புதிய ஜனநாயகம்
தலையங்க கட்டுரை

ந்தியா என்பதே பல்வேறு வகையிலான, மொழிவாரி மாகாணங்களாக பிரிக்கப்பட்ட மாநில அரசுகளின் ஒன்றியம் என்பதுதான் அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளும் உண்மையாகும். வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியாவின் தனிச்சிறப்பான அடிப்படையாகவும் உள்ளது. இந்த உண்மையை மறைத்து  இந்தியாவை ஒரே சர்வாதிகாரத்தின் கீழ் கொண்டு வர பாசிச ஆர்.எஸ்.எஸ் – பாஜக  துடிக்கிறது.

இந்த அரசியலமைப்புச் சட்டமானது அயல்நாட்டு படையெடுப்பு அல்லது உள்நாட்டில் ஏற்படும் புரட்சி, மாநில அரசுகளில் அரசியலமைப்புச் சட்டம் செயலிழப்பது, நிதி நெருக்கடியினால் ஏற்படும் சிக்கல் போன்றவை ஏற்படும்போது அவசர நிலையை பிரகடனம் செய்வதற்கும், அந்த அவசர நிலை காலத்தில் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் உள்ளிட்ட அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்பதையும் உள்ளடக்கியே உள்ளது.

மாநிலங்களின் அதிகாரம் மற்றும் ஒன்றிய அரசின் அதிகாரம் ஆகிய இரண்டுக்கும் இடையிலான உறவு என்பது சமத்துவ அடிப்படையில் இல்லாமல், ஒன்றிய அரசுக்கு அதிகபட்ச அதிகாரங்கள் உள்ளது என்பதை அரசியலமைப்புச் சட்டம் முன் வைக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் வரையப்பட்டபோதே கூட்டாச்சி (ஞூஞுஞீஞுணூச்டூ) என்பதற்கு பதிலாக ஒன்றியம் (தணடிணிண) என்ற சொல்லாடலே பயன்படுத்தப்பட்டது. இதனைப் பயன்படுத்திக் கொண்டு பாசிச பாஜக ஒற்றை அதிகாரத்தை நிறுவத் துடிக்கிறது.

குறிப்பாக மாநில பட்டியலில் உள்ள கல்வி, நிலம், சட்டங்கள் இயற்றும் அதிகாரம், வரி விதிப்பு மற்றும் நிதி கொள்கை, நிர்வாக கட்டமைப்பு ஆகிய அனைத்தும் சுதந்திரமாகவும் சுயேட்சையாக முடிவெடுக்கின்ற வகையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் பீற்றிக் கொள்ளப்பட்டாலும் உண்மை நிலை அது அல்ல.

எடுத்துக்காட்டாக கல்வி உரிமையை மாநில பட்டியலில் இருந்து நெருக்கடிநிலை ஆட்சியின்போது அப்போதைய காங்கிரஸ் பிரதமர் இந்திராகாந்தி பொதுப் பட்டியலுக்கு கொண்டு சென்றார். தமிழகத்தை தவிர வேறு யாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதன் விளைவு இன்று மருத்துவ கல்வியில் நீட் தேர்வு என்பதும், உயர்கல்விகளில் கியூட் தேர்வு என்பதும் சட்டப்படியே சரியென்று ஆகியுள்ளது. அப்போதே வனம், நிர்வாகம், அளவிடும் முறைகள், விலங்கு மற்றும் பறவைகள் பாதுகாப்பு, நீதி நிர்வாகம் போன்றவையும் மாநிலப் பட்டியலில் இருந்து இந்திய ஒன்றிய அரசின் பட்டியலுக்கு சென்றது.

வரி விதிக்கும் அதிகாரம் என்பது மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட பிறகு வாட் வரி, ஜிஎஸ்டி வரி போன்ற வடிவங்களில் ‘ஒரே நாடு-ஒரே வரி’ என்ற கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பது மட்டுமல்ல. மாநில அரசுக்கு வருவாய் வருகின்ற விற்பனை வரியைக்கூட இந்திய ஒன்றிய அரசு தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு சென்றுவிட்டது. ஏற்கனவே செஸ் வரி இந்திய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் வரிக் கொள்கையில்  மாநில அரசின் அதிகாரம் ஏறக்குறைய இல்லை.

அதேபோல பல்வேறு வகைகளில் இருந்து மாநில அரசுக்கு வரும் நிதியை பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக அரசியல் அமைப்புச் சட்டத்தில் 263 முதல் 300-வது பிரிவு வரை வரையறுக்கப்பட்டுள்ளது என்றாலும், இந்த வரையறுப்பின்படி, அதாவது மாநில அரசுக்கு வருகின்ற நிதி வருவாயை தானே பயன்படுத்திக் கொள்வது என்பதற்கு பதிலாக இந்திய ஒன்றிய அரசிடம் ஒப்படைத்துவிட்டு மாநில அரசு கெஞ்சி கூத்தாடி கொண்டிருக்கிறது. ஒரு எடுத்துக்காட்டாக உத்திர பிரதேசத்தில் இருந்து இந்திய ஒன்றிய தொகுப்பிற்கு ஒரு ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால் உத்திர பிரதேசத்திற்கு இந்திய ஒன்றிய அரசு கொடுக்கின்ற தொகை 1.79 பைசா ஆகும். கர்நாடகா ஒரு ரூபாய் கொடுத்தால் அதில் 47 பைசாதான் அவர்களுக்கு கிடைக்கிறது. தமிழகம் ஒரு ரூபாய் கொடுத்தால் அதில் 29 பைசாதான் கிடைக்கிறது.

சட்டம் இயற்றும் அதிகாரத்தை பொருத்தவரை அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 245 முதல் 255 வரை இந்திய ஒன்றிய அரசு நாடாளுமன்றத்திற்கே அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்டுதான் மாநில அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும் என்று தெளிவாக வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால்தான் தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகள் சட்டம் இயற்றினாலும் ஆளுனர்கள் கையெழுத்து போடாமல் திருப்பியடிக்கின்றனர்.

இந்திய ஒன்றிய அரசின் பொருளாதாரக் கொள்கை எதுவும் மாநில அரசுகளோடு விவாதிக்கப்பட்டு தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக, உணவு பொருட்கள் உள்ளிட்ட அனைத்து வகையிலும், ஏற்றுமதி-இறக்குமதி கொள்கை, இந்திய ஒன்றிய அரசு தனது விருப்பத்திற்கு தீர்மானித்துக் கொண்டு மாநில அரசுகளின் மீது திணிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.

இதனால்தான் இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பது பெயரளவில் செயல்படுகிறதே தவிர இந்திய ஒன்றிய அரசுக்குதான் அதிக அளவிலான அதிகாரம் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அரசியல் சட்டப்படியே இவை அனைத்துக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதனால்தான் அனைத்து தேசிய இனங்களுக்கும் சமமான உரிமை வழங்குவதைபற்றி விவாதிக்க துவங்கினாலே அதனை பிரிவினைவாதம் என்று கூச்சலிடுகின்றனர்.

மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை என்பதுகூட இந்திய ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள என்ஐஏ மூலமாக முழுமையாக பறிக்கப்பட்டுவிட்டது. மாநிலத்தின் அனுமதி பெறாமலேயே இந்தியாவின் எந்த மாநிலத்திலும், எந்த மூலையிலும், எந்த வீட்டிற்கும் செல்லும் வானளாவிய அதிகாரத்தை பெற்றுள்ளது என்ஐஏ.

இத்தகைய சூழலில் கல்வி, வரி விதிப்பு, நிதி, நிர்வாகம் ஆகிய அனைத்தையும் இந்திய ஒன்றிய அரசிடம் பலி கொடுத்துவிட்டு மாநிலங்களின் உரிமை என்று பேசிக் கொண்டிருப்பது அர்த்தமற்றது. அரசியல் சாசனத்தின் உரிமைகள் என்று இல்லாத உரிமைகளை பேசிக் கொண்டிருப்பதும் ஏமாளித்தனமானது. எனவே இந்தியா என்பதே சுதந்திரமான உரிமையுடன் கூடிய சுயநிர்ணய அடிப்படையில், தேசிய இனங்கள் செயல்படுவதற்கு அனுமதி வழங்குகின்ற உரிமையை பெறுவதும், முதன்முதலில் அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டபோது வாக்களித்தபடி இராணுவம், பணம் அச்சிடும் உரிமை, வெளியுறவுத் துறை ஆகியவை தவிர அனைத்து அதிகாரமும் மாநிலங்களின் கையில் இருக்க வேண்டும் என்பதன் மூலமாக உருவாகும் ஒற்றுமையே உண்மையான தேசிய ஒற்றுமையாக இருக்க முடியும்.

நீட் தேர்வில் மரணங்கள் ஏற்படும் போதும், நதிநீர் பங்கீடு செய்வதில் சிக்கல்கள் ஏற்படும் போதும், மாநில அரசுக்கு தேவையான நிதியை இந்திய ஒன்றிய அரசு ஒதுக்காத போதும், மாநில உரிமைகளைபற்றி பேசிக் கொண்டிருப்பதை மாற்றி, மாநிலங்களின் ஒன்றிணைப்பே இந்திய ஒன்றியம் என்பதை நிலைநாட்ட வேண்டும். இதனை தற்போதுள்ள பாசிச பாஜக அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. “ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே அதிகாரம்’’ என்று பாசிச முறையில் ஒன்றிய அரசின் அதிகாரத்தை குவித்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் மாநிலங்களுக்கு அதிகாரம், ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை, தனியே கொடி வைத்துக் கொள்ளும் உரிமை ஆகியவற்றை முன்வைத்து போராடுவதுதான் உண்மையான மாநில சுயாட்சி. இது பிரிவினைவாதமல்ல. பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள நடைமுறைதான்.

அத்தகைய உண்மையான மாநில சுயாட்சி உரிமைகளுக்காக, கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாத இந்திய ஒன்றிய அரசுக்கு எதிராக போராடுவோம். ஜனநாயக கூட்டரசு ஒன்றே இதனை உருவாக்கும் என்பதே நிதர்சனமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here