
ஒருபுறம், உழைப்பிற்கு ஏற்ற கூலியை கொடுக்காமல் வஞ்சிப்பதன் மூலமாக இந்திய நாட்டின் உழைக்கும் மக்கள் கொடூரமாக சுரண்டப்பட்டு வரும் நிலையில், மறுபுறம், வரி விதிப்பு, விலைவாசி உயர்வு மூலமாக கொடூரமாக கொள்ளையடிக்கப்படுவதும் நடந்து கொண்டு இருக்கிறது.
உழைக்கும் மக்கள் வஞ்சிக்கப்படுவது பற்றிய புள்ளி விவரங்களும் அதனால் பயனடையும் கார்ப்பரேட்டுகள் பற்றிய புள்ளி விவரங்களும் தற்போது மத்திய அரசு துறைகளில் இருந்து வெளியாகி உள்ளன.
தனித்தனியாக வெளியாகி உள்ள இந்த புள்ளி விவரங்களை இணைத்துப் பார்ப்பவர்களுக்கு உழைக்கும் மக்களின் வறுமைக்கான காரணமும் கார்ப்பரேட்டுகளின் வளமைக்கான காரணமும் ஒருங்கே புரியவரும்.
மத்திய அரசு நிறுவனமான NSSO (National Sample Survey Organisation) நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களின் உழைப்பு சக்தியின் நிலை குறித்து (Periodic Labour Force Survey – PLFS 2023-24 ) வெளியிட்ட ஆய்வறிக்கை மூலம் இந்திய மக்களின் உழைப்பு கொள்ளை அடிக்கப்படுவது குறித்து நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
2017 – 2018 நிதியாண்டில் ஊரகப் பகுதியில் கூலித் தொழிலாளர்களின் மாத வருமானம் 9,107 ரூபாயாக இருந்த நிலையில் இது 2023 – 24ஆம் நிதியாண்டில் 8,842 ரூபாயாக குறைந்து விட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது (5 ஆண்டுகளில்) தினக்கூலிகளின் மாத வருமானம் 165 ரூபாய் குறைந்துவிட்டது.
இதே காலகட்டத்தில் (ஐந்து ஆண்டுகளில்) நகர்ப்புறத்தில் தினக்கூலிகளின் மாத வருமானம் 12,1847 ரூபாயிலிருந்து 13,006 ரூபாயாக (159 ரூபாய்) அதிகரித்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. ஐந்து ஆண்டுகளில் ஏறிய விலைவாசியுடன் ஒப்பிடும் பொழுது 159 ரூபாய் கூலி உயர்வு என்பது உண்மையில் ஒன்றுமே இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.
விலைவாசியோ நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே இருக்கிறது. இதனால் சாதாரண மக்கள் தாங்கள் ஏற்கனவே வாங்கி பயன்படுத்திய பொருட்களைக் கூட அடுத்தடுத்த வருடங்களில் அதே அளவு வாங்கி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.இந்த நிலை காரணமாக நாட்டு மக்களின் வாழ்க்கை தரம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே இருக்கிறது.
மக்கள் எப்பொழுதும் போல கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால் அவர்களின் கூலி குறைந்து கொண்டே போகிறது என்றால் உழைப்பின் பயன் யாருக்கு போய் சேர்கிறது?
இந்தியாவில் உள்ள 500 பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபம் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும் பொழுது (GDP) கடந்த (2022 – 23) ஆண்டில் 4% ஆக இருந்த லாபம் இந்த (2023 – 24) ஆண்டில் 4.8% ஆக அதிகரித்துள்ளது.
மேற்கண்ட விவரங்கள் பங்குச்சந்தை குறியீட்டை வெளியிடும் NIFTY மூலம் தெரியவந்துள்ளது. அது மட்டுமின்றி இந்த கார்ப்பரேட்டுகளின் லாபம் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அபரிமிதமாக அதிகரித்துள்ளது என்ற விபரமும் நாட்டு மக்களுக்கு தெரியவந்துள்ளது.
இதனால்தான் மூன்று வேளை உணவு கூட உண்ண முடியாத நிலையில் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் இருக்கின்றனர். உணவுக்கே வழி இல்லாத போது அந்த மக்களின் சுகாதார வாழ்க்கைக்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? இப்படிப்பட்ட வாழ்க்கை நிலையில் இருக்கும் மக்களால் தங்களின் வாரிசுகளை கல்விக்கூடங்களுக்கு அனுப்ப முடியுமா? கல்வியறிவின்றி அடுத்த தலைமுறை மக்களாவது தங்களது வாழ்க்கையை முன்னேற்றிக் கொள்ள முடியுமா? இதைப் பற்றி எல்லாம் பாசிச பாஜகவிற்கு கவலை இல்லை.
அம்பானி அதானி போன்ற கார்ப்பரேட்டுகளின் சொத்துக்கள் உயர வேண்டும் என்பதற்காக உழைக்கும் மக்கள் செத்து ஒழிந்தாலும் கவலையில்லை என்பதுதான் ஆர்எஸ்எஸ் பாஜகவினர் தீவிரமாக கடைபிடிக்கும் கொள்கை. அத்தகைய பாசிச கும்பலை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றாமல் உழைக்கும் மக்களுக்கு விடிவு இல்லை.
— தங்கசாமி