கார்ப்பரேட் காவி பாசிச மோடி அரசின் செயல்பாடுகளுக்கும், அதுத் திணிக்கும் பல்வேறு சட்டங்களுக்கும் எதிராக கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி பொது வேலை நிறுத்தத்திற்கு மத்திய தொழிற்சங்கங்களும் விவசாய சங்கங்களும் இணைந்து அழைப்பு விடுத்திருந்தன. இதற்கு தொழிற்சங்கங்களில் உறுப்பினராக இருக்கும் நிரந்தர தொழிலாளர்களின் எதிர்வினை என்ன? குறிப்பாக பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றும் நிரந்தர தொழிலாளர்களிடம் எத்தகைய உணர்வு வெளிப்பட்டது? – என்பது நாம் கவனம் கெடுக்க வேண்டிய முக்கியமான விஷயமாக மாறி உள்ளது.
நாடு தழுவிய அளவில் கோடிக்கால் பூதமாக தொழிலாளி வர்க்கம் முழுமையான எண்ணிக்கையில் ஒன்றுபட்டு களம் காணவில்லை. குறிப்பாக தமிழ்நாட்டில் அவ்வாறு நடக்கவில்லை.
விவசாய வர்க்கத்துக்கு இல்லாத சாதகமான சூழல் தொழிலாளி வர்க்கத்துக்கு உண்டு. அதாவது பல்லாயிரக்கணக்கானோர் சேர்ந்து கூட்டு உழைப்பில் ஈடுபடுவதன் மூலம் தமக்குள் ஐக்கியத்தையும், ஒற்றுமையையும், வலிமையான தொழிற்சங்க கட்டமைப்பையும், பல பத்தாண்டு கால அனுபவத்தையும் பெற்றிருப்பவர்கள் தான். அப்படி இருந்தும் பாட்டாளி வர்க்கம் ஏன் கார்ப்பரேட்டுகளின் அடியாள் ஆட்சியாளர்களின் மூலம் இருக்கும் உரிமைகளையும் பறி கொடுத்து அடிமேல் அடி வாங்கி வருகிறது என்பது குறித்து பார்க்கலாம்.
பிளவுபட்டிருக்கும் இந்திய பாட்டாளி வர்க்கம்!
கார்ப்பரேட்டுகளாலும் பொதுத்துறை நிறுவனங்களில் அதிகார வர்க்கத்தினர்களாலும் இந்திய தொழிலாளி வர்க்கம் பிளவுபட்டு உள்ளது. நிரந்தர தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், NAPS மற்றும் பயிற்சித் தொழிலாளர்கள் எனப் பல்வேறு பிரிவுகளாக ஒன்றுக்கு எதிராக மற்றொன்றாக நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
ஒரே யூனிட்டில் ஒன்றிணைந்து உற்பத்தியில் ஈடுபடும் ஒவ்வொரு பிரிவினருக்கும் தனி சீருடை, தனி சம்பளம், தனி சலுகைகள் என கார்ப்பரேட்டுகளாலும் அதிகார வர்க்கத்தினராலும் திட்டமிட்டுப் பிளவுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பிளவை முறியடித்து வர்க்க ஒற்றுமையை கட்டியமைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ள தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை அரசியல் படுத்தி வளர்ப்பதற்கு வழி தெரியாமல் தவிக்கின்றன.
பொதுத்துறை நிறுவனங்களின் கள எதார்த்தம்!
நவரத்னா என்று கொண்டாடப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களே அடிமாட்டுக்கு அனுப்பப்படுகின்றன. அந்த வகையில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற BHEL எனப்படும் கொதிகலன் தயாரிக்கும் பெல் நிறுவனமும் வெட்டுக்கு அனுப்பப்பட காத்திருக்கிறது.
பெல் நிறுவனத்தின் தொழிலாளர்களின் எண்ணிக்கையை சாத்தியமான அளவு குறைத்தும், நிறுவனத்திற்கு உள்ளேயே ஒப்பந்ததாரரை வரவைத்து, தமது ஒப்பந்த தொழிலாளர்களை பெல்லுக்குள்ளேயே வேலையில் ஈடுபட அனுமதித்தும், சாமிக்கு நேர்ந்துவிடப்பட்ட பலியாட்டிற்கு மஞ்சள் தண்ணீர் தெளிக்கும் வேலை நாடுதழுவிய அளவில் சிறப்பாக நடக்கிறது.
கார்ப்பரேட்டுகள் மிகவும் கீழ்த்தரமான தந்திரத்தைக் கடைபிடிக்கிறார்கள். மிகவும் கேந்திரமான பொருட்களைத் தவிர்த்து இதர அனைத்தையும் கான்ட்ராக்டர்கள் மூலமும், அவுட்சோர்சிங் மூலமுமே செய்து முடித்து வருகிறார்கள். அதாவது ஆலையின் சொந்த தொழிலாளர்களைத் தவிர்த்து விட்டு உற்பத்தியைச் செய்ய முன்னுரிமை கொடுத்து வருகிறார்கள். காண்ட்ராக்ட் தொழிலாளர்களோ, இரு மடங்கு வேலைப்பளுவைக் கூட்டினாலும் அதை வேறு வழியின்றி ஏற்று செய்து முடிக்கிறார்கள்.
பரவி வரும் ”கார்ப்பரேட் கிருமி”!
“தொழிலாளர்களின் உரிமையைப் பறிக்காதே” என்று நிரந்தர தொழிலாளர்கள் போராட வேண்டிய சூழலில், பெல் நிறுவனத்தின் தொழிலாளர்களோ பாரா முகமாகவே கடந்து செல்கின்றனர். ஒருவேளை இங்குள்ள தொழிற்சங்கங்கள் போராட்டத்தை அறிவித்தாலும் அதற்கு கட்டுப்பட்டு உறுதியாக களத்தில் நிற்கும் உணர்வு இல்லாதவர்களாகவே மாறி விட்டுள்ளனர். இது 50 ஆண்டுகளைக் கடந்து இயங்கும் பெரும்பாலான பெரு நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
அதாவது மார்க்ஸ் சொன்னபடி இழப்பதற்கு ஏதுமற்ற வர்க்கம் என்ற வகையில் இருந்து மாறி சொந்த வீடு, கார், துணைத் தொழில் அல்லது குறைந்த வட்டிக்கு விடுதல் என இழப்பதற்கு ஏதோ கொஞ்சம் இருக்கும் வர்க்கமாக வளர்ச்சியுற்று விட்டார்கள். ஆனால் இதே ஆலைகளில் பணிபுரியும் காண்ட்ராக்ட் தொழிலாளர்களோ அல்லது புதிதாக படித்து முடித்துவிட்டு NAPS, NEEM, FTE உள்ளிட்ட பிரிவுகளில் வரும் தொழிலாளர்களோ சொற்ப ஊதியத்திற்கு கடுமையாக கசக்கிப் பிழியப்படுகிறார்கள். அவர்கள் தான் இழப்பதற்கு ஏதுமற்றவர்களாக உள்ளனர். ஒடுக்கு முறையையும், சுரண்டலையும் எதிர்கொள்வதால், வர்க்க கோபம் கொண்டவர்களாகவும் உள்ளனர்.
ஒருவேளை மைய தொழிற்சங்கங்கள் போராட்டங்கள் அறிவித்தால், அதனால் ஏற்படும் சம்பள இழப்பை நிரந்தர தொழிலாளர்கள் பொருட்டாக எடுக்காமல் கடந்து விட முடியும். ஆனால் நிரந்தரத் தொழிலாளர்களின் போராட்டத்திற்குத் துணையாக ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், அதற்கான வேலை இழப்பைச் சந்திக்கும் அபாயம் அவர்களுக்கு உண்டு.
மறுபுறத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்காக நிரந்தர தொழிலாளர்களை மையமாகக் கொண்ட தொழிற்சங்கங்கள் சொல்லிக் கொள்ளும் படியாக போராட்டங்களை நடத்த முன்வருவதில்லை; அல்லது நடத்த முயற்சிப்பதே இல்லை. பெயரளவில் கேண்டீன், டீ உள்ளிட்ட சில்லறை சலுகைகளைப் பெற்றுத் தருவதோடு சுய திருப்தி அடைந்து விடுகின்றன.
பார்ப்பனியம் எப்படி உழைக்கும் மக்களை சாதிகளாக பிரித்து ஒன்று பட விடாமல் தடுக்கிறதோ, அதே போல் தான் கார்ப்பரேட்டுகள் பல்வேறு பிரிவினராக தொழிலாளர்களைப் பிரித்து, பல்வேறு சலுகைகளை ஏற்றத்தாழ்வுடன் தந்து, நவீன சாதிகளாக்கி ஒன்று சேர விடாதபடி தடுக்கிறார்கள்.
வைரஸ் தாக்குதலில் தொழிற்சங்கங்கள்!
பொதுவில், நாடு தழுவிய அளவில், வர்க்க உணர்வு கொண்டு தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் திரண்டு ஒன்றிய மோடி அரசின் தொழிலாளர் விரோத போக்குகளுக்கு எதிராகவும், விவசாயிகள் உள்ளிட்ட உழைக்கும் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிராகவும் தீவிரமான போராட்டத்திற்கு அணி திரளுகிறார்கள்தான்.
ஆனால், இந்த வரிசையில் அரசு ஊழியர்களும், பொதுத்துறை நிறுவனத்தின் ஊழியர்களும், தொழிலாளர்களும் முன் வருவதில்லை என்பது கசப்பான உண்மை.
சில நிறுவனங்களில் தொழிற்சங்கத்தின் நிர்வாகிகளான ஆபீஸ் பேரரர்கள் மட்டுமே ஒரு சடங்காக போராட்டத்தை நடத்துவதும், அல்லது ஒரு மணி நேரம் தாமதித்து பணிக்குச் செல்வதும், அல்லது 15 நாட்களுக்கு முன் வேலை நிறுத்த அறிவிப்பை தந்துவிட்டு அந்த குறிப்பிட்ட நாளுக்கான உழைப்பை வார விடுமுறை நாட்களில் ஈடு கட்டுவதாக ஒரு சமரசம் செய்து கொண்டும் தான் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
வேலை நிறுத்தமே செய்யக்கூடாத பிரிவின் கீழ் சில நிறுவனங்களை வகைப்படுத்தி அங்கு போராட்டங்களை எளிதாக தடுத்து விடுகின்றனர். உற்பத்தியில் இடைநிறுத்தம் செய்யாமல் தொடர்ந்து இயக்க வேண்டிய முறையிலான பொருட்களை தயாரிக்கும் ஆலைகளிலும், நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு அவசியமான உற்பத்தியை மேற்கொண்டு வரும் ஆலைகளுக்கும் இது பொருந்தும்.
பெல் நிறுவனத்தின் கிளைகளாக ராணிப்பேட்டை, திருவெறும்பூர், திருமயம் ஆகிய யூனிட்களில் தொழிலாளர்கள் முழுமையான பங்கேற்புடன் வேலை நிறுத்தம் நடக்கவில்லை. தொழிற்சங்க நிர்வாகிகள் மட்டும்தான் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர். இது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்தான்.
சமூக மாற்றத்தை தனது தோளில் சுமந்து முன்னிலை வகிக்க வேண்டிய புரட்சிகர வர்க்கத்தின் தற்போதைய பலவீனத்தை நடந்து முடிந்துள்ள பொது வேலை நிறுத்தம் பளிச்சென்று வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இது வர்க்க நலனின் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் தீவிரமாக தமது பரிசீலனைக்கு எடுக்க வேண்டிய விஷயமாகவும் மாறி உள்ளது.
‘அதிபுத்திசாலிகளாக’ நிரந்தர தொழிலாளர்கள்!
கார்ப்பரேட் நிறுவனங்களிலோ பொதுத்துறை நிறுவனங்களிலோ நிரந்தர தொழிலாளர்களாக இருப்பவர்களில் கணிசமானோர் தான் பெற்றுள்ள உரிமைகளை தனக்குப் பிறகு தனது தம்பி தங்கைகளோ, அல்லது தனது குழந்தைகளோ பெற முடியாது என்ற கள யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு போராட்டக் களத்தில் நிற்கின்றனர். அதாவது தமது தொழிற்சங்க தலைமை அறிவிக்கும் போராட்டங்கள் தமக்கானது, தமது வர்க்கத்துக்கானது என்ற புரிதலில் இருந்து அணுகுகின்றனர்.
இப்படி போராட்டங்களில் முன்வரிசையில் நிற்பவர்களை இவர்களின் சக தொழிலாளர்களில் சிலர் ஏளனமாக பார்த்து ஒதுங்கி செல்கின்றனர். ஒரு புரட்சிகர தொழிற்சங்கத்திலோ அமைப்பிலோ அரசியல் வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்களை பிழைக்கத் தெரியாத ஏமாளி என்கின்றனர்.
தொழிலாளிகளுக்காக உழைப்பவன் ஏமாளியா?
போக்குவரத்து துறையில் ஒவ்வொரு பணிமனையிலும் உள்ள தொழிலாளர்களுக்காக தேர்வு செய்யப்படும் தொழிற்சங்க நிர்வாகிகள் நேரடியாக வேலையில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை. தொழிலாளர் பிரச்சனைக்கு முகம் கொடுத்து வழி நடத்த வேண்டிய தேவைக்காக, அவர்கள் பணிமனையின் கீழான அன்றாட உழைப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களில் நிலைமை தலைகீழாக உள்ளது. நிறுவனத்தின் லாபத்தை கூட்டுவதற்கு தொழிலாளர்களை எப்படி எல்லாம் மேலும் கசக்கிப் பிழியலாம், வதைக்கலாம், அச்சுறுத்தி பணிய வைக்கலாம் என்பதை முழு நேரமாக செய்வதற்கு மனித வளத்துறை அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.
இத்தகைய HR -களுக்கு ஈடு கொடுத்து, நிறுவனம் ஏவும் தாக்குதலில் இருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்கவே தொழிற்சங்கங்கள் கட்டியமைக்கப்படுகின்றன. அத்தகைய சங்கச் செயலாளர்களை அன்றாட உற்பத்தி வேலையில் இருந்து விடுவிக்க வேண்டும். இதற்கு கார்ப்பரேட்டுகள் ஒத்துக் கொள்வதில்லை. எனவே தொழிற்சங்க நிர்வாகிகள் எட்டு மணி நேரம் கடுமையாக உழைத்து உற்பத்தியில் ஈடுபட்டு முடித்த பின்னர்தான் அன்றைய தினம் நிர்வாகம் எந்தெந்த தொழிலாளியைக் குறிவைத்து தாக்குதல் கொடுத்து இருக்கிறதோ, அதற்கெல்லாம் பதில் எழுதவும், விசாரணைக்குச் செல்லவும், தொழிலாளர் நலத் துறையிலோ அல்லது தொழிலாளர் நீதிமன்றங்களிலோ வாதங்களை முன்வைக்கவும் தயாரிப்புகளைச் செய்ய வேண்டியுள்ளது.
படிக்க:
♦ பழிவாங்கும் சாம்சங் நிர்வாகம்! போராடும் தொழிலாளர்களுக்கு துணை நிற்போம்!
அதாவது 8 மணி நேர வேலை முடிந்த பின்னரும், மீண்டும் ஒரு எட்டு மணி நேரம் ஓய்வின்றி தொழிலாளர் நலனுக்காக தொழிற்சங்க செயலாளர் அல்லது நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. இத்தகைய அர்ப்பணிப்பு மிக்க பணியை செய்யும் நிர்வாகிகளை தான் சில நிரந்தர தொழிலாளர்கள் ஏமாளிகளாக பார்த்து ஒதுங்குகின்றனர்.
‘புத்திசாலித்தனமாக’ தமது ஓய்வு நேரத்தை தனது குடும்ப வருமானத்தை பெருக்குவதற்காக வாய்ப்புள்ள துணைத் தொழிலில் மறைமுகமாக ஈடுபடுகின்றனர். அல்லது நிலத்தை வாங்கி பிளாட்டுகளாக பிரித்துக் கொண்டு கொளுத்த லாபத்திற்கு விற்று பணம் சேர்க்கலாம் என்று ரியல் எஸ்டேட் தொழில்களிலும் முதலீடு செய்கின்றனர். வீடுகளைக் கட்டி வாடகைக்கு விடுகின்றனர்.
‘காரியவாதிகளான’ மூத்த தொழிலாளர்கள்!
ஊழல் படுத்தப்பட்டு விட்ட நிரந்தர தொழிலாளர்களின் ஒரு சிலர் தமது பணியிடத்திலோ ஊரிலோ ஒரு பிரச்சனை என்றால் முன்னர் பேசியதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு கூச்சநாச்சமே இல்லாமல் உதவிக்கு சங்கத் தோழர்களிடமே வந்து நிற்கின்றனர். அதாவது மாத சந்தா, ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்டவற்றிலிருந்து சிறப்பு நன்கொடை என சங்கம் தீர்மானிக்கும் பிடித்தங்களையோ தந்து விட்டு ஒரு புரோக்கரை அணுகுவது போல் தொழிற்சங்கத்தை அணுகுகின்றனர். இப்படி சுயநலனோடும், காரியவாதத்தோடும் இருப்பதுதான் புத்திசாலித்தனமானது என்ற கருத்தோடும் பேசி செயல்பட்டு வருபவர்களாக உள்ளனர். கார்ப்பரேட்டுகள் பரப்பும் கண்ணோட்டமானது, தொழிலாளியை வர்க்கமாக இல்லாமல் தனி நபராகவே உணர வைக்கிறது.
இத்தகையவர்கள் தமது சக தொழிலாளர்களான ஒப்பந்த தொழிலாளர்களையோ, அல்லது பயிற்சி தொழிலாளர்களையோ தம்மில் ஒருவனாக பார்ப்பதில்லை. நிரந்தர தொழிலாளியை கூட தமது தொழிலாளர் குடும்பத்தில் ஒருவனாக பார்ப்பதில்லை.

நிரந்தர தொழிலாளர்களில் வர்க்கப்பற்று அற்ற இப்படிப்பட்ட பிரிவினரும் இருப்பதை கணக்கில் எடுத்து தான் பொதுத்துறை நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளான அதிகார வர்க்கமும், கார்ப்பரேட் நிர்வாகமும் போராட்டங்களை நசுக்குகிறது. தமக்கு சாத்தியம் உள்ள சில கிளைகளில், சில பிரிவுகளில், அகில இந்திய வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவிடாமல் முன்னிருப்பவர்களை மிரட்டி தனிமைப்படுத்தி நசுக்கிவிட முடிகிறது. இதற்கு சில இடங்களில் ACL அதிகாரிகளும் உடந்தையாக செயல்பட்டுள்ளனர். அதாவது தொழிலாளர் நலத்துறையானது, “கார்ப்பரேட் நலத்துறை”யாக மாற்றம் பெற்றுள்ளது.
இந்தப் பிரச்சினையை தீவிரமாக கணக்கில் எடுக்காமல் கடந்து சென்றால் இனி நிரந்தர தொழிலாளர்களோ, அத்தகைய தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கங்களோ இல்லாமல் போகும். அடுத்ததாக பொதுத்துறை நிறுவனங்களே ஏலத்துக்குப் போகும் என்பதையே தற்போதைய நிலைமை நிரூபிக்கிறது.
கார்ப்பரேட்டுகள் அரசாங்கத்திலும், அரசு இயந்திரத்திலும் இருப்பவர்களை மட்டும் ஊழல் படுத்துவதில்லை; தொழிலாளர்களிலும் கூட ஒரு சிறு பிரிவினரை ஊழல் படுத்தி விடுகிறார்கள். அதாவது “நீங்கள் நேரடியாக உற்பத்தியை செய்ய வேண்டாம். ஒப்பந்த தொழிலாளர்கள் செய்வதற்கு உதவினால் மட்டும் போதும்” என தனிச்சலுகையை தந்து, தமது பக்கம் வென்றெடுக்கிறார்கள். அதாவது ஒரு சிலரை கோடரிக்காம்பாக மாற்றுகிறார்கள்.
இப்படிப்பட்டவர்களுக்குத் தான் நோய்வாய்ப்பட்டு இருப்பது கூட தெரியாது. அதாவது, ஆடை அவிழ்ந்தது கூட தெரியாமல் போதையில் கூத்தாடுபவன் நிலையை ஒத்தது தான் இதுவும். இப்படி தம்மை அதிபுத்திசாலிகளாக கருதிக் கொண்டு, சங்கத்தைப் பாராமுகமாக அணுகி, சுயநலனோடு சுற்றித் திரியும் ஒரு சில நிரந்தர தொழிலாளர்கள் இனியாவது திருந்துவார்களா?
தொழிற்சங்கத்தை தனது தனிப்பட்ட காரியங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளும் ஒரு ஒரு தரகு அமைப்பாக பார்ப்பதை கைவிடுவார்களா? தொழிற்சங்க நிர்வாகிகளாக தமக்காக பணி நேரம் முடிந்தும் சங்கப் பணிகளில் ஈடுபடும் தோழர்களை மதிப்பார்களா?
இது எதுவும் தானாக நடக்காது. இவர்களின் பிற்போக்கு கருத்துக்களைப் “பொருத்தமான” வகையில் உணர்த்தி கைவிட வைக்க வேண்டும். கார்ப்பரேட் நோய்க்கிருமிக்கு எதிரான சிகிச்சை மேற்கொண்டு வர்க்க ஒற்றுமையை நாம் கட்டி எழுப்ப வேண்டும். உழைக்கும் வர்க்க உணர்வை ஊட்டவும் வேண்டும். உண்மையிலேயே மிக கொடூரமாக கசக்கி பிழியப்படுகின்ற ஒப்பந்த தொழிலாளர்களையும், NAPS, FTE உள்ளிட்டு இளம் தொழிலாளர்களையும் அமைப்பாக்க வேண்டும்.
புரட்சிகர சங்கங்கள் இதில் கவனம் கொடுத்து சாதிப்பதற்கு தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்களாக இருக்கும் ஒவ்வொருவரும் துணை நிற்போம். கார்ப்பரேட் காவிப் பாசிசத்தின் தாக்குதலுக்கு எதிரான அடுத்தச் சுற்றுப் போராட்ட களத்தில் கூடுதல் வலிமை கொண்டவர்களாக களமாடுவோம். தொழிலாளி வர்க்கமானது கோடிக்கால் பூதம் என்பதை நிரூபிக்கும் வகையில் வர்க்க ஒற்றுமையை மேலும் வளர்த்தெடுப்போம்.
- இளமாறன்







உண்மையில் இந்த கட்டுரை, அருமையாக உள்ளது. இன்றைய சூழலுக்கு ஏற்ற கட்டுரையாகவும் உள்ளது. அதுமட்டுமின்றி, இன்றைய தொழிலாளி வர்க்கம் தாம் என்ன இழந்து வருகிறோம் என்பதை சற்றும் சிந்திக்காமல் ரீல்ஸ் வீடியோவை பார்ப்பது-பதிவேற்றுவது, தன்னை முன்னிலைப்படுத்தும் கலாச்சார சீர்க்கேடுகளில்தான் முன்வரிசை நிற்கின்றனர். தனக்காக போராடும் சங்கத்திற்கு எப்போதும் பின் வரிசையில்தான் நிற்கின்றனர். உ.தா: ஒரு காலத்தில் சங்க தேர்தல் என்று வந்துவிட்டால், திருவிழா கோலமாகும் தொழிற்சாலை. தற்போது, அது தமக்கு சம்மந்தமில்லாத ஒன்றாக பார்க்கின்றனர். தாங்கள் கட்டுரையில் குறிப்பிட்டதை போல நீம், நாப்ஸ், எஃப்.டி.இ -ல் வேலை செய்யும் தொழிலாளர்கள் அமைப்பாக்குவதும், சங்கமாக்குவதும் இன்றைய காலத்தின் கட்டாயமாக உள்ளது. அப்போதுதான் பொது எதிரான கார்ப்பரேட் முதலாளிகளை ஒருசேர.. மோதி.. வீழ்த்த முடியும்!
கட்டுரையை செரிவாக எழுதிய தோழருக்கு வாழ்த்துகள்!