“கீழடி நாகரிகத்தை உயர்த்திப்பிடி! வேத நாகரிகத்தை துரத்தியடி! இந்திய வரலாற்றை தென்னிந்தியாவிலிருந்து திருத்தி எழுதும் போர் முழக்கம்” என்ற அறை கூவலுடன் தமிழ் மக்கள் இசை விழா அறிவிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு வடிவங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த முழக்கங்களின் வீச்சு இந்தியா ஒன்றியத்தின் அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டு ஆதிக்கம் செலுத்தி வருகின்ற ஆர்எஸ்எஸ் பாஜக மற்றும் பார்ப்பனக் கும்பலின் வயிற்றை கலக்கத் துவங்கி உள்ளது.
திராவிட-தமிழர் நாகரிகம் என்பது இந்திய வரலாற்றின் பல்வேறு நாகரிகங்களில் ஒன்று என்பதல்ல நமது கண்ணோட்டம். இந்திய வரலாற்றின் அடித்தளம் திராவிட தமிழர் நாகரிகத்திலிருந்து தான் உருவானது என்பது தான் கீழடி மற்றும் சிவகளை ஆகிய பகுதிகளில் கிடைத்துள்ள தொல்லியல் ஆய்வுகளின் முடிவுகள் அறிவித்துள்ள மறுக்க முடியாத உண்மையாகும்.
வரலாற்றுப் பொருள்முதல்வாத பார்வையிலிருந்து மக்களின் வாழ்க்கையையும், நாகரிகத்தையும், பண்பாட்டையும் உயர்த்திப் பிடிக்கின்ற புதிய ஜனநாயகம் மற்றும் புரட்சிகர இயங்கியலை அடித்தளமாகக் கொண்டு இயங்குகின்ற அதன் தோழமை அமைப்புகள் கீழடி நாகரிகத்தை உயர்த்தி பிடிக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை குறிப்பிட்ட அறிவு ஜீவிகள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியிலிருந்து உழைக்கும் மக்கள் மத்தியில் கொண்டு சென்று புதிய தளத்திற்கு அதனை விரிவுபடுத்தியுள்ளது என்றால் அது மிகையில்லை.
எனவே, இந்திய வரலாற்றை தென்னிந்தியாவிலிருந்து திருத்தி எழுதும் போர்முழக்கம் என்பது மக்கள் இயக்கமாக மக்களின் முழக்கமாக படிப்படியாக மாறி வருகிறது என்பதை தொல்லியல் துறையில் நடந்து வரும் அதிரடியான திருப்பங்கள் மற்றும் ஆங்கில செய்தி ஊடகமான தி பிரிண்ட் வெளியிட்டுள்ள செய்திகள் ஆகியவை உறுதிப்படுத்தியுள்ளன.
கடந்த ஜூலை 27 அன்று இந்திய தொல்லியல் துறை கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத ஒரு புதிய நடைமுறையை தனது அலுவலகங்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பியது. அதாவது தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்கின்ற தொல்லியல் ஆய்வாளர்கள் அந்த ஆய்வு முடிவு அதிகாரப்பூர்வமாக அரசாங்கத்தின் மூலம் வெளியிடப்படாத வரை, அந்த ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்களை வெளியில் பேசக்கூடாது, எழுதக்கூடாது மற்றும் அதனைப் மையப்படுத்தி செய்திகளை வெளியிடவே கூடாது என்ற படு பிற்போக்குத்தனமான, அடக்கு முறையை ஏவுகின்ற வகையிலான சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.
படிக்க:
♦ கீழடியே இந்திய வரலாற்றின் திறவுகோல்
♦ அறிவியல்–தொழில்நுட்பத்தில் இந்தியா ஏன் பின்தங்கியது? கீழடி உணர்த்தும் பாடம்!
அது மட்டுமன்றி அவ்வாறு வெளியிடுவது அரசு ரகசியங்களை வெளிப்படுத்துகின்ற மிகவும் தவறான போக்காகும் என்பதை சுட்டிக்காட்டி, அவ்வாறு யாராவது செய்தால் அவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கையும், அரசு ரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று மிரட்டுகின்ற பாணியில் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இந்தியாவில் தொல்லியல் துறை என்பது எவ்வாறு செயல்படுகிறது என்பதையும், அதன் லட்சணத்தையும் அம்பலப்படுத்தி 2021 ஆம் ஆண்டில், ஆஷிஷ் அவிகுந்தக் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அச்சகத்துடன் இணைந்து, “அதிகாரத்துவ தொல்லியல்: காலனித்துவத்திற்குப் பிந்தைய இந்தியாவில் அரசு, அறிவியல் மற்றும் கடந்த காலம்” என்ற தலைப்பில் பல ஆண்டு கால இனவியல் ஆய்வு நூலை வெளியிட்டார்.
இந்த ஆய்வு நூலில், அவர் இந்திய தொல்லியல் துறையின் (ASI) செயல்பாடுகள் குறித்த கடுமையான மற்றும் கூர்மையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார். “அதாவது. தன்னிச்சையான இடமாற்றங்கள், தாமதமான பதவி உயர்வுகள், மோசமான பணிச்சூழல்கள் மற்றும் போதுமான உள்கட்டமைப்பு இல்லாமை போன்ற அமைப்பு ரீதியான சிக்கல்கள், இந்திய தொல்லியல் துறையின் ஆழமாக வேரூன்றிய அதிகாரத்துவ கட்டமைப்பை வலுப்படுத்துகின்றன” என்பதை அவிகுந்தக் தொல்லியல் துறையின் லட்சணத்தை தோலுரிக்கின்றார்.
“இந்த அதிகாரத்துவ வேரூன்றல், நிறுவன நடைமுறைகளுக்குள் பொதிந்துள்ள மத அரசியலுடன் சேர்ந்து, இந்தியாவில் தொல்லியல் பணிகளை ஆழமாக வடிவமைக்கிறது மற்றும் அறிவியல் உண்மையாக உருவாக்கப்பட்டு முன்வைக்கப்படும் சான்றுகளின் தன்மையை பாதிக்கிறது” என்றும் முன் வைத்துள்ளார்.
இந்த விமர்சனங்களுக்கு பின்பும் இந்திய தொல்லியல் துறை தனது தவறுகளை உணர்ந்து திருத்திக் கொண்டதாக தெரியவில்லை. அது ஒருபோதும் திருத்திக் கொள்ளாது என்பதற்கான அடிப்படை, அறிவு நாணயமற்ற, பிறப்பால் பார்ப்பனர்கள் அந்தத் துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்பதால் தான் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இந்த உண்மை தற்போது மீண்டும் ஒருமுறை அம்பலமாகியுள்ளது.
கீழடி அகழ்வாய்வு குறித்த சில உண்மைகள்.
கீழடி அகழ்வாய்வு பணிக்கு அனுமதி கேட்டு அதற்கு விண்ணப்பித்த போது இந்திய ஒன்றிய அரசனது, அதற்கான அனுமதியை மட்டும் வெறும் காகிதத்தில் வழங்கியுள்ளது. அப்போது தமிழகத்தை ஆண்ட அதிமுக கீழடி அகழாய்வுப் பணி முன்னெடுக்கின்ற பொழுது ஒன்றிய அரசு அதற்கு அனுமதி மட்டுமே அளித்தது. ஆனால் குறிப்பிட்ட அல்லது தேர்வு செய்த இடங்களில் அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதியை ஒதுக்கவில்லை என்பது வெறும் நிர்வாகம் தொடர்பான பிரச்சனை மட்டுமல்ல. இந்த புறக்கணிப்பின் பின்னால் திராவிட- தமிழர் நாகரிகத்தை பற்றிய ஆய்வுகளுக்கு சமாதி கட்டும் நோக்கமே முதன்மையானது.
இத்தகைய சூழலில் 2014 முதல் கீழடி அகழாய்வு பணி மேற்கொண்டமைக்கான முழு செலவும் தமிழ்நாடு அரசாலேயே மேற்கொள்ளப்பட்டது. (அதாவது 11 ஆண்டுகள்). இந்த நிலையில் 2014-2015, 2015-2016 ஆகிய இரண்டு ஆண்டுகளில் அகழாய்வு செய்த அமர்நாத் ராமகிருஷ்ணா தான் கண்டுபிடித்த தரவுகளின் மூலம் 982 பக்கங்கள் கொண்ட அறிக்கையை 2023 ல் ஒன்றிய தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்படைத்தார்.
கீழடி அகழாய்வு பணியின் கண்டுபிடிப்புகள் – அதன் தொன்மை, வேத நாகரிகத்திற்கு மேம்பட்டதாக இருந்தமையால், 2017-இல் பாலக்காடு ஸ்ரீராம் என்ற பார்ப்பன தொல்லியல் ‘ஆய்வறிஞர்’-ஐக் கொண்டு கீழடியில் ஆய்வு நடத்தச் செய்தது. அவர் அங்கு தொன்மையை நிலை நிறுத்தும் வகையிலான எதுவுமே கிட்ட வில்லை; எனவே கீழடியில் மேலும் தோண்டுவதற்கு ஏதும் இல்லை என்று அறிவித்துவிட்டு சென்றுவிட்டார்.
அதே சமயத்தில் அமர்நாத் ராமகிருஷ்ணாவின் ஆய்வானது, வேத நாகரிகத்திற்கு எதிராக இருப்பதால் அதனை இந்திய தொல்லியல் துறை நிராகரித்து வருகிறது. அதனைத் திருத்தி எழுதித் தரக் கோரியும், நிர்பந்தித்தும் வருகின்றனர். ஆனால் இதனை ஏற்க மறுத்து அமர்நாத் ராமகிருஷ்ணா போராடி வருகிறார்.
இந்திய ஒன்றிய அரசானது ஆரம்பம் முதல் இதுநாள் வரை கீழடி ஆய்வுக்கென அனுமதி கொடுத்ததைத் தவிர ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை. முழு அகழாய்வுப் பணிக்கான செலவு முழுமையையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொண்டுள்ளது.
படிக்க:
♦ வேத நாகரிகத்தைத் துரத்தும் கீழடி!
கடந்தாண்டு பட்ஜெட்டில் கூட திமுக அரசு கீழடி உட்பட ஆதிச்சநல்லூர், சிவகளை அகழாய்வுக்கு ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த நவம்பர் மாதமே தமிழ்நாட்டு தொடர் அகழாய்வு பணிக்கு அனுமதி வழங்க வேண்டிய ஒன்றிய பாஜக அரசு காலம் நீடித்து அண்மையில் தான் அனுமதி வழங்கியுள்ளது. உண்மையில் நிதி ஒதுக்கீடு செய்ய மறுப்பது மட்டுமல்ல; அகழாய்வு பணியை மேற்கொள்ள அனுமதி பெறுவதற்கே போராடி போராடித்தான் அனுமதி பெற்று தமிழ்நாடு அரசு இதுவரையிலும் அகழாய்வை மேற்கொண்டு வந்துள்ளது.
இந்த அகழ்வாய்வு மற்றும் தொல்லியல் பெருமைகளை சிறிதும் புரிந்துக் கொள்ளாத தற்குறிக் கும்பலின் புதிய அரசு இந்த பட்ஜெட்டில் கடந்தாண்டு அகழாய்வுக்கு நிதி ஒதுக்கீடு (ரூ.8 கோடி) செய்தது போலக் கூட இல்லாமல் இந்த ஆண்டு அகழாய்வுக்கு வெறும் 1 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த வேத நாகரிக கும்பலின் கன்வுகளில் மண்ணள்ளிப் போடும் வகையில் கீழடியில் நடந்த அகழ்வாய்வில் கலந்துக் கொண்ட மதுரை காமராசர் ப்ல்கலைக் கழகத்தின் மரபணுப் பிரிவானது புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது கீழடி- கொந்தகையில் 137 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த தாழிகளில் இருந்து கிடைத்த பற்களில் இருந்த பாக்டீரியாக்கள், பக்கச் சுவர்களில் இருந்த கொழுப்புகள், எலும்புத் திசுக்கள் ஆகியவற்றை ஆய்வு செய்த்தில் அந்த நாகரிக மக்கள் அதிக அளவில் இறைச்சி சாப்பிட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.
கீழடி-கொந்தகை, ஆதிச்ச நல்லூர், சிவ்களை ஆகிய தளங்களில் இருந்து 75,000 மரபணு குறியீடுகள் மூலமாக ஆய்வு செய்த அடிப்படையில், கொந்தகையில் கி.மு.600, சிவகளையில் கி.மு.3300,, ஆதிச்ச நல்லூரில் கி.மு.1000 ஆகிய ஆண்டுகளில் வாழ்ந்த மக்களின் மரபணு தற்போதைய தமிழ்நாட்டு மக்கள், தென் கிழக்கு ஆசிய மக்கள், இலங்கை மக்களின் மரபணுவோடு ஒத்துப் போகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மகஇக அமைப்பினர் கீழடி நாகரிகத்தை உயர்த்திப்பிடித்து பிரச்சாரம் செய்து வரும் தஞ்சை இசை விழாவின் வீச்சான பிரச்சாரம் ஒன்றிய அரசையும் ஒன்றிய தொல்லியல் துறையையும் புதிய முடிவுக்கு இட்டுச் சென்றுள்ளது எனக் கருதுகிறோம். எதிர்வரும் ஆகஸ்ட் 17 அன்று டெல்லியிலிருந்து ஒன்றிய தொல்லியல் துறையைச் சேர்ந்த ஆறு பேர் அடங்கிய குழுவினர் நந்தினி பட்டாச்சாரியா தலைமையில் கீழடியை மீளாய்வு செய்ய வருகிறார்கள்.
இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனம் (ASI) தயாரித்த 114 பக்கங்கள் கொண்ட “Critical Evaluation and Recommendations” என்ற பெயரிலான அறிக்கையை ஆய்வு செய்த 5 பேர் கொண்ட குழுவின் உறுப்பினர்களான பிரியங்க் குப்தா (Priyank Gupta), கரிமா கௌஷிக் (Garima Kaushik), பி.அறவாழி (P. Aravazhi), ஹேம்சாகர் ஏ. நாயக், நந்தினி பட்டாச்சாரியா சாஹு(Nandini Bhattacharya Sahu) ஆகிய ஐவர் குழுவுடன் சென்னையில் உள்ள இந்திய தொல்லியல் துறை சிறப்பு பிரிவில் வேலை பார்க்கும் ராஜேஷ் என்ற சங்கிப் பார்ப்பனரையும் இணைத்திருக்கிறார்கள். இந்த ராஜேஷ் சென்னையில் Temple Survey Project என்ற துறையில் பணியாற்றி வருகிறார். இவர்களின் 114 அறிக்கையை கொடுத்து இதன் அடிப்படையில் 982 பக்க அறிக்கையை மாற்றி எழுதித் தருமாறு ஒன்பது மாதங்களுக்கு முன்னரே ஒன்றிய பாஜக அரசின் வழிகாட்டலின் கீழ் இயங்கும் ஒன்றிய தொல்லியல் துறை நிர்பந்தப்படுத்திய போது தான் அதற்கு இணங்க அமர்நாத் மறுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்டு-17 தமிழகம் வருகின்ற அறுவர் குழு அவர்கள் விரும்பிய 114 பக்க அறிக்கை யின்படி அமர்நாத் ராமகிருஷ்ணா அறிக்கையை மாற்றி அமைக்க உறுதியாக முற்படுவர். ஆக கீழடிக்கு மூடு விழா நடத்த முடிவெடுத்து விட்டார்கள். விஜய் அரசு பாரா முகமாக இருந்து அவர்களுக்கு பச்சைக் கொடி காட்டும் என்பதில் அய்யமில்லை.
கீழடியின் பெருமைகள் உழைக்கும் மக்களின் போர் முழக்கமாக மாறியுள்ள நிலையில் இவ்வளவு நாள் முடங்கிக் கிடந்த காவி பாசிச கும்பலையும், மதுரையில் கொட்டைப் போட்ட சங்கிப் பார்ப்பனக் கும்பலையும் நிலைகுலையச் செய்து விட்டன. எனவே தான் தனது ரத, கஜ, துரத, பதாதிகளுடன் குதித்துள்ளனர்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் முன்னேறிய நகர நாகரிகத்தையும், சாதி மத வேறுபாடுகள் இன்றி கடவுள் வழிபாடுகள் எதுவும் இன்றி முன்னேறிய சமூகமாக வாழ்ந்த, இரும்பை பயன்படுத்திக் கொண்டு தனக்குத் தேவையான கருவிகளையும், போர்க் கருவிகளையும் உருவாக்கி பயன்படுத்திய கீழடி நாகரிகத்தையும், அதன் ஆய்வு முடிவுகளையும் உலகிற்கு கொண்டு செல்வதை தடுக்கின்ற அயோக்கியத்தனத்தை ஒருபோதும் அனுமதிக்க கூடாது.
◾தமிழ்ச்செல்வன்.
புதிய ஜனநாயகம் தினசரி






