மெய்நிகர் உலகில் (Virtual World) எனது பயணம்

வரும் ஆகஸ்ட் 22 அன்று தஞ்சாவூரில் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில், நடைபெறவுள்ள தமிழ் மக்கள் இசை விழா’ வின்

“கீழடி நாகரிகத்தை உயர்த்திப் பிடி!
வேத நாகரித்தை துரத்தியடி!
இந்தியாவின் வரலாற்றை தென்னிந்தியாவிலிருந்து திருத்தி எழுதும் போர்முழக்கம்!”

என்கிற முழக்கம் சரிதானா?

காவிரியில் நீர் இன்றி கடைமடைகள் காயும் பொழுது காவிரிக் கரையிலேயே இப்படி ஒரு விழா தேவையா?

‘வேத நாகரீகத்தைத் துரத்தியடி’ என்பது சரிதானா? இந்திய வரலாற்றை தென்னிந்தியாவிலிருந்து தொடங்குவதா அல்லது தென்னகத்திலிருந்து தொடங்குவதா அல்லது தமிழ்நாட்டிலிருந்து தொடங்குவதா, தமிழர்களாகிய நாம் யார்? நாம் இங்கேயே தோன்றி வளர்ந்தவர்களா அல்லது வெளியில் தோன்றி இங்கு வந்தவர்களா போன்ற  அய்யங்களும் குழப்பங்களும் என்னுள் எழுந்தன.

குழப்பங்கள் தொடர்ந்து நீடித்தால் அதுவே இறுதியில் நோய்க்கு வழிவகுக்கும் என்பார் கிரேக்க நாட்டு ஹோமியோபதியர் வித்தல்காஸ். (Confusion is disease, Clarity is health- George Vithal Kaus). யார்தான் நோயாளியாக இருக்க விரும்புவர்?

அதனால் கீழடி, வேத நாகரிகம் மற்றும் மனிதகுல வரலாறு குறித்த விவரங்களைத் தேடி மெய்நிகர் உலகில் (Virtual World) ஓடலானேன். ஓடுவது உடல் நலனுக்கு உகந்தது என்பது போல இந்த ஓட்டமும் நல்ல பலனைத்தான் தந்தது. இந்த ஓட்டம், கால இயந்திரத்தில் என்னை   திபெத்துக்கும், மெசபடோமியாவுக்கும், சிந்துவெளிக்கும் அழைத்துச் சென்றது.

ஒரு முறை நான் நைல் நதி தீரத்தில் சென்ற போது, எதிரே சிலரை சந்திக்க நேர்ந்தது.

“யார் நீங்கள்? எங்கே செல்கிறீர்கள்?” என்று அவர்களிடம் வினவினேன்.
“நாங்கள்தான் ஹோமோ சேப்பியன்ஸ் (Homo Sapiens). ஆப்பிரிக்காதான் நாங்கள் தோன்றி வளர்ந்து வாழ்ந்த இடம். அங்கே உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டதால், உயிர் பிழைக்கப் புதிய வாழ்விடங்களைத் தேடி வடக்கு நோக்கிச் செல்கிறோம்” என்றனர்.

அவர்களைக் கடந்து தெற்குதிசையில் மேலும் பயணப்பட்டால் நமக்கும் அதே நிலைமைதானோ என்ற அச்சம் என்னை ஆட்கொள்ள, நானும் திரும்பி அவர்கள் பின்னாலேயே  நடக்கலானேன்.

வரும் வழியில் ஈட்டிகளையும் கற்கருவிகளையும் கொண்டு அவர்கள்  வேட்டையாடி விலங்குகளின் மாமிசத்தையும் கிடைத்தக் கனிகளையும் உண்டு பசியாற்றிய அனுபவங்களை என்னோடு பகிர்ந்து கொண்டனர்.

மேலும் வடக்கு நோக்கி வந்த போது நைல் நதியின் வளமான கடைமடைப் பகுதிகளில் இருந்த  வளங்களைக் கண்டு ‘வாழ்வதற்கு இது ஏற்ற இடம்தான்’ என்று எண்ணி அவர்களில் சிலர் அங்கேயே (எகிப்து – கி.மு. 3100 – கி.மு. 30) தங்கிவிட, வேறு சிலர் அங்கு தங்காமல் ஏமன், சவுதி அரேபியா வழியாக ஈராக்கின் யூப்ரடீஸ் – டைக்ரிஸ் (Euphrates and Tigris) நதிப் பள்ளத்தாக்குகளை அதாவது மெசபடோமியாவை அடைந்தார்கள். இந்த இரு நதிகளின் செழுமையைக் பார்த்து அங்கேயே நிலைபெற்று, வேளாண்மை செய்யத் தொடங்கினர் சிலர். (கி.மு. 3500 – கி.மு. 2000)

அவர்களுடன் வந்த மற்றொரு பகுதியினர் மெசபடோமியாவில் தங்காமல் வடக்கு திசையில் நகர்ந்து மத்திய ஆசியாவின் ஸ்டெப்பி புல்வெளிப் பகுதியை அடைந்து அங்கு கால்நடைகளை வளர்த்து வாழ்க்கையை ஓட்டி வந்தனர். புல்வெளிகள் போதாத போது மேற்கு நகர்ந்து கால்நடைகளுக்காக காடுகளை அழித்து புதிய புல்வெளிகளை உருவாக்கினர். கடைசிவரை அவர்களுக்கு வேளாண்மை பற்றி எதுவும்  தெரியாது. கிட்டத்தட்ட அவர்களின் வாழ்க்கை மாடுகளோடு வாழ்ந்த நாடோடி வாழ்க்கைதான்.

ஆப்ரிக்காவில் இருந்து வெளியேறிய மற்றொரு சாரார் ஈரான், ஆப்கானிஸ்தான் வழியாக சிந்து நதியின் கடைமடைப் பகுதியை அடைந்து, சிந்துவெளி (ஹரப்பா – மொகஞ்சதாரோ) பகுதிகளில் வாழ்ந்து உலகின் முன்னோடி நகர நாகரிகத்தைக் கட்டியெழுப்பினர்.  திட்டமிடப்பட்ட தெருக்கள், சுட்ட செங்கற்கள், மூடிய கழிவுநீர் வடிகால்கள் என உலகின் அறிவியல் பூர்வமான நகர வாழ்க்கைக்கு முதன்முதலாக  அடித்தளம் அமைத்தவர்கள் அவர்கள்தான். (கி.மு. 2600 – கி.மு. 1900).

படிக்க:

 கீழடியே இந்திய வரலாற்றின் திறவுகோல்

 கீழடியே இந்திய வரலாற்றின் திறவுகோல் | பகுதி 2

அதில் மற்றொரு சாரார் சிந்துவெளியிலும் தங்காமல் கிழக்கு மற்றும் தென் கிழக்கு திசையில் பயணித்து தூர கிழக்கு வாழத் தொடங்கினர்.

கடைசியாக எஞ்சி இருந்த சிலர் சிந்துவெளியிலும் தங்காமல், கிழக்கு மற்றும் தென் கிழக்கு திசையிலும் செல்லாமல் இந்தியாவின் தெற்கு திசை நோக்கி நகரத் தொடங்கினர். நானும் தெற்கு நோக்கி அவர்களோடுதான் பயணித்தேன். அப்படி வரும் வழியில்  ஆங்காங்கே தென்பட்ட  நதிக்கரைகளில் சிலர் தங்கிவிட  இறுதியாக சிலர், இந்தியாவின் தென்கோடியில் பாய்ந்தோடிய வைகை மற்றும் பொருநை (தாமிரபரணி) நதிகளைக் கண்டு குதூகலமடைந்து அங்கேயே நிலைபெற்று வாழத் தொடங்கினர்.

வைகை நதிக்கரையில் குறிப்பாக கீழடியில் அவர்கள் அமைத்த தங்குமிடங்கள் சிந்துவெளியைப் போல நகர நாகரிகமாக இருந்தது வியப்பை ஏற்படுத்தியது.

இப்படி பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து சென்றவர்கள் தொடக்கத்தில் வேட்டையாடிதான் தங்களது வயிற்றுப் பசியை தீர்த்துக் கொண்டனர். ஆற்றுப்படுகைகளில் வாழ்ந்தவர்கள் அங்கு இயற்கையாக விளைந்து கிடந்த தானியங்கள் உண்பதற்கு ஏற்றவை என்பதைக் கண்டறிந்து பிறகு அதையே பயிரிட்டு அறுவடை செய்தனர். அவர்கள் உண்டது போக மீதி உபரியானது. அந்த உபரியை மற்றவர்களிடம் கொடுத்து தேவையான வேறு சில பொருட்களை வாங்கிய போது வாணிபம் தொடங்கியது.

வேளாண்மை செய்தவர்கள் ஆங்காங்கே குடியிருப்புகளை அமைத்து வாழ, வணிகத்தில் ஈடுபட்டவர்களும் மற்ற பிறரும் ஓரிடத்தில் குவிந்து வாழத் தொடங்கிய பொழுதுதான் நகர கட்டமைப்புகள் உருவாகின. அதைத் தொடர்ந்து இரும்பு கண்டெடுக்கப்பட்ட பிறகு புதிய கருவிகளின் உருவாக்கம் பல்வேறு தொழில்கள் வளர வழிவகுத்தன.

வெறும் கற்கருவிகளை மட்டுமே கொண்டு பீம்பேட்டா (1) போன்ற பாறை குகைகளுக்குள் வாழ்ந்த ஆதிகால மனிதன் பின்நாளில் வேளாண்மைக்கும் இன்னபிற தொழில்களை செய்வதற்கும் நகரங்களை உருவாக்கி வாழ்வதற்கும் வழிவகுத்தது எது?

தொடரும்…

  • தமிழ்மணி

குறிப்பு: 1.பீம்பேட்டா: மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலுக்கு தென்கிக்கே சுமார் 46 கிலோ மீட்டர் தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது. சுமார் 100000 ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள பாறைக் குகைகளில் ஆதிகால மனிதர்கள் வாழ்ந்ததாக தொல்லியல் சான்றுகள் கூறுகின்றன. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு அலுவல் நிமித்தமாக நான் போபால் சென்றிருந்தபோது பீம்பேட்டாவைப் பார்த்தபோது எழாத உணர்வுகள் இன்று டோனி ஜோசப்பின் ஏடுகளைப் புரட்டியபோது ஏற்பட்டது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here