அரச வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் அடக்குமுறைச் சட்ட விதிகளைக் கொண்டுவந்து மக்களின் அமைதியான எதிர்ப்புகளைக் கொடூரமாக ஒடுக்கி வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினதும், ரணில்-ராஜபக்ச ஆட்சியினதும் ஃபாசிச முகங்கள் இன்று நாட்டு மக்களின் முன்னால் வெளிச்சமாகியுள்ளன. அதன் மூலம் அவர்களது ஜனநாயக முகமூடிகள் உடைந்து வீழ்ந்து வேடங்கள் கலைந்துள்ளன. காலிமுகத்திடல் போராட்டத்தைத் தொடர்ந்து இதுவரை மூவாயிரத்திற்கு மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் மாணவச் செயற்பாட்டாளர்கள் இருவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு ஃபாசிச வழிகளில் செயல்படுவது ரணில்-ராஜபக்சக்களுக்கு இதுதான் முதல்தடவை அல்ல. இவ்வாறு நாளாந்தம் முன்னெடுக்கப்பட்டு வரும் ஃபாசிச அடக்கு முறைகளையும் அவற்றுக்கான சட்டங்களையும் எமது கட்சி வன்மையாகக் கண்டித்து எதிர்த்து நிற்கின்றது. இப்பொழுது பயன்படுத்தப்பட்டு வரும் பயங்கர வாதத் தடைச் சட்டம் 1979ம் ஆண்டிலிருந்து தமிழ் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட மிக மோசமான ஒரு சட்டமாகும்.
இச் சட்டத்தை அன்று ரணில் விக்கிரமசிங்காவும் அமைச்சரவையில் இருந்து ஒப்புதல் அளித்தே அவரது மாமனாரான ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் கொண்டு வரப்பட்டதாகும். இக் கொடூரச் சட்டத்தினால் ஆயிரக் கணக்கான தமிழ் இளைஞர்கள் சிறை சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டதுடன் கொல்லவும் பட்டனர்.
இக் கொடிய சட்டத்தின் கீழ் இன்றும் விடுவிக்கப்படாமல் நூற்றுக்கு உட்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் பத்துப் பதினைந்து வருடங்களுக்கு மேல் சிறைகளில் இருந்து வருகிறார்கள். தமிழர்களை மட்டுமன்றி முஸ்லிம்களையும், மலையக மக்களையும் இச்சட்டம் அவ்வப்போது கொடுமைப் படுத்திக் கொண்டது. எமது கட்சியும் இச் சட்டத்தால் பாதிக்கப்பட்டு எமது தோழர்கள் இரண்டு, மூன்று, ஆறு ஆண்டுகள் வரை சிறைகளில் வதைபட்டனர். அத்தகைய கொடூரச் சட்டமானது இப்போது சிங்கள மக்களுக்கும் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் எதிராகத் திருப்பி விடப்பட்டுள்ளது.
இப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அதன் ஆரம்பத்திலிருந்தே எமது கட்சி கண்டித்து எதிர்த்து அதனை ரத்து செய்யக் கோரி மக்கள் இயக்கங்களை முன்னெடுத்து வந்துள்ளமை குறிப்பிட வேண்டியதாகும். எனவே சட்டத்தின் ஆட்சி எனக்கூறி குறுக்கு வழியாகவும் பணக் கட்டுகளைக் கொண்டும் ஆட்சி நடத்தி வரும் ரணில் – ராஜபக்ச ஆளும் வர்க்கமானது பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் வர்த்தமானி அறித்தல்கள் மூலமான சட்ட விதிகளையும் நடைமுறைப்படுத்தி கொடூரப் ஃபாசிச ஆட்சியாக முன்னெடுக்கப்படுகிறது. இத்தகைய தேசவிரோத, மக்கள் விரோத, தேசிய இனங்கள் விரோத ஆட்சியே கடந்த எழுபத்தைந்து வருடப் பாராளுமன்ற ஆட்சிமுறையாகவும் அதனிடையேயான நாற்பத்திநான்கு வருடகால சர்வாதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமையாகவும் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.
அதற்கான அரசியல் அமைப்பானது முழு நாட்டையும் அனைத்து மக்களையும் நாசகாரப் பாதையிலேயே வழிநடாத்தி வந்துள்ளன. தேசப்பற்று, இனப்பற்று, மத விசுவாசம் எனக் கூவிக் கொண்டே ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்த ஆளும் வர்க்கச் சிங்கள பௌத்த பேரினவாத மேட்டுக் குடிச் சக்திகள் நாட்டை நாசப்படுத்தி வந்துள்ளனர். இன,மொழி, மதப் பிரதேசப் பிளவுகளைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றிப் பெறப்பட்ட வாக்குகள் மூலம் ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து இருந்து வந்துள்ளனர்.
இதனையே சுதந்திரம், ஜனநாயகம், வாக்களிக்கும் உரிமை , சட்ட ஆட்சி எனப் பரப்புரை செய்தும் கொண்டனர். இவற்றின் மூலம் நாட்டின் ஏகப் பெரும்பான்மை மக்களான உழைக்கும் மக்களுக்கு எதுவுமே கிடைக்கவில்லை. இன்று உழைக்கும் மக்கள் ஒரு நேரச் சாப்பாட்டிற்கே வழி இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு யார் காரணம் என்பதை மக்கள் பட்டறிவின் மூலம் புரிந்து வருகிறார்கள். ஆனால் கடந்த காலத்தில் சுரண்டலாலும் குறுக்கு வழிகளாலும் அதிகார துஷ்ப்பிரயோகம் ஊழல் முறைகேடுகளாலும் பெரும் சொத்துச் சேகரித்து லட்சாதிபதிகளாக, கோடீஸ்வரர்களாக,வெளிநாடுகளில் முதலீடு செய்வோராக இருந்து வருவது மட்டுமன்றி நாட்டின் தலை விதியைத் தீர்மானிக்கும் அரசியல் தலைவர்களாகவும் வாரிசு அரசியற் குடும்பங்களாகவும் இருந்து வருகிறார்கள் என்பதும் புரியப்பட்டே வருகிறது.
இவர்கள் நாட்டின் வளங்களைக் காலத்திற்குக் காலம் அந்நிய ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கும் பிராந்திய மேலாதிக்க வல்லரசுகளுக்கும் தாரை வார்த்துக் கொடுத்து அதன் மூலம் கோடிக் கணக்கில் தரகுப் பணம் பெற்று தங்களையும் தமது குடும்பங்களையும் வளப்படுத்திக் கொண்டார்கள்.
அதேவேளை ஆட்சி அதிகாரப் பிடியை இன்றுவரை இறுக்கி வைத்து அதிகாரத்தில் இருந்து வருபவர்களும் இவ் ஆளும் வர்க்க சக்திகளாகவே உள்ளனர். இவர்களது நாசகரமான நவதாராள பொருளாதாரக் கொள்கைகளின் ஒட்டுமொத்த எதிர்விளைவுகளையே நாட்டின் அனைத்து மக்களும் மோசமான அரசியல் பொருளாதார சமூக பண்பாட்டு நெருக்கடிகளாக அனுபவித்து வருகின்றனர். மக்களின் இத்தகைய நிலைக்கு அடிப்படையாக அமைந்த அரசியலமைப்பும் அதன் கீழான தேசவிரோத, மக்கள் விரோத, தேசிய இனங்கள் விரோத ஆட்சி முறைமைகளும் அவற்றின் பாதுகாவலர்களான ஆளும் வர்க்க சக்திகளும் தூக்கி வீசப்படவேண்டும்.
இதற்கு அனைத்து மக்களினதும் ஐக்கியப்பட்ட வேலைத்திட்டமும், அமைப்பாக்கப்பட்ட வெகுஜன எழுச்சிகளும் அவசியமாகும் என்பதையே எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு மேற்படி கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.