NEOM நகரத்திற்காக கொல்லப்படும் சவுதி அரேபியா பழங்குடிகள்!

0
நியோம் நகரம் கட்டமைப்பதற்காக கொல்லப்பட்ட அப்துல் ரஹீம் அல் – ஹோவைட்டி

வுதி அரேபியாவில் NEOM என்ற எதிர்கால நகரத்தை நிர்மாணிப்பதற்காக குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் பழங்குடிகளை சவூதி அரசு வெளியேற்றி வருகிறது. இதனை எதிர்க்கும் மக்களை கொல்ல உத்தரவிட்டதாக சவூதியின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

கர்னல் ரபீஹ் அலனேசி பிபிசியிடம் கூறுகையில் “தற்போது கட்டப்பட்டு வரும் லீனியர் ஸ்மார்ட் சிட்டியான தி லைனுக்கு(The Line) வழிவகை செய்ய தனது வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதை  எதிர்த்ததற்காக கிராமவாசி சுட்டுக் கொல்லப்பட்டார்.”

அவர் மேலும் கூறுகையில் அல் – குரைபா என்ற கிராமத்தில் இருந்து  குடியிருப்பாளர்களை வெளியேற்ற உத்தரவிட்டதாகவும் அந்த கிராமம் தெற்கே 4.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதாகவும் பல நூற்றாண்டுகளாக இப்பகுதியில் வசித்து வரும் அல் ஹோவைடாட் பழங்குடியினரின் பூர்வீகமாகவும் அந்த கிராமம் இருந்துள்ளது என தெரிவித்தார்.

அப்துல் ரஹீம் அல் – ஹோவைட்டி இவர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். சமூக ஆர்வலரான இவர் பழங்குடியினர் வெளியேற்றம் மற்றும் மெகா நகரத்தின் கட்டுமானத்திற்கு எதிராக சமூக ஊடகங்களில் பல வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

அவர் தனது வீடியோக்களில்  பிராந்தியத்தின் வரலாறு மற்றும் மரபுகளுக்கு அன்னியமான திட்டத்திற்காக அரசாங்கம் தனது மக்களை வெளியேற்றுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

2020 ஆம் ஆண்டு அப்துல் ரஹீம் அல் – ஹோவைட்டி  NEOM நகரத்தின் கட்டுமானத்திற்கு தனது வீட்டை விட்டுக் கொடுக்க மறுத்ததால் சவுதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அந்த நேரத்தில் சவூதி சமூக ஆர்வலர்களால் அப்துல் ரஹீம் அல் ஹோவைட்டியின்  தியாகம் என்ற அரபு ஹேஷ்டேக்கின் மூலம் துப்பாக்கிச் சூடு நடந்த அவரது வீட்டின் படங்களையும் இணைத்து சமூக வலைதளங்களில் பரப்பினார்கள். உலகம் முழுவதும் இதற்கு எதிரான கண்டனங்கள் எழுந்தன. அதுமட்டுமல்லாமல் துப்பாக்கி சூடு நடத்தியவர்களை முகமது பின் சல்மானின் குண்டர்கள் என்றும் கண்டித்தார்கள்.

தற்போது லண்டனில் வசித்து வரும் முன்னாள் உளவுத்துறை அதிகாரி அலனேசி மேலும் கூறுகையில் ஏப்ரல் 2020-ல் பூர்வீக பகுதியில் இருந்து வெளியேற்றுவதற்கு எதிராக போராடும் பழங்குடியினரை கிளர்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டதாக கூறி வீட்டிலிருந்து வெளியேற மறுப்பவர்களை சுட்டுக் கொல்ல ஆணை வழங்கியதாக கூறுகிறார்.

NEOM நகரம் சவுதியின் ‘பட்டத்து இளவரசரான’ முகமது பின் சல்மானின் முக்கிய திட்டமாகும். அதனால் அவர் ஹோவைடாட்டை கையாளுவதில் மிகவும் கொடூரமாக நடந்து கொண்டார் என்றும் அலனேசி கூறுகிறார்.

ALQST மனித உரிமைகள் அமைப்பு கடந்த ஆண்டு அல் ஹோவைடாட் பழங்குடியினத்தைச் சேர்ந்த குறைந்தது 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 15 பழங்குடியினர் மீது சவுதியின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் 10லிருந்து 50 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். குறைந்தபட்சம் ஐந்து பேருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

NEOM நகரத்தை கட்டமைப்பதற்காக 500 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் 28 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது அரேபியா விஷன் 2030 திட்டத்தின் ஒரு பகுதியாகும். அதன் முதல் தொடக்கம் தான் தி லைன்.

NEOM நகரம் யாருக்கானது?

பழங்குடிகளை அவர்களது சொந்த மண்ணில் இருந்து விரட்டியதிலிருந்தே இந்த நகரம் யாருக்கானது என்பதை புரிந்துக் கொள்ளலாம்.

2052க்குள் பூமிக்குள் இருக்கும் கச்சா எண்ணெய் தீர்ந்து விடும் என்கிறது ஆய்வு. 1938 ல் இருந்து சவூதி அரேபியா பொருளாதாரம் எண்ணெய் வளத்தை சார்ந்துள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக எண்ணெய் உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கிறது சவூதி அரேபியா. கிட்டத்தட்ட 83 நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்கிறது.

சவூதியை ஆளும் மன்னர் குடும்பத்தின் வசம் 110 லட்சம் கோடி சொத்து உள்ளது. இது அனைத்தும் எண்ணெய் வருமானம் மூலம் வந்தது. 1938க்கு முன்னர் சவூதி ஆன்மீக சுற்றுலாவின் மூலம் வந்த வருமானத்தையே நம்பியிருந்தது. அதனால் நாளை கச்சா எண்ணெய் தீர்ந்தால் கூட பொருளாதாரத்தையும் தனது சுகபோக வாழ்வையும் நிலைநிறுத்திக் கொள்ள உருவாக்கப்பட்ட திட்டம் தான் நியோம் நகரம்.

இதையும் படியுங்கள்: சிங்கார சென்னை 2.0. கார்ப்பரேட்டுகள் உள்ளே! பூர்வகுடிகள் வெளியே!!

இதில் உழைக்கும் மக்களுக்கு இடம் கிடையாது. ஹாலிவுட் படங்களில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கும் செயற்கை நகரங்களையே விஞ்சியது தான் இந்த NEOM நகரம். இது ஒரே நேர்கோட்டில் 170 கிலோ மீட்டர் தூரம் வரை உருவாக்கபட இருக்கிறது. அதனாலேயே இதற்கு The Line எனப் பெயரிட்டுள்ளார்கள். இந்த நகரம் Renewable energy மூலம் செயல்பட உள்ளதாகவும் கூறுகிறது சவுதி அரசு.

மேல்தட்டு வர்க்கங்களின் சுகபோக வாழ்வை பாதுகாக்கவும் சவுதி மன்னர் குடும்பம் தொடர்ந்து செல்வ செழிப்போடு வாழ்வதற்கும் ஏற்ற வகையில் அமைக்கப்படும் நகரத்தில் சாதாரண உழைக்கும் மக்களுக்கு இடம் கிடைக்காது என்பது நாம் அறிந்த விசயம் தான்.

அதனால் தான் தி லைனுக்கு அருகில் கூட அவர்கள் வசிக்கக் கூடாது என்று பழங்குடிகளை வெளியேற்றுகிறது சவுதி அரசு. வெளியேற மறுப்பவர்களை சுட்டுக் கொல்லவும் உத்தரவிடுகிறது. இத்தனை நாட்கள் சவூதியின் வளர்ச்சியில் பங்கு வகித்த மக்கள் எண்ணெய் வளம் சுரண்டல் முடிவுக்கு வரும் பொழுது தூக்கியெறியப்படுகிறார்கள்.

ஸ்மார் சிட்டி திட்டத்திற்காகவும், சிங்கார சென்னை திட்டத்திற்காகவும் சென்னை பூர்வக்குடிகள் எப்படி அவர்கள் வாழ்விடங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டார்களோ அதே நிலை தான் இன்று சவூதியிலும். எல்லா நாடுகளிலும் ஆளும் அரசுகள் அமைக்கும் புதிய நகரங்கள் நமக்கானவை அல்ல என்பதை நாம் உணர வேண்டும். ஆனால் அந்த நகரங்களை அமைக்க நம்மை தான் பயன்படுத்திக் கொள்ளும் இந்த சுரண்டும் வர்க்கம். எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் தீரத்துடன் எதிர்த்து நின்று போராடும் சவுதி பழங்குடிகளிடம் இருந்து பாடம் கற்போம்.

  • நந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here