முன் குறிப்பு: ஓசி(OC) எனும் சொல் எப்படி வந்தது? ஆங்கிலேயர்கள் இங்கு ஆட்சி புரிந்த போது, அலுவலக ரீதியாக அனுப்பப்படும் கடிதங்களில் On Company service என்ற முத்திரை இருக்கும். அந்த கடிதங்கள் கட்டணமின்றி அனுப்பப்பட்டன. இதுவே ஓசி(OC) சர்வீஸ். போலி சுதந்திரத்துக்குப் பிறகு, இது இலவச சேவை என்ற பொருளில் மட்டுமல்லாமல் ஏளனமான அர்த்தத்துடன்தான் புழக்கத்தில் உள்ளது.

********

தமிழகத்தின் உயர்கல்வித்துறை அமைச்சர்; பொன்முடி, சென்னையில் பெண்கள் மிகுதியாக கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில், “இப்ப பஸ்ல எப்படி போறீங்க, இங்க இருந்து கோயம்பேடு போகணும்னாலும், வேற எங்க போகணும்னாலும் ஓசி. ஓசி பஸ்ல தானே போறீங்க?” என்று ஏளனமாகக் கேட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம். சின்ன சேலத்தில் அரசு நகரப் பேருந்தில் பயணித்த பெண்கள், பழைய பேருந்து நிறுத்தத்தில் நிறுத்த சொன்னதற்கு, நிற்காமல் வெகு தூரம் சென்று ஓட்டுனர் நிறுத்தியுள்ளார். கேள்வி கேட்ட பெண்ணிடம், “நீ யாரிடம் வேண்டுமானாலும் போய் புகார் பண்ணிக்கோ. ஒசி டிக்கெட்தானே” என ஒருமையில் தரக்குறைவாக பேசினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதால் அந்த ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.  இலவசமாக பயணம் செய்யும் பெண்களை ஏளனமாக பார்ப்பதும், பேசுவதும், நிறுத்தங்களில் நிற்காமல் செல்வதும், மட்டுமல்லாமல் அவர்களை வசை பாடுவதும் என இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தின் பல இடங்களில் நடந்து வருகின்றன.

மக்கள் செலுத்தும் வரிப் பணத்தில் இருந்துதான், அதில் ஒரு பிரிவினருக்கு (பெண்களுக்கு) சலுகையாக (கட்டணம் இல்லாப் பயணம்) செலவழிக்கப்படுகிறது என்ற புரிதல் கொஞ்சம் கூட இல்லாமல் ஏதோ இவர்கள் உழைத்து சம்பாதித்த பணத்தில் டீசல் போடுவதைப் போன்ற நினைப்பு உள்ளது. தாங்களும் போக்குவரத்து ஊழியர் எனும் அடிப்படையில், அரசுப் பேருந்துகளில் ஓசியில் தான் பயணம் செய்கிறோம் என்ற உணர்வு இல்லாத சில ஊழியர்கள் இப்படி நடந்து வருவது வேதனையான விசயம்தான். தற்போது அமைச்சரும் அதே நினைப்பில் தான் அப்படி கேட்டுள்ளார்.

அமைச்சர்கள் ஓசியில் பயணம் செய்வதில்லையா? அரசு பங்களாக்களில்,மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்படும் வீடுகளில் ஓசியில்தானே தங்குகிறார்கள். தலைமைச் செயலக கேண்டீன் உள்ளிட்ட பல இடங்களில் ஓசியில்தானே உண்கிறார்கள். இதுபோக அவர்களுக்கான கார்,  தொலைபேசி உள்ளிட்ட ஏராளமான இலவசங்களை அனுபவிக்கிறார்கள்தானே? தமிழகத்தின் அமைச்சர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களது சம்பளம் போக ,மாதம் ஒன்றுக்கு பத்து லட்சத்திற்கு மேலாக செலவாவதாக புள்ளி விவரங்கள் உள்ளன. அனைத்திற்கும் மேலாக இவர்களுக்கான இந்த செலவுகள் எல்லாமே மக்களின் வரிப்பணத்தில் இருந்துதானே செய்யப்படுகின்றன.

“இலவசம் என்பது சமூக நீதியின் ஒரு அங்கம். ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த சமூகத்தில் அனைவரையும் ஒரே தட்டில் நிறுத்த இலவசங்கள் அவசியம். இதுதான் திராவிட மாடல்!” என்றெல்லாம் திமுகவினர் பேசிவரும் நிலையில், பொன்முடி இப்படிப் பெண்களை கேவலப்படுத்தி உள்ளார். இது கண்டிக்கக் கூடிய செயல்தான் என்றாலும் இதை வைத்து அதிமுக- வும், பாஜக – வும் ஆதாயம் தேடப்பார்க்கின்றன. இவர்கள் தமிழ் மக்களை நடத்திய விதம் ஊரறிந்தது. அதிமுக-வின் ஐ.டி விங்கைச் சேர்ந்த நபர் ஒருவர், அதிமுக-வைச் சேர்ந்த மூதாட்டி ஒருவரை வைத்து, கோவை நகரப் பேருந்தில் நடத்துனரிடம், நான் ஓசியில் பயணம் செய்ய மாட்டேன் எனப் பிரச்சினை செய்ய வைத்து, அதை வீடியோவாக எடுத்து பரப்பி வருகிறார். தற்போது நடந்துவரும் ஓசி பற்றிய விவாதத்தில் புகுந்து இப்படியான நாடகங்களை நடத்தி கீழ்த்தரமான அரசியல் செய்யும் இவர்களையும் மக்கள் நிராகரிக்க வேண்டி உள்ளது.

மாநிலத்தில் இப்படியான கூத்துகள் அரங்கேறும் வேளையில், மத்தியில் ஆளும் பிரதமர் மோடி;  அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்டுகளுக்கு பல லட்சம் கோடிகளை வரிச்சலுகை, வாராக்கடன் தள்ளுபடி எனும் வகையில் இலவசங்களை வாரி வழங்கி வருகிறார். ஆனால் மக்களுக்கு வழங்கும் சில அடிப்படை உரிமைகளை மட்டும் இலவசங்களாகப் பார்த்து, அதை “ரெவடி கலாச்சாரம்” என ஏளனம் செய்து நிறுத்தவும் சொல்கிறார். மோடி அனுபவிக்கும் இலவசங்கள் குறித்து நீண்ட பட்டியலே போடலாம். ஆக இலவசங்களைப் பெறும் தகுதி கூட எங்களைப் போன்ற ‘கனவான்’களுக்குத்தான் உண்டு; மக்களின் வரிப்பணத்தை அனுபவிக்கும் உரிமை கூட தங்களுக்குதான் உண்டு என்றும், மக்களுக்கு வழங்குவது தாங்கள் போடும் “பிச்சை” என்ற நினைப்பில்தான் நம்மை ஆள்பவர்கள் அதிகாரத் திமிரோடு நடந்து கொள்கிறார்கள்.

இதையும் படியுங்கள்: இயற்கை வளங்களை சூறையாடும் திமுக அரசு!

பொன்முடி இப்போது மட்டும் இதுபோல பேசவில்லை. இதற்கு முன்பும் விழுப்புரம் மாவட்டத்தில் நியாயவிலைக் கடை கட்டிட திறப்பு விழாவில் அவர் பேசும்போது, ஒரு ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவரான பெண்மணியை பார்த்து,” ஏம்மா நீ எஸ்சி தானே?” என மேடையிலேயே அருவருக்கத் தக்க வகையில் கேட்டார். பெண்களுக்கு திராவிட மாடல் முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை விளக்க, இது போன்றா கேவலப்படுத்துவது? ஆதிக்க சாதித் திமிரில் ஊறிப் போய் கிடப்பதால்தான் இப்படியெல்லாம் பேச முடிகிறது. இது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வராதா என்ன?

வேறொரு கூட்டத்தில் சமீபத்தில் பேசும்போது “தாழ்த்தப்பட்டவர்கள் கோயில் இருக்கிற ரோட்ல முன்பெல்லாம் நடக்க முடியுமா? இதெல்லாம் பெரியார் போட்ட பிச்சை” என்றும் பேசி உள்ளார். இதேபோல திமுகவின் ஆர்.எஸ். பாரதியும் ஒருமுறை பேசியுள்ளார். அனைத்து தரப்பு மக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதற்காக போராடி உரிமைகளை பெற்றுத் தந்தார் பெரியார். ஆனால் அமைச்சர்களது ஆதிக்க சாதி மனப்பான்மைதான் இதை பிச்சையாக பார்க்க வைக்கிறது.

சுயமரியாதைக்கு எதிராக, அதற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் பட்டியல் இனத்து மக்களிடம் மட்டும் இது போன்ற கேவலமான பேச்சை இவர்கள் பேசுகின்றனர். அமைச்சர்கள் கண்ணப்பன், கே.என். நேரு, கேகேஎஸ்எஸ்ஆர் போன்றோரும் இதுபோல ஒடுக்கப்பட்ட சமூக மக்களிடம் தங்களது ஆதிக்கசாதித் திமிரையும், தீண்டாமைப் போக்கையும் வெளிக்காட்டிக் கொண்டுள்ளனர்.

நாங்கள் பெரியாரின் சீடர்கள், சமூக நீதியின் காவலர்கள் என்றெல்லாம் பேச்சு ஒன்றாகவும் நடைமுறையில் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் வேறொன்றாகவும் –  ஆண்டைத் தனமாகவும் – உள்ளது. இது சகித்துக் கொள்ள முடியாத  ஆணவப் போக்காகும். இதற்கு எதிராக மானமுள்ள, சுயமரியாதை உள்ள அனைவரும் பேச வேண்டும், எதிர்ப்பு காட்ட வேண்டும். அப்போதுதான் இது போன்ற ஆண்டைத் தனங்கள் அடங்கும்!

ஆக்கம்: குரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here