பத்திரிகைச் செய்தி!


மாநில உரிமைகளை பறிக்கும் ஆபத்தான
உச்ச நீதிமன்ற தீர்ப்பு

காஷ்மீர் 370 சட்ட பிரிவு ரத்து! கூட்டாட்சியின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்!

காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியல் சட்டத்தின் 370 வது பிரிவு வழங்கியிருக்கும் சிறப்பு உரிமையை இந்திய ஒன்றியத்தை ஆளுகின்ற பாசிச மோடி அரசு 2019-ல் ரத்து செய்தது செல்லும் என்று நேற்று (11.12.2023) உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தி ருக்கிறது. நீதித்துறை உள்ளிட்ட அரசு கட்டமைப்பு முழுவதும் காவி பாசிசமயமாகியுள்ள சூழலில்
இந்தத் தீர்ப்பு எதிர்பாராததோ அல்லது ஏமாற்றம் அளிக்கக் கூடியதோ அல்ல. ஆனால் பெரிதும் அச்சம் தரக்கூடியதாக அமைந்திருக்கிறது.

காஷ்மீர் இந்தியாவுடன் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இணைக்கப்பட்ட வரலாற்று உண்மைகளை குழி தோண்டி புதைத்துள்ளது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. இந்திய அரசியல் சட்டம் அமலாவதற்கு முன்னரே காஷ்மீர் மன்னர் ஹரி சிங் இந்திய அரசோடு செய்து கொண்ட ஒப்பந்தம், காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை இவைகள் வகுத்த விதிகள் இவை எவற்றையும் சற்றும் பொருட்படுத்தாமல், காஷ்மீரில் செயல்படுகின்ற அரசியல் கட்சிகள், இன உரிமைக்காக போராடுகின்ற அமைப்புகள் போன்ற யாரையும் மதிக்காமல் மோடி அரசை திருப்தி படுத்த வேண்டும் அல்லது மோடி அரசுக்கு ஒத்துப் போவதை தவிர வேறு வழியில்லை என்று கருதித் தான் உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கி இருக்கிறது.

காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத ஓர் அங்கம் என்று இந்திய ஒன்றிய அரசு செய்து வரும் தொடர்ச்சியான பிரச்சாரத்திற்கு பலியாகி இந்திய மக்களில் பலரும் நம்பினாலும் உலகின் பல்வேறு நாடுகள் இன்னமும் காஷ்மீரை அங்கீகரிக்கவில்லை. ஒரு தகராறுக்கு உட்பட்ட பகுதி என்றுதான் வரையறுத்து இருக்கின்றன.1948 இல் ஐக்கிய நாடுகள் அவையில் இயற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்கள் இன்னமும் உயிரோடு தான் இருக்கின்றன.

அந்தத் தீர்மானங்களின்படி காஷ்மீர் மக்களின் தீர்ப்பே இறுதியானது. அதாவது காஷ்மீரை இந்தியாவுடன் இணைந்த போது அப்போதைய மன்னர் ஹரிசிங்குடன் இந்திய ஒன்றிய அரசின் பிரதிநிதிகள் போட்டுக்கொண்ட ஒப்பந்தப்படி சர்வதேச சமூகம் மற்றும் ஐநாவின் மேற்பார்வையில் காஷ்மீர் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை 1948க்கு பிறகு பல்வேறு காலங்களில் ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தி இருக்கிறது.

இந்தத் தீர்மானங்கள் இன்னமும் உயிரோடுதான் இருக்கின்றன.1948 இல் காஷ்மீர் மன்னர் ஹரி சிங்குக்கும் இந்திய அரசுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி வெளியுறவு, பாதுகாப்பு, தகவல் தொடர்பு ஆகிய மூன்று துறைகளைத் தவிர வேறு எந்த இந்தியச் சட்டமும் காஷ்மீருக்குப் பொருந்தாது. காஷ்மீர் அரசியல் நிர்ணய சபையின் ஒப்புதல் இல்லாமல் எந்த ஒரு இந்தியச் சட்டத்தையும் காஷ்மீரில் நடைமுறைப்படுத்த முடியாது. இந்த அடிப்படையில் தான்இந்திய அரசியல் சட்டத்தில் 370 வது பிரிவு சேர்க்கப்பட்டு நடைமுறையில் இருந்து வந்தது. 1957இல் காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை கலைக்கப்பட்டதற்குப் பிறகு 370 வது பிரிவு நிரந்தரமாகிவிட்டது என்பதை சட்ட வல்லுனர்கள் ஒத்துக் கொள்கின்றனர்.

ஆனால் உச்ச நீதிமன்றம் இதை தற்காலிகமானது என்று குதர்க்கமாகவும் , காஷ்மீரி தேசிய இனத்தின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக முடிவு செய்கிறது.
இந்தத் தீர்ப்பு காஷ்மீர் மக்களுக்கு மட்டுமல்ல, இந்திய மக்கள் அனைவருக்கும் எதிரானதே இந்த தீர்ப்பு.

இந்திய அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் கூட்டாட்சி உரிமைகள், ஜனநாயக உரிமைகள் அனைத்தையும் செல்லாததாக்கி ஒன்றிய அரசு குடியரசுத் தலைவர் வழியாக ஒரு பாசிச ஆட்சியைநடத்துவதற்கு சட்ட அங்கீகாரம் வழங்கியிருக்கிறது.அரசியல் சட்டத்தின் 367 வது பிரிவில் ஒரு மாற்றத்தை செய்து அதன் வழியாக குடியரசு தலைவர் ஆணையின் மூலம் 370 வது பிரிவை ரத்து செய்திருக்கிறது மோடி அரசு.

உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் 367 வது பிரிவில் செய்த மாற்றம் சட்டப்படியானது அல்ல என்று தீர்ப்பளித்து இருக்கிறது. ஆனால் 370 ஆவது பிரிவில் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டிருக்கிற அதிகாரத்தின் படி 370 ரத்து செய்யப்பட்டது செல்லும் என்று கூறியிருக்கிறது.367 வது பிரிவில் செய்யப்பட்ட திருத்தம் சட்டப்படியானது அல்ல என்றால் அதன் வழியாக குடியரசுத் தலைவர் 370 வது பிரிவை நீக்கியது எப்படி சட்டப்படி செல்லுபடி ஆகும் என்பது காவி பாசிசமயமாகியுள்ள உச்சநீதிமன்றத்திற்கு மட்டுமே வெளிச்சம்.

ஆகவே இந்தத் தீர்ப்பு அநீதியானது மட்டுமல்ல, ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானத்திற்கும் எதிரானது.

இந்தியக் கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கும் மாநில உரிமைகளுக்கும் வேட்டு வைக்கக்கூடிய ஆபத்தைக் கொண்டுள்ள தீர்ப்பாகும். மொழி வழி மாநிலங்கள், மொழி வழி தேசிய இன உரிமைகள் இவற்றிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் தரக்கூடிய தீர்ப்பு.காஷ்மீர் மக்கள் இந்திய நீதிமன்றத்தின் மீது வைத்திருந்த சிறு நம்பிக்கையும் தகர்த்தெரிந்திருக்கும் தீர்ப்பு. பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை விட இன்னொரு மோசமான பெரும் கேடு விளைவிக்கும் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கிறது.

இந்தத் தீர்ப்பில் 2024 செப்டம்பருக்குள் காஷ்மீரில் தேர்தல் நடத்த வேண்டும், மாநில அந்தஸ்தை விரைவில் வழங்க வேண்டும் என்று கூறியிருப்தெல்லாம்
உச்சநீதிமன்றம் பரிதாபத்திற்குரிய நிலைமையில் இருப்பதையே காட்டுகிறது.
ஆசியக் கண்டத்தில் இன்னொரு காசாவை உருவாக்குவதற்கு வழிகோலியிருக்கிறதோ என்ற அச்சம் எழுந்திருக்கிறது.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் மோடியும் பாஜகவும் வென்றால் எதிர்காலம் எவ்வளவு கொடூரமாக இருக்கும் என்பதற்கு இந்த தீர்ப்பு ஒரு முன் னறிவிப்பு.
அநீதியான இந்தத் தீர்ப்புக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் கட்டியமைக்கப்பட வேண்டும். அதற்கு அனைத்து புரட்சிகர, ஜனநாயக சக்திகளும், தேசிய இன உரிமைகளுக்காக போராடுகின்ற இயக்கங்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்.

இவண்,
தோழர். காளியப்பன்
மாநிலப் பொருளாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு- புதுச்சேரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here