டெல்லி பாஜகவுக்கு வேலை செய்யும் தேர்தல் ஆணையம்!

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற தேர்தல் ஆணையத்தை நிச்சயம் தனது கைப்பாவையாக பயன்படுத்தும் என்பதே தற்போதைய நிகழ்வுகள் காட்டுகின்றன.

0
பாஜகவின் ட்விட்டை ரீடிவிட் செய்த டெல்லி தேர்தல் ஆணையம்

ந்தியாவின் தலைநகர் டெல்லியில் வருகின்ற பிப்ரவரி 7ஆம் தேதி 70 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் டெல்லியில் ஆட்சியை கைப்பற்ற மும்மரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று டெல்லி தேர்தல் ஆணையத்தின் எக்ஸ்(டிவிட்டர்) பக்கத்தில் பாஜகவின் ட்விட்டானது ரீடிவிட்டு செய்யப்பட்டிருந்தது. இது சமூக வலைதளங்களில் விவாதப்பொருளானதோடு தேர்தல் யோக்கியதையும் சந்திசிரித்தது.

இது குறித்து கேள்வி எழுப்பிய ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங்குக்கு பதில் அளித்த டெல்லி தேர்தல் ஆணையம் “DEOவின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகம் நோடல் அதிகாரிகளால் சமூக ஊடகப் பிரிவு மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. அவர்தான் சமூக ஊடகங்களில் கேட்கப்படும் கேள்விக்கு பதில் அளிக்கிறார். உண்மை என்னவென்றால் குறிப்பிட்ட டிவீட்டுக்கு பதில் அளிப்பதற்கு பதிலாக தவறுதலாக ரீடிவீட் செய்யப்பட்டதால் அதனை சுட்டிக்காட்டியவுடன் சரி செய்யப்பட்டது” என தன்னுடைய அயோக்கியத்தனத்தை மறைக்க மொன்னையான பதில்கள் மூலம் முட்டுக்கொடுத்தது.

தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய செயல்பாடுகள் பாசிஸ்டுகளுக்கு ஆதரவாக உள்ளது அனைவரும் அறிந்ததே. சண்டிகர் மேயர் தேர்தலில் தேர்தல் அதிகாரி திட்டமிட்டு பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டது பொதுவெளியில் அம்பலமானது. இதுவும் தவறுதலாக தான் நடந்தது என தேர்தல் ஆணையத்தால் முட்டுக் கொடுக்க முடியாதோ அதேபோல் தான் டெல்லி நிகழ்வும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை விட அதிகமான வாக்குகள் எண்ணப்பட்டு சர்ச்சைக்கு உள்ளானது. அது நீதிமன்றம் வரை சென்றும் எந்த முடிவும் இல்லாமல் போனது. தற்போது நடைபெற்ற மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல்களிலும் அதே தில்லுமுல்லு நடைபெற்றது.

இப்படியாக தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் பாஜகவுக்கு ஆதரவாக உள்ள நிலையில் எப்படி ஒரு கட்சியில் மாணவர் அணி, மருத்துவர் அணி, வழக்கறிஞர் அணி என்று உள்ளதோ அதேபோல் பாஜகவில் தேர்தல் ஆணையம் அணி உருவாகியுள்ளதோ என்று சந்தேகம் உள்ளது. ஏற்கனவே நீதித்துறையில் விக்டோரியா கௌரி போன்ற  பாஜகவினர் நீதிபதிகளாக அமைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் விதிகளில் மாற்றம்! 

பாஜக தலைமையிலான ஒன்றிய அரசானது கடந்த டிசம்பர் 20 அன்று தேர்தல் நடத்தை விதிகளில் 93 (2)(a)  விதியை திருத்தியது. இந்த திருத்தத்தினால் தேர்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பொதுமக்களால் ஆய்வு செய்ய முடியாது. தேர்தல் நடத்தை விதிகளில் குறிப்பிட்டுள்ள தாள்களை மட்டுமே ஆய்வு செய்ய முடியும்.

படிக்க:  பாஜகவுக்கு 8 ஓட்டு! அம்மணமாக நிற்கும் தேர்தல் ஆணையம்!

நீதிமன்றங்களும் தேர்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பொது ஆய்வுக்காக வழங்குமாறு தேர்தல் குழுவுக்கு உத்தரவிட முடியாது என்கிறது இந்த திருத்தம்.

ஜனநாயக அமைப்பு முறையில் முக்கியமாக  பார்க்கப்படும் தேர்தலை, அதனை நடத்தும் தேர்தல் ஆணையமே மக்களால் கண்காணிக்க முடியாத அளவுக்கு ஜனநாயகத்தை மறுத்து சர்வாதிகாரப் போக்கை கடைபிடிப்பது பாசிச பாஜக அரசாங்கத்தில் தான்.

இந்த திருத்தங்களை எதிர்த்து டிசம்பர் 24 காங்கிரஸ் ஜெயராம் ரமேஷ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி பி.வி.சஞ்சய்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு மார்ச் 17ஆம் தேதி தொடங்கும் வாரத்திற்குள் ஒன்றிய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க கேட்டுக் கொண்டது.

படிக்க: ‘ஜனநாயக’த்தை மறுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் !

பாசிஸ்டுகளின் ஆட்சியை ஆட்சியில் நீதிமன்றங்களை அணுகுவது எல்லாம் சம்பிரதாய நடவடிக்கைதான். நீதிமன்றத்தின் தீர்ப்புகள் பெரும்பாலும் பாசிச கும்பலுக்கு சாதகமாகவே வழங்கப்படுகிறது. அதனால் நீதிமன்றங்களில் நமக்கான நீதியை எதிர்பார்க்க முடியாது.

டெல்லியில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கிறது பாசிச பாஜக. இந்தியாவின் தலைநகரிலேயே ஆட்சி அமைக்க முடியாது அவல நிலையிலிருந்து மீள பாஜக எந்த நிலைக்கு செல்ல தயாராக உள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லியை கைப்பற்றுவதற்காக ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலை  டெல்லி மதுபான ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை கைது செய்தது. அரவிந்த் கெஜ்ரிவாலின் செல்வாக்கை சிதறடித்து டெல்லியில் போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

அதேபோல் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற தேர்தல் ஆணையத்தை நிச்சயம் தனது கைப்பாவையாக பயன்படுத்தும் என்பதே தற்போதைய நிகழ்வுகள் காட்டுகின்றன.

டெல்லி பாஜகவுக்கு வேலை செய்யும் தேர்தல் ஆணையம்!
மக்கள் அதிகாரம் வாட்சப் சேனல்

தேர்தல் ஆணையத்தின் இது போன்ற செயல்பாடுகளால் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை என்று கடந்து போய் விட முடியாது. சமீபத்தில் மக்கள் அதிகாரம் தளத்தில் தூர்தர்ஷனில் மகாராஷ்டிர பாஜக முதல்வரை பேட்டி எடுக்க பாஜக கட்சிக்காரனை நியமித்திருந்தது என்பதை அம்பலப்படுத்தி எழுதி இருந்தோம். அதேபோல் அரசின் நிறுவனங்களை பாசிசமயமாக்கும் பாஜகவின் திட்டத்தில் இதுவும் ஒன்றுதான்.

அதனால்தான் மக்கள் அதிகாரம் பாஜகவை தேர்தலில் வீழ்த்தினால் மட்டும் போதாது தெருவிலும் போராடி வீழ்த்த வேண்டும் என்கிறது.

தேர்தல் ஆணையம் தனது வேலையை நேர்மையாக செய்யும் என்பதை நாம் எதிர்பார்க்க முடியாது. தேர்தல் ஆணையத்தின் பாசிச சார்பை மக்களிடம் அம்பலப்படுத்தி எதிர்க்கட்சிகளும் ஜனநாயக சக்திகளும் தீவிரமான போராட்டத்தை கட்டியமைப்பதின் மூலம் பாசிச கும்பலை  வீழ்த்த முடியும்.

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here