருக்கலாம்.)  என மலையாள திரை உலகின் முன்னணி குணச்சித்திர நடிகர்களை தேர்ந்தெடுத்து கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக பயன்படுத்தியுள்ளனர்.


இதையும் படிக்க: 

சமகால அரசியலை சமரசமின்றி பேசும் மலையாளப் படம்!

ஜன கண மன (2022) மலையாளம் – திரைப்பார்வை


இப்படத்தின் இயக்குனர் காவி பாசிஸ்டுகளால் கவுரி லங்கேஷ் போன்ற எழுத்தாளர்கள் படுகொலை செய்யப்படுவதை அழுத்தமாக காட்சிப் படுத்தியுள்ளார். பாசிஸ்டுகள் உண்மைகளை கண்டு – புத்தகங்களை கண்டு அஞ்சுவதை, கொல்லப்பட்ட ஒருவர் பிணவறையில் பணி செய்யும் கதாநாயகனுடன் விவரிப்பதாக காட்சி அமைத்தும், பாதுகாப்பு படையின் வண்டியிலிருந்து துப்பாக்கிகளுடன் புத்தகமும் இணைத்து காட்டப்படுவதன் மூலம் ஆட்சியாளர்களின் மனோ நிலையை அற்புதமாக பதிவு செய்துள்ளார்.

சமூகத்தால் கைவிடப்படும் பெண்கள் பாலியல் தொழிலாளியாக மாறும் அவலத்தை, இத்தொழில் ஈடுபடும் பெண்களை மட்டும் இழிவாக பார்க்கும் சமூகத்தின் குறுகிய பார்வையை அம்பலப்படுத்தும் படி எதார்த்தமாக, திரைக்கதையில் இருந்து விலகாமல், பதிவு செய்கிறது இந்த திரைப்படம்.

போபாலின் யூனியன் கார்பைட் போன்ற ஆலையில் காண்ட்ராக்ட் தொழிலாளர்களாக வேலைக்குச் சென்று அங்கு நடக்கும் விஷ வாயு கசிவால் நான்கு தொழிலாளர்கள் உயிரை விடுகின்றனர். அவர்கள் நமது கதாநாயகனுடன் இணைந்து போர் வெறி பிடித்த ஆட்சியாளர்களால் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் நச்சு ரசாயனங்கள் உற்பத்தி செய்யும் ஆலையை திறக்கவிடாமல் தடுப்பதற்காக எடுக்கும் முயற்சியை எதார்த்தமாக பதிவு செய்கின்றனர்.

யுத்தத்தை வெறுக்கும் இளைஞர்கள் துப்பாக்கிக்கு பதில் இசையை, இசைக்கருவிகளை கையில் எடுத்தால், உலகில் அமைதி மலரும் என அழுத்தமாக நம்பி தமது பாடலையே, இசையையே ஆயுதமாக்குகின்றனர். அப்போது கூட்டத்தை கலைத்து, கிடாரை தரையில் அடித்து உடைத்து, கைது செய்ய இழுக்கும் காவல்துறையினரின் அராஜகத்தினால் மேடையிலேயே இசை கலைஞர் ஒருவர் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விடுகிறார்.அவர் பிணவறைக்குள் சமமாக கடத்தப்பட்ட நிலையில், நமது கதாநாயகனுக்கு நடந்தது குறித்து விளக்குகிறார்.

சமூக அக்கறை கொண்ட எழுத்தாளர்களும் இசைக்கலைஞர்களும் தொழிலாளர்களும் தாம் உயிரிழந்த பின்னும், இந்த ஊருக்காக, நாட்டு மக்களுக்காக சிந்திப்பவர்களாக, நேர்மறையில் காட்டப்பட்டுள்ளது சிறப்பானது.

வெடிக்க காத்திருக்கும் ஆலை, சுமார் 20 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள உயிர்களை காப்பாற்ற வேண்டும் என விடாமுயற்சி செய்யும் உயிரிழந்த தொழிலாளிகள், காணாமல் போன  சிறுமியை தேடுவதில் துணைக்கு வரும் மரணித்தவர்கள் என கவித்துவமாக செல்கிறது கதை.

பாலியல் தொழிலாளியாக வரும் படத்தின்  கதாநாயகி தனது கடந்த கால வாழ்க்கையை சொல்லும் உரையாடல் மூலம் மனதை வெல்கிறார். ஒரு திமிரெடுத்த வாடிக்கையாளராக தன்னைத் தேடிவரும் பாதுகாப்பு படை அதிகாரியை புறங்கையால் ஒதுக்கித் தள்ளும் உரையாடல்களாகட்டும், அரிவாளால் வெட்டி வீழ்த்தும் ஆவேசமாகட்டும், இவை அனைத்தும் தனி முத்திரையை பதிக்கின்றன.

ஒரு ரசாயன ஆலையை சுற்றி வீடுகளோ குடியிருப்புகளோ இருக்க முடியுமா? காவலர்கள் கைவிடப்பட்ட ரயில்வே ஸ்டேஷனில் உள்ள ரயில் பெட்டிகளை இப்படி ஹீரோவும் ஹீரோயினும் தமது வசிப்பிடமாக்கி பராமரிப்பதை எப்படி அனுமதித்தனர்? என்பது போன்ற லாஜிக்குகளை ஒதுக்கி வைத்து விட்டு பார்த்தால், இந்தப் படம் ஓர் அற்புதமான திரைக் காவியமே.

மலையாளம் தெரியாத போதும் இந்தப்படம் நம்மை ஈர்க்கத் தவறவில்லை. திரைக்கதையை புரிந்து கொள்வதில் சிரமமும் இல்லை. படக்குழுவினரால் நாளை மொழி மாற்றம் செய்து திரையிடப்படும் போது, தமிழக மக்களாலும் இப்படம் கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

இப்படத்தில் போரை இசை எனும் கலையால் எதிர்கொள்கிறார்கள். மேலும் பாசிசத்தை, சர்வாதிகாரத்தை, கார்ப்பரேட்டுகள் திணிக்கும் போர்வெறியின் பின் விளைவுகளை அம்பலப்படுத்துவதன் மூலம், இக்கலை படைப்பானது ஆளும் வர்க்கத்தின் உச்சந்தலை மீது ஓர் வலுவான சம்பட்டி அடியாகவே இறங்கியுள்ளது. சமூக அக்கறையுடன் பொறுப்புள்ள திரைப்படத்தை தந்ததற்காக டோவினோ தாமஸ், நிமிசா சஜயன், மைத்திரி மூவி மேக்கர்ஸ் உள்ளிட்ட அனைவரையும்  பாராட்டலாம்.

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here