வ்வளவு பதற்றத்தை ஒரு படம் தருமா? சித்தா திரைப்படத்தை பார்ப்பது வலியை அனுபவிக்குமொரு நிகழ்வு. நாம் தியேட்டரில் இருக்கிறோம், என்பதாக இல்லாமல், ஓர் அனுபவத்தை துரத்திச் செல்கிறோம். அல்லது நம்மை ஒரு அனுபவம் துரத்துகிறது. எனும் உணர்வை அளிக்கிறது இப்படம்.

வலதுசாரி அதிகாரத்தைத் தொடர்ந்து எதிர்த்துவருகிற ஒரு கலைஞர் சித்தார்த். இருப்பினும் கலைரீதியாக அவர் எந்த இடத்தை அடைந்திருக்கிறார்? என்பதற்கு திருப்தியான பதில் இல்லை. அந்த நிலையை சித்தா திரைப்படம் மாற்றியிருக்கிறது. கலைவாழ்வில் அவர் பெருமை கொள்ள அமைந்த படமிது.

நாம் வாழும் காலத்தின் முக்கியமான பிரச்சனை child abuse. இப்பிரச்சனையின் அத்தனைப் பரிமாணங்களையும் காட்டியிருக்கிற கலைப்படைப்பு சித்தா. குழந்தைகள் மீது பாலியல் கவர்ச்சி கொள்ளும் நிலையை பெடோபிலியா
(pedophilia) என்கிறது உளவியல். இது ஒருவித வளர்ச்சியற்ற மனநிலை. மனப்பிறழ்வு. நோய்க்கூறு மனம்.

உலகில் 120 மில்லியன் பெண் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆட்படுகிறார்கள் என்கிறது unicef அமைப்பு. தினம்தோறும் பத்தில் ஒரு பெண் குழந்தை பாலியல் சீண்டலுக்கு ஆட்படுகிறாள்.

உலக மனநல நாளும்சித்தா திரைப்படமும்
சித்தா திரைப்படக் காட்சி

உளவியலாக, சமூகரீதியாக, பொருளாதார ரீதியாக இதற்கு பலகாரணங்கள் இருக்கின்றன. குறைந்த சுயமதிப்பு உடையவர்கள், தலையில் அடிபட்டவர்கள், மனப்பிறழ்வுக்கு ஆளானோர்கள், பாலியல் விழைவின் பொருட்டு குழந்தைகளை நாடுகிறார்கள். உடலாலும் மனதாலும் குழந்தைகளால் பெரிய அளவு எதிர்ப்புகாட்ட முடியாது என்பது இவர்களுக்கு துணிவைத் தருகிறது.

டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் பரவலான பயன்பாடும் குழந்தைகளை ஆபத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இன்று பெருகியிருக்கும் டார்க் இண்டர்நெட் மனிதர்களின் சிந்தனையை முடமாக்கியிருக்கிறது. Child porn படங்களுக்கான சந்தை ஒர் அச்சமூட்டும் பொருளாதாரக் காரணி. Child pornography சமூகத்தை இருவழிகளில் பாதிக்கிறது.

இதைப் பார்ப்பவர்கள் pedophilia மனநோய்க்கு ஆளாகிறார்கள் என்றால், இப்படங்களில் ஈடுபடுத்தப் படுவதற்காக குழந்தைகள் உலகெங்கும் கடத்தப்படுகிறார்கள். இதன் விளைவாக எச்.ஐ.வி, பிற பாலின பரவும் நோய்த்தொற்றுகள், வலி, நோய், தேவையற்ற கர்ப்பம், சமூக தனிமைப்படுத்தல் போன்றவற்றை குழந்தைகள் அனுபவிக்கிறார்கள்.

இத்தகையதொரு முக்கியமான சமூகப் பிரச்சனையைதான் நெஞ்சம் பதறும் வகையில் காட்சிப் படுத்துகிறது சித்தா.

பழனியில் துப்புறவு ஆய்வாளராகப் பணியாற்றுபவர் ஈஸ்வரன் (சித்தார்த்). அண்ணி (அஞ்சலி நாயர்) அண்ணன் மகள் சுந்தரியோடு ( சஹஸ்ர ஸ்ரீ) வாழ்கிறார் . அண்ணன் மகளென்றால் ஈஸ்வரனுக்கு உயிர் . ஈஸ்வரனின் காதலியாக நிமிஷா சஜயன்.

சுந்தரியின் வகுப்புத்தோழி பொன்னி (அபியா தஸ்நீம்) . ஒரு நாள் சிறுமி பொன்னி பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகிறாள். அவளை வீடு கொண்டு வந்து சேர்க்கும் ஈஸ்வர் மீது பழி விழுகிறது.

சில நாட்களிலேயே சுந்தரியும் பாலியல் விழைவின் பொருட்டு கடத்தப்படுகிறாள். அவள் மீட்கப்பட்டாளா? தன் மீது விழுந்த பழியிலிருந்து ஈஸ்வரன் மீண்டானா? Child abuse செயலில் ஈடுபடுபவர் யார்? வழக்கம்போல அவன் நாயகனால் பழிவாங்கப்பட்டானா? விரிகிறது சித்தா.

ஒரு ஃபீல் குட் படம்போலத் தொடங்குகிறது சித்தா. போகப்போக மனதை அழுத்திப்பிழியும் ஒரு துன்பியல் அவலச்சித்திரமாகிறது.

மனிதர்களுக்குள் வளரும் மிருகங்களை அழிக்கவேண்டிய, கல்வி, மதம், கலை அனைத்தும் , நுகர்வானதன் விளைவு இத்தகைய சீரழிவுகள்.

பெண் குழந்தைகளை நம்பி தெரிந்தோர் வீடுகளுக்கு அனுப்ப முடியாத நிலையை நம் காலம் உருவாக்கியுள்ளது. வயது கனிந்த நிலையில் இருப்பவர்கள், குழந்தைகளை ஆசையோடு அரவணைப்பது, கன்னத்தை வருடுவது, உச்சிமுகர்வது, என அனைத்தையும் அறவீழ்ச்சியடைந்த சமூகம் bad touch ஆக பார்க்கப்படும் அவலம்.

ஆனாலும் வேறு வழியில்லை. எந்த இருளில் எந்த விலங்கு பதுங்கி இருக்கிறது? என்பது தெளிவற்றதாக இருக்கிறது. இத்தகைய pedophilia ஆட்களை என்ன செய்வது? என்பதை இப்படத்தில் முக்கியமான விவதமாக மாற்றுகிறார் நிமிஷா சஜயன்.

இவர்களை கல்லால் அடித்துக் கொல்லவேண்டும். பிறப்புறுப்பை வெட்டவேண்டும். தூக்கில் போடவேண்டும்! என்பதெல்லாம் உணர்ச்சிவயப்படுகிற பொதுச்சமூகத்தின் அந்தந்த நேரத்து நீதியாக இருக்கிறது.

பயத்தை உருவாக்கினால்தான் இவர்கள் திருந்துவார்கள் என்பது
ஓர் எளிய சமன்பாடு. அச்சமே இத்தகைய ஆளுமைச் சிதைவை உருவாக்குகிறது என்பதையும் பரிசீலிக்க வேண்டும்.

இன்று சர்வதேச மனநல தினம்.

குழந்தைகள் மூளையோடு பிறக்கின்றனர். பிறகு, சமூகமே குழந்தைகளுக்கு மனத்தை கையளிக்கின்றன. படிப்படியாக வளரும் அக்குழந்தை நாம்தான் மனமா? மனம்தான் நாமா? என்கிற நிலைக்கு வந்தடைகிறது! மனம்தான் நாம் என்பதை இந்தச் சமூக அமைப்பு
நம்ப வைக்கிறது.

‘மனநலம் என்பது, ஒருவர், தன்னைத் தன்னோடும், தன்னைப் பிறரோடும் இணைத்துக் கொள்ளும் திறன்’ என்கிறது WHO.

‘மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும்’
என்கிறார் வள்ளுவர்.

நலம் என்பதை, குறளுக்கு உரை எழுதிய பெருமக்கள் ‘நன்மை’ என்கிறார்கள். உடல் நலத்தை விடவும், மனநலம் மிகவும் அவசியம். நாம் தலை நிமிர்ந்து நடக்க, மனம் நிமிர வேண்டும்.

‘யாரையும் அவர்களின் அழுக்கு கால்களால் என் மனதில் நடமாட அனுமதிக்கமாட்டேன்!’ என்றார் காந்தி. நம் குழந்தைகளுக்கு நாம் பழக்க வேண்டியதும் இதைதான்.

இதையும் படியுங்கள்:

அழுக்கு கால்களோடு மனதில் யாரையும் நடக்க அவர்கள் அனுமதிக்கக் கூடாது. குழந்தைகளிடம் நீடித்த உளவியல் சேதத்தை உருவாக்குகிற, பாலியல் வளர்ச்சியில் இடையூறை ஏற்படுத்துகிற, எதிர்காலத்தில் மற்றவர்களுடன் நம்பிக்கையான உறவுகளை வளர்ப்பதிலுள்ள சிக்கலை, நாம் எப்படி கடப்பது? என்பதை ரத்தத்தோடு சதையோடு வலியோடு கண்ணீரோடு சொல்லியிருக்கிற படம் சித்தா.

விழிப்புணர்வு படம் எனும் நிலையிலிருந்து வளர்த்து, இதை ஒரு கலைப்படைப்பாக மாற்றியிருக்கிற இயக்குனர் அருண்குமார், தயாரித்திருக்கும் சித்தார்த் மற்றும் இப்படக் குழுவினர் அனைவரும் நம் பாராட்டுக்குரியவர்கள்.

‘புத் ‘ என்கிற வேர்ச் சொல்லுக்கு ‘விழிப்பு’ என்பது பொருள். விதை விழிக்கிறபோதுதான் செடியாகிறது. மலராகிறது. கனியாகிறது. கனிகிற நிலையே புத்தநிலை.

அதிக புன்னகை.
துளி கண்ணீர்.
அதிக இரக்கம்.
குறைந்த தீர்ப்பிடல்.
அதிக அன்பு.
குறைந்த வெறுப்பு.
அதிக பாக்கியம்.
குறைந்த மன அழுத்தம்.

என, நம் ரோஜா தோட்டத்தை
மலர வழிகோலுகிறது சித்தா.

கரிகாலன்.
எழுத்தாளர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here