பீகார் தலைநகர் பாட்னாவில் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பயிலரங்கில் 20 முதல் 30 ரூபாய் மதிப்புள்ள உதவிகளை அரசு வழங்க முடியவில்லையா ?என்று ஒரு மாணவி கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த மூத்த பெண் ஐஏஎஸ் அதிகாரி, உங்களின் கோரிக்கைக்கு முடிவே கிடையாதா? இன்று இருபது, முப்பது ரூபாய் மதிப்புள்ள சானிட்டரி பேட் கேட்பீர்கள், நாளைக்கு ஜீன்ஸ் பேண்ட் கேட்பீர்கள், ஏன் நாளை மறுநாள் அழகான காலணி கொடுக்க முடியாதா? என்பீர்கள்.

இப்படிப் பேசிய ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜோத் கவுர் பம்ரா. இதோடு நிற்கவில்லை, இறுதியில் குடும்ப கட்டுப்பாடு என்று வரும்போது ஆணுறையும் கேட்பீர்கள் என்று பதிலளித்தார்.

பாலின சமத்துவமின்மையை, ஒழிப்பதற்கான அரசின் திட்டங்களை பற்றி சிறுமிகளுக்கு தெரியப்படுத்துவது பயிலரங்கின் நோக்கம். ஆனால், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு கழகத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ஹர்ஜோத் கவுர் பம்ராவின் இந்த பேச்சு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுவும் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு அவர் அளித்த பதில் மிகவும் வெட்கக்கேடானது!

அது மட்டுமல்ல, அந்த கேள்வி – பதில் மீண்டும் தொடர்கிறது. ஒரு மாணவி கேட்கிறார் ஓட்டு கேட்க வரும் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் அல்லவா? அந்த கேள்விக்கு கவுர் கொடுத்த பதில் தான் அவர் யார் என்பதை நமக்கு புரிய வைத்தது. பதில் இதோ! ‘இது முட்டாள்தனம் நீங்கள் வாக்களிக்கத் தேவையில்லை! ‘பாகிஸ்தானுக்கு போ’ என்று கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த அந்த மாணவி “நான் ஹிந்துஸ்தானி நான் ஏன் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும்?” என்று கூறினார்.

அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் ஆர்எஸ்எஸ் 

உரிமையை கேட்டால் ‘பாகிஸ்தானுக்கு போ’ என்பதெல்லாம் சங்பரிவார கும்பலின் எதிராளியை கோபப்படுத்தும், மடைமாற்றும் பேச்சு. இதையேதான் அந்த அதிகாரியும் கையாண்டுள்ளார். பீகாரில் நிதிஷ்குமார் கூட்டணியில் இருந்து பாஜக கழட்டி விடப்பட்டாலும், அதிகாரத்தில் இருப்பது என்னவோ ஆர்எஸ்எஸ் கும்பல் தான். இவரின் அதிகார திமிர் பிடித்த பேச்சே அதற்கு உதாரணம்.

மக்களை நிர்வகிக்கும் பொறுப்பில் இருக்கும் இந்திய குடிமைப் பணி அதிகாரிகளுக்கு குடிமக்களை இப்படித்தான் அணுக வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறார்கள் போலும். ஒரு மாணவி இயல்பாக கேட்கும் கேள்விக்கு இவ்வளவு வன்மமான பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லையே! இவர்களைப் போன்ற அதிகாரிகள் முதலாளிகளிடமும், செல்வந்தர்களிடமும் நிச்சயம் இப்படி நடந்து கொள்ளமாட்டார்கள். அன்றாடம் உழைக்கும் மக்களிடமும், அவர்களின் குழந்தைகளிடமுமே அப்படி நடந்து கொள்கிறார்கள். இவர்கள் மக்களுக்கு வேலை செய்வதற்காக உருவாக்கப்பட்டவர்கள் அல்ல.

20 – 30 ரூபாய் மதிப்புள்ள சானிடரி நாப்கின் கூட வாங்க முடியாத நிலையில் இந்தியாவின் அடித்தட்டுப் பெண்களும், பள்ளியில் பயிலும் மாணவிகளும் உள்ளார்கள். அம்பானி அதானிகளுக்கு லட்சம், கோடி வாரிக் கொடுக்கும் பாஜக அரசு, மாணவிகளுக்கு 20 -30 ரூபாய் செலவு செய்ய மறுக்கிறது. குறிப்பாக இந்த கோரிக்கையை எழுப்பியது மாணவிகள். வருங்கால இந்தியாவின் தூண்களான அவர்களை தான் சங்பரிவார் கும்பல் ஏளனம் செய்கிறது.

இதையும் படியுங்கள்: போலீஸ்  அதிகாரத்தின் உளவியல்

பீகார் போன்ற பின்தங்கிய மாநிலங்கள், கவுர் போன்ற ஐஏஎஸ் அதிகாரிகளால் மேலும் பின்னுக்கு இழுத்து செல்லப்படும் நிலைக்கு தள்ளப்படும். பீகார் மட்டுமல்ல வட மாநிலங்கள் பலவும் பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமலும், சில ஊர்களில் பள்ளிகளே இல்லாமலும் இருக்கிறது. இதற்கு அரசியல்வாதிகள் மட்டுமல்ல கவுர் போன்ற அதிகாரிகளுக்கும் பொறுப்புண்டு.

அரசு வேலையில் குறிப்பாக பெண்கள் முன்னேற்றம் சம்பந்தமான துறையில் வேலை பார்க்கக் கூடிய ஐஏஎஸ் அதிகாரியே, மாணவிகளின் கோரிக்கையை மறுத்தால், ஏளனம் செய்தால் நம் வரிப்பணத்தில் வழங்கக் கூடிய சம்பளம் எதற்கு? கார்ப்பரேட்டுகளுக்கும், காவிகளுக்கும் அடிமை சேவகம் செய்வதற்காகவா? இந்த கேள்வி அனைத்து மக்களின் மனதிலும் எழ வேண்டும்.

சமூக வலைதளங்களில் இந்த பிரச்சினை, விமர்சனத்திற்கு உள்ளானதும் பீகார் அரசு அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தது. ஆனால் சாவர்க்கரின் வாரிசான ஹர்ஜோத் கவுர் பம்ரா மன்னிப்பு கேட்டாலும், அது அவர்களின் பதவியை காப்பாற்றிக் கொள்ளவே!ஆனால் இதுபோன்ற ஐஏஎஸ் அதிகாரிகளின் அதிகாரத் திமிரை அடக்க வேண்டுமானால் மக்கள் ஒன்றை உணர வேண்டும். அரசு அதிகாரிகள் நமக்கு மேலானவர்கள் அல்ல, நமக்கு சேவை செய்வதற்காக நமது வரிப்பணத்தில் சம்பளம் கொடுத்து அமர்த்தப்பட்ட பணியாளர்கள். இந்தக் கண்ணோட்டத்தில் அதிகாரிகளை அணுகுங்கள். கேள்வி எழுப்புங்கள்.

  • சுவாதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here