கடந்த திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட ஒன்றிய மாநில அரசுகளுக்கிடையான உறவை ஆய்வு செய்யும் ஓய்வு பெற்ற நீதிபதி ஜோசப் குரியன் தலைமையிலான உயர்நிலை குழுவை தவெக அரசு நேற்று (நவம்பர் 6) கலைத்துள்ளது.
இந்திய ஒன்றியம் என்பது தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இருக்கும் நிலையில் மொழிவாரி மாநிலங்களுக்காக போராடி பெறப்பட்ட உரிமைகளைப் பற்றியும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஒன்றிய – மாநில அரசு இடையான உறவு எப்படி ஒன்றியத்தில் அதிகாரக் குறிப்பு நோக்கி இருக்கிறது என்பதை பற்றியும் ஏற்கனவே தமிழ்நாடு அரசு அமைத்த ராஜமன்னார் குழு உள்ளிட்ட பல குழுக்கள் ஆய்வு செய்து தங்களது அறிக்கை கொடுத்துள்ளன. அவை எதுவும் நடைமுறைக்கு வந்ததில்லை.
எனினும் பாசிச மோடி அரசு 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து மாநிலத்துக்கு இருந்த குறைந்தபட்ச உரிமைகளைக் கூட ஒவ்வொன்றாக பறித்து வருகிறது. ஏறத்தாழ மாநிலங்களை நகராட்சிகளாக மாற்றும் வேலையை செய்து வருகிறது. எடுத்துக்காட்டாக மாநிலங்களிடம் இருந்த பொருட்களுக்கான வரியைப் ஜிஎஸ்டி என்ற பெயரில் பிடுங்கப்பட்டது. நீட் என்ற பெயரில் மாநிலங்களுடைய மருத்துவக் கல்விக் கட்டமைப்பைப் பறித்தது. மாநிலங்களிடமிருந்த கனிமவள சுரங்க உரிமைகள் ஒன்றிய அரசுக்கு மாற்றப்பட்டது. இப்படி பல்வேறு துறைகளில் எண்ணற்ற மாற்றங்களை ஒன்றிய அரசின் வரம்புக்குள் கொண்டு வந்து அதிகாரக் குவிப்பை நோக்கி மோடி அரசு செய்து வந்த நிலையில், அதை எதிர்க்கும் விதமாக அதைக் கேள்விக்கு உட்படுத்தும் விதமாக கடந்த திமுக ஆட்சியில் அதை அம்பலப்படுத்தவும் செய்ய வேண்டிய திருத்தங்களை முன் வைக்கவும் ஒரு உயர் நிலைக் குழுவை அமைத்தது. அது பல மாதங்கள் வேலை செய்து முதல் அறிக்கையை கொடுத்து விட்டது. அடுத்த இரண்டாம் பகுதியை தயார் செய்து வந்த நிலையில் தற்போது தவிர்க்க அரசால் கலைக்கப்பட்டது. இந்த குழு அமைக்கப்பட்டதன் நோக்கத்தை மின்னம்பலம் இணைய தளம் வெளியிட்ட தகவலையும், மற்றும் திமுக அமைத்தக் குழுவில் மொழிப்பெயர்ப்பாளர் பணி செய்த ஆய்வாளர் தமிழ் காமராசனின் முகநூல் பதிவையும் இணைத்துள்ளோம்.
000
தமிழ்.காமராசன் பதிவு
தமிழ்நாடே எழுக! புதுமை காண்க!
ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழு “சட்டத்தின் வழி உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல” என்பதாலும், “தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆணையத்தின் பணி இயல்புகளோடும் வரம்புகளோடும் ஒத்துபோய், அவற்றையே செய்துவருகின்றது” என்பதாலும், தமிழ்நாடு அரசாங்கம் மிகக் கவனமாகப் பரிசீலித்து, உயர்நிலைக் குழுவின் பணிகளை நிறுத்தி வைக்கின்றது. இவ்வாறு தமிழ்நாடு அரசாங்கத்தின் அரசாணை கூறுகின்றது.
முதலாவதாக, ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவை அமைப்பது குறித்து, முன்பு முதலமைச்சராக இருந்த மு.க. ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டார். அதன்வழி அரசாணை வெளியிடப்பட்டு அமைக்கப்பட்டது. இது மாநிலத்தின் அரசியல் முடிவு. இதனைக் கலைப்பது என்றால், இப்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் மாநிலச் சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியீட்டு, அதன் பின்னர் கலைப்பது குறித்த அரசாணை வெளியிடுதலே நியாயம்.
படிக்க: இந்திய அரசின் கீழ் செயல்படும் சமூக ஆய்வு நிறுவனங்களை காவு வாங்கும் மோடியின் சர்வாதிகார ஆட்சி!
இரண்டாவதாக, தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆணையமும் அரசாணை மூலம் அமைக்கப்பட்ட நிறுவனமே. தனிச் சட்டத்தின் வழி உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல. இதுவரை காலமும், ஒன்றிய-மநில உறவுகள் குறித்து ஆராய்வது என சட்ட ஆணையத்தின் பணிவரம்பில் குறிப்பிட்டிருந்தாலும், மாநிலச் சட்ட ஆணையமோ, ஒன்றியச் சட்டம் ஆணையமோ ஒன்றிய-மாநில உறவுகள் குறித்து ஆராய்ந்து கருத்துரைகளோ, அறிக்கைகளோ அளித்தது இல்லை என்பதே சரித்திரம், பூகோளம் எல்லாம்.
இதுபற்றி சிந்திக்கும் அரசியல்வாணர்கள், இது தவெகவின் கொள்கை முடிவு. அவர்களின் அரசியல் அப்படித்தான். இவ்வாறு கருதி, மிகச் சாதாரணமாகக் கடந்துசெல்ல விழைகின்றனர். இது நியாயமான அரசியல் உணர்ச்சி அல்ல. அரசியல் கட்சிகளின் கொள்கைகள் மாறுபடலாம்; தேர்தல்கள் வழி அரசாங்கங்கள் மாறலாம்; ஆனால், மாநிலத்தின் அரசியல்கொள்கை முடிவுகள் மாற்றப்படக் கூடாது. மாநிலச் சுயாட்சி என்பது, 1974ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் வழியாக, மாநிலத்தின் அரசியல் கொள்கை முடிவு ஆகிவிட்டது. இதனை விட்டுக் கொடுப்பது, 1967 மாற்றத்தை விட்டுக் கொடுப்பது, தமிழ்நாட்டையே விட்டுக் கொடுப்பது, தமிழ்நாட்டின் உயிர்நாடிக் கொள்கையை விட்டுக் கொடுப்பது ஆகும்.
இது குறித்து இப்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவு அளிதுள்ள கட்சித் தலைவர்கள், தீவிரமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். உயிர்நாடியான அரசியல் கொள்கை முடிவில் விட்டுக் கொடுப்பது, தன் தலைக்குத் தானே தீயிட்டுக் கொள்வது ஆகும்.
படிக்க: ஒற்றை சர்வாதிகார பாசிச ஆட்சி! பறிபோகும் மாநில உரிமைகள்!
திமு கழகத் தலைவர் தமிழ்நாட்டின் அரசியல் முடிவை வலுப்படுத்தும் அரசியல் பணியில் புதுமை காண வேண்டும்.
சுந்திரமான, நிலையான மாநிலச் சுயாட்சி ஆய்வுக் கழகம் அமைக்கப்பட வேண்டும். இதன் கீழ் ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவின் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும். குழு அறிக்கையின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட வேண்டும். மாநிலச் சுயாட்சிக்கான தொடர் அறிவுப் பணிகளும், பொதுமக்களுக்கான நூல் வெளியீடுகளும் இடைவெளியில்லாமல் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இது ஓர் பொது வேண்டுகோள். வெறுமனே அரசியல் அளவிலான எதிர்ப்புகளும் கண்டங்களும் போதுமானவை அல்ல. தமிழ்நாடு என்கிற அரசியல் அலகின் கொள்கை முடிவுகளை மாற்ற நினைக்கும் எவருக்கும் எதிர்வினை புரியும் வகையில், அவருக்கு நிரந்தரமாக உறக்கத்தைக் கலைக்கும் வகையில், செயல்பாடுகள் அமைய வேண்டும்.
தமிழ்நாடு எழுக! புதுமைகள் பல புரிக!
மின்னம்பலம் விவரம்
மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான அதிகாரப் பகிர்வு, மாநிலங்களின் உரிமைகள், நிதி அதிகாரங்கள், ஆளுநர்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட விவகாரங்களை ஆய்வு செய்வதற்காக, அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் உயர்நிலைக் குழுவை அமைப்பதாக அறிவித்தார்.
மத்திய–மாநில உறவுகள் குறித்து ஆராய முந்தைய திமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்த ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான உயர்நிலைக் குழுவைக் கலைத்துள்ள விஜய் அரசு, அந்தக் குழுவின் அனைத்து ஆவணங்களையும் தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்திடம் உடனடியாக ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான அதிகாரப் பகிர்வு, மாநிலங்களின் உரிமைகள், நிதி அதிகாரங்கள், ஆளுநர்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட விவகாரங்களை ஆய்வு செய்வதற்காக, அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் உயர்நிலைக் குழுவை அமைப்பதாக அறிவித்தார்.
இதன்படி, 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ந் தேதி அரசாணை வெளியிடப்பட்டு, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.அசோக் வர்தன் ஷெட்டி, தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர் மு.நாகநாதன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள், நடைமுறையில் உள்ள சட்டங்கள், மத்திய அரசின் கொள்கை முடிவுகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தவும் மாநில சுயாட்சியை உறுதி செய்யவும் தேவையான சட்டத் திருத்தங்கள் மற்றும் நிர்வாக மாற்றங்களைப் பரிந்துரைப்பது இந்தக் குழுவின் முக்கியப் பணியாக இருந்தது.
குறிப்பாக, மாநிலங்களின் சட்டமியற்றும் அதிகாரம், நிர்வாக அதிகாரம், நிதி உரிமைகள் ஆகியவற்றில் மத்திய அரசின் தலையீடுகள் குறித்தும், அரசியலமைப்புச் சட்டத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முழுமையாகச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள இந்தக் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு தனது முதல் ஆய்வறிக்கையை கடந்த பிப்ரவரி 16-ந் தேதி அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. தொடர்ந்து மத்திய–மாநில உறவுகள் தொடர்பான பிற அம்சங்களை ஆய்வு செய்து அடுத்தகட்ட அறிக்கைகளைத் தயாரிக்கும் பணிகளிலும் ஈடுபட்டிருந்தது.
படிக்க: கார்ப்பரேட் – காவி பாசிச எதிர்ப்பு அரசியலே முழுமையான மார்க்சியப் புரிதல்!
இந்தக் குழுவின் முதல் ஆய்வறிக்கை தமிழ், ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளிலும் தயாரிக்கப்பட்டது. சுமார் 408 பக்கங்களைக் கொண்ட முதல் அறிக்கையில் 10 அத்தியாயங்கள் இடம்பெற்றிருந்தன. ஆளுநர்களின் அதிகாரங்கள், தொகுதி மறுவரையறை, மொழிக் கொள்கை, கல்வி, சுகாதாரம், ஜிஎஸ்டி வரிவிதிப்பு, மாநில சுயாட்சி உள்ளிட்ட முக்கியமான விவகாரங்கள் ஆய்வு செய்யப்பட்டிருந்தன.
குறிப்பாக, ஆளுநர்களை நியமிக்கும் முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும்; சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர்கள் 15 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்; நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; கல்வியைப் பொதுப்பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்; ஜிஎஸ்டி கவுன்சிலில் மாநிலங்களின் வாக்குரிமையை அதிகரிக்க வேண்டும்; மக்களவைத் தொகுதிகளின் மாநிலவாரியான ஒதுக்கீட்டை 2126-ஆம் ஆண்டு வரை மாற்றக்கூடாது என்பன உள்ளிட்ட முக்கியமான பரிந்துரைகள் முதல் அறிக்கையில் இடம்பெற்றிருந்தன.
முதலில் 2 பகுதிகளாக அறிக்கை தயாரிக்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பின்னர் தலா 10 அத்தியாயங்களைக் கொண்ட 3 பகுதிகளாக விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது. காலநிலை மாற்றம், டிஜிட்டல் நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்கள் போன்ற புதிய அம்சங்களையும் அடுத்தடுத்த அறிக்கைகளில் சேர்க்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
தமிழ்நாட்டில் மாநில சுயாட்சி தொடர்பாக 1969-ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் அமைக்கப்பட்ட ராஜமன்னார் குழுவுக்குப் பிறகு, மத்திய–மாநில உறவுகளை விரிவாக ஆராய அமைக்கப்பட்ட மற்றொரு முக்கியமான குழுவாக குரியன் ஜோசப் குழு கருதப்பட்டது.
இந்நிலையில்தான், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து குரியன் ஜோசப் குழுவைக் கலைத்து விஜய் அரசு நவம்பர் 6-ந் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது.
மின்னம்பலம் இணையத்தில் பதிவிட்டுள்ள தகவலின் அடிப்படையில் பார்த்தால் கடந்த காலத்தில் அதாவது தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ளது போல் ஒன்றிய பாசிச மோடி அரசின் சர்வாதிகார போக்கின் காரணமாக பாஜக ஆளாத மாநிலங்களை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டுவர ஆளுநர்களை பயன்படுத்தி கொல்லைப்புறமாக ஆட்சி செய்தது. அப்படி அதிகாரம் செலுத்தப்பட்ட மாநிலங்களான மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது பாஜக.
அதில் தமிழ்நாடு பாஜக கொண்டு வந்த நாசகர திட்டங்களை தீவிரமாக எதிர்த்து நின்ற மாநிலம். நீட் தேர்வு, ஜி.எஸ்.டி, மும்மொழிக் கொள்கை மொழி திணிப்பு, புதிய கல்விக் கொள்கை, பல்கலைகழகங்களில் துணை வேந்தரை நியமிக்கும் உரிமை உள்ளிட்டவை மாநில உரிமைகளை பறிக்கும் விவகாரம்.
இதற்கு எதிரான மக்களின் தீவிர போராட்டங்களின் விளைவாக உருவானது தான் நீதிபதி ஜோசப் குரியன் தலைமையில் உருவான குழு. தற்போது பாஜகவின் கள்ளக்குழந்தையான தவெக ஆட்சி அமைந்த பிறகு ஒன்றிய அதிகார பறிப்பிற்கு எதிராக தமிழ்நாடு கொண்டு வந்த திட்டங்கள் அதிரடியாக முடக்கப்படுகின்றன. இது முழுக்க பாஜகவின் பாசிச கொள்கைக்கு ஏதுவாக கலைக்கப்பட்ட திட்டமே. தமிழ்நாட்டின் பாசிச பாஜகவின் அடிமையாக மாற்றத்துடிக்கும் தவெக அரசின் இந்த முடிவு ஒரு தொடக்கம் மட்டுமே.
மக்கள் அதிகாரம்
ஆசிரியர் குழு.






