காவி பாசிச மோடி கும்பல் மீண்டும் அதிகாரத்தில் அமரக்கூடாது என்பதற்காக முற்போக்கு அமைப்புகளும், ஜனநாயக சக்திகளும் களத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தியா முழுவதும் மக்கள் மத்தியில் பாசிச பாஜகவும் அம்பலப்பட்டு போய் உள்ளது.

ஆனால் பாஜக அனைத்து அதிகார மையங்களையும் தனக்கு ஆதரவாக பயன்படுத்திக் கொண்டு தேர்தல் களத்தில் செயல்பட்டு வருகிறது. அதில் முக்கியமான ஒன்றுதான் இந்த தேர்தலை நியாயமாக நடத்தும் என்று நம்பிக் கொண்டிருக்கக் கூடிய தேர்தல் ஆணையம்.

ஆரம்பம் முதலே பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் தேர்தல் ஆணையம் உத்தரபிரதேசத்தில் நடந்த சம்பவத்தின் மூலம் முழுவதும் அம்பலப்பட்டு போய் நிற்கிறது.

முதலில் திரிபுராவில் மொத்த வாக்குகளை விட அதிகமாக பதிவாகிய வாக்குகள் மூலம் அம்பலமான தேர்தல் ஆணையம் தற்பொழுது உத்தரபிரதேசத்தில் இளைஞன் ஒருவன் பாஜகவுக்கு 8 ஓட்டுக்கள் போடுவதையும் அதனை தனது மொபைலில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதும் தேர்தல் ஆணையத்தின் மீது மீதி இருந்த நம்பிக்கையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் ஃபருக்காபாத் மக்களவைத் தொகுதியில் கடந்த 19ஆம் தேதி நடந்த தேர்தலில் 18 வயது இளைஞன் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பல வாக்குகளை அளித்தது மட்டுமல்லாமல் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றும் அதில் முறைகேடு செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக பல்வேறு சான்றுகள் நிறுவப்பட்டாலும் நீதிமன்றத்தின் மூலம் அதிலிருந்து தப்பித்தது தேர்தல் ஆணையம். இருந்தாலும் தேர்தல் ஆணையத்திற்கு சில கட்டுப்பாடுகளையும் விதித்து உத்தரவிட்டது நீதிமன்றம்.

திருடன் கையிலேயே சாவி என்ற சொல்லாடலுக்கு ஏற்ப தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு காவி பாசிஸ்டுகளின் கையிலேயே உள்ளது. அதற்கேற்ப

மோடியின் வெறுப்புப் பேச்சு எல்லை கடந்து போவதற்கும் தேர்தல் ஆணையமே காரணமாக இருக்கிறது. இஸ்லாமியர்கள் மீது எவ்வளவு வன்மத்தை கக்கினாலும் கண்டும் காணாமல் செல்கிறது. எதிர்க்கட்சிகளிடமிருந்து எதிர்ப்புகள் பலமாக கிளம்பும்போது மட்டும் பாஜகவிற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புகிறது. அதில் மோடியின் பெயரைக் கூட குறிப்பிடவில்லை.

எதிர்க்கட்சிகள், ஜனநாயக சக்திகள், முற்போக்கு அமைப்புகள் எல்லாம் தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இழந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் அது பற்றி எந்த கவலையும் இல்லாமல் தேர்தல் ஆணையம் பாஜகவுடன் கூட்டணி அமைத்து செயல்படுகிறது. செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதன் தொடர்ச்சி தான் உபி இளைஞன் பாஜகவுக்கு 8 ஓட்டு போட்டதோடு மட்டுமல்லாமல் அதனை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளான். இதில் தேர்தல் ஆணையத்திற்கு பிரச்சனையே வீடியோவாக எடுத்து பதிவிட்டது தான். 8 ஓட்டு போட்டதல்ல. திருடுவதற்கு மட்டும் தான் அனுமதிக்க முடியும் திருடியதை வீடியோவாக பதிவிடுவதற்கு அனுமதிக்க முடியாது என்பதுதான் தேர்தல் ஆணையத்தின் கருத்து.

.வீடியோவில் பலமுறை வாக்களிப்பது போல் தோன்றும் அந்த இளைஞனின் பெயர் ராஜன் சிங். பாமரன் கிராமத்தில் வசித்து வருபவரை காவல்துறை கைது செய்துள்ளது.

குறிப்பிட்ட பகுதியில் மறுவாக்கு வாக்கெடுப்பு நடத்துவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உத்தரதேசத்தில் உள்ள தலைமை தேர்தல் அலுவலகம் குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி அதிகாரிகளையும் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியது. இது அனைத்தும் தற்காலிக நாடகமே‌.

படிக்க: 

♦ மதவெறியூட்டும் பொய்யை பரப்பும் மோடி! | தூங்கிக் கொண்டிருக்கும் தேர்தல் ஆணையம்| வழக்கறிஞர் ராஜூ

இந்தியாவில் உத்தர பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2019 தேர்தலில் பாஜக 64 தொகுதிகளில் வெற்றி பெற்றது. உபியில் பாஜக முழுமையாக வெற்றி பெற எந்த எல்லைக்கும் செல்ல தயாராக உள்ளது. பாஜக முக்கியமாக வெற்றி வாய்ப்பு இல்லாத பகுதிகளில் தில்லுமுல்லுகள் செய்து வெற்றி பெற முயல்கிறது.

நேற்று (20.5.2024) நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் இவ்வாறு பேசுகிறார்; “உபியில் பொது இடங்களில் தொழுகை நடத்த இப்போது யாருக்கும் தைரியம் இல்லை. மசூதிகள் எல்லாம் மைக்கை அகற்றி விட்டன. அடுத்து ஐந்து ஆண்டுகளில் மசூதிகளில் இருந்து தொழுகை சத்தத்தையும் ஒழித்து விடுவோம்.”

யோகியின் இந்த இஸ்லாமிய வெறுப்பு பேச்சு தேர்தல் ஆணையமோ அல்லது நீதிமன்றமும் கண்டு கொள்ளப் போவதில்லை. ஏற்கனவே மோடி பேசியதற்கு என்ன வினையாற்றினார்களோ அதுதான் யோகிக்கும். அதனால் காவி பாசிஸ்டுகள் கவலை இல்லாமல் இஸ்லாமிய வெறுப்பை கக்குவார்கள். தேர்தல் ஆணையம் எல்லாவற்றையும் வேடிக்கை மட்டுமே பார்க்கும்.

படிக்க: 

♦ பிரதமரின் வெறுப்புப் பேச்சுகள்! கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்! நீதிமன்றம் அமைதி காக்கலாமா? 

இந்த நாடாளுமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் மீது கட்சிகள், அமைப்புகள், மக்கள் என அனைவரும் நம்பிக்கை இழந்து விட்டார்கள். உள்நாடு மட்டுமில்லாமல், உலக பத்திரிகைகளும் இந்திய தேர்தலையும், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளையும் காறி உமிழ்கின்றன. 8 ஓட்டு போட்ட இளைஞன் வீடியோ பதிவிட்டதால் வெளி உலகத்திற்கு தெரிந்திருக்கிறது. ஆனால் தெரியாமல் நடப்பது மலையளவு.

இந்திய தேர்தல் ஆணையம் முழுக்க காவி ஃபாசிஸ்டுகளின் மற்றொரு உறுப்பாய் மாறிப் போய் உள்ளது. மக்கள் செல்வாக்கை இழந்த காவி பாசிஸ்டுகள் ‘ஜனநாயகத்தின்’ உறுப்புகளையும் பாசிசமயமாக்கிவிட்டார்கள். அதனாலேயே தேர்தல் ஆணையம் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு அம்மணமாய் நிற்கிறது.

இந்த தேர்தலில் ஒருவேளை இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் கூட அதிகார மையங்களில் குடி கொண்டிருக்கும் காவி பாசிச கும்பலை தெருவில் இறங்கி வீழ்த்துவதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here