முல்லைப் பெரியாறு அணை கண்காணிப்பு விவகாரம்! மக்கள் கண்காணிப்பு கமிட்டி அமைத்து ஒப்படை!

தென் தமிழகத்தின் விவசாயிகளும், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு சங்கமும், விவசாயிகள் விடுதலை முன்னணியும் தொடர்ந்து போராடியதன் காரணமாக பெரியாறு அணையில் 142 அடி அளவிற்கு நீரை தேக்குவதற்கான உரிமை நிலைநாட்டப்பட்டது. 

முல்லை பெரியாறு அணை

“நாட்டிலேயே வேறெங்கும் இல்லாதவாறு தண்ணீர்ப் பிரச்சினை தமிழ்நாட்டுக்குத் தனிச் சிறப்பான, சிக்கலான பிரச்சினை. துறைமுகமில்லாத நாட்டைப் போல, தனக்கு மட்டுமே உரிய நீராதாரங்கள் இல்லாதது தமிழ்நாடு; இது தனது விவசாயம், தொழில், குடிநீர்த் தேவைக்காக முல்லைப் பெரியாறு, சிறுவாணி-பவானி, காவிரி, பாலாறு, தென்பெண்ணை ஆகியவற்றை நம்பியே இருக்கிறது. இந்த நீராதாரங்கள் எல்லாம் அண்டை மாநிலங்களிலிருந்து தொடங்குகின்றன. அவற்றின் வடிகால் பகுதியாகவுள்ள தமிழகத்தின் உரிமை சட்டப்படியானது; நியாயமானதுதான்.

ஆனாலும், தமிழகம் வாதாடி, போராடிப் பெற வேண்டியுள்ளது. புதிய அணைகள், தடுப்பணைகள் கட்டியும் பல்வேறு விதங்களில் நீர்வரத்து தடுக்கப்படுகின்றது; மறுக்கப்படுகின்றது. அதனால் அண்டை மாநில மக்களுடனான முரண்பாடும் மோதல்களும் தீராதவையாகவும் அதிகரித்துவரும் பிரச்சினையாகவும் உள்ளது. இந்த நிலைக்கு என்னதான் காரணம்? என்னதான் தீர்வு?” என்ற கேள்வியை எழுப்பி மக்கள் அதிகாரம் துவக்கப்பட்ட காலத்திலேயே “நீர்நிலைகளின் மீதான அதிகாரம் அனைத்தும் மக்களுக்கே” என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழகம் மற்றும் புதுச்சேரி தழுவிய இயக்கத்தை மேற்கொண்டோம்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் !

தமிழகத்தின் தென் மாவட்டங்கள்  தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள்  குறிப்பாக முல்லைப் பெரியாறு மற்றும் வைகை ஆற்றை நம்பியே விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் தென் பகுதிகளை வறட்சி தாக்கிய போது தனது சொந்த பணத்தில் இருந்து முல்லை பெரியாறு அணையைக் கட்டி தமிழகத்தில் பகுதிகளுக்கு பாசனத்தை ஏற்படுத்த வேண்டும் என்று  பிரிட்டன்  ஆட்சி காலத்தில்  அதிகாரியாக பணியாற்றிய பென்னி குய்கிற்கு இருந்த பொறுப்புணர்ச்சியும், அக்கறையும் 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் வாங்கியதாக கூறப்பட்ட ஆண்டிலிருந்து இந்தியாவை ஆண்டு வரும் இந்திய ஒன்றிய அரசு மற்றும் தமிழக மாநில அரசுகளுக்கு இருந்ததில்லை என்பதை எதிர்த்து தொடர்ந்து தென் மாவட்ட மக்கள் போராடி வருகின்றனர்.

“முல்லைப்பெரியாறு அணைப்பிரச்சனையால் தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் இழப்பின் தாக்கத்தைப் பொதுமக்கள் தற்போது உணராவிட்டாலும், வரும் காலங்களில், அதன் பின்விளைவுகள் தேசிய அளவில் மிகவும் கடுமையாக இருக்கப் போவது உறுதி என்பதால், இப்பிரச்சனையில் மத்திய அரசு உறுதியான கொள்கை முடிவை எடுத்துக் காலம் கடத்தாமல் ஒரு தீர்வுக்கு வழி செய்தால்தான், நாட்டின் நீர்த்தட்டுப்பாடுள்ள பகுதிகளின் வருங்கால நீர்த் தேவைகளைச் சமாளிக்க முடியும். இதில் மேலும் காலம் கடத்துவது பல பிரச்சினைகளுக்கு வித்தாகிவிடும்.

உண்மைகளின் வெளிச்சத்தில் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப் பூர்வமாகப் பிரச்சனையை அணுகினால், இரண்டு மாநிலங்களும் பயன்பெறக்கூடிய தேசிய நோக்கிலான ஒரு நடுநிலையான தீர்விற்கு வழியுள்ளது. இப்படிப்பட்ட தீர்வைக் காண்பதற்கு அடிப்படையாக இந்நூலில் தெளிவாக்கப்பட்டுள்ள கருத்துக்கள் மத்திய நீர்வள ஆணையத்திற்கோ (Central Water Commission), கேரள அரசு மற்றும் மத்திய அரசின் நீரியல் வல்லுநர்களுக்கோ தெரியாதவையும் அல்ல. அவர்களால் மறுக்கக்கூடியவையும் அல்ல. அவற்றைப் பொதுமக்களும் தெரிந்துகொண்டால்தான் பிரச்சினைக்கான சரியான தீர்வை மத்திய அரசு, அரசியலைக் கடந்த உறுதியுடனும், காலம் கடத்தாமலும் செயல் படுத்துவதற்கான அழுத்தத்தைத் தரமுடியும்” என்று முல்லைப் பெரியாறு அணை: வரலாறும் தீர்வும் என்று நூல் எழுதிய, தமிழகத்தின் வேளாண்மை மற்றும் பொறியியல் துறையில் 32 ஆண்டு காலம் பணியாற்றிய திரு. இரா. வேங்கடசாமி குறிப்பிடுகிறார்.

படிக்க: முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டுவோம்! 2018 மீள்பதிவு

இந்த நூல் வெளியாகி ஏறக்குறைய புத்தாண்டு காலத்திற்கும் மேலாகிறது. தென் தமிழகத்தின் விவசாயிகளும், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு சங்கமும், விவசாயிகள் விடுதலை முன்னணியும் தொடர்ந்து போராடியதன் காரணமாக பெரியாறு அணையில் 142 அடி அளவிற்கு நீரை தேக்குவதற்கான உரிமை நிலைநாட்டப்பட்டது.

இந்த நிலைமை இருக்கும் போது மழைக் காலங்களில் கேரளாவில் ஏற்படுகின்ற வெள்ளப்பெருக்கு மற்றும் முல்லை பெரியாறு அணையில் உயர்த்தப்படும் நீர்மட்டம் ஆகியவற்றை எதிர்த்து கேரளாவை ஆளுகின்ற காங்கிரஸ் மற்றும் இடதுசாரி அரசாங்கம், பாஜக மற்றும் முல்லைப் பெரியாறு அணையால் லாபம் பெறுகின்ற பெரும் முதலாளிகள் தொடர்ச்சியாக  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கலவரத்தை கட்டவிழ்த்து விடுகின்றனர் என்பது மட்டுமின்றி சட்டரீதியாகவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து நீரை தேக்குவதை தடுத்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்திருக்க வேண்டும் என்று இந்த வழக்கின் விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்..

படிக்க: கேரள வெள்ளத்திற்கும் முல்லைப் பெரியாறு அணைக்கும் தொடர்பு உண்டா ? 

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து முல்லை பெரியாறு அணைக்கான புதிய கண்காணிப்புக் குழுவை ஒன்றிய அரசு திடீரென்று அமைத்துள்ளது. தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் தலைமையில் 7 பேர் கொண்ட புதிய கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணை பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை குழு கண்காணிக்கும் என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் இடம்பெற்றுள்ளனர். கேரள நீர்ப்பாசனத்துறை தலைவர், பெங்களூரு ஐஐஎஸ் கல்வி நிறுவன பிரதிநிதி உள்ளிட்டோர் குழுவில் உள்ளனர். புதிய கண்காணிப்புக் குழு தொடர்பான அறிக்கையை ஒன்றிய நீர்வளத்துறை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த முல்லை பெரியாறு கண்காணிப்புக் குழு கலைக்கப்படுவதாகவும் ஒன்றிய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது..

பல ஆண்டுகால போராட்டங்களுக்கு பிறகு தற்போது முல்லைப் பெரியாறு அணை கண்காணிப்பு இந்திய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் நேரடியாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆனால் இதன் மூலம் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் முழுமையாக தீர்க்கப்பட முடியாது.

மக்களின் பொது சொத்தான நீர்நிலைகள், ஆறுகள், ஏரிகள், குளங்கள் மற்றும் அணைகள் அனைத்தும் மக்கள் கமிட்டிகளால் கண்காணிக்கப்பட வேண்டுமே அன்றி எங்கிருந்தோ கண்காணாத தொலைவில் இருந்து மக்களுக்கு மேலான அதிகாரம் பெற்ற அதிகார வர்க்க கும்பலை உள்ளடக்கிய கண்காணிப்பு கமிட்டிகள் மூலம் கண்காணிப்பது கூடாது என்று போராடுவோம்.

நீர்நிலைகள் மீதான அதிகாரங்கள் அனைத்தும் மக்களுக்கே என்று முழங்குவோம்.

கரட்டுப்பட்டியான்.

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here