மராட்டிய மாநிலம், இரத்தினகிரி மாவட்டம், அம்பவா டே என்ற ஊரில் 1891 ஏப்ரல் 14-ல் ‘தீண்டத்தகாதோர்’ என்ற புறக்கணிக்கப்பட்ட ‘மகார் சாதி’-யில் பிறந்தவர் அம்பேத்கர். மகார்கள் தான் மராட்டியத்தின் ஆதி குடிமக்கள் என்று கூறப்படுவதுமுண்டு. மகாராஷ்டிரம் என்பது மகார்+ராஸ்டிரம் = மகார்களின் அரசு – என்று இது விளக்கப்பட்டதுண்டு.
கிழக்கு இந்திய கம்பெனியின் பம்பாய் இராணுவத்தில் மகார்கள் ஒரு பிரிவினராக இருந்தனர். இதேபோன்று பீகாரில் துசாத்களும், தமிழ்நாட்டில் பறையர்களும் கிழக்கிந்திய கம்பெனியின் பிராந்திய ராணுவ பிரிவுகளில் பெருமளவு இருந்துள்ளனர்.
அந்த வகையில் அம்பேத்கரின் தாத்தா மாலோஜி சக்பால் பிரிட்டிஷ்-இந்திய ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர். அவரது பல பிள்ளைகளில் இருவர் மட்டுமே எஞ்சினர். ஒருவர் அம்பேத்கரின் தந்தை ராம்ஜி. மற்றொருவர் அத்தை மீரா.ராம்ஜி சக்பால் அவர்களுக்கு 14 குழந்தைகள். இவர்களில் நமது வரலாற்று நாயகன் அம்பேத்கர் 14-வது குழந்தை.
1892-ல் இந்திய அரசு இந்திய ராணுவத்தில் இனி மகார்களைச் சேர்க்கக்கூடாது என்ற ஆணையைப் பிறப்பித்தவுடன் அந்த அநீதிக்கு எதிராக ராம்ஜி சக்பால் துணிச்சலுடன் எதிர்த்து நின்றார்.
பள்ளிப் பருவத்திலேயே தன் அண்ணனுடன் தாமுமாக தீண்டாமையினுடைய உச்சத்தை அனுபவித்தவர் அண்ணல் அம்பேத்கர். விடுப்பு சமயத்தில்
கார்கானில் காசாளராக பணிபுரிந்த தந்தையைக் காண இளம் பருவத்தில் சென்ற பொழுது ரயில் நிலையத்திற்கு அப்பா வராததால் மாட்டு வண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்தி பயணிக்கையில் வண்டிக்காரன் இளம் பிஞ்சுகளின் ஆடம்பர உடையை மனதில் கொண்டு என்ன சாதியினர் எனக் கேட்கப் போய், மகார் சாதி என்று தெரிந்தவுடன், ‘வண்டியும், மாடுகளும் தீட்டாகி விட்டன; புனிதத் தன்மை கெட்டு விட்டன’ என உடல் பதை- பதைத்து கடும் கோபம் அடைந்து குப்பைத் தொட்டியில் தூக்கி எறிவது போல் வண்டியை குடை கவிழ்த்தி சிறுவர்களைக் கீழே உருட்டி விட்ட கொடும் செயல்களை எல்லாம் இளம் பிராயத்திலேயே குடும்பத்துடன் அனுபவித்தவர் அம்பேத்கர்.
தமது கெட்டிக்காரத்தனமான – கூர்மையான அறிவாற்றலாலும், தாம் குருக்களாக வரித்துக் கொண்ட மூவரான சீர்திருத்தச் செம்மல் ஜோதிராவ் பூலே, அம்பேத்கரின் உயர்வுக்கு உறுதுணையாக நின்ற சாகு மகாராஜ், அயல்நாடு சென்று உயர்கல்வி கற்க உதவிய பரோடா மன்னர் சாயாஜிராவ் கெய்க் வாடு இவர்கள் அம்பேத்கர் முன்னேற்ற வாழ்க்கைப் படிகளில் மூலவர்களாக விளங்கினர்.
வெளிநாடுகளில் எண்ணற்ற பட்டங்களைப் பெற்றிருந்தாலும் இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய பார்ப்பனர்கள் பெரும் பகுதி அடங்கிய குழுவில் தாமும் ஒருவராக இருந்திட்டாலும், வட்டமேசை மாநாடுகள் அனைத்திலும் கலந்து கொண்டவராக இருந்திட்டாலும், ஐக்கிய நாடுகள் சபைக்கு ஆலோசனைகள் வழங்கி கடிதங்கள் எழுதும் ஆற்றலை பெற்றிருந்தாலும்.. இவ்வளவு தகுதிகள் இருந்தும் தனக்கான அங்கீகாரம் மட்டும் போதுமானது அல்ல; தான் சார்ந்த தாழ்த்தப்பட்ட மக்களும் முழு விடுதலை பெற வேண்டும் என்பதற்காக எண்ணற்ற நூல்களை எழுதித் தள்ளினார். மகத் நகரின் சௌதார் குளத்தில் மகார் மக்களும் நீர் எடுக்கும் உரிமைக்காக 19-03-1927-ல் ஆயிரக்கணக்கான மக்களுடன் குளத்தில் இறங்கி உரிமையை நிலை நாட்டினார்.
படிக்க: இந்து ராஜ்ஜியம் இந்தியாவிற்கு மிகப்பெரிய பேரழிவாக இருக்கும் என்றார் அம்பேத்கர்: ஆனந்த் டெல்டும்ப்டே
இந்திய நாட்டின் நிலைமைகளில் குறைந்தபட்ச ஜனநாயக உரிமை நிலைநாட்ட அம்பேத்கர்- பெரியார்- முகமது அலி ஜின்னா ஒத்த கருத்து உடையவர்களாக இருந்தார்கள். அரசியல் சட்டத்தை உருவாக்கியதில் அம்பேத்கருக்கும் பெரிய பங்கு உண்டு எனினும் அவரே இந்தச் சட்டம் மக்களை அனைத்து வகையிலும் பாதுகாப்பதற்குப் போதுமானதாக இருக்காது என்றும் அருதியிட்டுக் கூறினார்.
இந்திய நாட்டு நிலைமைகளை அம்பேத்கரே எப்படி கணித்தார்?
“இந்திய கிராமங்களில் தீண்டதக்கவர்களும் தீண்டாதோரும் என்ன நிபந்தனைகளில் இணைந்து வாழ்கிறார்கள்? ஒவ்வொரு கிராமத்திலும் தீண்டத்தக்கவர்கள் சில விதிகளை வைத்திருக்கிறார்கள்; இவற்றை தீண்டாதவர்கள் பின்பற்றி நடக்க வேண்டும். என்ன செயல்களைச் செய்தால் குற்றம்? என்ன செயல்களைச் செய்யத் தவறினால் குற்றம்? – என்று தீண்டத்தக்கவர்கள் கருதுவார்கள் என்பதை இந்த விதிகள் கூறுகின்றன. இத்தகைய குற்றங்களின் பட்டியல் இதோ:
1.தீண்டத்தகாதவர்கள் இந்துக்கள் வசிக்கும் இடத்துக்கு அப்பால் தனியான பகுதிகளில் வசிக்க வேண்டும். இவ்வாறு பிரித்து வைக்கும் விதியை மீறுவது குற்றமாகும்.
2.தீண்டாதோர் வசிக்கும் பகுதிகள் தெற்கு திசையில் இருக்க வேண்டும்; ஏனெனில் தெற்கு தான் நான்கு திசைகளில் மிகவும் அமங்கலமானது. இந்த விதியை மீறி நடப்பது குற்றமாகக் கருதப்படும்.
3.தீண்டாதவர்கள் தீட்டு ஏற்படுத்தும் தூரம் அல்லது நிழல் தீட்டு பற்றிய விதியை பின்பற்ற வேண்டும்; இந்த விதியை மீறுவது குற்றமாகும்.
4.தீண்டாத சமுதாயத்தின் உறுப்பினர்கள் நிலம், கால்நடைகள் போன்ற செல்வங்களைச் சேர்ப்பது குற்றம்.
5.தீண்டாத சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஓட்டுக்கூரை உள்ள வீடு கட்டுவது குற்றம்.
6.தீண்டாத சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் சுத்தமான உடை உடுப்பது, ஷூ அணிவது, கைக்கடிகாரம் அணிவது, தங்க நகை அணிவது குற்றம்.
7.தீண்டாத சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கம்பீரமாக ஒலிக்கும் பெயர்
களை வைப்பது குற்றம்; அவர்களின் பெயர்கள் இகழ்ச்சியைக் குறிப்பனவாக இருக்க வேண்டும்.
8.தீண்டாத சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், ஓர் இந்துவின் முன்னால் நாற்காலியில் உட்காருவது குற்றம்.
9.தீண்டாத சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கிராமத்தின் வழியே குதிரை மீதோ, பல்லக் கிலோ அமர்ந்து செல்வது குற்றம்.
10.தீண்டாத சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கிராமத்தின் வழியே தீண்டாதாரின் ஊர்வலத்தை நடத்திச் செல்வது குற்றம்.
11.தீண்டாத சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இந்துவுக்கு வணக்கம் செலுத்தாமல் இருப்பது குற்றம்.
12.தீண்டாத சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பண்பட்ட மொழி (சமஸ்கிருதம்) ஒன்றைப் பேசுவது குற்றம்.
13.தீண்டாத சமுதாயத்தைச் சேர்ந்தவர் யாரேனும் இந்துக்கள் உண்ணாவிரதம் இருக்கின்ற புனித நாளிலும், உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு உணவு உண்ணப் போகும் நேரத்தில் அல்லது உண்ணும் நேரத்தில் கிராமத்தினுள் செல்ல நேர்ந்தால் பேசிக் கொண்டு செல்வது குற்றமாகும்; ஏனென்றால் அவர்களின் மூச்சு ஊரின் காற்றையும் இந்துக்களின் உணவையும் மாசு ப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.
14.தீண்டாதவர் ஒருவர் தீண்டத்தக்கவரின் புறச் சின்னங்கள் எதையும் அணிந்து தம்மை தீண்டத்தக்கவர் போல காட்டிக் கொள்வது குற்றம்.
15.தீண்டாதவர் தம்முடைய தாழ்ந்த அந்தஸ்துக்கு ஏற்றபடி நடந்து கொண்டு, பொதுமக்கள் அவரை அறிந்து அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் பின்வருவன போன்ற புறச் சின்னங்களைக் கொண்டிருக்க வேண்டும்;
அ) இழிவான பெயரை கொண்டிருப்பது.
ஆ) சுத்தமான ஆடை அணியாதிருப்பது.
இ) வீட்டுக்கு ஓட்டு கூரை இல்லாமல் இருப்பது.
ஈ) வெள்ளி தங்க நகைகள் அணியாமல் இருப்பது.
இந்த விதிகளில் எதை மீறினாலும் குற்றமாகும்.
அடுத்தபடியாக தீண்டாதவர்கள், தீண்டத்தக்கவர்களுக்காக செய்ய வேண்டிய கடமைகள் இந்த விதிகளில் முக்கியமாக கூறப்படுகின்றன. இதன் கீழ் பின் வருவனவற்றை குறிப்பிடலாம்:
1.தீண்டாத சமுதாயத்தைச் சேர்ந்தவர், இந்துவின் வீட்டில் மரணம், திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் பற்றிய செய்தியை மற்ற கிராமங்களில் வசிக்கும் அந்த இந்துவின் உறவினர்களுக்கு அந்த கிராமங்கள் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அங்கு போய் தெரிவிக்க வேண்டும்.
2.ஒரு இந்துவின் வீட்டில் திருமணம் நடக்கும்போது தீண்டாதவர் அங்கு விறகு உடைத்தல், எடுபிடி வேலைகள் போன்ற வேலைகளைச் செய்ய வேண்டும்.
3.ஒரு இந்துப் பெண் தனது பிறந்து வீட்டில் இருந்து கணவனின் கிராமத்துக்குச் செல்லும்போது, அந்தக் கிராமம் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் தீண்டாதவர் அவளுடன் கூடச் செல்ல வேண்டும்.
4.கிராம சமுதாயம் முழுவதும் ஹோலி, தசரா போன்ற விழாக்களைக் கொண்டாடுவதில் ஈடுபட்டு இருக்கும்போது, தீண்டாதவர்கள் விழாவின் முக்கிய நிகழ்ச்சிக்கு முன் தேவைப்படும் தாழ்ந்த வேலைகளை எல்லாம் செய்ய வேண்டும்.
5.சில விழாக்களின்போது தீண்டாதவர்கள், தங்கள் பெண்களை கிராம சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கண்ணியமற்ற முறையில் கேலிப் பொருளாக்குவதற்குக் கொடுக்க வேண்டும்.
இந்தக் ‘கடமைகளை’ எல்லாம் ஊதியம் பெறாமல் செய்ய வேண்டும்.”
-இவ்வாறாக இந்து மதத்தில் நிலவும் பாரிய ஏற்றத்தாழ்வுகளை நீண்ட பட்டியலிடும் அண்ணல் அம்பேத்கர் பிரிட்டிஷாரிடமும், ஏன் காந்தி, நேரு, ஜின்னா போன்றோரிடமும் எண்ணற்ற முறையில் விவாதித்து விட்டார்.
தமது கருத்துக்கு ஒத்த பூலேயை நேசித்தார்; அவரின் கோட்பாடுகளைக் கற்றார். அவருடன் ஒத்த நிலையுடைய தமிழ்நாட்டின் தந்தை பெரியாரை பெரிதும் மதித்தார்; போற்றினார்; வடநாட்டிலும் அறிமுகப்படுத்தினார். அதேபோல பெரியாரும் அம்பேத்கரை பெரிதும் மதித்தார்; போற்றினார்; தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தினார்.
இருவருமாக 1954 டிசம்பர் 3-ல் பர்மாவில் நடைபெற்ற “உலக பௌத்த மாநாட்டில்”
பங்கேற்றனர்; சிறப்பு மிக்க உரை நிகழ்த்தினர்.
இருப்பினும் அம்பேத்கர் இந்து சட்டத்தில் திருத்தங்கள் செய்து அதனை முன் வைத்து பேச தொடங்கியதும் நாடு முழுவதிலிருந்த ‘இந்து சமய அறிவாளிகள்’ இரு முகாம்களாக பிரிந்தனர். ஒரு பிரிவினர் அம்பேத்கரின் இத்திருத்தங்களை கடுமையாகக் கண்டித்தனர். மற்றொரு பிரிவினர் புகழ்ந்து போற்றினர். பழமை கருத்துக்களும் புதுமை சிந்தனைகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. புனிதத்தை போற்றும் போக்கும் சமூக முன்னேற்ற விழைவும் மோதிக்கொண்டன.
‘மதசாத்திர அறிவாளிகள்’, புரட்சிகர சிந்தனையாளர் மீது ஏவி விடப்பட்டனர். ஒரு பிரிவினர் ‘மனு’-வை முன்னிறுத்தினர். மற்றொரு பிரிவின் தலைவராக அம்பேத்கர் விளங்கினார்.
இப்படிப்பட்ட சூழலில் 1951 மே மாதம் புது டெல்லியில் நடைபெற்ற புத்தர் பிறந்த நாள் விழாவின் போது அம்பேத்கர் இந்து மதத்தின் மீது வெடிகுண்டு தாக்குதலுக்கு இணையான மாபெரும் உரை நிகழ்த்தினார். இந்துக்களிடம் காணப்படும் வன்முறை ஒழுக்கக்கேடு மற்றும் அரசாங்க அதிகாரிகள் – ஊழியர்களிடம் மலிந்து கிடக்கும் லஞ்ச ஊழல் போன்ற இழிவுகளுக்கு, கலாச்சார சீரழிவுகளுக்கு, சாதி தீண்டாமை பொருளாதார ஏற்றத்தாழ்வு அனைத்திற்கும் காரணம் இந்து மதத்தின் சீரழிவுகளே என்று அம்பேத்கர் அவருடைய உரையில் கூறினார். பௌத்த மதத்தை தழுவினால் தான் இந்தியாவிற்கு உண்மையான விடுதலையும், சுயமரியாதையும் கிடைக்கும் என்றும் தமது கருத்தாகப் பதிவு செய்தார்.
அதன் பின் தன்னுடைய மறைவிற்கு சற்று முன்னர். செப்டம்பர் 1956-ல் பல்லாயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களை – இன்ன பிற அறிவு ஜீவிகளை ஒன்றுதிரட்டி பௌத்த மதத்தைத் தழுவினார்.
இதற்கு முன்னர் பாராளுமன்றத்தில் உள்ளேயும் அமைச்சராகவும், வெளிப்புறத்திலும் பல கட்டப் போராட்டங்கள் நடத்தி இருந்தாலும், ‘இந்து நாளேடு’ போன்றவை அவரை ஆதரிப்பது போன்று வேடம் தரித்து பார்ப்பன சனாதனத்தை உயர்த்திப் பிடிக்கின்ற சூழலிலும், அவரைக் குறைவாக படம்பிடித்து காண்பிக்க தவறவில்லை. ஆனால் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ போன்ற நாளேடுகள் அம்பேத்கரின் அரசியல் துறவறத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவரது பங்களிப்பு நாட்டிற்கு மிகவும் அவசியம் என்று வலியுறுத்தியது.
நிகழும் 2026-ல் கூட சாதி தீண்டாமை தலைவிரித்தாடுவதும், ஆணவப் படுகொலைகள் தொடர்ந்து அரங்கேறுவதும், தாழ்த்தப்பட்டோர்களின் குடியிருப்புகள் அடித்து நொறுக்கப் படுவதும், பொதுக் குளத்தை/கிணற்றை/சுடுகாட்டை பயன்படுத்த முனைந்தால் கொன்றொழிப்பதுவும் சர்வ சாதாரணமாக தொடர்கதையாக நீள்கின்றன.
இத்தகு சூழலில் அண்ணல்அம்பேத்கரின் எண்ணற்ற படைப்புகள் அனைத்தும் இன்றும் மிகுதியாகத் தேவைப்படுகின்றன.
ஆனாலும் ரஷ்யாவில் நடந்த சோசலிசப் புரட்சி குறித்த பார்வையிலும், கம்யூனிசக் கொள்கையிலும் அம்பேத்கர் மிகுந்த மாறுபாடு கொண்டவராக இருந்துள்ளார் என்பது மனதிற்கு ‘கனமான’ விடயமே! அந்த ஒரு விடயத்தில் மார்க்சிய சமூக விஞ்ஞானத்தை அவர் முற்றாக கற்றறிய முற்படவில்லை என்றே தோன்றுகிறது.
நோய்வாய்ப்பட்டிருந்த அம்பேத்கர் 1956 டிசம்பர் 6-ல் மரணத்தை தழுவினாலும் இந்திய நாட்டின் சாதி தீண்டாமை கொடுங்கோண்மை இன்று வரை தலைவிரித்தாடுவதற்கு சனாதன பார்ப்பன காவிப் பாசிசம் மூல வேராக இருக்கும் சூழலில் தந்தை பெரியாரின் சீர்திருத்தக் கொள்கைகளைப் போன்றே அம்பேத்கரின் கொள்கைகளும் – கோட்பாடுகளும் காலத்தின் தேவையாக உள்ளது என்பனை மறுப்பதற்கில்லை.
அந்த அளவில் அண்ணல் அம்பேத்கரின் 136-வது பிறந்த நாளான இன்று அவரைப் பெரிதும் போற்றுவோம்!
- எழில்மாறன்
ஆதாரம்:-
அம்பேத்கரின் பேச்சும் எழுத்தும் தொகுதி-9 & டாக்டர் பி. ஆர். அம்பேத்கர்
அவர்களுடன் அணுக்கமான உறவிலிருந்த “தனஞ்செய் கீர்”-ரை ஆசிரியராகக் கொண்டு எழுதப்பட்ட “அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு” (தமிழில் க. முகிலன்.)






