
மகாராஷ்டிராவில் தற்பொழுது பிஜேபி தலைமையிலான கூட்டணி தான் ஆட்சியில் இருக்கிறது. அதில் பிஜேபியை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக இருக்கிறார். இவர் முதலமைச்சராகப் பதவியேற்றதற்கு மறுநாள், மகாராஷ்டிரா தூர்தர்ஷனுக்கு கொடுத்த பேட்டி டிசம்பர் 6 அன்று வெளியாகி ஜனநாய சக்திகள் ஊடகவியலாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக முதலமைச்சர் நவீன் பட்னாவிசை பேட்டி காண்பதற்காக
பாஜகவின் ஊடகப் பிரிவின் மாநிலத் தலைவரான நவ்நாத் பேன்-ஐ (Navnath Ban) தூர்தர்ஷன் நியமித்தது. வெளியில் உள்ள திறமையாளர்களையும் கலைஞர்களையும், சம்பளம் கொடுத்து, தூர்தர்ஷனில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அடிப்படையில் பாஜக முதலமைச்சர்ரை பேட்டி எடுப்பதற்காக பாஜகவை சேர்ந்த நவ்நாத் பேன்-ஐ நியமித்ததாக தூர்தர்ஷன் கூறியுள்ளது.
மகாராஷ்டிராவில் தொலைக்காட்சிகளில் பேட்டி எடுப்பதில், ஊடகவியலாளர்களாக செயல்படுவதில் மிகுந்த அனுபவம் மிக்கவர்களாக ஏராளமானோர் உள்ள நிலையில் இவரை எதற்கு தூர்தர்ஷன் நிர்வாகிகள் தேர்ந்தெடுத்தனர்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கான பதில் மிகவும் எளிமையானது. நாவ்நாத் பேன் பாஜகவை சேர்ந்தவர். பாஜகவின் மகாராஷ்டிரா மாநில தலைவரான சந்தரசேகர் பவன்குலே விற்கும் (Chandrashekhar Bawankule) முதலமைச்சர் பட்னாவிஸுக்கும் மிகவும் நெருக்கமானவர். இவர் 2023 ஆம் ஆண்டில் பாஜகவில் இணைந்த பொழுது இவரை வரவேற்று தற்போதய பாஜக முதலமைச்சர் வீடியோ வெளியிட்டு இருந்தார்.
இப்படிப்பட்ட நாவ்நாத் பேன்-ஐ நியமித்து, தேவேந்திர பட்னாவிஸ்க்கு ஜால்ரா அடிக்கும் கேள்விகளை கேட்டு, பேட்டி எடுக்க வைத்ததன் மூலம் தூர்தர்ஷன் பாஜகவின் ஊடகப் பிரிவாக மாறி பட்னாவிஸிற்காக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறது.
இந்தப் பேட்டியின் காணொளிகளை பாஜகவின் ஊடகப்பிரிவு தனது கட்சியின் பிரச்சாரத்திற்காக மக்களிடையே பரப்பிக் கொண்டிருக்கிறது.
முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸும் இந்த பேட்டியின் காணொளி துணுக்குகளை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து உள்ளார்.
பாஜக முதலமைச்சரின் விளம்பரத்திற்காக தூர்தர்ஷனின் பணத்தை சம்பளமாக கொடுத்து பாஜகவின் ஊடகப்பிரிவு தலைவரையே பேட்டி எடுப்பதற்கு நியமித்து அந்த பேட்டியை தூர்தரசனின் செலவில் ஒளிபரப்பி பாஜகவிற்காக மிகப்பெரும் பிரச்சாரத்தை மகாராஷ்டிரா துர்தர்ஷன் முடுக்கி விட்டுள்ளது.
பாஜகவின் ஆட்சியில் அரசின் ஒவ்வொரு துறையும் பாஜகவின் துறைகளாக மாற்றப்பட்டு கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் தற்போதைய ஒரு சிறு நிகழ்வு தான் இந்த பேட்டி.
படிக்க: ♦ பீதியில் மோடி! முட்டுக்கொடுக்கும் மீடியாக்கள்!
இப்படி அரசு துறைகளை கபளீகரம் செய்வதை பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள்? என்ன எதிர்வினை ஆற்றுவார்கள்? என்று துளியும் கவலையோ பயமோ இன்றி பாஜக செயல்படுகிறது.
மக்களின் அரசியல் உணர்வு மட்டம் மிக மிகக் குறைவாக உள்ளதும் மக்களின் அரசியல் உணர்வு மட்டத்தை உயர்த்த வேண்டும் என்பதில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் எவ்வித அக்கறையும் அற்று இருப்பதும் தான் இதற்கு காரணம்.
படிக்க: ♦ இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை பரப்பும் மீடியாக்கள்!
தேர்தல் காலத்தில் ‘அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஆபத்து’ என பேசுவதன் மூலம் பாசிச பாஜகவை தேர்தலில் வீழ்த்தி விடலாம் எனக் கருதுகின்றனர்.
மேலும், கூட்டணி கணக்குகள் மூலம் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்பது; ஆட்சியில் அமர்ந்து கொண்டு அதன் பலன்களை அனுபவிப்பது என்பதை தாண்டி பாசிசத்தை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் செயல்படுவதில்லை.
இப்படிப்பட்ட செயல்பாடுகள் மூலம் பாஜகவை தேர்தலில் கூட தோற்கடிக்க முடியாது. பாஜகவின் பாசிச ஆட்சியை வீழ்த்திட அதன் ஒவ்வொரு மக்கள் விரோத, ஜனநாயக விரோத செயல்பாடுகளுக்கு எதிராக மக்களைத் திரட்டி போராட்டங்களை கட்டியமைப்பதே தீர்வாக அமையும்.
— குமரன்