“தன்னைத் தானே தளபதி என்று பட்டம் சூட்டிக்கொண்ட விஜய் நடித்த லியோ திரைப்படம் வெளியாகி முதல் நாள் கணிசமான தொகையை கல்லா கட்டிய  பின்னர் வசூல் இரண்டாவது நாளில் கணிசமாகக் குறைந்துள்ளது.. லோகேஷ் கனகராஜ் திரைப்படம் அதன் முதல் நாளில் உலகளவில் ரூ 140 கோடி வசூலித்தது, மேலும் இந்தியாவில் ரூ 64.8 கோடி வசூலித்தது, ஆனால் இரண்டாவது நாளில் இந்த எண்ணிக்கை ரூ 36 கோடியாகக் குறைந்துள்ளது என்று இண்டஸ்ட்ரி டிராக்கர் சாக்னில்க் கூறுகிறார். வசூல் சரிவு சுமார் 44%. ஆகும்.

இந்தியாவில் முதல் நாள் மொத்த வசூல் ரூ.74 கோடியுடன் தொடங்கியது, ஆனால் இரண்டாவது நாளில் விஜய்யின் படம் ரூ.42.50 கோடி மட்டுமே வசூலிக்க முடிந்தது. விஜய்யின் முதன்மை மார்க்கெட் என்பதால் படத்தின் வசூல் தமிழகத்தில் முன்னணியில் உள்ளது. லியோ தமிழகத்தில் ரூ.24 கோடியும், ஆந்திரா-தெலுங்கானா மற்றும் கேரளாவில் தலா ரூ.6 கோடியும் வசூலித்தது. கர்நாடகாவில் இந்த எண்ணிக்கை ரூ.4.50 கோடியாக இருந்தது. லியோவின் உள்நாட்டு நிகர வசூல் இரண்டே நாட்களில் ரூ.100 கோடியைத் தாண்டியுள்ளது.” என்று விஜய் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் பற்றி Indian express செய்தி வெளியிட்டு ஒப்பாரி வைக்கிறது.

நடிகர் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் நன்றாக கல்லா கட்டியது அதன் மூலம் 604.25 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக பெருமை பீற்றிக் கொண்டுள்ளனர். இதில் மக்களாகிய நாம் பெருமைப்படுவதற்கு ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.

கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பாலஸ்தீனத்தின் மீது யூத, ஜியோனிச  வெறி பிடித்த இஸ்ரேல் பேரழிவு ஆயுதங்களை, ஏவுகணைகளை, பீரங்கி குண்டுகளை வீசி வருகிறது. பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் என்று சர்வதேச ஊடகங்கள் அனைத்தும் அம்பலப்படுத்தியுள்ளன.

ஆனால் இந்தியாவில் உள்ள ஊடகங்களோ மேல் வாயையும், கீழ் வாயையும் பொத்திக்கொண்டு இஸ்ரேலுக்கு, இஸ்ரேலின் கொலை பாதக செயல்களுக்கு துணை போகின்ற மோடி மீடியா அறிவிக்கின்ற செய்திகளை வெளியிட்டு திருப்தி அடைகின்றன.

இஸ்ரேலின் தாக்குதல் குறித்து சர்வதேச ரீதியில் கண்டனங்கள் எழுந்துள்ள போது பல்வேறு நாடுகளில் உள்ள மனித குலத்தின், மீதும் உயிர் வலியின் மீதும் அக்கறை கொண்ட மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இந்தியாவிலோ உலகக்கோப்பை கிரிக்கெட் நடக்கிறது. இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் நடக்கும் போட்டியை கிரிக்கெட் வாரியத்தின் செயலரான ஜெய்ஷா மற்றும் அவரது அப்பன் அமித்ஷா ஆகியோர் நேரடியாக கண்டு களிக்கின்றனர். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் நடப்பது போட்டி அல்ல போர் என்று கூச்சலிடுகின்றனர், இந்திய தேசிய வெறியர்கள்.

இந்தியாவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் தொலைக்காட்சி பெட்டியின் முன்னால், கடைகளில் ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சிகளின் முன்னால் தவமிருந்து, இந்தியா வெற்றியடைந்த பின்னரே பெரிதாக சாதித்து விட்டது போல் கூச்சலிட்டுக் கொண்டு ஓடினார்கள். மனநோய் பிடித்த பைத்தியங்களோ விளையாட்டு மைதானத்திற்கு உள்ளேயே “ஜெய் ஸ்ரீ ராம்” என்று ஊளையிட்டனர்.

அதற்கு அடுத்தபடியாக தற்போது விஜய் நடித்த லியோ படத்தின் வெளியீடு தென்னிந்தியா முழுவதும் நான்கு மாநிலங்களில்  அதே பாணியில் மீண்டும் ஒருமுறை வெறித தனமான கூச்சலை கிளப்பியுள்ளது. அதிகாலை 4 மணி ஷோவிற்கு அனுமதி மறுத்தவுடன், “ திரைப்பட கதாநாயகர்களின் சினிமா என்பது ரசிகர்களின் திருவிழாவைப் போல அதனை தடுப்பதற்கு எவனுக்கும் உரிமை இல்லை” என்று 10 கட்டையில் கூச்சலிடுகிறார் மன்சூர் அலிகான்.

இவை அனைத்தும் காட்டுவது என்ன? உலகில் எந்த மூலையில் எவன் செத்துப் போனால் என்ன? பிணங்கள் ஆயிரக்கணக்கில் குவிந்தால் என்ன? தாய்மார்கள் தாலி அறுத்தால் என்ன? குழந்தைகள் அழுகுரலில் ஓலமிட்டு அழுதால் என்ன? “எனது வாழ்க்கை, எனது கண்ணோட்டம், எனது மகிழ்ச்சி” என்ற அற்ப புழுக்களைப் போல, மானிடத்தின் விழுமியங்களை சீரழித்திருக்கிறது பாசிச உளவியல். இந்த பாசிச உளவியல் தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கு டாஸ்மாக்கில் சரக்கை விற்று தாய்மார்களின் தாலியை அறுத்தாலும், பாலஸ்தீனத்தில் கொத்து கொத்தாக குழந்தைகள் செத்து மடிந்தாலும், அதானி நாட்டை சூறையாடி பெரும் பணக்காரனாக உருவெடுத்தாலும் இவர்களை பாதிப்பதே இல்லை.

பாசிச பாஜக மோடி கும்பல் ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் இந்தியாவில் சொல்லிக் கொள்ளப்படுகின்ற அடக்குமுறைகளுக்கு எதிராகவும், இழப்புகளுக்கு எதிராகவும், போராடுகின்ற மனநிலை குறைந்தபட்சம் இருந்தது. ஆனால் இப்போது அனைத்தையும் வேடிக்கை பார்த்து கடந்து செல்லும் மனநிலையை மேலோங்கி கொண்டுள்ளது.

‘தான், தனது வாழ்க்கை’ என்று குறுகிய கண்ணோட்டத்தில் உலகை பார்க்கின்ற அற்பவாத கண்ணோட்டமே பாசிச உளவியல் ஆகும். இந்த உளவியல் யார் ஆட்சிக்கு வந்தால் என்ன என்பதில் தொடங்கி பாசிஸ்டுகள் சர்வாதிகாரத்துடன் நாட்டை அடக்கி ஒடுக்கினாலும் நமக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை, நமது வாழ்க்கை எப்போதும் போல் ஓடிக்கொண்டிருக்கும் என்று அங்கீகரிக்க தோன்றும்.

இதுவே நாம் இன்று எதிர்கொண்டுள்ள மிக மோசமான சமூக உளவியல் ஆகும். இந்த உளவியலை எதிர்த்து முறியடிக்காமல் பாசிசத்தை வீழ்த்துவது நோக்கி ஒரு அங்குலம் கூட முன்னேற முடியாது என்பதை உணர்ந்து, அதற்கு எதிராக கடுமையாக போராடி இந்த விஷ சுழற்சியில் இருந்தும் பிரமைகளில் இருந்தும் மக்களை மீட்டெடுப்போம்.

இதையும் படியுங்கள்:

இது மீண்டும் ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு இணையானது தான் இத்தகைய கடுமையான ரத்தம் சிந்தும் போராட்டத்தை உணராமல் “சர்வ சாதாரணமாக பாசிசத்தை” பற்றி புரிந்து கொள்வதும், “பாசிசம் என்று பூச்சாண்டி” காட்டுகிறார்கள் என்று உளறிக் கொண்டு திரிவதும், கதைக்கு உதவாது. கொத்துக்கொத்தாக மக்கள் செத்து மடியும் போதும் எந்த எதிர்வினையும் இன்றி வாழப் பழகிக் கொள்ளும் கண்ணோட்டம் தான் பாசிசத்திற்கு பலியாகின்ற மனநிலையாகும்.

அதே வேளையில் இந்தக் கேடுகெட்ட உளவியல், சினிமா கழிசடைகளின் ஆரவாரங்களுக்கு பின்னாலும், கிரிக்கெட் ஆட்டங்களின் பின்னாலும், சரக்கு எதுவும் இன்றி கவர்ச்சிகரமாக பேசுகின்ற அரசியல் வியாபாரிகளின் பின்னாலும் தறி கெட்டு  ஓட வைக்கும் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. இதனை நாம் அப்படியே அனுமதிக்க முடியாது. எதிர்த்து முறியடிப்போம்..

  • கணேசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here