இந்தியாவில் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்திய அறிவியல் உலகிற்கு டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் (TIFR) மற்றும் இந்திய அறிவியல் நிறுவனம் (IISc) எப்படியோ, அப்படியே இந்திய சமூக அறிவியலுக்கு, வளரும் சமூகங்களுக்கான ஆய்வு மையம் (CSDS) திகழ்ந்து வருகிறது.
டெல்லியைத் தலைமையிடமாக கொண்டு 1963 -ல் நிறுவப்பட்ட நாட்டின் மிகப் பழமையான சமூக அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமாக இது விளங்கி வருகிறது. இதன் பேராசிரியர் பட்டியலில் இரண்டு தலைமுறை இந்திய சமூக விஞ்ஞானிகள் இடம் பெற்றுள்ளனர். அரசியல், சமூகம் மற்றும் கலாச்சாரம் குறித்து இந்திய மற்றும் சர்வதேச விவாதங்களின் முக்கிய மையமாக CSDS விளங்கி வருகிறது.
இந்திராவின் நெருக்கடி நிலை காலத்தில், சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பின் மையமாக இது விளங்கியது. அப்படி பெருமை வாய்ந்ததாக செயல்பட்ட இந்நிறுவனம், 2014 – ல் மோடி ஆட்சி அமைந்தது முதல் அரசியல் ரீதியாக தன்னை அதிகம் வெளிப்படுத்திக் கொள்ளாமல் இயங்கி வருகிறது. தேர்தல் மற்றும் அரசியல் ஆய்வுகளை மேற்கொள்ளும் அதன் ஆராய்ச்சி முன்னெடுப்பான “லோக்நிதித் திட்டம்” அரசியல் சார்பின்மையை பராமரித்து வந்தது.
இந்திய ஜனநாயக அரசியல், தேர்தலின்போது கருத்துக் கணிப்புகள் மற்றும் தேர்தல் முடிவுகள், சமூக அரசியல் போக்குகள் குறித்தெல்லாம் அறிவியல் பூர்வமான ஆய்வுகளை நடத்தி, தரவுகளை வெளியிடும் திட்டமாக லோக்நிதி இருந்து வந்தது. மேலும் ஜனநாயகம், அரசின் மீதான நம்பிக்கை, ஊழல், வேலையின்மை மற்றும் பொருளாதார நிலை குறித்தெல்லாம் பொது மக்களின் கருத்துக்களை தொகுத்து அறிக்கைகளாக வெளியிட்டும் வந்தது.
லோக்நிதித் திட்டம் நாட்டில் உள்ள ஒரே நம்பகமான அரசியல் அளவுகோலாக, வெளிப்படையான, அறிவியல் பூர்வமான நெறிமுறைகளை தொடர்ந்து கடைபிடித்து வந்தது. ஆட்சியாளர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப அது வளைந்து கொடுக்காமல் நேர்மையாக செயல்பட்டு வந்தது. இத்தகைய பாரம்பரியம் மிக்க நிறுவனம், கடந்த 10 ஆண்டுகளாக பாசிச மோடியின் சர்வாதிகார ஆட்சியில் தனது நடைமுறைக்கு ஒவ்வாத செயலில் ஈடுபட வேண்டிய புற அழுத்தத்தில் உள்ளது.
மானியத்தை நிறுத்தி செயல்பாட்டை முடக்கிய பாசிச மோடி அரசு!
இப்படியான நெருக்கடி தொடர்ந்து வந்த நிலையில், இப்போது நிறுவனத்தை முற்றிலுமாக முடக்கும் செயலில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது. காரணம் மிகவும் அற்பமானது மற்றும் அபத்தமானது. ஆகஸ்ட் 17, 2025 அன்று CSDS – ல் பணிபுரியும் பேராசிரியர் சஞ்சய் குமார், தனது X தளத்தில் மகாராஷ்டிராவின் ராம்டெக் மற்றும் தேவ்வாலி உள்ளிட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளில் SIR பணியின் விளைவாக வாக்காளர் எண்ணிக்கையில் ஏற்பட்ட திடீர் சரிவு மற்றும் அதிகரிப்பு குறித்து ஒரு கணக்கீட்டை வெளியிட்டார். அந்தக் கணக்கீடு தவறாக இருந்ததால் 48 மணி நேரத்திற்குள் அப்பதிவை நீக்கிவிட்டு மன்னிப்பும் கோரினார்.
ஆனால் SIR பணி என்பது முற்றிலும் நேர்மையாக நடப்பது போல, இதையே சாக்காக வைத்து மூன்று முக்கிய குற்றச்சாட்டுகளை இந்நிறுவனத்தின் மீது ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில்(ICSSR) வைத்தது. அதில் முதலாவதாக மகாராஷ்டிராவின் வாக்காளர் தரவு குறித்து தவறான புள்ளி விபரங்களை வெளியிட்டதாகவும், இரண்டாவதாக இந்திய தேர்தல் ஆணையத்தின் புனிதத் தன்மையை குலைக்கும் நோக்கத்துடன் ஒரு புனைகதையை உருவாக்கி தரவுகளை திரித்து வெளியிட்டதாகவும், மூன்றாவதாக நிர்வாக மற்றும் நிதி தொடர்பான கணக்கு வழக்குகளை உரிய முறையில் பராமரிக்காமல் இருப்பதால் அதில் முறைகேடுகள் நடைபெற்று இருக்கலாம் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
படிக்க:
மேற்கு வங்கம்: 33 லட்சம் பேரின் வாக்குரிமையைப் பறித்த SIR!
மோசடி SIR-க்கு எதிரான அனைத்துக் கட்சி கூட்ட முடிவுகள் போதுமானதா?
இதற்கு விளக்கம் கோரியும், உங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானியங்களை ஏன் நிறுத்தக்கூடாது என்று கேட்டும் ICSSR நோட்டிஸ் அனுப்பியது. CSDS இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தது. பேராசிரியரின் தவறு தனிப்பட்டது என்றும், அது திட்டமிட்ட செயல் அல்ல என்றும் கூறியது. மேலும் இதுபோன்ற தனிப்பட்ட நபர்களின் கருத்துக்கள் நிறுவனத்தின் கருத்தல்ல என்றும் விளக்கம் அளித்தது.
இதற்கு சில நாட்களுக்கு முன்பு CSDS அமைப்பு SIR குறித்த ஒரு கருத்துக்கணிப்பின் முடிவுகளை வெளியிட்டது. அதில் தேர்தல் ஆணையத்தின் மீதான மக்களின் நம்பிக்கை குறைந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டியது. ஆளும் பாசிச பாஜக, இந்த இரண்டு விஷயங்களையும் ஒன்றிணைத்து CSDS மீது பாய்ந்தது. அதன் இணையதள ட்ரோல் பரிவாரங்களும், “கோடி” மீடியாக்களும் இதனைப் பெரும் குற்றமென ஊதிப் பெருக்கின.
இதனைத் தொடர்ந்துதான் ஆகஸ்ட் 19 அன்று CSDS போன்ற அனைத்து சமூக அறிவியல் நிறுவனங்களுக்கும் மானியங்களை வழங்கும் அமைப்பான ICSSR, இது மானிய உதவி விதிகளின் பெரும் மீறலாகும் என்று குற்றம் சாட்டியது. குறிப்பாக தேர்தல் முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகளை பாஜக அரசு தொடர்ந்து எதிர்கொண்டு வரும் நிலையில், இது போன்ற அரசு நிறுவனங்களின் செயல்பாடுகளை பாசிச அரசு சகித்துக் கொள்ளுமா என்ன?
ஏற்கனவே இதே போன்று இயங்கி வந்த மற்றொரு சிந்தனைக் குழாமான கொள்கை ஆராய்ச்சி மையம் என்பது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வருமான வரி விசாரணை மற்றும் அதன் வெளிநாட்டு நிதி உரிமம் ரத்து செய்யப்பட்டதால், தனது செயல்பாடுகளை கணிசமாகக் குறைக்க வேண்டி வந்தது. இப்போது சொத்தைக் காரணங்களைக் கூறி மானியத்தை ICSSR நிறுத்தியதால், CSDS முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
படிக்க:
உயர்கல்வி சிறந்த தமிழ்நாட்டில் மூடு விழா காணப்போகும் முதற் பல்கலைக்கழகம்!
இடைநிற்றல்: “கல்வி பிரமிட்டில்” நசுங்கும் ஏழை மாணவர்கள்!
CSDS ஊழியர்களுக்கான சம்பளம், ஆராய்ச்சி மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு 90% ICSSR மூலம்தான் மானியம் கிடைத்து வந்தது. 2024 – 25 ஆம் ஆண்டில் CSDS – க்கு கிடைத்த மொத்த நிதியான 75.62 மில்லியனில், ICSSR மட்டும் 62.88 மில்லியன் வழங்கியது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வருடமாக இந்த மானியம் நிறுத்தப்பட்டு விட்டதால், பேராசிரியர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் CSDS போராடி வருகிறது.
மோடி தலைமையிலான பாசிச பாஜக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றங்கள் ஆகிய பல்வேறு தன்னாட்சி அமைப்புகளையும் தனது செல்வாக்கின் கீழ் கொண்டு வந்து விட்டது. அந்த வரிசையில் பல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூக ஆய்வு மையங்கள் போன்றவையும் இப்போது பாசிசக் கும்பலின் தாக்குதல் இலக்காக உள்ளது.
சுயேச்சையாக இயங்கும் CSDS போன்ற சமூக ஆய்வு மையங்களை முடக்குவதன் மூலம் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதே பாசிச மோடி அரசின் இலக்காக உள்ளது. இத்தகைய சூழலில் இந்துராஷ்டிரத்தை நோக்கிய அவர்களின் சர்வாதிகாரப் போக்கை தடுத்து நிறுத்துவது அனைத்து ஜனநாயக சக்திகளின் வீரியமான போராட்டங்களில்தான் அடங்கியுள்ளது.
- குரு
ஆதாரம்: Yogendra Yadav writes: Demolition of CSDS has begun, due process can wait







