பத்திரிக்கை செய்தி!

தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை அமலாக்க விடாதே!
திரும்பப் பெற வீதியில் இறங்கி போராடுவோம்!


ன்பார்ந்த உழைக்கும் மக்களே!
இந்திய தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற 44 சட்டங்களை 1. ஊதியத்தொகுப்பு (2019) 2. தொழில் உறவு சட்டத்தொகுப்பு (2020) 3. சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் (2020) 4. சமூக பாதுகாப்பு (2020) என நான்கு சட்ட தொகுப்புகளாக மாற்றி அமல்படுத்திட அறிக்கை வெளியிட்டுள்ள ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோத செயலை எமது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இந்த சட்ட தொகுப்புகள் அமலாக்கப்படுவதால் சங்கம் சேரும் உரிமை, வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு போராட்ட உரிமைகள் பறிக்கப்படும். இது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.

தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் உழைப்பு சுரண்டலை பெரும்பாலும் தொழிலாளர்கள் தட்டிக் கேட்க முடியாத வகையில் உள்ளனர். இந்த நிலையில் நாட்டின் பெரும்பான்மை மக்களாக இருக்கக்கூடிய தொழிலாளர்களுக்கு என சங்கம் சேரும் உரிமை போராடும் உரிமை மறுக்கப்படுவது தொழிலாளர்களை மேலும் கொத்தடிமை நிலைமைக்கு தள்ளும். ஒன்றிய மோடி அரசின் தொழிலாளர் மீதான இந்த தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்திய பெரு முதலாளிகளின், பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் லாப வேட்டைக்கு தாராளமாக அனுமதி அளிக்கின்றது இந்த சட்டத்தொகுப்பு. தொழிலாளர்களின் குரல்வளை நெரிக்க கூடிய இந்த சட்ட தொகுப்பினை 21.11.2025 முதல் நடைமுறைப்படுத்துவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது ஒன்றிய மோடி அரசு.

ஏற்கனவே இருக்கின்ற சட்டத்தையே பெருமுதலாளிகள் மதித்து சங்கங்களுடன் ஊதிய பேச்சுவார்த்தை நடத்துவதில்லை. அமலாக்கப்பட்டு இருக்கும் சட்டத்தொகுப்பினால் சங்கம்
ஊதிய பேர பேச்சுவார்த்தை நடத்திட வழியற்று போகும். குறைந்த ஊதியத்தில் குடும்பம் நடத்த சிரமப்பட்டு வரும் தொழிலாளர்களின் குடும்பங்களின் ஊதியம் மேலும் குறைந்து துன்ப துயரங்களுக்கு ஆளாக்கப்படுவார்கள். இது தொழிலாளர்களின் குடும்பங்களின் மீது நிகழ்த்தப்படும் பொருளாதாரத் தாக்குதல். நிற்கதியாக நிற்கின்ற தொழிலாளர் குடும்பங்களின் மீது நடத்தப்படும் வன்முறை.

நாட்டில் பெரும்பான்மை தொழிலாளர்கள் சட்டப் பாதுகாப்பற்ற அமைப்பு சாரா தொழிலாளர்களாக உள்ள நிலையில் இந்த எண்ணிக்கை மேலும் உயருகின்ற வேலையை இந்த சட்டத் தொகுப்பு செய்யும். இதனால் நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து காண்ட்ராக்ட், தினக்கூலி, FTE, NAPS போன்ற அத்துக்கூலிகள் முறையிலான வேலைகளாக மாற்றப்பட்டு சட்ட பாதுகாப்பும், சமூக பாதுகாப்பும் இல்லாத நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்படுவார்கள். இது மிகவும் ஆபத்தானது.

நாட்டின் பல்வேறு இடங்களில் தொழிலாளர்களின் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் மோடி அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்ட தொகுப்புகள் மிக மோசமான விளைவுகளை உண்டாக்கும். தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற உரிமைகளை தட்டிப் பறித்து, கார்ப்பரேட்டுகளுக்கு படையலிடும் தனது கார்ப்பரேட் விசுவாசத்தை மோடி அரசு தற்போது வெளிக்காட்டி உள்ளது. நாம் போராடி பெற்ற உரிமைகளை தட்டிப் பறிக்கும் இந்த செயலை கண்டிப்பதோடு அல்லாமல், வீதியில் இறங்கி போராடி தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற வைப்போம்!
இவண்,

இரா.லோகநாதன்,
மாநில பொதுச்செயலாளர்,

1 COMMENT

  1. புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் பத்திரிக்கை செய்தி

    தொழிலாளர்களின் 44 சட்டங்களை நாலு தொகுப்புகளாக மாற்றி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்யும் மோடி அரசை அம்பலப்படுத்தியும் மோடி அரசு கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக இந்த சட்டத் தொகுப்பை நான்கு தொகுப்புகளாக திருத்தப்படுகிறது சங்கம் சேரும் உரிமை போராடும் உரிமை வேளாளர்களினுடைய சட்டப்படியான கோரிக்கை அனைத்தையும் மறுக்கும் விதமாக இந்த சட்டத்தொகுப்பு மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது இதை தொழிலாளி வர்க்கம் வீதியில் இறங்கி போராடி மூடிக்கொண்டு வரும் சட்ட தொகுப்பை கிழித்து எறிய வேண்டும் போராடி பெற்ற உரிமைகளை தக்க வைக்க வர்க்கமாக திரள வேண்டும் என புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் தோழர் லோகநாதன் அருமையாக பத்திரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளார் தோழருக்கு நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here