நொய்டாவில் குறைந்தபட்ச ஊதிய உயர்வு கேட்டு நடந்து வந்த போராட்டம் நேற்று மூன்றாவது நாளில் (12.04.26 ஞாயிற்றுக்கிழமை) அரசின் அடக்குமுறையால் வன்முறையாக மாறியது. “ஹரியானாவில் உயர்த்தப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை போல் எங்களுக்கும் உயர்த்திக் கொடு” என்று உத்தர பிரதேசத்தில் தொழிலாளர்கள் களத்தில் இறங்கி உள்ளனர்.
நொய்டாவைப் பொறுத்தவரை அங்கு குறைந்தபட்ச ஊதியம் என்பது 11,000 முதல் 13,000 வரை உள்ளது. உத்தரபிரதேசத்தில் இந்த சம்பளத்தைக் கொண்டு வாழ்வது என்பது சாத்தியமில்லாததாக உள்ளது. ஹரியானா மாநிலத்தைப் போல் நாள் ஒன்றுக்கு குறைந்தது 550 முதல் 750 வரையிலான (15,000/மாதம்) கூலி வரும் வகையில் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கையை முன்னிறுத்தி ஜவுளி பூங்காவில் உள்ள தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
தொழிலாளர்களை கையாள தொழிலாளர் நலத்துறை களத்தில் இறக்கப்பட்டால் அது சரியானது. ஆனால் போலீசாரும், விரைவு அதிரடி படையினரும் குவிக்கப்பட்டு, கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டு, தடியடிகள் நடத்தப்படுவதன் மூலம் சூழலை கலவரமாக மாற்றும் வேலையிலேயே பாஜக அரசு – யோகி அரசு விருப்பம் கொண்டுள்ளது என்பதை மூன்றாவது நாள் போராட்டம் நிரூபிக்கிறது.
கார்ப்பரேட் அடியாளான பாஜக மோடி அரசின் தாக்குதலை எல்லாம் கணக்கில் எடுக்காமல், பாட்டாளி வர்க்கமானது தனக்கே உரிய போர்க் குணத்தோடு முதலாளி வர்க்கத்தை எதிர்த்து களமாடுகிறது. கார்ப்பரேட்டுகளின் அடியாள் அரசால் ஏவப்படும் போலீசின் தாக்குதலை கண்ணீர் புகை குண்டு வீச்சுகளை தீரத்துடன் எதிர்கொள்கிறது.
இருப்பதையும் பறிக்காதே!
இதுவரை தொழிலாளி வர்க்கம் காலனிய காலத்திலிருந்து போராடிப் பெற்ற சட்டபூர்வ உரிமைகளை எல்லாம் மோடி அரசிடம் பறிகொடுத்து நிற்கின்றது. கடந்த ஏப்ரல் ஒன்றிலிருந்து மோடி அரசால் புதிய சட்ட தொகுப்புகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
பழைய சட்டத் தொகுப்பு இருக்கும்போதே கார்ப்பரேட்டுகள் நம் நாட்டை கொள்ளையிடவோ, நம் நாட்டு மக்களின் உழைப்பு சக்தியை வகைதொகை இல்லாமல் சுரண்டி கொழுக்கவோ எவ்வித தடையும் இருக்கவில்லை. பெயரளவிற்கு இருந்த சட்டபூர்வ தடைகளும் தற்போது மோடி அரசால் தூக்கி எறியப்பட்டு விட்டன. இதைப் பயன்படுத்தி தொழிலாளி வர்க்கத்தை மேலும் கசக்கிப் பிழியவே காப்பரேட்டுகள் விரும்புகின்றனர். அவர்கள் விரும்பும் திசையிலேயே அனைத்து சம்பவங்களும் நடப்பதில்லை.
புதிய சட்டத்தின் அமலாக்கம் தொடங்கி ஒரு மாதம் முடியவில்லை அதற்குள் ஹரியானாவில் தொழிலாளர்கள் முதல் வெற்றியைச் சுவைக்கின்றனர்.
ஆடுகளுக்காக கவலைப்படும் ஓநாய்!
ஹரியானாவில் தொழிலாளர்களின் கோரிக்கைக்குப் பணிந்து குறைந்தபட்ச ஊதியம் 15,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக தொழிலாளர்களுக்காக “முன்னாள்” ஆட்சியாளர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்
ஹரியானாவின் முன்னாள் துணை முதல்வர் துஷ்யந்த் சௌதாலா சனிக்கிழமையன்று, மாநிலத்தில் சமீபத்தில் உயர்த்தப்பட்ட குறைந்தபட்ச ஊதியம், லட்சக்கணக்கான தொழிலாளர்களை பல்வேறு அரசு நலத்திட்டங்களைப் பெறத் தகுதியற்றவர்களாக ஆக்கிவிடும் என்று கவலை தெரிவித்தார்.
படிக்க:
♦ தொழிலாளர்களை ஊழல் படுத்தும் கார்ப்பரேட் கிருமிகள்!
♦ தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை அமலாக்க விடாதே! திரும்பப் பெற வீதியில் இறங்கி போராடுவோம்!
பல திட்டங்களுக்குத் தகுதி பெற, குடும்பத்தின் ஆண்டு வருமானம் ₹ 1.80 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும் என்று சௌதாலா கூறினார் .
இருப்பினும், தற்போது அனைத்துப் பிரிவுகளிலும் குறைந்தபட்ச ஊதியம் மாதத்திற்கு ₹ 15,000- ஐத் தாண்டிவிட்டதால், பதிவுசெய்யப்பட்ட தொழிலாளர்களின் ஆண்டு வருமானம் இந்த வரம்பைக் கடந்து, அவர்கள் சலுகைகளைப் பெறத் தகுதியற்றவர்களாகியுள்ளனர்.
பரிவார் பெஹ்சான் பத்ராவில் அறிவிக்கப்பட்ட வருமானத்தின் அடிப்படையில் தகுதி நிர்ணயிக்கப்படும், வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கான ரேஷன் அட்டைகள், சிராயு ஹரியானா திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை, தயாலு யோஜனா திட்டத்தின் கீழ் நிதியுதவி, பெண்களுக்கான லாடோ லக்ஷ்மி திட்டம், முதலமைச்சர் ஷஹ்ரி ஆவாஸ் யோஜனா, தனியார் பள்ளிகளில் இலவசக் கல்விக்கான சிராக் திட்டம் மற்றும் திருமண உதவித் திட்டங்கள் உள்ளிட்ட திட்டங்களை அவர் மேற்கோள் காட்டினார். இதுபோன்ற திட்டங்களுக்கான ஆண்டு வருமான வரம்பை ₹ 2.40 லட்சமாக உயர்த்தவும் அவர் மாநில அரசை வலியுறுத்தினார்.
ஹரியானாவை தொடர்ந்து உபி -யில் பரவுகிறது தொழிலாளர்களின் உரிமைப் போர்!
முதலாளி வர்க்கமானது அரசை தனது அடியாளாக பயன்படுத்தி ஒருபுறம் தொழிலாளர் நல சட்டங்களை ஒழித்து கட்டுகிறது; மறுபுறம், ஆயுதப் படைகளை ஏவி தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டங்களை நசுக்குகிறது.
மோடி அரசின் இத்தகைய தாக்குதலையும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஈவிரக்கமற்ற சுரண்டலையும் எதிர்த்து உரிமைகள் ஏதுமற்ற தொழிலாளர்கள் களத்தில் நிற்கின்றனர்.
படிக்க:
♦ வட மாநில தொழிலாளர்களின் ரயில் பயணங்களும் அவர்கள் படும் துயரங்களும்!
♦ குறைந்து வரும் தொழிலாளர்களின் கூலியும் வளர்ந்து வரும் கார்ப்பரேட்டுகளின் லாபமும்!
“நாங்கள் வீதிகளுக்கு தள்ளப்பட்டுள்ளோம் எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் பின்வாங்க மாட்டோம். ஹரியானாவை போல் எங்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் 35 சதவீதம் உயர்த்தப்பட வேண்டும்” என்கின்றனர்.
பாசிஸ்ட்டுகளின் வழிமுறை வன்முறையே!
தொழிலாளர்களின் கோரிக்கையைப் பரிசீலிப்பதற்கு பதில், அடக்குமுறையை ஏவுகிறது டபுள் எஞ்சின் சர்க்கார். திட்டமிட்டு அரசே வன்முறையை ஏவுவதன் மூலம் நொய்டாவின் செக்டார் 84, மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் போராட்டத்தின் மூன்றாம் நாளில் ஆயுதப் படைகளின் கட்டுப்பாட்டிற்குள் செல்கிறது.
இழப்பதற்கு ஏதுமற்ற வர்க்கத்திடம் துணிச்சல் அதிகமாகத்தான் இருக்கும். “முதலாளிக்காக கூடுதல் நேரம் உழைக்க வேண்டும் என்றால் அதற்கான கூலியையும் கூட்டிக் கொடு” என்கின்றனர் தொழிலாளர்கள். அவர்களின் நியாயமான கோரிக்கைகள் காது கொடுத்து கேட்கப்படாத நிலையில்தான் சாலை மறியலில் அமர்ந்தனர்.
அடக்குமுறைகளின் மூலம் தொழிலாளி வர்க்கத்தை ஒடுக்க முடியும் என்றால், பாரீஸ் கம்யூன் எழுச்சியின் படிப்பினைக்கு பின்னர் உலக நாடுகளில் தொழிற்சங்கங்களே முளைத்திருக்காது. 1905 இல் ரசியாவின் “ரத்தஞாயிறு” சம்பவத்திற்கு பின்னர் எழுச்சிகளே நடந்திருக்காது. இந்தியாவில் ஜாலியன் வாலாபாக்கிற்கு பின்னர் பகத்சிங் தோன்றியிருக்கவே மாட்டார்.
தோற்றுப்போன ஃபார்முலாவையே மீண்டும் மீண்டும் நம்ப வேண்டிய கையறு நிலையில் தான் முதலாளித்துவ அரசுகள் உள்ளன. போராட்டக்காரர்களை முதலில் புறக்கணிப்பது, பின்னர் போராட்டம் வலுக்கும் போது படைகளை குவித்து அச்சுறுத்துவது, அதைத் தொடர்ந்து கல் வீச்சு, அதையே காரணம் காட்டி தடியடி முதல் கண்ணீர் புகை வீச்சு வரை அரங்கேற்றுவது; இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை அடித்து நொறுக்கி கொளுத்துவது; முடிவில் துப்பாக்கி சூட்டுக்கும் தயாராவது என்ற அதே பழைய ஃபார்முலாவையே நொய்டாவிலும் அரங்கேற்றுகிறார்கள்.
வரலாற்று உண்மைகளை வசதியாக மறந்து விட நினைக்கிறது ஆளும் வர்க்கம். தவறாமல் தமது போராட்டங்களின் மூலம் அதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி வருகிறது தொழிலாளி வர்க்கம்.
பாட்டாளி வர்க்கத்தின் கைகளுக்குள் உலகம் போய்விடுமோ என்று நீடித்த பதற்றத்திலேயே ஏகாதிபத்தியங்களும் கார்ப்பரேட் முதலாளிகளும் தவிக்கின்றனர். அதற்கு ஏற்ப மேலும் மேலும் ஆயுதப் படைகளையே சார்ந்து நிற்கின்றனர்.
கார்ப்பரேட்டுகள் இல்லாமல், முதலாளிகள் இல்லாமல் உற்பத்திகள் நடக்கும். ஆனால் உழைப்பாளிகள் இல்லாமல் உற்பத்தி நடக்காது. AI உள்ளிட்ட தொழில்நுட்ப வளர்ச்சியால் உற்பத்தி திறனை பெருக்கலாம். ஆனாலும் அந்த தொழில் நுட்பங்கள் தான் உற்பத்தி செய்த பொருட்களை நுகரப்போவதில்லை.
உழைப்பு சக்தியைச் சுரண்டுவதன் மூலம் தான் முதலாளி வர்க்கமானது லாபத்தை பெருக்கிக் கொள்கிறது என்று ஆசான் மார்க்ஸ் சுட்டிக்காட்டியதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றனர் தேசங் கடந்த கார்ப்பரேட்டுகள்.
ஆப்பிள் ஐபோன் நிறுவனமாக இருக்கட்டும், உலகத்தில் ஆன கார்களின் உற்பத்தியாக இருக்கட்டும், மூளை உழைப்பை முதன்மைப்படுத்தும் ஐடி நிறுவனங்களாகட்டும் இவை அனைத்தும் இந்தியாவிற்குள் பல்கிப் பெருகுவதற்கு காரணம் மலிவான உழைப்பு சக்தி தான். உடல் மற்றும் மூளை உழைப்பான இதை சுரண்டி கொழுக்கவே பன்னாட்டு நிறுவனங்களும், நம் நாட்டின் தேசங்கடந்த தரகு முதலாளிகளும் தமது கிளைகளை பரப்புகின்றனர்.
அம்பானி, அதானி, சிவ் நாடார் போன்ற கார்ப்பரேட்டுகளின் சுரண்டல் எந்த அளவு உச்சத்துக்கு போகிறதோ, இவர்களின் சொத்து மதிப்புகள் எந்த அளவு உச்சத்திற்கு போகின்றனவோ, அதற்கேற்பவே இவர்களால் சுரண்டப்படும் ஒடுக்கப்படும் உழைக்கும் வர்க்கமானது கோபத்தில் கனன்று தீப்பிழம்பாக வெடித்து களம் காண்கிறது.
உழைக்கும் வர்க்கத்தின் போர்க்குணத்திற்கு முன்னால், அரசின் ஆயுதப் படைகளின் அடக்குமுறைகள் தகர்த்தெறியப்படும். மக்களின் எழுச்சியின் முன்னால் ஏகாதிபத்தியங்கள் மண்டியிட்டு தீரும். இந்த வரலாற்று உண்மைகளை இந்தியாவும் நிரூபிக்கும். அதற்கு கட்டியம் கூறுவதாகவே தற்போதைய நொய்டா தொழிலாளர்களின் போராட்டக்களம் அமைந்துள்ளது. போராட்டத்தை நசுக்கும் பாஜக யோகியின் – டபுள் இன்ஜின் சர்க்காரின் அடக்குமுறைகளை அம்பலப்படுத்துவோம். போராட்டம் வெற்றி அடைய வாழ்த்துவோம்.
- இளமாறன்







நொய்டா தொழிலாளர் போராட்டம் குறித்து சுருக்கமான முறையில் என்றாலும் நறுக்குத் தெறித்தாற் போல் ஆசான் மார்க்சின் சொற்றொடரையும், AI
தொழில்நுட்பம் மூலம் முதலாளிகள் உற்பத்தி திறனை அதிகரிக்கலாம்; ஆனால் உற்பத்தி பொருட்களின் நுகர்வதற்கான நுகர்வோரை AI தொழில்நுட்பம் சப்ளை செய்யாது என்று புரிந்து கொள்ளும் வகையில் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது. கார்ப்பரேட் முதலாளிகளும் இந்துத்துவ பாஜக மத வெறி சார்ந்த அரசாங்கமும் அதன் அடியார் படையான போலீசும் தொழிலாளர்களுக்கு எதிரான அடக்கு முறையை ஏவுகின்ற முறை பாரிஷ் கம்யூன் காலம் தொட்டு இன்று வரை நீடிக்கவே செய்கிறது. இந்து மதத்தின் மூலவராக கொண்டாடும் ‘ராமன்’ கடவுள் வீற்றிருக்கும் உ.பி.யிலேயே அரசாங்கத்தால் அடியாள் படையை நம்பியே தொழிலாளர் போராட்டத்தை நசுக்கிட எண்ணுகிறது. ‘ராமன்’ கார்ப்பரேட்டுகளுக்கும் அரசாங்கத்திற்கும் கை கொடுக்கப் போவதில்லை; தொழிலாளர்களுக்கும் கை கொடுக்கப் போவதில்லை! இந்த உண்மையை புரிந்து கொண்டால் சாதி மதம் கடந்து கூர்மையான வர்க்கப் போராட்ட பாதையில் தொழிலாளர்கள் பீடு நடை போடுகின்ற பொழுது நொய்டா தொழிலாளர்களின் பொருளாதார கோரிக்கைகள் அடங்கிய போராட்டங்கள் மட்டுமல்ல; உழைக்கும் மக்களுக்கான அதிகாரங்களும் சேர்ந்து கைக்கு வந்து கிட்டியே தீரும். நொய்டா போராட்டம்
வெற்றியடைய நாடு முழுமையும் உள்ள தொழிலாளர்கள் அனைவரும் கரம் உயர்த்துவோம்!
நொய்டாவில் தொழிலாளர்களை ஒடுக்கும் பாசிச பாஜகவின் டபுல் எஞ்சின் சர்க்கார் !
அரியானாவில் நொய்டா ஜவுளி பூங்கா தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு களத்தில் இறங்கி மூன்று நாட்களாக போர் குணத்தோடு போராடி வருகிறார்கள் போராடக்கூடிய தொழிலாளர்களை அடக்க டபுள் எஞ்சின் சர்க்கார் யோகி அரியானா போலீஸ் அதிரடி விரைவுப் படைகளை அனுப்பி தொழிலாளர்களை கண்ணீர் புகை குண்டு வீசி ஒடுக்கும் வேலையை செய்கிறது
ஆங்கிலேய காலணி ஆதிக்க காலத்தில் போராடி பெற்ற சட்டங்கள் நீர்த்துப் போக வைத்து திருத்தம் என்ற பெயரிலே 4 தொகுப்புகளாக பாசிச பாஜக கொண்டு வந்த ஒரு மாதத்திற்குள் களத்தில் இறங்கி களப்போராளிகளாக போராட்டத்தின் சுவையை அனுபவித்து வருகிறார்கள் தொழிலாளர்கள் என எழுதப்பட்ட இந்த கட்டுரை சிறப்பு
அரியானா ஜவுளி பூங்கா தொழிலாளர்கள் போராட்ட தீ. உத்தர பிரதேச தொழிலாளர் மத்தியிலும் பரவி உள்ளது அந்த தொழிலாளர்களும் குறைந்தபட்ச ஊதிய உயர்வு கேட்டு களத்தில் போராடி வருகிறார்கள் என்ற செய்தி இந்திய தொழிலாளி வர்க்கத்திற்கு முன்னுதாரணமான ஒரு போராட்டமாக அமைந்துள்ளது என்பதை இந்த கட்டுரையின் மூலம் தெரிந்து கொண்டேன்.