டைட்டானிக் படத்தின் மூலம் திட்டமிட்டு பிரபலமாக்கப்பட்ட டைட்டானிக் கப்பல், அட்லாண்டிக் பெருங்கடலின் அடியில் புதைந்து கிடைக்கிறது. பூமியின் மேல் உள்ள இடத்தை எல்லாம் சுற்றிப் பார்த்து சலிப்படைந்த உலக கோடீஸ்வரர்கள் புதிது புதிதாக கண்டு களிப்பதற்காக அலைகிறார்கள். நுகர்வு வெறியைத் தூண்டி, விதம் விதமாக புதிய புதிய கேளிக்கை சுற்றுலாக்களை உருவாக்கி வருகின்றனர். விண்வெளி சுற்றுலா முதல் ஆழ் கடல் சுற்றுலா வரை என முன்னெடுக்கப்படும் இவற்றை திட்டமிட்டே பிரபலப்படுத்த சுற்றுலாத்துறையில் கோலோச்சும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அலைபாய்கின்றன.

அப்படிப்பட்டவர்களால்  ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு முயற்சி தான், கனடாவில் இருந்து நீர்மூழ்கிக் கப்பலில் சென்று, அட்லாண்டிக் கடலின் அடியாழத்தில் உள்ள டைட்டானிக் கப்பலின் மிச்சம், மீதங்களை சுற்றிப் பார்ப்பது என்ற திட்டம். கடலின் அடியாழத்தில் சுமார் 12,500 அடிக்கும் கீழே புதைந்துள்ளது டைட்டானிக் கப்பல். அவ்வளவு ஆழத்திற்கு சென்று அதைப் பார்த்து என்ன பரவசம் வரப்போகிறது? வேறு யாரும் பார்க்காததை நாம் பார்க்கிறோம் என்ற அற்ப பெருமிதத்தை தவிர வேறு ஒரு வெங்காயமும் இல்லை . இதற்காக கடலுக்குள் சென்ற ஐந்து பேர் தற்போது உயிரை விட்டுள்ளனர். இதுவும் பரபரப்பாக பேசு பொருளாக மாற்றப்படுகிறது. முன்னர் டைட்டானிக் கப்பலில் சென்று மூழ்கி இறந்த அன்றைய காலகட்டத்தின் மீப்பெரும் கோடீஸ்வர குடும்பங்கள்பற்றிய கதையை, உலக மகா பெரும் இழப்பாக,  உலக மக்களின் சோகமாக திணித்து காசு பார்த்துள்ளது ஹாலிவுட் சினிமா.

டைட்டானிக் சுற்றுலா: பணக் கொழுப்பால் பரலோகம் போன கோடீஸ்வரர்கள்!
வெடித்து சிதறிய TITAN சொகுசு நீர்மூழ்கி!

தற்போது ஓசன் கேட் நிறுவனத்தின் நீர்மூழ்கி கப்பலில் சென்று ஜல சமாதி ஆகிவிட்ட இந்த ஐவர் பற்றிய கதையும் கூட ஒரு காவியமாக தயாரிக்கப்படும். அதில் ஒரே ஒரு வருத்தம் என்னவென்றால் உடன் சென்றவர்களில் இளம் பெண்கள் யாருமில்லை. ஹாலிவுட் மசாலா சேர்க்கைக்கு பொருத்தமான காம்பினேஷன் அமையாததால் படம் எடுக்க முடியாமல் போகலாம். உண்மையைத் தழுவி எடுக்கப்படும் புனை கதையாக பெண் கதாபாத்திரத்தை சேர்த்து நாளை படமாகவும் எடுக்கக்கூடும். சாவிலும் லாபம் பார்க்கும் கார்ப்பரேட்டுகள் எதற்கும் துணிவார்கள்.

நாளை 13,000 அடி ஆழம் சென்றாலும் வெடித்து சிதறாத சிறப்பு நீர்மூழ்கி என்ற விளம்பரத்துடன் கூட மீண்டும் இத்தகைய சுற்றுலாக்கள் முன்னெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. அருவெறுக்கத்தக்க மேட்டுக்குடிகளின் இத்தகைய கேளிக்கை நுகர்வு வக்கிரத்துக்கெல்லாம் தீனி போடவே மீடியாக்களும் இதை பரபரப்பு செய்தியாக்கி பந்தி வைக்கின்றன.

இதையும் படியுங்கள்: எது அழகு என்று புரியாமல்  பலியாகும் நடுத்தர வர்க்க- மேட்டுக்குடி பெண்கள்!

மண்ணில் வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கு உண்ண ஒருவேளை உணவில்லை என்று கதறிக் கொண்டிருக்கும் நிலையில், நம் கவனத்தை கடலில் மூழ்கிய ஒரு சிறு நீர் மூழ்கி கப்பலைப் பற்றி பேசவும், அவர்களுக்காக கவலைப்படவும் தூண்டும் கேடுகெட்ட ஊடகங்களை எதைக்கொண்டு அடிப்பது? குப்பை செய்திகளில் இருந்து நாம் விடுபடுவது எப்படி? இதை வாசகர்கள் தான் ஒப்பிட்டுப் பார்த்து தீர்மானிக்க வேண்டும் .

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here