ஆந்திர மாநிலம் சித்தூரில் ஒரு திருட்டு சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் மாத்தூரில் வசிக்கும் நாடோடி குறவர் இன குடும்பத்தைச் சேர்ந்த 5 மற்றும் 7 வயது சிறுவர்கள், நான்கு பெண்கள் உட்பட 10 பேரை எல்லை தாண்டிவந்து ஆந்திர மாநில போலீசு விசாரணைக்கு என்று கடந்த 11-ஆம் தேதி கடத்திச்சென்று கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த அப்பகுதியின் போலீசுக்குத் தகவல் எதுவும் தெரிவிக்காமல் இரவோடு இரவாக கடத்திச்சென்று, கடுமையாக தாக்கியும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து அவர்களின் பிறப்புறுப்புகளில் மிளகாய் பொடியைத்தூவி பல்வேறு கொடுமைகளை செய்திருக்கும் விடயம் தற்போதுதான் வெளிவந்திருக்கிறது. இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகத் தமிழக காவல்துறை அறிவித்திருக்கிறது.

பொதுவாகவே இரண்டு மாநிலம் சம்பத்தப்பட்ட வழக்காக இருக்கும் பட்சத்தில், அந்தந்த மாநில போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, குற்றவாளி வசிக்கும் மாநிலத்திலுள்ள போலீசின் துணையோடுதான் அக்குற்றவாளியை கைது செய்யவேண்டும், பின்னர் அம்மாநில போலீசின் அனுமதிபெற்றுத்தான் தனது மாநிலத்துக்கு குற்றம் சாட்டப்பட்டவர்களை அழைத்துவந்து விசாரிக்கவேண்டும், என்பதுதான் சட்டம். ஆனால் குறிப்பிட்ட இச்சம்பவத்தில் இத்தகைய நடைமுறைகளை எள்ளளவும் மதிக்காத ஆந்திர போலீஸ், சட்டவிரோதமாக தமிழ்நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, மேற்சொன்னவர்களை கடத்திப்போயிருக்கிறது.

மேற்சொன்ன நடைமுறைகள் எல்லாம் ஆந்திர போலீஸிற்கு தெரியாதது அல்ல! ஏற்கனவே 2015-ஆம் ஆண்டு செம்மரம் வெட்டினார்கள் என்று 20 தமிழர்களை துடிக்க துடிக்க சுட்டுக்கொன்ற ஆந்திர போலீசு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தமிழ்நாட்டினர்தானே! அதுவும் பழங்குடியின குறவர்கள்தானே! என்ற எகத்தாளத்தில் மீண்டும் இப்படிப்பட்ட கொடுமைகளை அரங்கேற்றியிருக்கின்றனர்.

இதையும் படியுங்கள்: கையை உடை! காலை உடை! பல்லை உடை! சட்டப் பூர்வ கிரிமினல் கும்பல் போலீசு ஆட்சி!

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், அவர்களின் சரக்குப்பெட்டகங்களை காவல்காக்க ஏற்படுத்தப்பட்ட காவல்துறை, பின்னர் மக்களின் விடுதலை வேட்கையை ஒடுக்கும் ஏவல்துறையாக மாற்றப்பட்டது. வெள்ளைக்கார எஜமானர்கள் வீசும் எலும்புத்துண்டுகளுக்காக சொந்தநாட்டு மக்களை ஒடுக்கி ஜாலியன் வாலாபாக் போன்ற படுகொலைகளை நிகழ்த்தி வெள்ளைக்காரர்களையே விசுவாசத்தில் விஞ்சிநின்றனர் காவல்துறையில் பணிபுரிந்த இந்தியர்கள்.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் வெள்ளையர்களுக்கு மிக மிக விசுவாசமாக இருந்த காவல்துறை, போலிசுதந்திரத்துக்குப்பின் உள்ளூர் ஜமீன்தாரர்களுக்கும், ஆதிக்கசாதி வெறியர்களுக்கும், முதலாளிகளுக்கும் விசுவாசமாக நடந்து கொண்டது. அன்று முதல் இன்று வரை உழைக்கும் மக்கள்மீதும், ஒடுக்கப்பட்ட மக்கள்மீதும், சிறுபான்மை முஸ்லீம் மக்களின்மீதும் தனிப்பட்ட வன்மம் கொண்டே இயங்கி வருகிறது. அதன் வெளிப்பாடாகத்தான் அன்றைய ஹாஷிம்புரா படுகொலை முதல் இன்றைய ஸ்டெர்லைட் படுகொலை என்று பல சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு உள்ளன. அதில் ஒரு சிறுதுளிதான் ஆந்திர போலீசின் இந்த அராஜகம்.

Tuticorin: Police personnel baton charge at a protestor 

ஆந்திர போலீசின் அராஜகத்தால் பாதிக்கப்பட்டுள்ள பழங்குடியின மக்களுக்காக குரல் கொடுக்கும் அதே நேரத்தில், தோற்றம் முதல் இன்றுவரை தனியார் சொத்துகளை காப்பாற்றுவதற்கும், பணபலம், அதிகாரபலம், ஆதிக்கசாதி சார்பாகவும், நாட்டின் பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கும், சிறுபான்மையினருக்கும், பழங்குடியினருக்கும், பெண்களுக்கும் எதிராகவும் இருக்கும் காவல்துறையை முற்றாகக் கலைத்துவிட்டு, ‘பாதிக்கப்படும் மக்கள்பக்கம் நின்று மக்களுக்கு பதில்சொல்லக் கடமைப்பட்டுள்ள ஒரு ஜனநாயக அமைப்பாக காவல்துறையை புதிதாக நிர்மாணிப்பதே, காவல்துறையின் ஒடுக்குமுறைகளுக்கு நிரந்தரத்தீர்வாக அமையும்’. அத்தகையத் தீர்வை முன்னிறுத்தும் ஜனநாயக, முற்போக்கு சக்திகளை, ஐக்கியமுன்னணியாக ஒருங்கிணைப்போம்.

  • ஜூலியஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here