
சென்னை மேற்கு மாம்பலத்தில் அமைந்துள்ள கோ சம்ரக்ஷணா கோசாலையில் மாட்டுப் பொங்கலுக்கு கோ பூஜை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி பங்கேற்றார்.
“பாக்டீரியா, பூஞ்சை, செரிமான கோளாறு உள்ளிட்ட பல உடல் பாதிப்புகளை எதிர்க்க கோமியம் சிறந்த மருத்துவ குணத்தை கொண்டது. இந்த மருத்துவ குணம் கொண்ட கோமியத்தை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்” என அவர் பேசியுள்ளார்.
பாசிச பாஜகவின் சன்னியாசி மற்றும் குண்டர் படை தலைவியான பிரக்யா ராஜ் ஏற்கனவே இந்த கருத்தை வலியுறுத்தி 2020 ஆம் ஆண்டிலேயே கீழ்க்கண்டவாறு பேசி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
“இதனால், என்னை இதுவரை கரோனா தொற்று அண்டவில்லை. எனக்கு தாங்கமுடியாத உடல்வலி ஏற்படுகிறது.
இதற்காக நான் எந்த மருந்துகளையும் எடுக்காமல் பசுவின் கோமியத்தையே அருந்தி வருகிறேன். இதனால், உடல்வலியுடன் கரோனா கூட என்னை அண்டியதில்லை.
பசுவின் கோமியம் என்பது வாழ்வை அளிப்பது. இதன்மூலம், கரோனா உள்ளிட்ட எந்த வகை தொற்றும் அண்டாது. புற்றுநோயையும் இந்த கோமியம் குணப்படுத்தும்.
எனக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை புற்றுநோய் இருந்தது. இதை குணப்படுத்த நான் பசுவின் கோமியத்தையும் அதன் வேறு சில மருத்துவப் பொருட்களையும் எடுத்துக் கொள்ளத் துவங்கினேன்.’ என அறிவியலுக்கு எதிராக முட்டாள்தனமாக பேசி தனது “உயர்தர மூளையை” வெளியுலகிற்கு வெளிப்படுத்தினார்.
படிக்க: ♦ மகாகும்பமேளா: காவிகளுடன் கைகோர்க்கும் கார்போரேட் பாசிஸ்டுகள்!
ஆர்.எஸ்.எஸ் பாஜகவில் உள்ள காட்டுமிராண்டி கும்பல் எப்போதுமே அறிவியலுக்கு முரணாகவும் சமூகத்தின் பழக்கவழக்கங்களுக்கு எதிராகவும் பேசுவதும் அதையே உயர்ந்தது என்று கருத்தை பரப்புவதும் கடந்த 10 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.
மாட்டின் கோமியத்தை முன்வைத்து ஆராய்ச்சி செய்கின்ற பழக்கத்தை ஆயுர்வேதா என்ற சிகிச்சை முறையுடன் இணைத்து கோமியம் குடிப்பது அறிவியல் பூர்வமானது என்று நிரூபிக்க படாத பாடு படுகின்றனர்.
எடுத்துக்காட்டாக ஆயுர்வேத மருத்துவத்தை முன்வைக்கின்ற ஒரு ஆராய்ச்சியின் படி “கோமியம் நச்சுத்தன்மை அல்லாததாக கருதப்படுகிறது. இதில் 95% நீர், 2.5% யூரியா மற்றும் எஞ்சியுள்ள 2.5% பல்வேறு உப்புகள், தாதுக்கள், என்சைம்கள் மற்றும் பிற பயனுள்ள ஹார்மோன்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. கோமட்ராவில் உள்ள முக்கியமான கனிமங்கள் மற்றும் நொதிகளில் சில கிரியேடினைன், ஆரம் ஹைட்ராக்ஸைடு, கார்போலிக் அமிலம், பீனால்கள், கால்சியம், மற்றும் மாங்கனீஸ் ஆகியவை அடங்கும்.” என்று எழுதுகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாசிச சன்னியாசியான யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த கோமிய ஆராய்ச்சி மேலும் முன்னேறியது.
கோமியத்திலிருந்து மருந்துகள் தயாரிப்பதை யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு ஊக்குவித்து வருகிறது. அந்த மாநிலத்தின் ஆயுர்வேதத் துறை, சமீபத்தில் கோமியத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட எட்டு மருந்துகளை அறிமுகம் செய்திருக்கிறது.
படிக்க: ♦ ஹரியானா பிளஸ் டூ படிக்கும் மாணவன் படுகொலை: பசு காவல் பெயரில் நடக்கும் பயங்கரவாதம்!
“கோமியத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகள் கல்லீரல் நோய், மூட்டுவலி, நோய் எதிர்ப்புசக்திக் குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகளைத் தீர்க்கும். கோமியத்திலிருந்து மேலும் பல மருந்துகளைத் தயாரிக்கவும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறோம்” என்று உத்தரப்பிரதேச மாநில ஆயுர்வேதத் துறை இயக்குநர் செளத்ரி தெரிவித்திருக்கிறார்.
பசு புனிதமானது என்ற கருத்தை கடந்த 2000 ஆண்டுகளாக பரப்புவதன் மூலம் பரிணாம வளர்ச்சியில் மனித குலத்தின் வளர்ச்சிப் போக்குகளை மறுதலிக்கின்ற முட்டாள்தனமான கூட்டம் தான் ஆர்எஸ்எஸ் பாஜக என்பதை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர் என்பதன் தொடர்ச்சி தான் ஐஐடியின் முதல்வர் திருவாளர் காமகோடி முன் வைத்துள்ள கருத்தாகும்.
பசுவின் உறுப்புகள் அனைத்தும் நோய் தீர்க்கும் மருந்தாகவும் மனித குலத்திற்கு பல்வேறு வகையில் பயன்படுவதாகவும் முன்வைக்கின்ற இதே கும்பல் தான் பசுவின் கறியை உண்பதற்கு தடை விதித்து பல்வேறு அடக்குமுறைகளையும் ஏவி விடுகின்றனர்.
ஒடுக்கப்பட்ட மக்களின் மீது கொடூரமான தாக்குதல்களை நடத்தி பசு பாதுகாப்பு என்ற பெயரில் குண்டர் படை வெறியாட்டங்களை நடத்தி வருகிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இன்னொரு புறம் இப்படிப்பட்ட மூடத்தனமான கருத்துக்களை பரப்புவதற்கு முடிவு கட்ட வேண்டும்.
“இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம், பசுக்கள், எருமைகளின் சிறுநீரை ஆய்வு செய்ததில், அதில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் 14 வகையான பாக்டீரியாக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இவை மனித உடலுக்குள் சென்றால் வயிறு, குடல்களில் தொற்று உள்ளிட்ட நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும், கோமியம் குடிப்பதற்கு உகந்தது அல்ல” என்றும் தெரிவித்துள்ளது. இதனை நாம் இந்திய சமூகம் முழுவதும் கொண்டு செல்வோம்.
இந்த அறிவியலைத் தொடர்ந்து அவர்கள் புறக்கணித்து வருவதால் “மாட்டு மூத்திரத்தையும் சாணியையும் நீ குடி, உணவாகத் தின்றுக் கொள்” என்றும், அதன் பிற உபயோகமான பொருட்களை நாங்கள் பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதையும் பார்ப்பன பாசிசத்திற்கு எதிரான போராட்டத்துடன் இணைக்க வேண்டும்.
- பார்த்தசாரதி
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி






