ஐரோப்பிய நாடுகளில் சூப்பர் மார்க்கெட் குளிர்சாதன பெட்டிகள் மற்றும் உறைவிப்பான்களின் (ஃபிரீசர்) மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதால் – -15 முதல்  30 C என்ற அதன் வெப்ப நிலை சுமார் +50 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிரடியாக உயர்த்தியதால் – சேமித்து வைக்கப்பட்டிருந்த இறைச்சி, பால் பொருட்கள் மற்றும் உறைய வைக்கப்பட்ட உணவுகள் கெட்டுப்போயின.

ஸ்வீடன், பெல்ஜியம், நெதர்லாந்து, அயர்லாந்து, லக்சம்பர்க், எஸ்தோனியா,  இங்கிலாந்து, போர்ச்சுகல்  போன்ற நாடுகளில் தற்போது தாக்குதல் நடக்கிறது. பிரான்ஸ் நாட்டில் அக்டோபர் மாதத்திலேயே இது போன்ற தாக்குதல் நடந்து விட்டது.

கார்ப்பரேட்டுகளைக் கதறவிட்ட தாக்குதல்!

ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக உள்ள முக்கிய சங்கிலித் தொடர் அங்காடிகள் தான் குறி வைத்து தாக்கப்பட்டன. Coop & ICA (சுவீடன்), SuperValu (அயர்லாந்து), Intermarché (போர்ச்சுக்கல் / பிரான்ஸ்), Rewe Büsken (ஜெர்மனி), Ahold Delhaize, Carrefour & Albert Heijn: (பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து ) இந்த முன்னணி சூப்பர் மார்க்கெட்டுகள் பல நூறு கோடி ரூபாய்களை இழந்துள்ளன.

பிரான்ஸ் நாட்டில்  அக்டோபர் மாதத்தில் நடந்த தாக்குதலில் 700 கடைகள் வரை பாதிக்கப்பட்டன. இதில் குறிப்பாக அல்சர் பிராந்தியத்தில் உள்ள இரண்டு கடைகளில் இருந்து மட்டும் சுமார் ₹2.4 கோடி  மதிப்புள்ள உணவுப் பொருட்கள்  குப்பையில் கொட்டப்பட்டன.

பெல்ஜியம் நாட்டில் பிளான்டஸ் பகுதியில் உள்ள “டெல்ஹேஸ்” கடையில் மட்டும் ₹ 90 லட்சம் மதிப்பிலான பொருட்கள் ஒரே இரவில் வீணாகின. 50 டிகிரி செல்சியஸ் வரைவெப்பத்தை அதிகரித்ததால் சில கடைகளில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன‌. இந்த தீயை அணைப்பதற்காக  ஸ்பிரிங்க்லர்ஸ் எனப்படும் தானியங்கி நீர்தெளிப்பான்கள் செயல்பட்டுள்ளதால் அத்தகைய கடைகளுக்குள் தண்ணீர் புகுந்து இயந்திரங்கள் சேதம் அடைந்துள்ளன.

கடைகளில் உள்ள உணவுப் பொருட்கள் மொத்தமாக குப்பைக்கு போனதால் விற்பனைக்கு புதிய பொருட்களைக் கொண்டு வந்து நிரப்புவதற்கு பல நாட்கள் ஆகும். அதாவது வணிகம் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது.

புதிய சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பது  மிகவும் பழமையான குளிர்சாதனங்களும், உறைவிப்பான்களும்தான். அவை ரிமோட் கண்ட்ரோல் முறையில் இயங்கி வரும் சாதனங்களாக உள்ளன. இதிலிருந்து இந்த தாக்குதலை நடத்தியவர்களின் நோக்கம் இதைவிட அதி நவீன குளிர்சாதன இயந்திரங்களுக்கு மாறத் தூண்டுவதாக இருக்கலாம். அல்லது, சங்கிலித் தொடர்கடைகளில் உணவுகளை வாங்கி உண்ண முடியாமல் பட்டினிக்கு தள்ளப்பட்டு விட்ட கூட்டத்தின் எதிர்வினையாகவும் இருக்கலாம்.

தற்போது தாக்குதலுக்கு உள்ளான குளிர்விப்பான்கள்  தான்போஸ் (Danfoss) என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை. அதில் பயன்படுத்தப்பட்ட மென்பொருட்கள் காலாவதி ஆகிவிட்டன. நடப்பு தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் புதுப்பிக்கப்படாமல் கைவிடப்பட்டுள்ளன. இதனால் தற்போதைய சேதத்திற்கு காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்க மறுக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது.

அதிகரிக்கும் பதற்றம்!

ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்களால் தாக்கியவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. தாக்குதல் தொடுப்பவர்களின் அடுத்த இலக்கு என்ன என்பதையும் கணிக்க முடியவில்லை. இதன் விளைவாக மக்களை நிர்கதியாக விட்டுவிட்டன.

குடிமக்கள் தமக்கு தேவையான குடிநீர், உணவு, அத்தியாவசிய பொருள்கள், மருந்துகள் உள்ளிட்டவற்றை முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்ளவும், வங்கிகளில் இருந்து ரொக்கமாக பணத்தை செலவிற்கு கையில் எடுத்து வைத்துக் கொள்ளவும் வலியுறுத்தப்பட்டுள்ளனர். அடுத்து சில நாட்களுக்கு இத்தகைய சைபர் தாக்குதல்கள் புதிய துறைகளுக்கு விரிவடையலாம் என்று அஞ்சியே அரசு இத்தகைய வழிகாட்டுதல்களை தந்து வருகிறது.

ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியும் வாழ்க்கைச் செலவுகள் தொடர்ந்து அதிகரிப்பதும், பொது சேவைகளின் தரம் தொடர்ந்து வீழ்ச்சி அடைவதும் மக்களை போராட்டத்திற்கு தள்ளி உள்ளது. நடப்பாண்டில் சில மாதங்களில் மட்டும் 22,000-க்கும் மேற்பட்ட போராட்டங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில்  நடந்துள்ளன.

மக்களின் வாங்கும் திறனும் அவர்களின் சம்பளமும் உயராதபோது எரிபொருள் விலையும், உணவுப் பொருட்களின் விலையும் விண்ணைத் தொடும் அளவு உயர்ந்து விட்டது.

மேலும் படிக்க: மைக்ரோசாப்ட் ப்ளூ ஸ்க்ரீன் எரர்-சிக்கல். உங்கள் தரவுகள் பறிபோகிறது. எச்சரிக்கை!

ஸ்பெயின், போர்ச்சுக்கல், லக்சம்பர்க்  போன்ற நாடுகளில் வீட்டு வாடகை மிக கொடூரமாக உயர்ந்துள்ளது. அதாவது முழு சம்பளத்தையும் வாடகைக்கு தர வேண்டும் என்ற சூழல் உருவாகியுள்ளது. பிரான்சில் ஆசிரியர்களின் பற்றாக்குறையும் மோசமாக சேதம் அடைந்துள்ள பள்ளி கட்டிடங்களும் பாகுபாடான மாணவர் சேர்க்கை முறையும் போராட்டத்தை தூண்டுவதாக இருந்தது.

அரசாங்கங்களின் செயல்பாடுகளை பொறுக்க முடியாமல் வெகுண்டெழுந்து வந்த மக்களின்  போராட்டமே  கலவரமாகவும் வெடித்தது. ஜெர்மனியில் இளைஞர்களை மீண்டும் கட்டாய ராணுவ சேவைக்கு அழைப்பார்கள் என்ற அச்சத்தில் மக்கள் லட்சக்கணக்கில் திரண்டு போராட்டம் நடத்தினர்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் தென் அமெரிக்க நாடுகளுக்கும்  கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தத்தால் உள்ளூர் விவசாயம் பாதிக்கப்படும் என்று பிரான்ஸ், பெல்ஜியம் போன்ற நாடுகளில் உள்ள விவசாயிகள் டிராக்டர்களுடன் தலைநகரங்களை முற்றுகையிட்டனர்.

இது போன்ற பல்வேறு காரணங்களால் பல்வேறு பிரிவு மக்கள் ஐரோப்பிய நாடுகளில் போராட்ட களத்திற்கு வந்துள்ளனர். இந்த போராட்டங்கள் அரசால் ஆட்சியாளர்களால் கொடூரமாக ஒடுக்கப்பட்டன.  சமூக விரோதிகள் களமிறக்கப்பட்டு, தீ வைப்பு சம்பவங்களாகவும், வன்முறையாகவும் கலவரமாகவும் மடை மாற்றம் செய்யப்பட்டன.

இத்தகைய சூழலில் தான் சூப்பர் மார்க்கெட்டுகளின் உணவுப் பொருட்களை கெட்டுப் போக செய்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. தாக்குதலின் பின்னணி எது என்பது புலனாய்வு அமைப்புகளின் விசாரணை பின் உண்மை தெரிய வரும்.

கடந்த காலத்தில் சைபர் தாக்குதல்!

2014இல் துருக்கியின் அரசுக்கு சொந்தமான மின்விநியோக நிறுவனத்தின் இணையதளத்திற்குள் ரெட் ஹேட் என்ற சோசலிச ஹேக்கர் குழு நுழைந்தது அவர்கள் மக்களுக்கான மின் கட்டண கணக்குகளை மொத்தமாக அழித்தனர்.

இதன் மூலம் 1.5 மில்லியன் துருக்கிய லிரா மதிப்பிலான மின் கட்டண நிலுவைத் தொகைகள் ஒரே இரவில் பூஜ்ஜியமாக மாறின. இப்படி செய்தவர்கள் சோமா என்ற இடத்தில் நடந்த சுரங்க விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், அரசாங்கத்தின் அதிகப்படியான வரி விதிப்பிற்கு எதிராகவுமே இத்தகைய தாக்குதலை நடத்தியதாகவும் அறிவித்தனர்.

இது போன்ற தாக்குதல்கள் 2013ம் ஆண்டிலும் கூட நடத்தப்பட்டுள்ளன.  தண்ணீர் கட்டணம், எரிவாயு கட்டணங்கள் பூஜ்ஜியம் ஆக்கப்பட்டன.

இவையெல்லாம் மக்கள் நலனில் இருந்து தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் என்ற வகையில் உலகம் வரவேற்று கொண்டாடியது. ஆனால் தற்போது நடப்பது இந்த வகையிலான தாக்குதல்கள் அல்ல.

சங்கிலித் தொடர் கடைகளில் உள்ள பொருட்களை சேதப்படுத்துவது, குறிப்பாக உணவுப் பொருட்களை கெடவைப்பது என்பது மக்களுக்குப் பயனளிக்கப் போவதில்லை.தற்காலிகமான அதிர்ச்சியை உருவாக்க மட்டுமே பயன்படும்.

இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here